New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் வாழ்வில் தாலியும் மங்கலமும் முனைவர் ம. தமிழ்வாணன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
தமிழர் வாழ்வில் தாலியும் மங்கலமும் முனைவர் ம. தமிழ்வாணன்
Permalink  
 


தமிழர் வாழ்வில் தாலியும் மங்கலமும்

முனைவர் ம. தமிழ்வாணன்
முதுநிலை ஆய்வு வல்லுநர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை - 113

thalidesigns.jpg

முன்னுரை

அன்பும் அறமும் உடைய இல்வாழ்க்கையை உண்டாக்கும் திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் எனப் பெரியோர்கள் கூறுவதுண்டு. பொதுவாகத் தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைச் சுட்டுகின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும் போது, மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். இது தமிழகத்தில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கமாக இருந்து வருகிறது. பெண்ணியப் பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி எனக் குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்கச் செயற்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஒரு சில சமூக மக்களிடத்தில் மணக்கோல மாப்பிள்ளை, மணவிடம் செல்லும் முன் மாமியார் மாப்பிள்ளைக்கு ஒருவரையொருவர் பார்க்காமல் திரையிட்டு மறைத்துக் காலில் மெட்டிப்போடும் வழக்கம் இருக்கிறது. இத்தகைய தாலிப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டுடன் இணைந்ததேயாகும். இவ்வழக்கம் தொல்தமிழர்களிடத்தில் இருந்ததா? இல்லையா? என்பது ஓர் சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருந்து வருகிறது. இவற்றினைச் சுருக்கமாக ஆராய்வோம்.

தாலியின் மகத்துவம்

இக்கால மக்கள் வழக்கில் தாலி என்பது திருமண நிகழ்வின் மையமான ஒரு கூறாக விளங்குகிறது. தாலி மீது ஏற்றப்பட்டுள்ள புனிதம் வாழ்க்கையின் அனைத்துப் பரப்புகளிலும் வேர்விட்டுள்ளது. மங்கல நாண், திருமாங்கல்யம், திருமாங்கல்ய தாரணம், மங்கலப்பூட்டு என அதன் பெயரும் புனிதமூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றது. மங்கலச் சின்னமாகக் கருதப்படும் தாலி, கணவனின் இருப்புவரை மட்டுமே பெண்ணிற்குச் சொந்தமானது. அதாவது, தாலி என்பது திருமணமானவள் என்பதை அடையாளப்படுத்தும் சின்னம் மட்டுமல்ல, அது கணவனின் இருப்பை உறுதிசெய்யும் அடையாளமாகவும் இருக்கின்றது. கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியைக் கழற்றக் கூடாது என்பது அழுத்தமான மரபு. கோயில்களுக்குச் சென்று தாலிக்கயிற்றை மாற்றுபவர்கள், அம்மன் கழுத்தில்கிடக்கும் தாலியை எடுத்துப் போட்டுக்கொண்டு, பின் தன்தாலியைக் கழற்றி மாற்றிப் போடுதல் உண்டு. கருக்குவேல் அய்யனார் கோயிலில் புதுத்தாலிக் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்ட பிறகுதான் பழைய கயிற்றைக் கழற்றுகிறார்கள். தாலியை வெளியில் போடக்கூடாது. அது கணவனுக்கு மட்டும்தான் தெரியவேண்டும் என்பதற்கு அரிச்சந்திரன் - சந்திரமதி கதை சான்றாகிறது. புதுத்தம்பதியர் ஆடிப்பெருக்கில் தாலி மாற்றிக்கட்டுவது ஓர் மரபாக இருந்து வருகிறது.

கட்டியத்தாலி கழன்று வீழ்வது அல்லது அதற்கு ஏற்படும் சேதம் என்பது கணவனின் இழப்பு அல்லது கணவனுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்னுணர்த்தும் அடையாளம் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. தாலி பாக்கியத்திற்காகவும், தாலி நிலைப்பதற்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் சடங்குகளும், நோன்புகளும், வழிபாடுகளும் அதன் இன்றியமையாமையை விளக்குகின்றன. தாலி கணவனுக்குச் சமமானது. இதனால்தான் ‘தாரம் போனபின் தூரம்’ என்ற பழமொழி வழங்கப்படுகிறது. தாலியை இழந்தவள் அமங்கலமாகக் கருதப்படுகின்றாள். அவளுக்குச் சடங்கியல் சூழல்களில் வழங்கப்படும் உரிமை தாலியை வைத்தே முடிவு செய்யப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தியே ஆகும்.


தாலி விளக்கம்

பொதுவாகத் தாலியின் வடிவம் சாதிக்குச் சாதி மாறுபாடு கொண்டது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருளாகும். பனை ஓலைத் தாலி, அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமனே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை எனலாம். இன்னாருடைய மகன், இன்னாருடைய மகளை, இன்னார் சம்மதத்துடன், இன்னார் முன்னிலையில், இந்நாளில், இந்த நேரத்தில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட, அந்தத் தாளினைக் கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என்று சொல்லக்கூடிய தாலியை மண அடையாள வில்லையாகக் கொள்கின்றனர்.

திருமணத்திற்கும் மஞ்சளுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில் என்றென்றும் உண்டு. மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become fertile), அதிகப்படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு. மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். அதுமட்டுமில்லை, “பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை” என்ற சொற்களும் கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான். கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்ததாகும்.


செவ்விலக்கியத்தில் தாலி பற்றிய செய்திகள்

செவ்வியல் அகப்பாட்டை இங்குச் சுட்டுவது அவசியமானது. இந்தக் காலத்தில் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலிகட்டுவதே கல்யாணம் என்று கருதுகிறோம். ஆனால், செவ்வியல் காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய பேச்சு அங்கு இல்லை. பேச்சு இல்லை என்றவுடன், பழக்கம் இல்லையென்று கூறிவிட முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது. அகநானூற்றில் ஒரு திருமணக் காட்சியைக் காணலாம்.

“உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'' (அகம்.86)

தொல்காப்பியத்தில் மஞ்சள் நீராட்டு வழக்கைப்பற்றிப் புறத்திணையியலில் உழிஞைத் துறை பற்றிப் பேசும் இடத்தில் இயல்பு, இலக்கணம், துறைகள் ஆகியவை பற்றிப் பேசிய பின்பு, நொச்சி பற்றிக் கூறும் இடத்தில் மாற்றுநாட்டுக் கோட்டையைப் பிடித்தபின்,, அந்தக் கோட்டைக் கோபுரத்தின் கும்ப உச்சியில் குடமுழுக்கு செய்வதைக் குறிக்கும் விதமாகச் சொல்லப்பட்டுள்ளது.

“குடுமி கொண்ட மண்ணுமங்கலம்” (தொல். 1014: 10)

என்னும் சொல்லாட்சி அந்த அடியில் வரும். ஆக, மஞ்சள் நீராட்டு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 2700 ஆண்டுகளாய் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. “திருக்குட நீராட்டு என்பது சமயப் பழக்கமல்ல; அது இனக்குழுப் பழக்கமே” என்பதற்குத் தொல்காப்பியமே முற்றுமுழுதான சான்று. இதே போன்ற திருக்குட நீராட்டு, கோபுரத்திற்கு நிகழுமானால், பின் ஆண் பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் குடும்பத் தொடக்கத்திலும், பெண்ணானால் அவள் அகவைக்கு வந்த பின்னும், பின்னால் ஆணுக்கு 60 அகவை முடிந்த போதும், குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வெற்றி ஏற்பட்டால், நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால் ஏதொன்றையும் கொண்டாட வேண்டும் என்றால் தமிழருக்கு மஞ்சளும் மஞ்சள் நீரும் வாழ்வில் ஊடுவந்து விடுகின்றன என்றே கூறலாம்.


மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் ‘புதுநாண்’ என்றனர். (அள்ளூர் நன்முல்லையார் - குறுந்தொகை 67) தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் ‘வாலிழை மகளிர்’ என்று குறிப்பிடுகிறார்.(குறுந்தொகை 386)

சிலம்பில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே “மங்கல வாழ்த்து” என்ற சொற்றொடரால் “திருமண வாழ்த்தை”த்தான் குறிப்பிடுகிறது. இதில், மங்கலம் என்ற சொல் திருமணத்தையேச் சுட்டுகின்றது. சிலம்புப் பாட்டில்;

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம், வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது” (சிலம்பு. மங்கல வாழ்த்து 46-47)

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது. அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம்) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகின்றார் புலவர்.


மங்கல அணி என்ற சொல்லாட்சி எதைக் குறிக்கிறது? என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத்தான் செய்கிறது. எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இங்கே தாலி என்ற சொல் வரவில்லை என்றாலும், தாலி குறித்த சொல் இருப்பதைக் காணலாம். தாலிப் பழக்கம் கி.பி. முதல்/இரண்டாம் நூற்றாண்டளவில் இருந்ததை இந்நூல் உறுதி செய்கிறது. சிலம்பில் மனையறம்படுத்த காதையில் மங்கல அணி குறிப்பிடப்படுவதைச் சான்றாகக் கூறலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக்குடித்தனம் வைத்தலை “வேறு வைத்தல்” என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட “வேறு வைத்தல்” என்ற சொல்லாட்சியையே சிலம்பில் எடுத்தாள்கிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் “மனையறம் படுத்தல்” என்று கூறுகிறார்கள். மேலும் மனையறம் படுத்த காதையில் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே” என்றெல்லாம் கோவலன் சொல்வதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

“நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்” (சிலம்பு.மனையறம் படுத்த காதை 62-64)

“மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?” என்று கேட்கின்றான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையேக் குறிப்பதை உணரலாம். மற்றொரு இடத்தில் மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 அடிகளிலும் இடம் பெற்றுள்ளது. சிலம்பு நடுகற்காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் அடிகளைக் கீழேக் காண்போம். 

“தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி” (சிலம்பு. 28:50-52)

இதில், வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = திருமணம். மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத்தான் குறிக்கிறது. “நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்” என்று இங்கு பொருள் தருகின்றது. இன்னும் சொல்லப்போனால் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி, மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப்படுகின்றாள். 


தற்போதும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. “கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு” என்ற மூடநம்பிக்கைகளைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப்படுவது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும். பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே ஆவாள். இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது. நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதைச் சிலம்பில் மனையறம்படுத்த காதை 84-90 அடிகளில் ஆண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163) மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப்படுவான். இன்றைக்கும் பெருமானாரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும் வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் தேர்ந்தவர். முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப்படுகிறான். அதாவது “கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்”. மங்கல அணி என்னும் தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல என்றே சொல்லலாம்.

ஐம்படைத் தாலியைப் பற்றிப் புறநானூறு 77ஆம் பாட்டின் 7ஆம் அடியிலும், அகநானூறு 54ஆம் பாட்டின் 18ஆம் அடியிலும், திணைமாலை நூற்றைம்பதின் 66 ஆம் பாட்டில் 3ஆவது அடியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் அடியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் குறிப்பிடக் காணலாம். பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே! அதன் வடிவத்தைக் கூர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக்கருவிகளின் சிறு போல் மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத்தாலி என்ற பெயரில் சிறுவருக்கு அணிவிப்பர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருது அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவது ஆகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் (13 வயது முதல் 19 வயது) தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாகவும் அல்லாது பெரியவனாகவும் அல்லது ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் புறநானூற்றின் 77ஆம் பாட்டில் இடைக்குன்றூர் கிழார் விளக்குகிறார்.

"... ... ... ... ... ... ... ... தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்" (புறம்.77:6-8)

இதன்பொருள் "மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்" என்று புலவர் சொல்லும் போது, பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப்படுவதும் கூட இங்குக் குறிப்பால் உணர்த்தப்படுவதை உணரலாம்.

அகப்பாடலொன்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் பாட்டில்,

"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்" என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே” (அகம்.54:17-22)

என்ற அடிகளால், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய், நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். "முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால் தருகிறேன் என்று புதல்வனுக்காகப் பொய்யுரைக்கிறாள் என் காதலி" என்று சொல்லுகிறது இந்த அடிகள்.

ஆக, பதின்ம பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப்பட்டுவிடுகிறது. திணைமாலை நூற்றைம்பதில், 

"வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து” (திணை.நூற்.66)

என்ற அடிகள் பயின்று வருகின்றன. "செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற்காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்" என்று தோழி தலைவிக்குச் சொல்லுகின்றாள். இப்பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்வது வழக்கமாக உள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
RE: தமிழர் வாழ்வில் தாலியும் மங்கலமும் முனைவர் ம. தமிழ்வாணன்
Permalink  
 


மணிமேகலைக் காப்பியத்தில் மலர்வனம் புக்க காதை 137-138 ஆவது அடிகள், முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் மேலே முதுகில் வைத்துக் கொண்டு வலம்வரும் காட்சியை விவரிக்கின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்உமிழ்நீர் கொட்டும். இக்காட்சியில் சொல்லப்படும் குழந்தைகள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. “எட்டு மாதத்தில் குளறிக்குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டக்கூடிய வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைத்து விட்டதாம்” எனும் பொருளைத் தருகின்றன.

"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப” (மணி. மலர்வனம் புக்க காதை 137-138)

இதனால் எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலியை அணிந்திருந்தது. பக்தி இலக்கிய காலத்தில் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5ஆம் பாட்டில் “எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு” என்று பாடியதால் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிந்திருந்ததை உணரலாம். பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திக் கூறியமை சுட்டத்தக்கது.

தாலிக்கு முன்னர் மலர் சூடுதல் திருமணமானவள் என்பதைக் குறிப்பதாக இருந்ததை ஐங்குறுநூறு 294 மற்றும் கலிவெண்பா 107இல் காணலாம். வெளிமான் இறந்தபோது, அவன் மனைவியர் வளையல் உடைத்ததை பெருஞ்சித்தரனார் என்ற புலவர் பாடுகிறார். கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்து என்கிறது சிலப்பதிகாரம் 23.7. சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவர், கட்டியங்காரனுடன் போர்புரிந்த சச்சந்தன் இறந்த போது, அவனது மனைவியர் கைவளை உடைத்தல் மற்றும் கழுத்து பூ ஆரங்களைப் பறித்து அலறுதலை நாம கலம்பத்தில் கூறுகிறார். 17ஆம் நூற்றாண்டில் வந்த மதுரை கலம்பகத்தில் குமரகுருபர அடிகள் காதணி அணிதலையும் இப்படி முக்கியமான ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.


தாலியின் சிலவகைகள்

குடும்பம் என்னும் நிறுவனத்தைத் தக்கவைக்கும் இன்றியமையாத ஒழுகலாறே திருமணமாகும். தாலி என்ற கூறைத் தனியாகப் பிரித்துப் பார்ப்பது பொருத்தமுடையதாக இருக்காது. இத்தகைய தாலியில் பலவகைகள் உண்டு. அது அவரவர் மதம் மற்றும் குலமுறைக்கு ஏற்ப பார்ப்பனர், பிள்ளை, கோனார், கவுண்டர், உடையார், வன்னியர், பறையர், தேவேந்திரகுல வேளாளர், கள்ளர், மறவர், அகமுடையர், நாடார், மீனவர் போன்ற பலதரப்பட்ட மக்களும், அவரவர் பாரம்பரியத்தைப் பின்பற்றித் தாலி வடிவம் மாறுபடுவதைக் காணமுடியும். மேலும் அவரவர் திருமணச் சடங்கு முறைகளும் மாறுபட்டு விளங்குகின்றன. அவற்றுள் சிலவகைத் தாலியைக் காண்போம். 

thalikal.jpg

அம்மன் தாலி, இரட்டைத்தாலி, உட்கழுத்துத்தாலி, ஐம்படைத்தாலி, கிருட்டியன் தாலி, கிருட்டியன் மாறியோர் தாலி, கிருட்டினத் தாலி, குண்டுத்தாலி, குருசுத்தாலி, கேரளத்தாலி, கொம்புத்தாலி, கொலும்பு கிருட்டியன் தாலி, கொழும்பு அம்மன் தாலி, கொழும்பு கொம்புத் தாலி, சிவத்தாலி, சிறுதாலி, செட்டிநாட்டுத்தாலி, சொக்கர் மீனாட்சி தாலி, தென்கலைத்தாலி, தொங்குத்தாலி, தொடர்தாலி, பவளத் தாலி, பார்ப்பனத்தாலி, பிள்ளையார் தாலி, புலிப்பல் தாலி, புறாத் தாலி, பொட்டுத்தாலி, முசுலீம் தாலி, முறிச்சுக்குத்துத் தாலி, மூன்று கொம்புத் தாலி, லட்சுமி தாலி, லிங்கத் தாலி, வள்ளலார்தாலி, வொக்காலிகல் தாலி
தாலி கட்டாத தென்னிந்தியர்

நீலகிரியில் வாழும் மக்களாகிய தொதவர், கோட்டர், படகர் மக்களும் கோதாவரி மாவட்டத்து மலைகளில் வாழும் கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள மலைவாழ் கொண்டர், சவரர் என்பவரும் பழங்குடிகளாகிய தெலுங்கு நாட்டு ஏட்டர், ஏனாதிகள், தொட்டிய நாயக்கர் இனத்தில் உள்ள கொல்லவார், ஏறகொள்ளர் போன்ற மக்களிடமும் மலையாள நாட்டிலுள்ள செருமார், முக்குவர், பலியர், வலையர், புலையர், பறையர், நாயாடிகள், பனியர், மலக்கர், கரிம்பளர், மலையர், மலசர், காடர், வேட்டுவர், மாவிலோர், அருநடர் முதலியோரிடத்திலும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. ஈழுவர், காணிகர் முதலிய சில சாதியர் சாமின்னு என்னும் அணியைத் திருமணத்தின் போது அணிகின்றனர். வாரியார் என்பவர் மத்தளம் அல்லது பறை வடிவில் உள்ள மாத்ரா என்னும் அணியைக் கட்டுவர். அந்நாட்டு சலவைத் தொழிலாளர் உந்து மின்னு அல்லது புளியிலைமின்னு என்னும் அணியைக் கட்டுவர். மலையாள வேட்டுவருள் மண அணியாக மோதிரம் அணிவித்தல் மரபாக உள்ளது. கன்னட நாட்டிலுள்ள காப்பிலியர், கொரகர், காடு குறும்பர், மொகயர், கார்விகள் முதலிய சாதியாரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. கார்வி என்னும் பரதவர் பொன்மணி (தாரைமணி) கழுத்தில் கட்டிப் பெண்ணைப் பந்தலுக்கு அழைத்து வருவர். காப்பிலியர் கரிய கண்ணாடி வளையல்களை அணிகின்றனர். துளு நாட்டிலுள்ள (தற்போதய மங்களூர்) பாணார், ஓடாரி என்னும் சாதியரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை.

தாலி பற்றிய விவாதம்

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக எடுத்துக்கொள்கின்றனர்.

இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. பின்னர், 1968இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. 

தம்குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்பட்டு வருகிறது.


மேற்சொன்ன செய்திகளின் வாயிலாகத் தாலி பற்றிய சர்ச்சைகள் பல இருப்பினும் தாலி என்ற சொல்லின் பயன்பாடு செவ்விலக்கிய காலத்திலேயே இருந்தது என்பதும், ஆனால், ஆண், பெண் கழுத்தில் கட்டிய தாலி பற்றிப் போதுமான விளக்கம் அங்கு இல்லை என்பதும் நன்கு அறியலாம். மேலும் தாலிக்கட்டும் வழக்கமில்லாத தென்னிந்திய மக்களும் வெளிக்காட்டப்பட்டுள்ளனர். எனவே செவ்விலக்கியக் காலத்தினை வைத்துப் பார்க்கும்போது தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது விளங்கும். ஆதலால் தாலிப் பயன்பாடு என்பது பல்வகை மாற்றங்களுடன் பண்பட்ட தமிழர் வாழ்வில் மங்கல அணியாகவே வேரூன்றி நிலைத்து விட்டது. பெண்ணியப் பார்வையில், ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க செயற்பாடாகப் பார்க்கப்படுகிறது. தமிழர்களின் "அகம்-புறம்' வாழ்வில் இல்வாழ்க்கையே புனிதமானது என்பதால், பெண்களிடையே "தாலி உணர்வு' அதிகம். எனவே "தாலி'க்கு நிகர் "தாலி'யே. இது, ஒவ்வொரு சமுதாயத்திற்கேற்ப மிகச்சிறு வேறுபாடுகளுடன் உருவாக்கப்படுகிறதே தவிர அடிப்படையில் ஒன்றாகவே விளங்குகிறது.

“தாயொடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம்
சேயோடு தான் பெற்ற செல்வம்போம் ஆயவாழ்வு
உற்றாருடன் போம் உடன்பிறப்பால் தோள் வலிபோம்
பொன்தாலியோடு எவையும்போம்” ( ஔவையார் - தனிப்பாடல் திரட்டு)

துணைநூற்பட்டியல்

1. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1894, புறனானூறு மூலமும் உரையும், உ.வே.சா நூல் நிலையம், சென்னை (முதற்பதிப்பு)

2. இராஜகோபாலையங்கார்.வே. (ப.ஆ)1923, அகநானூறு மூலமும் உரையும் (உ.வே.ரா.இராகவையங்கார் சோதித்தது)

3. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.

4. வையாபுரிப்பிள்ளை, ச. (பதிப்பு), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரிநிலையம், பிராட்வே, சென்னை.1967.

5. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை. சென்னை.

6. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்.

7. பாக்கியமேரி.எஃப், தமிழர் பண்பாடும் பயன்பாடும், அஞ்சனச்சிமிழப் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை- 600 004, இரண்டாம் பதிப்பு - 2013. 

8. தனிப்பாடற் றிரட்டு மூலம், 1940, வித்வான் கச்சபாலய ஐயர், பி.நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை.

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p233.html?fbclid=IwAR1zuV5bslZ5pwC4IbsZajVJZoSLEv6L9Ztw86OP8qombqn89xYbZLbjAk8


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard