ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, நியூ சித்தாபுதூர், கோயம்புத்தூர்.
முன்னுரை
மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் முறையில் படைக்கப்பட்ட பலவகைக் கலைகளுள் இலக்கியக் கலையே முதன்மையானது. மனித வாழ்க்கையின் சிறப்பியல்பாக உள்ள மொழியைக் கொண்டு இலக்கியக் கலைத் தோற்றம் பெறுகின்றது. பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஏராளமான இலக்கியங்களைப் படைத்து தமிழ் மொழியை வளம் செய்துள்ளனர். அவற்றுள் மிகத் தொன்மையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்ககாலப் புலவர்கள் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். தாம் வாழும் நாடு, சமுதாயம், மக்கள் இவைகளோடு மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துக்களையும், அரிய செய்திகளையும், முக்கியக் குறிப்புகளையும் தங்களின் படைப்புகளின் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர். இக்கட்டுரையானது சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் சில முக்கியத் தகவல்களை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது.
இராமாயண, மகாபாரதக் குறிப்புகள்
நம் நாட்டின் மிகப்பெரிய இரண்டு இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் பற்றிய குறிப்புகள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. இளஞ்சேட் சென்னி பாழி இன்ற இடத்திலிருந்த வட வடுகரை வென்றவன். அவனை ஊன்பொது பசுங்குடையார் வந்து கண்டார். அவன் பகைவரிடமிருந்து பெற்ற அணிகலன்கள் பலவற்றை அவருக்கு பரிசாகத் தந்தான். அவ்வாறு புலவர் பெற்ற அணிகளை அவருடன் வந்த சுற்றத்தார், காதணியை விரலில் அணிதல், விரலில் அணியக் கூடியதைக் காதில் அணிதல் முதலிய செயல்களைச் செய்தனர். அச்செயல் காண்பவர்களுக்கு
“கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழப்பொலிந்தா அங்கு அறாஅ அருநகை இனிது பெற் றிகுமே...” (புறம்-378, பா.வ.17-21 ப-306)
இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்து கொண்டு போன சமயத்தில், சீதை தன் அணிகலன்களைக் கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின், சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல், இருந்ததாகக் கூறியுள்ளார்.
பாண்டவர்களின் அரக்கு மாளிகைக்குத் துரியோதனன் தீ வைத்த நிகழ்வினைக் கலித்தொகை எடுத்தியம்புகிறது.
இதனை,
“வயக்குறு மண்டிலம் வட மொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா கைபுனை அரக்கி இல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்கு…”(க.தொ-25, பா வ 1-4 ப 148)
என்னும் வரிகளால் அறியலாம். மேலும், பாரதப் போரில் துரியோதனனை வீமன் கொன்ற நிகழ்வினை,
“மறம் தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல்…” (மேலது, பா. வ 2 &3, ப. 312)
என்ற வரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து சேரமான் பெருஞ்சோற்று உரியஞ் சேரலாதன், பாரதப்போரில் இரு படையினருக்கும் உணவு அளித்த நிகழ்ச்சியினை எடுத்துரைத்துள்ளது. அசையும் தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நாட்டைத் தம்மிடத்தே கொண்ட பொன்னால் ஆன தும்பை மாலையுடைய துரியோதனன் முதலான நூறு பேரும் போரிட்டும் போர்க்களத்தில் இறக்கும் வரையும் பெருஞ்சோறான மிக்க உணவை இரு படைக்கும் வரையறை இல்லாது தந்தாய் எனப்பாடியுள்ளார்.
என்னும் வரிகளால் அறியலாம். இவ்வாறு இராமாயண மகாபாரத நிகழ்வுகள் சில பாடல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
வானவியல் குறிப்புகள்
வானில் காணப்படும் விண்மீன், நிலவு, ஞாயிறு, கோள், எரிநட்சத்திரம், விடி வெள்ளி போன்றவற்றைப் பற்றிய அறிவு பண்டைக்கால மக்களுக்கு இருந்துள்ளது என்பதற்கு இக்குறிப்புகளே சான்றாகின்றன.
நற்றினையில், குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்றாக வரும் பாடலில்
என்ற வரியில் விடிவெள்ளி ஒரே இடத்தில் உறுதியாக நிற்கும் என்று குறிப்பு இடம் பெற்றுள்ளது. தமரால் மணம் மறுக்கப்பட்ட போது ஆற்றானாகிய தலைவன் தன் நெஞ்சிற்குக் கீழ்த்திசையில் தோன்றும் விடிவெள்ளி போல உறுதியாக ஒரு நாள் என் காதலியை மணந்து என் அருகிலேயே வைத்துக் கொள்வேன் எனக் கூறுவது போல் அமைந்துள்ளது. மேலும், அகநானூற்றுப் பாடலில்,
என்னும் வரிகளிலும் விடிவெள்ளி பற்றியக் குறிப்புக் காணப்படுகிறது. நற்றிணையில் எரி நட்சத்திரம் பற்றியக் குறிப்புக் காணப்படுகின்றது.
“கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்…” (நற்.393,பா.வ5-7, ப. 672-673)
குறிஞ்சித் திணையில் தோழி கூற்றாகக் கோவூர் கிழார் பாடியுள்ளார். மலையில் பெண் யானை கன்றினை ஈந்து பால் கொடுத்தது. அதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்த ஆண் யானை வளைந்த தினைக் கதிரைக் கவர அதைக் கண்ட கானவன் எரிகொள்ளியை எறிந்தான். அது கடுஞ்செலவினையுடைய மூங்கில் நெருங்கிய மலைச் சாரல் எங்கும் சுடர மின்னி தன் நிலையிலிருந்து எழுந்த மீனைப் போல தோன்றியது என்று பாடியுள்ளார்.
கலித்தொகைப் பாடலில் அருந்ததி நட்சத்திரம் பற்றிய குறிப்புக் கானப்படுகிறது.
“வடமீன் போல் தொழுத ஏத்த வயங்கிய கற்பினாள்…” (கலி. 2, பா. வ. 21, ப. 38)
என்னும் வரியில் அருந்ததி நட்சத்திரம் போன்று கற்பில் சிறந்தவளாக விளங்க வேண்டும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
புறநானூற்றுப் பாடலில் வான இயல் அறிஞர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
“செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரி தரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தார் போல என்றும் இனைத்து என் போரும் உளரே அனைத்தும்…” (புறம் .30, பா. வ 1-7, ப. 88)
என்ற வரிகளில் சிவந்த சூரியனின் வீதியும் அவனது இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட பூமியின் வட்டமும் காற்று திரியும் திக்கும் ஓர் ஆதாரமும் இல்லாது தானே நிற்கும் வானமும் என்ற இவற்றையெல்லாம் அங்கங்கு சென்று அறிந்தவரைப் போல் நாலும் இவ்வளவு அளவைக் கொண்டது என அளந்தறிந்து உரைக்கும் வான இயல் அறிஞரும் உள்ளனர் என்று பாடியுள்ளார்.
விலங்குகளின் அரிய செயல்கள்
நற்றினையில் குறிஞ்சித் திணையில் தோழி கூற்றாக வரும் பாடலில்,
“குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை…” (நற். 36, பா. வ 1, ப. 75)
என்ற வரியின் மூலம் புலியின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விடக் குறுகியவை என்ற செய்தி புலப்படுகின்றது. மேலும் இதே கருத்தினை ஐங்குறு நூறு அதே வரிகளால் எடுத்தியம்புகிறது
“குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை…” (ஐங். கு. நூறு.216, பா. வ. 1, ப. 30)
இவ்வரிகளின் மூலம் புலியின் முன்னங்கால்கள் குறுகியவை என்ற செய்தி பெறப்படுகின்றது.
ஆண் குரங்கை இழந்த பெண் குரங்கு இறந்துவிடும் என்ற செய்தி குறுந்தொகையில் குறிஞ்சித்திணையில் தோழி கூற்றாக இடம் பெற்றுள்ளது.
“கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிழ்லை முதல் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்…” (குறு. 69, பா. வ 1-4, ப. 92)
பெண் குரங்கின் அன்பின் வலிமையை இப்பாடல் எடுத்தியம்பியுள்ளது.
ஐங்குறு நூறு பாடலில் தாய் நண்டு குஞ்சு பொரித்ததும் இறந்து விடும் என்றும், முதலை தன் குட்டியைத் தானே சாப்பிட்டு விடும் என்றும் கூறியுள்ளது.
“தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்று முதலைத்து அவனூர்…” (ஐங்.கு. நூறு. 24, பா. வ 1&2, ப.73)
என்னும் வரிகளில் மகிழ்நனுடைய ஊர் தாய் இறக்கப் பிறக்கும் புள்ளி பொருந்திய நண்டோடு, தன் குட்டியையே உண்ணும் முதலையையும் உடையது என்று கூறுகிறது. மேலும்;
என்னும் பாடலும் இடம் பெறுகிறது. முட்டையில் இருந்து வெளிப்பட்ட குட்டி தானே போய் இரை தேட இயலாதத் தன்மையுடையதாயின் மேலும் நோய் அடைந்தவை புண்பட்டவை போன்றவற்றைத் தாய் முதலைத் தானே உண்டுவிடும் இயல்புடையது.
தூண்டில், செருப்பு, குடை, கண்ணாடி- வழங்கிய பெயர்கள்
முள்ளம்பன்றி பெரிய இயந்திரத்தின் துவாரத்தில் நுழையும் போது பல்லி கத்தியதால் ஊறு விளையும் என்று பின் வாங்கியது அவ்வாறான நாடனே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கலித்தொகைப் பாடலிலும் பல்லி ஒலியினை கேட்டு சகுனம் பார்த்து உள்ளனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.
“பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன…” (கலி. 11, பா. வ 21, ப. 85)
பண்டையக் கால மக்கள் கரும்புச் சாறு எடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
“கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்…” (ஐங். கு. நூறு. 55, பா. வ 1, ப. 13)
குறுந்தொகையில் சூடு நீரை அதற்குரிய பாத்திரத்தில் சேமித்து வைப்பர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
“அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறீ இயரோ…” (குறு.277, பா. வ 4 &5, ப. 371)
பண்டையக்கால மக்கள் ஆடைகளுக்குக் கஞ்சி போட்டு உடுத்தியுள்ளனர். இதனை அகநானூறு,
“பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி துறை விட்டன்ன தூமயிர் எகினம்…” (அகம். 34, பா. வ 11&12, ப. 203)
என்னும் வரிகளால் புலப்படுத்துகின்றது
மேலும் குடவோலை முறைப் பற்றியும் எடுத்தியம்பியுள்ளது.
“கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்…” (மேலது. 77, பா. வ 7&8, பக். 387 & 388)
எண்ணுப் பெயர்கள்
பரிபாடலில் நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை, இரு கை மா அல், முக்கை முனிவ, நாற்கை அண்ணல், ஐங்கைம்மைந்த, அறுகை நெடுவேள், எழுகையாள, எண்கை ஏந்தல், ஒன்பதிற்றுத் தடக்கை மன் போராள, பதிற்றுக்கை மதவலி, நூற்றுக்கை ஆற்றல், ஆயிரம் விரித்த கைம்மாய மள்ள, பதினாயிரம் கை முது மொழி முதல்வ, நூறாயிரம் கை ஆறு அறி கடவுள், அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல். (பரி.3,பா.வ34-44,பக்.54& 55) என்ற எண்ணுப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முடிவுரை
இவ்வாறு சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் பல்வேறு விதமான முக்கியக் குறிப்புகள் பல காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஒரு சிலவற்றை மட்டுமே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழர் வாழ்வியலின் சுரங்கமாக இவ்விலக்கியங்கள் திகழ்கின்றன எனில் அது மிகையாகாது.
பயன்பட்ட நூல்கள்
1. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், புற நானூறு தொகுதி 12 & 13, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
2. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், அகநானூறு தொகுதி 9 & 10, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
3. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், நற்றிணை தொகுதி 1, உரையாசிரியர் புலவர் நா. இராமையாபிள்ளை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், குறுந்தொகை தொகுதி 2, உரையாசிரியர் முனைவர் இரா. பிரேமா, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
5. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், ஐங்குறு நூறு தொகுதி 3 & 4, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
6. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், கலித்தொகை தொகுதி 7 & 8, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
7. சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், பரிபாடல் தொகுதி 6, உரையாசிரியர் புலவர் அ.மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
8. நன்றி : தமிழ் இணையக் கல்விக்கழக இணைய வழி நூலகம்.