ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, நியூ சித்தாபுதூர், கோயம்புத்தூர்.
முன்னுரை
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த நீதி நூல் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகும். இதை நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் வழங்குவர். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமையாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, சொல்லாய்ந்து நாலடி நானூறும் நன்கு இனிது, பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் கூற்றுக்கள் திருக்குறளுக்கு இணையாக நாலடியாரைப் போற்றுவதை உறுதி செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலடியார் புகட்டுகின்ற அறத்தினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செல்வம் நிலையாமை
“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் கல்லாரோ டுண்க அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்” (நா-2 ப. 6)
செல்வம் ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நிற்காமல் வண்டியின் சக்கரம் போல் பலரிடமும் சுழன்று செல்லக்கூடியது. எனவே மக்கள் ஏர் பூட்டி உழவுத்தொழிலால் நல்வழியில் உற்பத்தி செய்த செல்வத்தையும் உணவையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அறன் வலியுறுத்தல்
நம் வாழ்நாளில் இறுதி நாள் இன்றோ, நாளையோ, வேறு எந்நாளோ என்று வீணாகச் சிந்தித்துக் கொண்டு இருக்காமல் உன் உயிரைப் பறிப்பதற்குக் காலன் காத்திருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து இன்று முதலே தீய செயல்கள் செய்வதை விடுத்துப் பெரியோர்கள் கூறிய அறச்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகிறது. மேலும், சிறிய அளவிலான ஆலம் விதை தழைத்து எல்லையற்று விரிந்த நிழலைத் தருவது போல அறச்செயல்களின் பயனாகிய புண்ணியமும் செய்வது சிறியதாக இருந்தாலும் தக்கவரிடம் சென்று அடைந்தால் வானமே சிறுத்துப் போகும்படி பெரிய புண்ணியப் பயனைத் தரும் என்று கூறுகிறது.
கோபம் கொண்டு ஒருவன் அடக்கம் கெட்டுக் கூறிய கோபச்சொல் எக்காலத்திலும் சொன்னவனையே வருத்தும். எனவே, ஆராய்ந்து தெளிந்த ஞானம் உடையவர்கள் அத்தகையக் கோப மொழிகளைக் கூறமாட்டார்கள் என்கிறது. மேலும் கீழ்மக்கள் கொண்ட கோபமானது, நீண்ட காலமானாலும் தனியாமல் பெருகிக்கொண்டே போகும். ஆனால் சான்றோர்கள் கொண்ட கோபமானது, கொதிக்கும் போது வெப்பம் அடைந்த நீர் பின்னர் தானே தணிந்து விடுவது போன்று தணிந்து விடும் என்று கூறுகிறது.
பொறையுடைமை
“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவ துலவெப்பச்செய்து- பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது” (நா. 74 ப. 45)
நன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய் பயப்பட வேண்டியதற்குப் பயந்தும், தமக்குத் தகுந்தவாறு உரிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்து அதனால் அடையத்தகும் பயனைப் பெற்று இனிமையோடு வாழ்பவர் வாழ்க்கையில் எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை என்று கூறுகிறது.
பிறன்மனை நயவாமை
“அறம்புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் பிறந்தாரம் நச்சுவார்ச் சேரா…” (நா. 82 ப. 49)
தருமம், புகழ், நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவரிடம் சேராது. அத்தகையோரிடம் பகை, பழி, பாவம், பயம் ஆகிய நான்கு தீயபண்புகள் தான் சேரும் என்கிறது.
ஈகை
தம்மிடம் பொருள் இல்லாத போதும், பிறர்க்கு இயன்ற அளவு பொருள் உடையவர் போன்று பெரிதும் மகிழ்ந்து கொடைத்தன்மையோடு விளங்கும் ஈகைக் குணம் கொண்ட மாந்தர்க்கு அடுத்தப் பிறவியில் பேரின்பமாகிய வீட்டுக்குச் செல்லும் கதவுகள் அடைப்படாமல் திறந்தே இருக்கும் என்கிறன்றது. மேலும்,
“இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்…”(நா. 94 ப. 55)
இம்மியளவு அரிசியானாலும், உம்மை அடைந்தவர்க்கு நாள்தோறும் கொடுத்து, அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். முற்பிறவியில் யாருக்கும் கொடுக்காதவர்களாய் இருந்தவர்களே கடல் சூழ்ந்த இவ்வுலகில் வறியவர்களாக இருக்கிறார்கள் என்று சான்றோர்கள் கூறுவதாகக் கூறுகிறது.
சிறந்த அழகு
“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு”(நா. 131 ப. 74)
தலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவர்களாக இருக்கிறோம் என்னும் உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்கம் தரும் கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும்.
நல்லினம் சேர்தல்
“பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்…” (நா. 177 ப. 95)
பாலுடன் நீரைக் கலந்தால், நீரானது தன் நிறம் கெட்டுப் பாலின் வெண்மை நிறமடையும். அதுபோல, கீழ்மக்கள் ஆனாலும் பெரியோருடன் சேரும் போது பெருமை பெறுவர். மேலும், ஊரிலுள்ள சாக்கடை நீர் கடல் நீரோடு சேர்ந்தால் அதன் பெயரும் மாறிப் புனிதம் நிறைந்த தீர்த்தமாகிப் பெருமை கொள்ளும். அது போல நற்குலப் பெருமை இல்லாதவரும், நல்ல மாட்சிமை உடையோரைச் சாரும் போது அவர்களும் மலை போன்ற சிறப்பை அடைவார்கள் என்கிறது.
நட்பில் பிழை பொறுத்தல்
நெல்லில் உமியும், நீரில் நுரையும், பூவில் வாசனையற்ற புற இதழும் ஆகிய வேண்டாப் பகுதிகள் இருக்கும். இவைபோலவே, நாம் நல்லவர் என மிகவும் விரும்பி நட்புக் கொள்கின்றவரிடமும், சிறுசிறு குறைகள் இருக்கும். இக்குறைகளைக் கண்டால் பொறுத்து, அவரை நம்முடனே சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறது.
தன்மானம்
தன்மானம் உடையவர்கள் எலும்பு தேய்ந்து, தசை அழிந்தாலும் நற்குணம் இல்லாதவரிடம் தங்களுடைய துன்பங்களைக் கூறமாட்டார்கள். தம் வறுமை நிலையைத் தாம் உரைப்பதற்கு முன்பே உணர்ந்து உதவ வல்ல அறிவுடையவரிடமே சென்று தம் துன்பத்தைக் கூறி உதவி வேண்டுவர் என்கிறது.
கயமை
தனக்கு ஒரு நன்றியைச் செய்தவர்கள், பின்பு நூறு கெடுதல்களைச் செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு ஒன்று கெடுதியாக அமைந்தாலும் அவ்வெழுநூறு நன்மைகளும் மறந்து அவர்களால் தீமைகளாகவே கருதப்படும் என்கிறது.
முடிவுரை
சான்றோர்களின் பட்டறிந்த உண்மைகளே அறக்கருத்துகளாக நாலடியார் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவ்வறக் கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு வாழ்வினை வாழ முற்பட்டால் அவர்களின் வாழ்வும் சமுதாயமும் மேன்மையடையும்.
பயன்பட்ட நூல்
1. நாலடியார் மூலமும், உரையும், தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 49.
இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p222.html
நாலடியார் காட்டும் அறம்
மு. ரேவதி பாரத்