New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "நகை" என்னும் மெய்ப்பாடு ஷா. முஹம்மது அஸ்ரின்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "நகை" என்னும் மெய்ப்பாடு ஷா. முஹம்மது அஸ்ரின்
Permalink  
 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "நகை" என்னும் மெய்ப்பாடு

ஷா. முஹம்மது அஸ்ரின்
ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020.

pathinenkilkanakku.jpg

முன்னுரை

சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களையும், பத்துப்பாட்டு நூல்களையும் “பதினெண் மேற்கணக்கு நூல்கள்” என அழைத்தனர். இவை காதலையும் வீரத்தையும் மட்டுமே எடுத்தியம்பின. மக்களுக்கு அறத்தையும், அறம் தவறுவதால் ஏற்படும் விளைவுகளையும் வலியுறுத்த எழுந்த 18 நூல்களைப் “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்” என வழங்கினர். இதனை;

“நாலடி நான்மணி நானாற் பதைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு” (1)

என்ற வாய்மொழிப் பாடல் வழியாக அறியமுடிகிறது.

மெய்ப்பாடு

'மெய்ப்பாடு’ என்னும் சொல்லுக்குப் 'பொருட்பாடு’, 'வெளிப்பாடு’, 'புலப்பாடு’ எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய்ப்பாடு என்பது “உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு” (2) எனவே, மெய்ப்பாடு என்றால் உடலால் வெளிப்படுத்தும் உள்ளத்து உணர்ச்சிகள் என்பது தெளிவாகிறது. இதனை,

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று 
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்காப்பியம். 1194)

என்ற தொல்காப்பிய நூற்பா தெளிவாக உணர்த்துகிறது.


நகை

'நகை’ என்னும் சொல்லுக்கு ‘சிரிப்பு’, ‘இகழ்ச்சி’, ’இன்பம்’ எனப் பல பொருள்களை அகராதி (3) தருகிறது. 'நகை’ என்பது ’இகழ்ச்சியிற் பிறப்பது’ என இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில்,

"கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தும் செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை” (சிறுபஞ்சமூலம். 04)

என்ற பாடல் கல்லாதவனின் அறிவும், காதுகளை இழந்தவனின் அழகும், தேவையற்ற பொருளை பிறருக்கு வழங்கும் குணமும் நல்லவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும் என்கிறது.

மேலும், நாணமில்லாதவனின் அமைதி, நன்னடையில்லாதவனின் நோன்பு, உண்பொருளில்லாதவனின் ஈகை, வலியில்லாதவனின் வீரம், தமிழ் தேர்ச்சியற்றவனின் கவி ஆகியனவும் நகைக்கு இடமாகும் என்பதனை,

“நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவு செயலும்,
நாவகம் மேய் நாடின் நகை” (சிறுபஞ்சமூலம். 11) 

செல்வர்களும், நல்லவர்களும், தங்களது பணத்தாலும், குணத்தாலும் நகைக்காமல் வாழ வேண்டும் என்பதை,

“… … … … … பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும், நன்று” (சிறுபஞ்சமூலம். 15 அடி. 3-4)


கல்லாதவரும், கற்றவர் கூட்டத்தைச் சேராதவரும் நகைக்கத்தக்கவர்கள் என சிறுபஞ்சமூலம் எடுத்தியம்புகிறது.

“கல்லார், கற்றார் இனத்தார் அல்லார், பெறுபவே,
நல்லார் இனத்து நகை” (சிறுபஞ்சமூலம். 55 அடி. 3-4)

ஒருவன் இல்லாத நேரத்தில், அவனை இகழ்வதும் விளையாட்டின் போது ஒருவனை இகழ்வதும் தீமையை உண்டாக்கும் என்பதை,

“அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை” (திருக்குறள். 182)

“நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி … … …” (திருக்குறள். 995)

போன்ற குறட்பா வாயிலாகத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட “நாலடி நானூறு” பொது மகளிரால் ஏழ்மை நிலையை அடையும் செல்வந்தர் நகைத்தக்கவர் எனக் கூறுகிறது. இக்கருத்து செல்வந்தனாக இருந்த கோவலன் மாதவியின் மேல் காமம் கொண்டு அனைத்தையும் இழந்த கதையை மையமாகக் கொண்டுள்ளது.

“ஆமாபோல் நக்கி, அவர் கைப்பொருள் கொண்டு
சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,
தாமாம் பலரால் நகை” (நாலடியார். 377)

பிறரால் மணமுவந்து கொடுக்கப்படாத பொருளைப் பெற்று வாழ்பவன் இகழ்ச்சிக்குரியவன் என்பதை,

“… … … … … தெற்ற
நகை ஆகும், நண்ணார்முன் சேறல் … ... ... ” (நான்மணிக்கடிகை. 60)

என்று குறுப்பிடுகிறது. மேலும் பிறரது திறனை அறியாது அவரை இகழ்ந்து பேசும் மக்கள் நகைத்தக்கவர்கள் என்பதை,

“மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்” (பழமொழி. 298)

என பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நகை என்னும் மெய்ப்பாடைப் பல பாடல்கள் வழியாக வளக்குகின்றன.


நகையின் நிலைகள்

நகை என்னும் மெய்ப்பாடு தனது பொருளைக் கொண்டு நான்கு நிலைகளில் தோன்றுமென்பதை,

“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப” (தொல். 1195)

என்ற தொல்காப்பிய நூற்பா நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைகளை விளக்குகிறது.

1. எள்ளல்

‘எள்ளல்’ என்னும் சொல்லுக்கு ’இகழ்ச்சி’, ‘நிந்தை செய்தல்’, ‘நகைத்தல்’ என பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ‘ஒருவனுடைய முட்டாள்தனத்தை பிறர் சிரிக்கும்படியாகச் சுட்டிக்காட்டும் பரிகாசமும் கேலியும்’ எனப் பொருள் கொள்ளலாம்.

மேலும், எள்ளல் என்பதற்குப் “பழிச்சொல்” என்ற பொருளைத் திருவள்ளுவர்,

“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு” (திருக்குறள். 281)

என்ற குறளில் பிறரின் பொருளைக் கவரும் எண்ணமில்லாதவன் பழிச்சொல் கேட்காமல் வாழ்வான் என குறிப்பிடுகிறார்.

2. இளமை

‘இளமை’ என்னும் சொல்லுக்கு ’சிறுபருவம்’, ‘அறிவின்மை’, ‘முதிராமை’ என பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ’உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் பெற்ற முதிராத அறிவையுடைய பருவம்’ எனப் பொருள் கொள்ளலாம். இதனை,

”இழுக்கல் இயல்பிற்று இளமை” (திரிகடுகம். 14)

என இளமைப் பருவமானது நகைத்தலுக்குரிய பருவமென்பதை உணர்த்துகிறது.

3. பேதைமை

‘பேதைமை’ என்னும் சொல்லுக்கு, ‘அறிவின்மை’, ‘மடமை’ என பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு, ‘எந்த ஒரு செயலையும் பகுத்தறியத் தெரியாத தன்மை’ என்று பொருள் கொள்ளலாம். பேதைமையைத் திருவள்ளுவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்,

“பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்” (திருக்குறள். 831)

பேதையாக விளங்கும் ஒருவனுக்கு, அவனது செயலால் பிறரால் இகழப்பட்டு துன்பமடைவான் என்பதை,

”பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா” (இன்னா நாற்பது. 38)

என்ற பாடல் வழியாக விளக்குகிறது.

4. மடன்

‘மடன்’ என்னும் சொல்லுக்கு ’அறிவிலான்’ என்ற பொருளையே ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. மேலும் சில அகராதிகள் ’மடமை’ என்றும் பொருள் தருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருத்துவ நூலாக விளங்கும் சிறுபஞ்சமூலத்தில் ‘அடக்கம்’ என்னும் பொருளில் ‘மடன்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

“மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவ-தொக்க
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு-ஐந்தும் 
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து” (சிறுபஞ்சமூலம். 52)

என்ற பாடல் பெண்களுக்குரிய ஐந்து குணங்களுள் மடன் (அடக்கம்) இடம் பெறுகின்றது. இக்குணங்களுள் ஒன்று கெடுமானால், அவளது கணவனே அவளை இகழ்வான் என குறிப்பிடுகிறது.


முடிவுரை

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் “நகை” என்னும் மெய்ப்பாட்டை, நான்கு நிலைகளாகப் பிரித்து, முழுமையாக கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறிய பல செய்திகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல பாடல்களில் இடம்பெற்று உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தெளிவாக அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. ந.மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962. பக்கம் 5, 

2. Tamil Oxford Living Dictionary

3. தற்கால தமிழ்ச்சொல்லகராதி, திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை, மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை.

பயன்பட்ட நூல்கள்

1. தொல்காப்பியம் தெளிவுரையுடன், புலியூர்க் கேசிகன், அருணா பப்ளிகேஷன்ஸ்.

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

*****

கட்டுரையாளரின் கவனத்திற்கு

* அடிக்குறிப்புகளைக் குறிப்பிடும் போது, நூலில் அது இடம் பெற்றிருக்கும் பக்க எண்ணைக் குறிப்பிடுவது நன்றாக இருக்கும்.

* பயன்பட்ட நூல்கள் பற்றிய பட்டியல்களை அளிக்கும் போது, நூலின் பெயர், நூலாசிரியர், பதிப்பகம் போன்றவைகளுடன், பதிப்பகத்தின் ஊர், பதிப்பிக்கப்பெற்ற ஆண்டு, பதிப்பு போன்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

- ஆசிரியர் குழு, முத்துக்கமலம்

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p235.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard