New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமணக் காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஒருமைச் சிந்தனை முனைவர் ம. தேவகி


Guru

Status: Offline
Posts: 24791
Date:
சமணக் காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஒருமைச் சிந்தனை முனைவர் ம. தேவகி
Permalink  
 


சமணக் காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஒருமைச் சிந்தனை

முனைவர் ம. தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்,
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.

samanakappiyam.jpg

முன்னுரை

ஒவ்வொரு இலக்கியமும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைதல் என்ற ஏதாவது ஒன்றை மையப்பொருளாக வைத்து இயற்றப்பட்டிருக்கும். ஆனால் ஐம்பெருங்காப்பியங்கள் 

“நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகி”

இயற்றப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளார் தண்டியலங்கார ஆசிரியர். இந்த ஐம்பெருங்காப்பியங்களில் உள்ள சமணக்காப்பியங்கள் இம்மை உலகினில் வாழ வேண்டிய நெறிமுறைகளைச் செம்மையாக எடுத்துரைக்கின்றன. இதனைச் சமணக்காப்பியங்கள் என்ற நோக்கில் அணுகாது, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நியதிகள் அடங்கிய களஞ்சியம் என்று அணுகினால் வாழ்க்கை சிறக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் உள்ள சமணக்காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஓர்மைச் சிந்தனைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மனிதப் பிறவியின் பயன்

உயிர் பல வகையான பிறவிகளை எடுப்பதற்குக் காரணம், அதனுடைய வினைப்பயனே ஆகும். வினைப்பயன்களுக்கு ஏற்றவகையில் வேறு வேறு பிறவிகளை இவ்வுயிர் எடுத்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய பிறவிகள் எழுவகை. அவை;

1.தேவர் 
2. மனிதர் 
3. மிருகம் 
4. பறவை 
5. ஊர்வன 
6. நீர்வாழ்வன 
7. தாவரம் 

என்பனவாகும். இதில் மதிப்புடையது மனிதப்பிறவியே. இதனையே ஔவையார் ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார்.


இத்தகைய மனிதப்பிறவியில் செல்வமும் சேர்ந்து கிடைத்தல் மிகவும் அரிது. நிலையற்ற செல்வத்தினையும், உடலையும் கொண்டு புண்ணியத்தைத் தேடுதலே மனிதப்பிறவி எடுத்தலின் சிறப்பு என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.

“வினைபல வலியினாலே
வேறு வேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய தாகும்
தோன்றுதல் தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்ன தேயும்” (வளையாபதி பா. 5, ப.5)

சீவகசிந்தாமணியும் ‘மனிதப்பிறவியை அடைதல் என்பதை அலைகளையுடைய தென்கடலில் இட்ட ஓர பெரிய கழி, பரந்து விரிந்த கடலில் இட்ட நுகத்தடியின் துளையிலே சென்று பொருந்தச் சேர்தலைப் போன்ற அருமையுடையதாகும்’ என்கிறது. இத்தகைய மனிதப்பிறவியில் நற்குணங்களைப் பின்பற்றி வாழ்வதே இன்பம் உண்டாக்கும் என்பதை பின்வரும் பாடல் உணாத்துகிறது.

“காமன் அன்னதோர் கழிவனப்பு அறிவொடு பெறினும்
நூம நற்கதி நவைதரு நெறிபல ஒருவி
வாம நூல்நெறி வழுவறத் தழுவினர் ஒழுகல்
ஏம வெண்குடை இறைவ! மற்ற யாவதும் அரிதே” ( சீவகசிந்தாமணி தொ.6 பா.2753 ப.158)

உயர்குடியில் பிறந்த கோவலனும், கண்ணகியும் தவறு செய்யார், என்பதைப் பின்வரும் அடிகள் எடுத்துரைக்கின்றன.

“ஒழுக்கொடு புணர்ந்த இவ்வழுக்குடி பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி” (சிலம்பு. காதை 30, ப.528)

அறமே நன்மை

நிலையில்லாதவற்றைக் கொண்டு நிலையானவற்றைக் தேடுதல் வேண்டும். இளமை, செல்வம் யாவும் நிலையில்லாதது என்றாலும், அதனைக் கொண்டு செய்கின்ற நல்லறத்தின் மூலம் மறுபிறவியில் புண்ணியம் சேர்ந்து துன்பமில்லாத வாழ்வினை அடைந்திட இயலும் என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.

“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்ற அல்ல
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நிலையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்” (வளையாபதி பா.41, ப.36)


இதனையே சீவகசிந்தாமணியும் அறத்தைப் பின்பற்றாதவர்கள் நரகத்தை அடைவர். கொல்லுவதேத் தொழிலாகக் கொண்டிப்பவரும், தீத்தொழில் புரிபவரும், இம்மை மறுமை இல்லை என்பவரும்,உயிர் என ஒன்று இல்லை என்பவரும், இருவினைகள் இல்லை என்பாரும் தவமும், தானமும் இழிவென்று கருதுகின்றவர்களும் தீவினையாகிய தேரில் ஏறி நரகத்தை அடைவர் என்கிறார் திருத்தக்கத்தேவர்.

“கொல்லுவதே கன்றி நின்றார் கொடியவர் கடியநீரார்
இல்லையே இம்மை யல்லால் உம்மையும் உயிரும் என்பார்
அல்லதும் தவமுமில்லை தானமும் இழிவென் பாரும்
செல்பஅந் நரகந் தன்னுள் தீவினைத் தேர்கள் ஊர்ந்தே” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2776, ப.167)

கவுந்தியடிகள், மறையோனுக்கு மதுரைக்குச் செல்லும் வழி பற்றிக் கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்.

“வாண்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு 
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்” (சிலம்பு.காதை 30, ப.528)

இளமை நிலையில்லாதது

ஒவ்வொரு மானுடப்பிறவியும் நரை கூடி, கிழப்பருவம் அடைந்து கொடுங்கூற்றுவனுக்கு இரையாகி மடியும். ஆண்களும், பெண்களும் தலையில் மயிர்கள் நரைக்கத் தொடங்கியவுடன் எமன் நமக்குத் தூது அனுப்பியுள்ளான் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை, வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது. இளமை நிலையில்லாதது என்பதை உணர்ந்து இந்த உடல் மீது ஏற்படும் காம எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்பதை வளையாபதி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.

“வேல்கண் மடவார் விழைவு ஓழியாம் விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்ததும் இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே” 

இதனையே சீவகசிந்தாமணியும்,

“மைதிரண்ட வார்குழல்மேல் வண்டு ஆர்ப்ப
மல்லிகைமேன் மாலை கூடிக்
கைதிரண்ட வேலேந்திக் காமன்போல்
காரியகையார் மருளச் சென்றார்
ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர்
துண்டூன்றி அறிவிற் றள்ளி
நெய்திரண்டாற் போலுமிழந்து நிற்கும்
இளமையோ நிலையா தேகாண்” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2926, ப.228)


பதவி நிலையில்லாதது

வெள்ளத்தினாலும், மறதியினாலும், மன்னனின் கட்டளையின் காரணமாகவும், நெருப்பினாலும் தாயத்தாராலும், திருடர்களாலும் அழிந்து போகும் தன்மையுடையது பொருட்செல்வமாகும். ஆகவே, பொய்த் தன்மையுடைய பதவியினால் வரும் பொருட்செல்வத்தின் மீது ஆசை வைத்திடல் கூடாது. வலிமையும், பெருமையும் உடையவர்களாகத் திகழ்ந்திடக் கூடியவர்களான மன்னர்களின் தலைகளும் ஒரு காலத்தில் அழிந்தே போகும். ஆகவே அரச போகங்களுடன் கூடிய இன்ப வாழ்க்கையினைக் கண்டு மனதில் மயக்கம் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதை வளையாபதி,

“வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண் லாழி நெஞ்சே!
மத்தக மாண்பழிதல் காண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நின்று நில்வாழி நெஞ்சே! 
உத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!” (வளையாபதி பா.4, ப.3-4)

பெரிய பதவிகளுடன் கூடிய சுகபோகம் நிறைந்த செல்வ வாழ்க்கை எத்தருணத்திலும் தம்மை விட்டு நீங்கி விடும் என்பதனை உணர்ந்தான் சீவகன். ஆகையால் அரச வாழ்வினைத் துறந்தான். இதனையே, சீவகசிந்தாமணி பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறது.

“குஞ்சரம் அயாவுயிர்த் தனயை குய்கமழ்
அஞ்சுவை அடிசிலை அமர்ந்துண் டார்கள்தாம்
இஞ்சிமா நகரிடும் பிச்சை ஏற்றலால்
அஞ்சினேன் துறப்பல்யான் ஆர்வம் இல்லையே” (சீவகசிந்தாமணி தொ.6 பா.2941 ப.234)

மேற்கூறிய இளமையும் பதவியும் நிலையில்லாதது என்பதை சிலப்பதிகாரம் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

“இளமையும் செல்வமும் யாக்கையும் நில்லா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேகத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லல் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கு என்” (சிலம்பு.காதை 30,ப.528)


வீடுபேறே நிலையானது

நன்மை, தீமைகளை உணர்ந்து எதனையும் எல்லையுடன் செய்தால் நன்மை விளையும். ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமாகும்’ அளவுடன் பயன் கொண்டால் விடமும் மருந்தாகும். அதனைப்போல மனிதர்கள் எல்லையினை மீறாமல் எல்லையில்லா ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் மேலான உலக இன்பமும், மோட்சமும் அடைந்து நிலைத்த இன்பம் பெறுவர்.

வீடுபேறு அடைய வழிகள்

* மனிதன், சான்றோனாக மிகச்சிறந்த ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பொய்யாமை என்பது ஓர் அழகான அணிகலன் ஆகும் என்பதை வளையாபதி;

“ … … … … பொய்யின்மை பூண்டு கொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்” 

என்றும், சீவகசிந்தாமணி,

“ பொய்யுரையும் வேண்டா புறந்திடுமின் என்றான்” 

என்றும், சிலப்பதிகாரம்,

“பொய்யுரை அஞ்சுமின்” (சிலம்பு.காதை 30, ப.528) 

என்றும் எடுத்துரைக்கின்றன.

* களவு செய்பவன் கை கால்களை வெட்டுதல் போன்ற செயல்களினால் மனவருத்தத்தினையும், உடல்வருத்தத்தினையும் அடைந்திடுவான்(31) என்கிறது வளையாபதி. இதேக் கருத்தினை சீவகசிந்தாமணி;

“முளரிமுக நாகமுளை எயிறு ஊழத கீற
அளவில் துயர் செய்பவர் இவண் மன்னர் அதனாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே” ( சீவகசிந்தாமணி தொ.6, பா.2870, ப.272) 

என்றும், சிலப்பதிகாரம்,
“கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வேள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்”(சிலம்பு.காதை 30,ப.528) 

என்றும் எடுத்துரைக்கின்றன.

* காமம் ஒருவனின் கல்வி, குலம், மானம், கொடை, வீரம், சுற்றம் அனைத்தினால் உண்டாகும் நன்மையும், புகழினையும் கெடுத்து விடும் என்பதனை வளையாபதி (27, 28, 29) ஆகிய பாடல்களின் வழி விளக்குகின்றது. எத்தகைய புகழ் உடையவர்களும் காமத்தினைக் கைக்கொண்டால் இழிவடைவர் என்பதை சீவகசிந்தாமணி;

“… … … … பிறர் மனைகள் சேரின்
எடுப்பரிய துன்பத் திடைப்படுவர் இன்னா
நடுக்குடை காமம் விடுத்திடுதல் நன்றே” (சீவகசிந்தாமணி தொ.6, பா.2871, ப.273)

என்கிறது.

* பேரறம் ஏது? என்றால் பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே என்கிறது சீவகசிந்தாமணி (2868). பிற உயிர்களைக் கொல்லுதல், கோபம், பகைமை முதலானவற்றை நீக்கி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்பவர்கள் மேலான தேவலோகத்தை அடைவர் என்பதை வளையாபதி,

“உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்” (வளையாபதி பா.23, ப.20) 

என்கிறது. இதனையேச் சிலப்பதிகாரம்; 

“ஊன்ஊண் துறமின் உயிர்க.கொலை நீங்குமின்” (சிலம்பு.காதை 30,ப.528) 

என்றுரைக்கிறது.

இவை மட்டுமின்றி நல்வழிகளில் பொருள் திரட்டுதல், சூதினை கைவிடுதல், துறவின் மேன்மை, தீக்குணங்களை உடையவரை நாடக் கூடாது என்பது போன்ற நல்ல அறங்களை இவ்விரண்டும் நூல்களும் எடுத்துரைக்கின்றன.

முடிவுரை

கூன், குருடு, செவிடு நீங்கி வாழும் மானுடப் பிறவியில் 

* இளமை நிலையில்லாதது

* யாக்கை நிலையில்லாதது

* செல்வம் நிலையில்லாதது 

* செல்வத்தின் மூலம் கிடைக்கும் பதவி நிலையில்லாதது 

* புகழ் நிலையில்லாதது

ஆகவே, அறத்தைப் பின்பற்றி வாழந்தால் அவ்வறமே அரணாகும் என்பதை சமணக்காப்பியங்கள் எடுத்துரைக்கின்றன.

குறிப்பு:

கட்டுரையாளர் சில பாடல்களுக்குக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார். சில பாடல்களுக்குக் கொடுக்காமல் விட்டிருக்கிறார். விடுபட்ட குறிப்புகளை அளிக்கலாம். மேலும், இக்கட்டுரைக்குத் துணை நின்ற நூல்களின் பட்டியலையும் வழங்கினால், கட்டுரை மேலும் சிறப்பாக அமையும். எனவே கட்டுரையாளர் விடுபட்ட குறிப்புகள் மற்றும் துணை நின்ற நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.- ஆசிரியர் குழு)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p234.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard