New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்
Permalink  
 


திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள்

முனைவர் கோ. தர்மராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை- 630 303.

selfconfidence.jpg

முன்னுரை

ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கமாக விளங்குகிறான். வன்முறை, இனவெறி, சமயவெறி இவற்றிலிருந்து விடுபட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகிறான். அன்பெனும் கயிற்றில் சமுதாயத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என எண்ணுகிறான். தனிமனித ஒழுக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்’ எனும் பழமொழிக்கேற்ப சமுதாயத்தில் ஒருவன் தீயவனாய் இருந்தாலும் சமுதாயத்திற்கும், மக்களுக்கும் பெரும் துன்பம் ஏற்படும். அந்த அடிப்படையில் அற இலக்கியங்கள் மனித சமுதாயத்திற்கு நல்ல நெறிகள் பலவற்றை வழங்கியுள்ளன. அந்த அற இலக்கியங்களுள் ஒன்றான திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்

விருந்தினரை உபசரிக்கும் வழக்கம் பண்டையத் தமிழ்ச் சமூக காலத்திலிருந்தே தொன்றுதொட்டுப் பழக்கத்திலிருந்து வரும் ஒன்றாகும். விருந்தோம்பலின் பண்பினைத் திரிகடுகம் எடுத்துரைக்கின்றது. இல்வாழ்க்கையின் பயனே விருந்தோம்பலாகும். விருந்தோம்பலின் அருமையை அறிந்த வள்ளுவர் ‘விருந்தோம்பல்’ என்று தனியொரு அதிகாரத்தை வகுத்துள்ளார். ‘விருந்து’ என்ற சொல் புதுமையைக் குறித்துப் பின்பு விருந்தினரைக் குறித்துள்ளது. அதனை,

“விருந்தே தானும்
புதுவது கிளைந்த யாப்பின் மேற்றே” (தொல்.பொருள்.செய்யுளியல் நூ.540)

எனும் தொல்காப்பிய நூற்பாவின் வழியாக அறியலாம். நம் வீட்டிற்கு எதிர்பாராமல் வருகின்ற விருந்தினர் கிடைத்தற்கு அரிய பொருள் என்று கூறுகிறது.

“நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்
பெறுமா(று) அரிய பொருள்” (திரி, பா.எண்;69)

வழி தெரியாமல் தப்பி நொடிந்து பசித்து வந்த விருந்தினர் கிடைத்தற்கரிய பொருளாகும் என்று திரிகடுகத்தின் வாயிலாக உணர முடிகின்றது.

மேலும், திருவள்ளுவரும்,

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள்; 86)

வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனி வரப்போகும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன் தேவர்கட்கு நல்ல விருந்தினனாவன் என்று வள்ளுவர் நயம்படக் கூறியிருப்பது விருந்தோம்பலுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.



பிறன்மனை நோக்காமை

பிறர்மனை நோக்குதல் அறமல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும், பிறன்மனை விரும்பும் கொடிய செயல் இராமாயணக் காலத்திலிருந்து நடைபெற்றுள்ளது. வான் தெய்வமான இந்திரன் கூட இத்தவறினைச் செய்திருக்கின்றான். அவ்வாறு தவறு செய்தவர்கள் மிகப்பெரிய தண்டனையையும் அடைந்துள்ளனர். இருந்தாலும் இக்கொடிய தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இவ்வினைத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறநூலார்கள் வலியுறுத்துகின்றனர். அந்த அடிப்படையில் பிறர் மனைவியை விரும்புகின்றவன் விரைவில் அழிந்து விடுவான் என எச்சரிக்கை விடுக்கிறார். அதனை,

“கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லில்
பிறன்கடை நின்றொழுகு வானும் மறந்தெரியா(து)
ஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்கால் தூங்கு பவர்” (திரி, பா.எண்; 19)

என்ற பாடலடியில் போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் குணமில்லாத வீரனும், இரவில் பிறர் மனைவியை விரும்பி நிற்பனும், படமெடுத்து ஆடுகின்ற பாம்பை ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் போன்ற இம்மூவரும் விரைவில் அழிந்துவிடுவர் என்பதைக் காணமுடிகின்றது.

“பிறன்மனை புகாமை அறமெனத்தகும்” (கொன்றைவேந்தன்; பா.எண்:61)

பிறர்மனை விரும்புதல் அறமல்ல என்ற நெறியைக் கொன்றை வேந்தன் உணர்த்தியிருப்பதும் பிறன்மனை நோக்குதல் தவறு என்பதற்கான கூடுதல் வலு சேர்ப்பதாக இருக்கிறது.

நட்பு

தனி மனித ஒழுக்கக் கூறுகளில் நட்புக்குத் தனி இடம் உண்டு. நட்பு என்பது வாழ்வின் பற்றுக்கோடு. மனிதனுக்கு அன்பையும் அமைதியையும் ஆறுதலையும் தரும் நட்பைக் காட்டிலும் சிறந்தது வேறு கிடையாது. தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைப்பது நட்பாகும். மனித உயிர்கள் உலகில் பிறக்கும் போதே நட்பு தொடங்கி விடுகின்றது. பாலூட்டும் தாயிலிருந்து நட்புத் தொடங்கிப் பின், ஒத்த பண்புடையாளர் இதயம் கவர்ந்தவர்கள் என நட்பு மலர்கின்றது. இந்நட்பு நாளடைவில் உலகம் தழுவிய மனிதநேய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றது. தனிமனிதன் ஒருவன் பிறருடன் நட்புக் கொள்ளும் போது நீதி நெறியுடையவர்களுடன் நட்புக்கொள்ளல் வேண்டும் என்பதை,

“கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள” (திரி,பா.எண்; 77)

கீழ்இன மக்களைக் கைவிட்டு வாழ்தலும், நீதி நெறியுடையவர்களை எப்பொழுதும் பிரியாது நட்பு கொண்டு நடத்தலும், தனக்குப் பழி வராமல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலும் ஆகிய இம்மூன்றும் குற்றமில்லாக் குடிப்பிறப்பைச் சேர்ந்தார் செய்யும் செயல்களாகும் என்ற சிந்தனைப் புலப்படுகிறது.

“சான்றோர் இனத்திரு” (ஆத்திசூடி; பா.எண்; 44)

கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்குபவர்களுடன் ஒன்றாய் இணைந்து நட்புக் கொண்டு வாழ வேண்டும் என ஆத்திசூடிச் பாடலின் வாயிலாக மேலும் உணர முடிகின்றது.



கல்வி

கல்வி என்பது மனித சமூகத்தை மேம்படுத்தும் கருவி. பண்டைய காலம் முதல் கல்வியை மிக இன்றியமையாத செல்வமாகச் சான்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். கல்வியினால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நன்கு முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதைத் திரிகடுகம் எடுத்துக் கூறுகின்றது.

“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாம்
கல்வி அழகே அழகு” (திரி, நாலடி, பா.எண்; 131)

ஒரு பெண்ணுக்குக் கூந்தல் அழகும், முந்தானை அழகும், மஞ்சள் பூசும் அழகும் அழகல்ல. நாம் நல்லவராய்க் கல்வியில் சிறந்து காணப்படுவதே அழகு என்று நாலடியார் விளக்கிச் சொல்கின்றது. நிலையில்லாத அழகை உடம்பிற்குச் சேர்ப்பதை விட்டு விட்டு, நிலைத்து நிற்கும் அழகாகக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சிந்தனை வெளிப்படுத்தப்படுகிறது.

“பல்லவையுள் நல்லவை கற்றலும் பார்த்துண்டாங்(கு)”(திரி,பா.எண்; 31)

நாம் கல்வி கற்கும் போது பல்வேறு நூல்களிலுள்ள நல்ல அறவுரைகளைக் கற்றுணர வேண்டும் என்று கூறுவதனை உணர முடிகின்றது.

சூதாடுதல்

சூதாடும் பழக்கம் ஒருவனைச் சோம்பேறி ஆக்குகின்றது. சூதாட்டம் அவனை மட்டுமின்றி, அவனுடைய குடும்பத்தையும் சேர்த்துப் பாதிக்கிறது. சூதாடுபவன் சூதாடுவதற்கு பணம் இல்லாத காலத்தில், தனது வீட்டில் உள்ள பொருட்களைச் சிறிது சிறிதாக விற்று, இறுதியில் தனது குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விடுகின்றான். இந்த இழிசெயலினைச் செய்கின்றவர்களை அறநூலார்கள் பெரிதும் சாடுகின்றனர்.

“புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர் 
கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் கொலைமுனிந்து
மொய்ம்மயக் கம்சூதியின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்” (திரி, பா.எண்; 39)

விலைமகளிரை விரும்பி நிற்றலும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை உண்பதும், சான்றோர் சொல்லை வெறுத்துப் பொய்யை மேற்கொண்டு சூதாடுமிடத்தில் தங்குதல் போன்ற மூன்றினையும் அறவழியில் நில்லாதவர் செய்யும் தொழில்கள் என்று திரிகடுகம் பாடல் வழியாகச் சொல்கின்றது.

மேலும்,

“சூது விரும்பேல்” (ஆத்திசூடி, பா.எண்; 48)

சூதாடுவது கஷ்ட நஷ்டங்களைத் தோற்றுவிப்பதால் அதனை விரும்பக் கூடாது என ஒளவையாரின் ஆத்திசூடி பாடல் சொல்லியிருப்பது மேற்காணும் திரிகடுகம் பாடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.



உழைப்பு

வணிகருக்கும், வேளாளருக்கும் உரித்தான தொழில் உழவுத் தொழிலாகும். வீட்டில் உணவில்லாமல் இருந்து வெளியில் வேலை செய்யாமல் இருப்பதை விடத் தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை வாழ்பவர்களே சிறந்தவர்கள். அத்தகைய உழவுத் தொழிலின் மகத்துவத்தைப் பற்றி திரிகடுகம் கூறுவதாக,

“உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு” (திரி, பா.எண்; 48)

உழவுத்தொழிலை விரும்பிச் செய்தல் வேளாண்குடிக்கு அழகினைத் தருவதாக கூறுகின்றது. கடின உழைப்பின் வாயிலாக வேளாண்தொழில் செய்து அதன் வழியாக குடும்பத்தின் தரத்தை உயர்த்துதலே உண்மையான வேளாண்குடிக்கு அழகினைத்தரும் என்பதை அறியமுடிகின்றது.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து” (குறள்; 1032)

உழவுத்தொழில் செய்யும் வலிமை உடையவர், பிறதொழில் செய்கின்றவரையும் தாங்குவதால் உழவர் உலகத்தார்க்கும் அச்சாணி போன்றவர் என்று உழவின் பெருமையையும் உழவரின் சிறப்பையும் கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

புலனடக்கம்

ஒரு மனிதன் வாழ்வில் துன்பமின்றி வாழ வேண்டுமானால் அவன் தனது ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். புலனடக்கம் ஒருவனை மற்றவர்கள் மத்தியில் மிக உயர்வாகக் காட்டுகின்றது. புலனடக்கம் உடையவர்கள் ஞானிகளாகக் கருதப்படுவர். ஆகவே வாழ்வில் அனைவரும் புலனடக்கத்துடன் செயல்பட வேண்டும். அத்தகையப் புலனடக்கம் பற்றித் திரிகடுகம் கூறுகையில்,

“நிறைநெஞ் சுடையானை நல்குரவு அஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை எவ்வுயிரும் அஞ்சும்இம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்” (திரி, பா.எண்; 72)

ஐம்புலனையும் அடக்கி ஆள்கிறவனைக் கண்டு வறுமை அஞ்சும், அறநெறியை நினைக்கின்றவர்களைக் கண்டு பாவங்கள் அஞ்சும், கொலையாளியைக் கண்டு எவ்வுயிரும் அஞ்சும் என்று திரிகடுகப் பாடல் கூறுகின்றது. ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தால் வறுமை இன்றி வாழலாம் என்ற சிந்தனை புலப்படுவதை இங்கு உணரமுடிகின்றது.



கடன் வாங்குதல்

ஒருவன் தனது தேவைக்காகப் பிறரிடம் சென்று கடன் வாங்குவது அவனுக்கு அழிவை உண்டாக்கும். ஒருவன் தன்மானத்தோடு வாழ வேண்டுமானால், பிறரிடம் சென்று கடன் வாங்காமல், தனது தேவையைக் கடின உழைப்பின் வாயிலாகப் பொருள் ஈட்டி அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய கடன் பற்றி திரிகடுகம்;

“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்” (திரி பா.எண்; 12)

கடன் படாமல் வாழ்பவன் முயற்சினையுடையவன் ஆவான் என்று கூறுகின்றது. முயற்சி செய்து உழைத்து வாழ்பவன் வாழ்வில் கடன்பட்டு வாழ மாட்டான் என்பதை உணரமுடிகின்றது. மேலும்,

“கடன் உண்டு வாழாமை காண்டல் இனிதே” (இனியவை நாற்பது: பா.11)

கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே சிறந்தது என்று கூறுவது பொருத்தமுடையதாகும்.

தொகுப்புரை

* இல்வாழ்க்கையின் பயனாக உள்ளவை விருந்தோம்பலாகும். அறங்களுக்கெல்லாம் தலையாய அறம் பசித்து வந்தவருக்கு உணவளிப்பது என்பதை உணரமுடிகின்றது.

* பிறர்மனைவியை விரும்பி நாடிச்செல்பவன் விரைவில் அழிந்து விடுவான் என நயம்பட ஆண்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதை காணமுடிகின்றது.

* கல்வி, அறிவு, ஒழுக்கம் இவை மூன்றிலும் சிறந்து விளங்கும் சான்றோருடன் இணைந்து நட்பு கொள்ள வேண்டும் என்ற சிந்தனை புலப்படுகிறது. 

* நாம் பிறந்த சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமானால் கல்வி அவசியம். அத்தகைய கல்வி இளமைப்பருவத்தில் கற்று வளர வேண்டும் என உணர்த்தியுள்ளதைக் காணமுடிகின்றது.

* குடும்பத்தைத் தீங்கிழைக்கும் கொடிய பழக்கங்களில் ஒன்று சூதாட்டம். சூதாடுபவன் நால்தோறும் சூதாடி பொருளை இழந்து இறுதியில் இறக்கும் தருவாய்க்கு ஆட்பட்டு விடுவதனை உணரலாம்.

* உழைப்பின் மகத்துவம், ஐம்புலன்களை அடக்கி வாழ்தல், கடன்வாங்குதல் மற்றம் பல்வேறு விதமான தனிமனித ஒழுக்க நெறிகளைக் கூறியிருக்கும் திரிகடுக நூலாரின் பாங்குப் போற்றுதற்குரியதாகும்.

துணைநூற்பட்டியல்

1. வ. த. இராமசுப்பிரமணியம், இனியவை நாற்பது, திருமகள் நிலையம், சென்னை-17.

2. அ. மாணிக்கம், திருக்குறள், தென்றல் நிலையம், சிதம்பரம், பதிப்பு-2010.

3. எஸ்.கௌமாரீஸ்வரி (பதி.ஆ), திரிகடுகம், சாரதா பதிப்பகம், சென்னை.

4. இளம்பூரணர், தொல்காப்பியம் - பொருளதிகாரம், கழகவெளியீடு, சென்னை.

5. இரா.மோகன், (பதி.ஆ), கொன்றைவேந்தன் மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1.

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p185.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard