New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவி


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவி
Permalink  
 


சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள்

முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.

vilakkukal.jpg

முன்னுரை

சங்க இலக்கியத்தில் பின்வரும் விளக்குகள் பற்றியக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. விளக்குகள், விளக்குநிலை, பாவை விளக்கு - நெய்தீபம், கையமை விளக்கம், முல்லைப்பாட்டில் பாசறைக்கண் அரசன் தனி இருக்கையின் மாண்பு, பாண்டில் விளக்கு- நெய் தீபம், வடந்தைத் தண்வளி, எண்ணெய் மட்பாண்டில் விளக்கு, கிளிஞ்சல் விளக்கு - மீன் நெய் தீபம்,பெருவிழா விளக்கம்- கார்த்திகை விழா விளக்குகள், சிறு தீ விளக்கம்- சிறிய விளக்கு, நடுகல் விளக்கு - நெய்தீபம், அவியா விளக்கு - நந்தா விளக்கு - காற்றால் அணையாத விளக்கு கொண்டி மகளிர் - நந்தா விளக்கு, பொன்விளக்கம், உவமை - சுரத்தின் வெம்மை, ஈமவிளக்கு - கட்டைகள் தீபம், மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட விளக்குகள், ஓதிம விளக்கு, ஊர்சுடு விளக்கு - மதுரை மாநகரம், இரும்பு செய் விளக்கு - இல்லுறைத் தெய்வத்தை வணங்கல், மாலைக்காலத்து மகளிர் வழிபாடு மாலை விளக்கு, விளக்கு உவமையாகப் பயன்படுத்தல், கைவிளக்கு நெடுஞ்சுடர் விளக்கம், பாம்பின் படம் - திருமணி விளக்கு உவமை, திண்திமில் விளக்கு, திருமணிவிளக்கு, முத்தீ விளக்கு, பூமிக்கு விளக்காக ஒளிக்கும் தீ விளக்குகள் அவிந்து நிற்றல், ஆகியவற்றினைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

விளக்குகள் - நம் நாட்டார் குத்துவிளக்குகள் பல திரிகள் போடப் பலமுகங்கள் உள்ளனவாய் உலோகங்களால் செய்து பல வித எண்ணெய்கள் இட்டு விளக்கரிப்பர். இதில் கை விளக்கு, பல விளக்கு, கிளைவிளக்கு, அகல் விளக்கு, காட விளக்கு முதலிய உண்டு. தற்காலம் மண்ணெண்ணெய் விட்டு கண்ணாடிக்குழல் பூட்டி வெளிச்சங் கொள்ளப் பல வகை விளக்குகள் உண்டு.

விளக்குத் தண்டு - மரத்தாலும் உலோகத்தாலும் விளக்கைத் தாங்கச் செய்துள்ள உயர்ந்த விளக்குத் தாங்கி.

விளக்குநிலை

1. அளத்தங்கரிய கடல் போன்ற சேனையினை உடையான் தனது விளக்கினது நிலையைப் பரப்பிச் சொல்லியது. (பு.வெ.பாடாண்.)

2. பொற்றகட்டாற் சிறந்து விளங்கும் பூணினை உடைய மன்னன்றன்னை ஆதித்தனோடு உவமிப்பினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு.வெ.பாடாண்.)(அபிதானசிந்தாமணி, பக்கம்.1797)



விளக்கு

தமிழ், தமிழ் அகராதி விளக்கு குறித்து அட்ட மங்கலத்தொன்று. அது ஆலாத்தி, ஒளி, சோதிநாள், தீபம், விளக்கென்னேவல் என்று குறிப்பிடுகின்றது. மேலும் விளக்குக் கூடு - விளக்குத் தகழி, விளக்குத்தகழி - விளக்ககல், விளக்குத்தண்டு - விளக்குத்தாள், விளக்குப்பாதம் - விளக்குத்தண்டு, விளக்கு ஏற்றல் - தீபம் வைத்தல், என்றும் குறிப்பிடுகின்றது. (மே,ப.1297 - 1298)

விளக்கு என்றால் ஒளி தருவது என்பது பொருள். விளக்கு என்பது ஒளி தரும் பொருள். மணிமேகலை தமிழ்ச்சொல் அகராதி விளக்கம் குறித்து, தெளிவு, ஒளி, புகழ், மோதிரம், விளக்கு என்று இதன் பொருளினை விளக்குகின்றது. அகல் - விளக்கு, தகளி - தகழி என்றும் குறிப்பிடுகின்றது. (மணிமேகலை தமிழ்ச்சொல் அகராதி, பக்கம்,583)

தமிழ் - தமிழ் அகராதி விளக்குகள் குறித்து பின்வரும் விளக்குகளை விவரிக்கின்றது. நாகதீபம் - ஐந்தலை விளக்கு, (தமிழ் தமிழ் அகராதி, பக்கம்.871)

வவ்வால் விளக்கு - ஒரு வகை தொங்கும் விளக்கு, வவ்வாற் பந்தம் - வவ்வால் விளக்கு. (மே., ப.1245)

பாவை விளக்கு : நெய்தீபம்

மணிமேகலை தமிழ்ச்சொல் அகராதி பாவை குறித்து சித்திரப்பாவை, பதுமை, பெண், மதில், பாவைக்கூத்து, கருவிழி, திருப்பாவை, திருவெம்பாவை, உவமை, பாவை நோன்பு, இஞ்சிக்கிழங்கு ஆகியவற்றினைக் குறிப்பிடுகின்றது. (மணிமேகலை தமிழ்ச்சொல் அகராதி, பக்கம்,466)

இத்தகைய சித்திரப்பாவை, பதுமை, பெண் போன்ற வடிவங்களில் பாவை விளக்கு அமைக்கப்பெறும். மண், கல், பொன், வௌ்ளி, செம்பு, பஞ்சலோகம் போன்றவற்றில் இப்பாவை விளக்குகள் அமைக்கப்பெற்று எண்ணெய், நெய் ஆகியவற்றினால் தீபம் ஏற்றப் பெறுகின்றது. அரண்மனை, மாட மாளிகைகள், ஆலயங்கள், இல்லங்கள், போன்ற சிறப்பான இடங்களில் இவ்விளக்குகள் அமைந்திருக்கும். சோதிடத்தில் பரிகார விளக்காக இப்பாவை விளக்கு ஆலயங்களில் செய்து வைத்து ஏற்றுவது சிறப்பு என்று சோதிட இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. பதுமையின் இரு கைகளில் விளக்குகளைத் தாங்கிய வண்ணம் இப்பாவை விளக்கு சிலை அமைக்கப்பெற்று அதில் நெய் வார்த்துத் தீபம் ஏற்றுவர். கர்ம வினைகள் தொலையும். நன்மையே நடைபெறும்.

இத்தகைய பாவை விளக்குகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. மாலைப்பொழுதில் மனைதோறும் விளக்ககேற்றுதல் மரபு. மாலைக்காலத்தில் தம் கையே கருவியாக நெய்யை வார்த்துக் கொளுத்திய இருள் விலகுவதற்கான விளக்குகள் இல்லங்கள் தோறும் எரிந்ததை,

”கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர்
கைபுணை ஆக நெய்பெய்து மாட்டிய
சுடர்துயர் எடுப்பும் புன்கண் மாலை” 

எனும் குறுந்தொகை பாடலடிகள் சான்று பகர்கின்றன. (பொ.வே.சோமசுந்தரனார், குறுந்தொகை, பாடல் எண்.398; 3-5, பக்கம்.705)



கையமை விளக்கம் - முல்லைப்பாட்டில் பாசறைக்கண் அரசன் தனி இருக்கையின் மாண்பு

வில்லரண்களின் வேறாக ஓரிடத்தே நெடிய குத்துக்கோலுடனே பண்ணின கண்டத்திரையை வளைத்து அரசனுக்குக் கோயில் அமைத்து, அதன்கண் குறிய தொடியினையுடைய முன் கையினையும், கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகினையும், சிறிய முதுகினையும் உடைய. இரவைப் பகலாக்கும் ஒளியுடைய வாளைக் கச்சோடு சேரக்கட்டின மகளிர்கள் நெய்களாலும் பாவை விளக்குகள் அவியுந்தோறும் கொளுத்தி நின்றனர். மங்கையர் நெய்யுமிழ் சுரையை உடையராய்த் திரீஇக் கொளீஇ மாட்டினர் கை அமை விளக்கம் என்பது பாவை விளக்கினைக் குறிக்கும். பாவையின் கையில் ஏந்திய விளக்கு என்பார் எனவே கை அமை விளக்கம் என்றார். கையமை விளக்கம் என்றதற்குக் கையகத்தாகிய பந்தம் என்பர் நச்சினார்க்கினியர். நெய்யுமிழ் சுரை என்றது, நெய்யற்ற விளக்கில் நெய் வார்த்தற்கமைந்த குழையோடு கூடிய கருவி. (நப்பூதனார், முல்லைப்பாட்டு, பக்கங்கள்.21-22)

“நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட.” (மேலது, பாடல் அடி, 48-49, பக்கம்.2)

எனும் இவ்வடிகள் பாவை விளக்கு அக்காலத்து இருந்து எரிந்ததைச் சுட்டுகின்றன. வில்லரண்களுக்கு நடுவே அமைக்கப் பெற்ற பாசறையில் அரசனின் உறைதற்குரிய தனியரணில் தலைவியின் தன்மை குறிப்பிடும் இடத்தில் ஏழடுக்கு மாளிகையில், பாவை ஏந்தி நின்ற தகளியிலே பரிய விளக்கு நின்றெரிந்தது. (மேலது, ப.31)

பாவை விளக்கு - பொற்பாவையின் கையிலமைத்த தகளி. பரூஉச்சுடர் - பரிய விளக்குச் சுடர். (மேலது, ப.32)

”பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல
இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து” 

எனும் அடிகள் பொன்னால் ஆகிய பாவை விளக்கு இருந்து எரிந்ததை பறை சாற்றுகின்றது. (மேலது, பாடல் அடி.85-86, பக்கம்.3)

பாண்டில் விளக்கு:- நெய் தீபம்

நன்னுதல் விறலியர் பாடலில் மாடங்களின் மேலிடத்தில் இருந்து காற்றால் அலைக்கப்படும் கொடிகள் அசையும் தெருவின் கண் நெய் சொரியப்படும் விளக்குச் சுரையின்கண் எரிக்கப்படும் நெய் வழியுமாறு பெய்து நிரப்புதலால் கால் விளக்கிளது பருத்த திரியானது பேரொளி காட்டி எரிய நல்ல நெற்றியை உடைய விறலியர் கூத்தாடும் பழைமையான மாளிகைகளை உடைய ஊர்கள் என்பதனைப் பதிவிடுகின்றது.

“சொரிசுரை கவரு நெய்வழி புராலின் 
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல” 

எனும் அடிகள் இவ்விளக்கு எரிந்தச் செய்தியைச் சுட்டுகின்றது. (பதிற்றுப்பத்து, பாடல் எண். 47, பாடல் அடி, 5-7: பக்கம்.216)



வடந்தைத் தண்வளி

நெடுநல்வாடையில் வாடைக்காற்று வீசுந்தோறும், பாண்டிலின் கண் எரியும் விளக்கின் பருத்த சுடர்கள் அசைந்து தெற்கு நோக்கிய தலையினை உடையவாய்ச் சாய்ந்து எரிந்து நிற்கும். 

வடதிசைக்கண் கண்ணின்று வீசும் குளிர்ந்த காற்று. இக்காற்று, மிகையான குளிர் உடையதாகலின் இதன்கட் புறம்போதல் அரிதென்பதனைக் குறிப்பான் விளக்கும் பொருட்டு தண்வளி என்றார். கிழக்கு - கொண்டல், மேற்கு - கோடை, தெற்கு - தென்றல், வடக்கு - வாடை ஆகியன நாற்திசைகளின் காற்றிற்கு வழங்குகின்ற பெயராம்.

“வடந்தைத்தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேற் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல ” (பொ.வே.சோமசுந்தரனார், நெடுநல்வாடை, பாடல் அடி.173 -175, பக்கம்.19. செய்தி, பக்கம்.80)

எண்ணெய் மட்பாண்டில் விளக்கு

இவ்விளக்கு சேலம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மாவட்டத்திலும் இக்காலத்து மண்ணெண்ணெய் எரிக்கும் பேரொளி விளக்குகள் வருவதற்கு முன் வழக்கில் இருந்தன. மூங்கில்களை உயரமாக நட்டு அவற்றின் தலையை மூன்று வரிச்சல்களாகப் பகுத்து அவற்றின் இடையே மட்பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய் பெய்து எரிப்பர். கூத்தாடும் களரியின் வலப்பக்கத் தொன்றும் இடப்பக்கத்து ஒன்றுமாக இரண்டு பாண்டில்கள் நிறுத்தப்படும். திரி முழுவதும் எரிந்து போகா வண்ணம் தடுத்தற்கே கரை பயன்படும்.

அகல் போல் இடம் விரிந்து ஒரு பக்கத்தே குவிந்து சுரைபுடைத்தாய் உள்ளே திரி செறிக்கப்பட்ட கால் விளக்கினை ” பாண்டில் விளக்கு” என்றார்.

ஐங்குறுநூற்றில் ஒண்சுடர்ப்பாண்டில் விளக்கு குறிப்பிடப் பெற்றுள்ளது. இயல்பாகவே ஔ்ளிய சுடரை உடையதாய்த் திகழ்கின்ற பொன்னாலாய பாண்டில் என்னுந் தகழியின்கண் ஏற்றப்பட்ட செவ்விய ஒளிப் பிழம்பு மனைகள் தோறும் எரிந்தது என்பதை, இப்பாடல் அடிகள் சான்று பகர்கின்றது.

”ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற்”

எனும் பாடலடிகள் இதனை நிறுவுகின்றது. (பொ.வே சோமசுந்தரனார், ஐங்குறுநுாறு, பாடல் எண்.405; 1-2, பக்கம்.649)

பொன்னாற் இயன்றதொரு தகழி. இது பொன்னற் செய்யப்படாமை தோன்ற ஒண்சுடர்ப் பாண்டில் என்றாள். இது பொன்னால் செய்யப்படுவது என்பதனை, 'உள்ளிழு துறீஇய ஔ்ளடர்ப் பாண்டில்” (1-33-93) என வரும் பெருங்கதையானும் உணரலாம். செஞ்சுடர் என்றது செவ்விதாய் வலஞ்சுழன்று நின்றெரியும் ஒளிப்பிழம்பினைக் குறிக்கும்.



கிளிஞ்சல் விளக்கு:- மீன் நெய் தீபம்

நற்றிணையில், நெடிய கடலிலே சென்று வலைவீசி அங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன் படகுகளையுடைய பரதமாக்கள் தாம் பிடித்துக் கொண்டு வந்த கொழுவிய மீன்களை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பிலே குவித்து மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர் விளக்கினொளி என்று குறிப்பிடுகின்றது. (மேலது, பக்கம்.220) 

இதனை, நற்றிணை; 

”மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்” 

எனும் அடிகள் இதனைச் சுட்டுகின்றன. (நாராயணசாமிஐயர், நற்றிணை, பாடல் எண்.175, 3-4 பக்கம், 219)

பெருவிழா விளக்கம்:- கார்த்திகை விழா விளக்குகள்

அகநானுநூறு - மணிமிடைப் பவளம் பாடலில் இவ்விழா பற்றி குறிப்பிடுகின்றது. பெரிய கார்த்திகை விழாவிற்கு இடும் விளக்குகளைப் போல எனும் தீபச்செய்தி பற்றித் தெரிவிக்கின்றது.

'பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்” 

என்று பாலை நிலப்பாடல் சான்று பகர்கின்றது. (வேங்கடசாமி நாட்டார், அகநானுாறு, பாடல் எண்.185, 11 பக்கம்,154)

சிறு தீ விளக்கம்:- சிறிய விளக்கு

புறநானூற்றில் பக்கங்களையும், குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளி குறிப்பிடப் பெறுகின்றது.

”சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்”

எனும் பாடல் அடிகள் சிறு தீயினை உடைய விளக்கினைக் குறிப்பிடுகின்றது. (துரைசாமிப்பிள்ளை, புறநானுாறு மூலமும் உரையும், பகுதி 2, பாடல் எண்.325 4-5, பக்கம்.249)

நடுகல் விளக்கு - நெய்தீபம்

இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலத்துப் பலியைப் படைத்து, நல்ல நீரையாட்டி, நெய் விளக்கேற்றதலால் உண்டாகிய மேகம் போலும் புகை எழுந்து தெருவில் மணக்கும்.

”புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீராட்டி நெய்ந்நறைக் கொளீஇய 
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்” 

எனும் பாடலடிகள் நடுகல்லிற்கு நெய் விளக்கேற்றி, பலி படையல் வைத்து பூசை செய்ததைக் குறிக்கின்றது. (புறநானுாறு, மேலது, பாடல் எண்.329, 2-4: பக்கம்.255)

அவியா விளக்கு - நந்தா விளக்கு - காற்றால் அணையாத விளக்கு

பரிபாடல் - செவ்வேள் பாடலில் இவ்விளக்கு இடம் பெற்றுள்ளது. மதுரையில் இருந்து பரங்குன்றத்திற்குச் செல்லும் அழகிய வழியில் பூசை செய்ய எழுந்து சந்தனமும், தூபத்துக்குரிய பொருட்களும், காற்றால் அவியாத விளக்கமும், மணங் கமழ்கின்ற மலர்களும், முழுவதும், மணியும், பாசமும், மயிலும், கோடாரியும், பிணிமுகமும் ஆகியவற்றையும் பின்னும் முருகவேளுக்கு உவந்த வேறு பல பொருள்களையும் ஏந்திப் பரங்குன்றத்தையடைந்து தொழுபவர்களும் என்பதை 

“வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
மாறுசெல் வளியி னவியா விளக்கமும் ” 

என்று பரிபாடல் சான்று பகர்கின்றது. (உ. வே. சாமிநாதய்யர், பரிபாடல், பா.எ.8: 97-98 ப. 87)

அவியாவிளக்கு - காற்றால் அணையாத நந்தாத விளக்கு. சாந்தமும், புகைப்பனவும், மாறாயியங்கும் காற்றால் நந்தாத விளக்கிற்கு வேண்டுவனவும் நாறுகின்ற கமழ்வீயும் இசையைக் கூறுகின்ற முழவமும் எடுத்துச் சென்றனர். பரிபாடல் - செவ்வேள் பற்றிய பாடலில், இயங்குகின்ற காற்றாலே அவியாத விளக்கிற்கு வேண்டுவனவும், பற்றி அவியா விளக்கு - நந்தா விளக்கு “ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்” எனும் அடி இவ்விளக்கின் சிறப்பினைப் பற்றிச் சுட்டுகின்றது. (பரிபாடல் எ.8, செவ்வேள், 8 - 98,ப,167)

கொண்டி மகளிர் - நந்தா விளக்கு

பட்டினப்பாலையில் தம் பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த அவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதிலேயே கொளுத்திய அவியாத விளக்கினை உடைய மலரால் அழகு செய்யப்பட்ட மெழுகிய இடத்திலே ஏறிச்சென்று உள்ளுரார் பலரும் தொழுது செல்வன என்பதை, 

” கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் 
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”

எனும் அடிகள் இவ்விளக்கின் சிறப்பினைப் பற்றிச் சுட்டுகின்றது. (பொ.வே. சோமசுந்தரனார், பட்டினப்பாலை, பா.அடி, 246 - 248, ப.25)

பொன்விளக்கம்: உவமை - சுரத்தின் வெம்மை

கலித்தொகையில் இவ்விளக்கு குறிப்பிடப் பெற்றுள்ளது. பாலைக்கலியில் சுரத்தின் வெம்மை குறிப்பிடும் இடத்து, தகடாகிய பொன்னினது விளக்கத்தை ஒக்கும் அழகிய சுணங்கு கெடும்படி ஞாயிறு காய்ந்த சுரம் என்று குறிப்பிடுகின்றது.

“அடர்பொன் அவிரேய்க்கும் அவ்வரி வாடச்” 

எனும் பாடல் அடி பொன்விளக்கொளியின் தன்மையினைச் சித்தரிக்கின்றது.(நச்சினார்க்கினியர், கலி. பா.எ.22: 19. ப. 60)



ஈமவிளக்கு

காடு படர்ந்து கள்ளி மிகுந்து, பகற் தீயாகிய விளக்காலும், அகன்ற வாளையுடைய பேய் மகளிராலும், இந்தப் புகை தவழும் சுடுகாடு என்று கதையங் கண்ணனார் புறப்பாடல் சான்று பகர்கின்றது.

“ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகிடு” 

எனும் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றது. (மே,பா.எ.329: 1 - 4: ப.255)

கதையங்கண்ணனார் பாடல் இவ்விளக்கினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பெருங்காஞ்சி - யாக்கை நிலையாமை கூறிப் புகழுண்டாக வாழ்தலை அந்துவன்கீரன் பாடல் குறிப்பிடுகின்றது. முற்றவும் கெட்டுத் தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில் வேறுபட்ட குரலினையும், வெவ்விய வாயையும் உடைய கூகையொடு கூடி, பிணங்களைத் தின்னும் குறு நரிகள் தசை ஒட்டிய பற்களை உடையவாய்த் தின்று கொண்டிருக்க பேய்ப் பெண்டிர் பிணங்களைத் தழுவிப் பற்றிக் கொண்டு, வௌ்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினை உடையவராய், களரி மருங்கில். கால் பெயர்த்தாடி பிணம் வைத்துச் சுறாம் களர் நிலத்தில் காலைப் பெயர்த்து வைத்துக் கூத்தாடி ஈம விளக்கின் வெருவரப்பேரும் சுடுகாட்டுத் தீயின் கண் அச்சம் வர நீங்கும் சுடுகாட்டை - பெருநாடுகளை வென்ற முடிவேந்தரும் சென்றடைந்தனர். என்பதனை,

”ஈம விளக்கின் வெருவரப் பேரும்” 

எனும் அடி நிணத்தை ஆரவுண்ட பேய்மகளிர் சுடுகாட்டில் பிணஞ் சுட்டெரியும் கொள்ளிக்கட்டையின் ஒளியை விளக்காகக் கொண்டு கால் பெயர்த்தாடிக் கூத்தாடுவர் எனவும், அது காண்பார்க்கு அச்சம் தரும் எனவும் குறிப்பார். களரி என்றது - சுடுகாட்டிடத்துப் பிணஞ்சுடற்கு அமைத்த மன்றம். இதன் கண் கிடக்கும் மரக்கட்டை எரியுங்கால் உண்டாகும் ஒளியை விளக்காகக் கொண்டு களரி மன்றத்தைச் சூழ் வந்து கூத்தயரும் என்பது இதன் பொருள். (துரைசாமிப்பிள்ளை, புறநானுாறு மூலமும் உரையும், பகுதி 2, பா.எ.359; 1-7, பக். 317-318)

மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட விளக்குகள்

சங்கு உறையூரின் கண் அரசாண்ட வீரைவேள் மான் வெளியன் என்னுந் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெள்ளிய சங்குகள் ஒலித்து நிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட விளக்குகளுடனே சென்றச் செய்தியை,

”வீரை வேள்மான் வெளியன் தித்தன் 
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வேண்கோ டியம்ப நுண்பனி அரும்பக்” 

எனும் நற்றிணைப் பாடல் அடிகள் சங்குகள் முழுங்கியதையும், விளக்குகள் வரிசையாக வைத்து ஏற்றப் பெற்றதையும் குறிப்பிடுகின்றன. (நற்றிணை, பா,எ.58, 5-7,ப.75)

புறநானுாறு காவற் பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து, விளக்கம் உண்டாக இடப்பட்ட நாடு சுடு நெருப்பினது ஒளி தான் விடுகின்ற கதிரை உடைய ஞாயிற்றினது செக்கர் நிறம் போலத் தோன்றும் என்பதனைப் பாடியுள்ளார்,

”வினைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்” 

வீட்டின் கண் உள்ள மரம் விறகு என்பதை இதனால் அறியலாம். (புறநானுாறு, பா.எ.16, 5 - 6, ப. 44)



ஓதிம விளக்கு

நுாற் கேள்வியை உடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த வேள்விச் சாலையினிடத்தே நட்ட யூபத்தின் மேலே இருந்து சோனகர் கூம்பின் மேலே இட்ட அன்னவிளக்குப் போலவும், உயர்ந்த வானிடத்தே இடங் கொண்ட வைகறைப் போதிற்றோன்றும் வெள்ளிப் போலவும் விளங்கியதை பாடல் அடிகள் சான்றறினை பதிவிடுகின்றது.

”கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் துாணத் தசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்”

எனும் அடிகள் சான்றினை பதிவிடுகின்றது. (பொ. வே. சோமசுந்தரனார், பா.அ.316 - 318, ப.27)

ஊர்சுடு விளக்கு - மதுரை மாநகரம்

மதுரைக்காஞ்சியில் இவ்விளக்கு குறிப்பிடப் பெற்றுள்ளது. பிறர் தோள் குற்றப்படுதற்குக் காரணமான பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து அவர் விட்டுப் போகையினாலே போர்க்களத்தே நின்ற ஏந்தின கொம்பினை உடைய யானைகளும், பகைவர் நாட்டிலே கைக்கொண்டு வந்த பாய்ந்து செல்லும் செலவினையுடைய குதிரைகளும், தம் கையில் உள்ள வேலே ஆனோட்டுக் கோலாகக் கொண்டு, ஆண்டு நிரை காத்திருந்த வீரரை மாள வெட்டி எரிகின்ற சினத்தை உடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய ஆயக்கரையில் இருந்த வேட்டுவர் பகைவருடைய ஊரைச் சுடுகின்ற விளக்கினிலே அடித்துக்கொண்டு வந்த பசுத்திரளும் என்று மதுரை மாநகரம் பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. (பொ.வே. சோமசுந்தரனார், மதுரைக்காஞ்சி, பாடல்அடி, 687 - 696, செய்தி, பக்கம்.209)

”காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்”

எனும் பாடல் அடிகள் சான்றினைப் பதிவிடுகின்றது. (பொ.வே. சோமசுந்தரனார், மதுரைக்காஞ்சி, பா.அடி, 691 - 692, ப.39)

இரும்பு செய் விளக்கு - இல்லுறைத் தெய்வத்தை வணங்கல்

மாலைக்காலத்து மகளிர் வழிபாடு - நெடுநல்வாடையில், இவ்விளக்கு குறிப்பிடப்பெற்றுள்ளது. மாலைப் பொழுதென்றறிந்து அழகிய மகளிர் பூந்தட்டிலே இட்டு வைத்த அலரும் பருவம் அமைந்த அரும்பாகிய பசிய காலினை உடைய பிச்சியினை உடைய அழகிய இதழ்கள் விரியும் செவ்வி பெற்று மணத்தாலே இரும்பாற் செய்த தகளியிலே நெய்தோய்ந்த திரியைக் கொளுத்தி நெல்லையும், மலரையும் சிதறி இல்லுறை தெய்வத்தைக் கைகுவித்து வணங்கி, வளப்பத்தை உடைய அங்காடித் தெருவெல்லாம் கொண்டாடினச் செய்தியைப் பதிவிடுகின்றது.

”செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து 
அவ்வித ஒவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெந் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் துாஉய்க் கைதொழுது”

ஈர்ந்திரி - நெய்யால் நனைந்த திரி. இரும்பு செய் விளக்கு - தகளி. இதன் வழி அக்கால மக்கள் தெய்வ பக்தியுடன் விளங்கியதை நாம் அறியலாம். (பொ. வே. சோமசுந்தரனார், நெடுநல்வாடை, பாடல் அடி.40 - 42, பக்கம்.15. செய்தி, ப.34)



மாலை விளக்கு

நற்றிணையில் உறையூரின் கண் அரசாண்ட வீரைவேள்மான் வெளியன் என்னுந் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலித்து நிற்பச் சிறிய பனி உண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே செயலறும்படி வருந்திய பிரிந்துரை மகளிர் மாலைப்பொழுதிலே எதிர் கொண்டனர் என்பதை,

”முரசுமுதற் கொளீஇ மாலை விளக்கின்
வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து”

எனும் நெய்தல் நிலத்தின் முதுகூற்றனார் பாடல் அடிகள் சான்றினைப் பதிவிடுகின்றது. (நாராயணசாமி ஐயர், நற்றிணை, பா.எ.58, 6 - 8, பக்கம்.75)

விளக்கு உவமையாகப் பயன்படுத்தல்

பரணரின் பாடலில் விளக்கு உவமையாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்று யானையின் செவியைப் போன்ற பசிய இலை என்பதனைப் பதிவிடுகின்றது.

”விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க ”

மருதம் நிலப்பாடல் அடிகள் சான்றினைப் பதிவிடுகின்றது. (நாராயணசாமி ஐயர், நற்றிணை, பாடல்.எண்.310, 1 - 2, பக்கம்.382)

கைவிளக்கு

நெய்தல் கலிப்பாடலில் மறுவில்லாத சுடரே! அத்தகிரியைச் சேர்க்கின்றாயின் நீ கடலினிடத்தேமீண்டு வந்து தோன்றிப் பகற்பொழுதை உண்டாக்கும் அளவும் தானெழுதும் தொய்யிலை எழுதாமற் கெடுத்தவனை யான் தேடுவன். யான் தேடும்படி எனக்குக் கைவிளக்காகச் சில கிரணங்களைப் பகுத்துத் தாராய் என்று கூறியதை செய்தி, பக்கம்.442.

“ பௌநீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை 
கைவிளக்காகக் கதிர்சில தாராயென்”

எனும் அடிகள் சான்றினைப் பதிவிடுகின்றது. (நச்சினார்க்கினியர், கலித்தொகை, பாடல் .எண். 142, 42 - 44, பக்கம்.439)

 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

நெடுஞ்சுடர் விளக்கம்

அகநானுாறு - களிற்றுயானைநிறை குறிஞ்சிப்பாடலில் ஈழத்துப் பூதன்தேவனார் பாடலில் தோழி, வலி யெ கையினை உடைய தினைப்புனங்காப்போன் பரண் மீது கொளுத்தி வைத்த நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி வந்து நமது நடுக்கத்தைத் தரும் துயரினை ஒழித்தவன் நம் தலைவன் என்பதை, ”நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்” எனும் இவ்வடி சுட்டுகின்றது. (வேங்கடசாமி நாட்டார், அக, பா.எ.88, 6, ப.227)



பாம்பின் படம் - திருமணி விளக்கு உவமை

அகநானுாறு - களிற்றுயானைநிறை குறிஞ்சி நிலம் - மதுரைப்பாடலாசிரியர் வரைவு கடாயது பாடலில் இடி சினந்து தாக்கலின் வலியழிந்த தலைமணியாகிய விளக்கிலே தலைவியின் இருண்ட மெல்லிய கூந்தலகத்து இன்பம் உறும் துயிலை நீ அடைவாய். ”உரனழி பாம்பின் திருமணி விளக்கிற் பெறுகுவை” எனும் இவ்வடி சுட்டுகின்றது. (வேங்கடசாமி நாட்டார், அகநானுாறு, களிற்றுயானைநிறை, பாடல் எண்.92, 11 -12, பக்கம்.236)

மேலும் பாலை நிலம் பாடலில் வானைத் தோயும் விளக்கத்தினை உடைய மலையினைக் கடந்து பொருள் ஈட்டிச் சென்றோராய நம் தலைவர். ”புண்தேர் விளக்கின் தோன்றும்” எனும் இவ்வடி சுட்டுகின்றது. (வேங்கடசாமி நாட்டார், அகநானுாறு - களிற்றுயானைநிறை பா.எ.111, 14, ப.283)

திண்திமில் விளக்கு

அகநானுாறு - மணிமிடைப்பவளம் நெய்தல் நிலப்பாடலில் செறிந்த கடலாகிய திரையை உடைய சுரத்தில் திரிந்து வருந்திய திண்ணிய படகின் விளக்கொளியில், தான் அகப்படுத்த பலவாய மீன் கூட்டங்களை என் அண்ணன்மார்க்குக் காட்டுதற்கு என் தந்தையும் இரவில் மனைக்கண் போதரும் என்பதை ”திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கிற்” எனும் இவ்வடி சுட்டுகின்றது. (வேங்கடசாமி நாட்டார், அகநானுாறு - மணிமிடைப்பவளம், பாடல் எண்.240, 5, பக்கம்.281)

திருமணிவிளக்கு

அகநானுாறு - மணிமிடைப்பவளம் மருத நிலப்பாடலில் தெய்வத்தை உடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும்அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச்சீரலை அமர்ந்த போர் வன்மை மிக்க முருகனொடு பொருந்திச் செய்த சூளுறவே துன்பம் தருவதாகும் என்பதை,

”அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திறுக்குஞ்
திருமணி விளக்கின் அலைவாய்ச்”

எனும் இவ்வடிகள் சுட்டுகின்றது. (அகநானுாறு - மணிமிடைப்பவளம், பாடல் எண்.266, 20, ப.345)

முத்தீ விளக்கு

பாடாண் திணைப்பாடலில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடலில் அந்திக்காலத்தே அந்தணர் செந்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகிய விளக்கின் கண்ணே துயிலும் பொற் சிகரங்களை உடைய இமயமலையும் பொதிய மலையும் போன்று, 

”அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்” 

எனும் புறநாநுாறு இவ்வடிகள் சுட்டுகின்றது. (துரைசாமிப்பிள்ளை, புறநானுாறு மூலமும் உரையும், பகுதி 2, பாடல் எண்.2 22 -23, ப.5)



பூமிக்கு விளக்காக ஒளிக்கும் தீ

கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தாரஞ்சேரலிரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துக் கூடலுார்கிழார் பாடியது. 

ஒரு நாளிரவு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கப்புலவர் வானில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு அந்நாட்டு அரசனுக்குத் தீங்கு வருமென்று வருந்திய பாடல் செய்தி. வானிலிருந்து மீன் விழுதல் - முரசு கிழிதல் - வெண்கொற்ற குடை, உடைதல் முதலியன நிகழ்தலினால் அரசன் மரணம் எய்தியச் செய்தியினை, புறப்பாடல் மேடராசி பொருந்தியுள்ள கார்த்திகை நாளில் முதற்காலில் நிறைந்த இருளையுடைய பாதி இரவில் முடப்பனை போன்ற வடிவம் கொண்ட அனுடம் நாளில் அடியின் வெள்ளி முதலாக, குளத்தின் வடிவம் போன்ற வடிவுடைய புனர்பூசத்துக் கடையில் வௌ்ளிக் கோள் எல்லையாய் அமைய, பங்குனி மாதத்தின் முதல் 15ன் உச்சமான உத்தரம் அந்த உச்சியினின்று சாய, அதற்கு எட்டாம் நட்சத்திரமான மிருகசிரிடம் நாள்மீன் துறை இடத்தில் படிய, கிழக்குத் திசையில் செல்லாது கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக ஒளிக்கும் தீ பறக்க அம்மன்னன் ஊரில் வானில் இருந்து விண்மீன் விழுந்தது. எண்ணி 7ஆம் நாளில் யானையை நிலத்தில் வைத்து உறங்கவும், திண்மையான முரசு கிழிந்து உருளவும், வெண்கொற்றக்குடை உடைந்து உருளவும், அம்மன்னன் வானவர் உலகத்தை அடைந்தான் என்பதை,

“ஆடுஇயல் அழல்குட்டத்து 
... ... ... ... ... ... ... ... ... 
அளக்கர்த் திணை விளக்காக 
கனைஎரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி
ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே... ... ... 
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
திண்பிணி முரசம் கண்கிழிந்து உருளவும் 
காவல் வெண்குடை கால்படிந்து உலரவும் ... ... ... 
மாஅயோனே”

என்று சான்று பகர்கின்றது. (அ. மாணிக்கனார், புறநானுாறு, பாடல். 229: 1-25, 10 அடி, பக்கம். 57-58)

விளக்குகள் அவிந்து நிற்றல்

மாறோக்கத்து நப்பசலையார் புறப்பாடலில், என் தலைவனுடைய மார்பில் உண்டாகிய புண்களும் பெரியவாயுள்ளன. நண்பகற் காலத்தே வந்து வண்டுகளும், மொய்த்து ஒலிக்கின்றன. நெடுநகர் வரைப்பில் நில்லா நெடிய மனையின் கண் ஏற்றி வைத்த விளக்குகளும் நின்றெறியாமல் அவிந்து விடுகின்றன என்பதைப் பின்வரும் அடிகள், 

”நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்” 

என்று சான்று பகர்கின்றது. (துரைசாமிப்பிள்ளை, புறநானுாறு, பாடல். 280: 3 - 4, 10 அடி, பக்கம். 159)

தொகுப்புரை

சங்க இலக்கியத்தில் பாவை விளக்குகள் வில்லரண்கள், பாசறைகள், அரண்மனைகள், ஆலயங்கள் ஆகிய இடங்களில் நெய் ஊற்றி ஏற்றப்பெற்றன. இல்லங்களில் பாண்டில் நெய் விளக்கு, கிளிஞ்சல் விளக்கு, சிற்றகல், சிறிய விளக்கு முதலியன ஏற்றப் பெற்றன. பெருவிழா நாட்களில் கார்த்திகை விழா விளக்குகள் பல வைத்து ஏற்றப் பெற்றன. நடுகல் பூசைக்குச் சிறிய நெய் விளக்கு ஏற்றி பூசை செய்யப் பெற்றது. நந்தா விளக்கு ஆலயங்களில் ஏற்றப் பெற்றது. வழிநடைச் செல்வோரும் கையினில் இவ்விளக்கினைக் கொண்டு சென்றனர். ஈம விளக்குகள் சுடுகாடுகளில் எரிந்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. ஓதிம விளக்கு அந்தணர் பயன்படுத்தியதையும், பொதுவாக விளக்குகள் பயன்படுத்தப்பெற்றன என்பதை நாம் அறியலாம். இவ்விதமாக சங்க இலக்கியத்தில் விளக்குகள் போற்றுகின்ற விதமாய் அமைந்துள்ளன.

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p182.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard