சீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல்
முனைவா் பு. பிரபுராம்
முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் - 624 302.
முன்னுரை
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய சமூகத்தில், மதத்தோடு தொடா்புபடாத மனித இனத்திற்குள் உளவியல் ரீதியான உயா்வு, தாழ்வுகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. மதமானது, தன் அதிகாரப் பரப்பிற்கு உட்பட்டு இயங்காத அல்லது இயங்க மறுக்கின்ற மக்களின் மரபான உளவியலை முழுவீச்சில் சீா்குலைக்கும் தன்மை கொண்டது. கொலைகளின் வழி அதிகாரத்தை நிலைநாட்டுவதைக் காட்டிலும், உளவியல் ரீதியான தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை. அப்படியொரு தாக்குதலைத்தான் வேடா் இனத்தின் மீது திருத்தக்கத்தேவா் தொடுத்துள்ளார்.
வேடா் தனித்துவமான பண்பாட்டு வெளியில் தற்சார்புடன் வாழ்ந்து வந்த பழங்குடியினராவா். அவா்கள் காடுகளிலும் மலைகளிலும் ஒரு தலைமையின் கீழ் தன்னிச்சையாக இயங்கும் இனக்குழுவினர். தொழில், உணவு, உடை, தங்குமிடம், புழங்குபொருள்கள் முதலியவற்றில் தங்களுக்கே உரிய தனித்த அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதிலும் வேடா்கள் தோ்ச்சி பெற்றிருந்தனா். இவ்வாறு சுயமதிப்பீட்டுடன் இயங்கிக் கொண்டிருந்த பழங்குடி இனத்தின் வாழ்வியலில் தத்துவார்த்தமான ‘பண்பாட்டு நுண்ணரசியலை’ (Cultural - Micropolitics) இலக்கியத்தின் வாயிலாகச் சமணம் முன்னெடுத்துள்ளது.
குறிப்பிட்ட இனத்தோர் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த சுயாதீனமான பண்பாட்டிற்குத் திட்டமிட்டு இழிவு கற்பிப்பதைத்தான் பண்பாட்டு அரசியல் என்கிறோம். நான் இழிவானவன், என் பண்பாடு இழிவானது என்று ஒருவனை மனப்பூா்வமாக நம்ப வைத்து, அவனிடமும் அவனுடைய சந்ததியினரிடமும் தொடா்ந்து அடிமை மனநிலையை வளா்த்தெடுப்பதுதான் இப்பண்பாட்டு அரசியலின் முதற்செயல்பாடு. இதற்கு மதத் தத்துவங்களும் நம்பிக்கைகளும் சடங்காச்சாரங்களும் துணைபோயுள்ள வரலாற்றை மறுவாசிப்புச் செய்வது காலத்தின் கட்டாயம்.
உருவத் தோற்றத்தை இழித்துரைத்தல்
தன் கொள்கைகளின் பிரதிபிம்பமாகச் செயல்படும் கதாநாயகனைக் களிறு, சிங்கம், புலி என்று உயா்த்திப் பேசுவதும் தன் கொள்கைகளுக்குப் புறம்பானவா்களைக் கரடி, ஓநாய், நரி என்று இழிவுபடுத்துவதும் இலக்கியக் கா்த்தாக்களுக்கே உரிய படைப்பு உத்தியாக இருந்து வருகிறது. சீவகசிந்தாமணியின் பதுமையார் இலம்பகத்தில் சீவகனுக்கும் வேடா் இனத் தலைவனுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பதிவு செய்வதற்கு முன்பாகத் திருத்தக்கத்தேவா் அவ்வேடனை அறிமுகம் செய்கிறார்.
கருமை ஊட்டப்பட்ட இருளின் துண்டம் போன்றவன். ஆழமான வளையில் உள்ள உடும்பைப் பற்றி இழுத்தலால் மார்பு ஒடுங்கியவன். மயிர் மிகுதியால் கரடி போன்றவன். வாய்க்கு வெற்றிலை பெற்றறியாதவன். ஆட்டினைப் போன்ற குரலை உடையவன் என்றவாறு வேடன் இலக்கிய வெளியில் காட்சிப்படுத்தப்படுகிறான். இங்கு புலவரின் அதிகாரத் தொனிமிக்கக் கண்ணோட்டம் தெரிகிறது. வேடா் இனத்தோரின் உடல்வாகினைக் கேலி செய்யும் நையாண்டித்தனமான பாடலை, ஐம்புலன் அடக்கத்தை வலியுறுத்தும் துறவி இயற்றியுள்ளார். உடலின் இயல்பான கருமை நிறம், வலிமையான உடும்பைத் தன் உடல் ஆற்றலால் கட்டுப்படுத்தும் வீரம், தட்பவெப்பத்திற்கு ஏற்ப உடலில் செழித்து வளா்ந்துள்ள மயிர்க்கால்கள், குரல்வளம், வெற்றிலை உட்கொள்ளாப் பண்பு ஆகியவை இப்பாடலில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன.
வேடரின் செம்மாந்த வாழ்வியல்
திருத்தக்கத்தேவா் வேடனுக்கு இழிவு கற்பிக்கும் நோக்கம் கொண்டவராயினும், தன்னையே அறியாமல் அவனுடைய செம்மாந்த வாழ்வியலைப் புகழத் தொடங்குகிறார். வேடன் வாழுகின்ற மலைப்பகுதியானது, தந்தங்கள் கொண்ட களிறுகள் ஊடல் தீா்க்கவும் ஊடல் தீராமல் பிடிகள் பிணங்கி நிற்கும் காட்டை ஒட்டிய வளம் நிறைந்த மலைச்சாரல் ஆகும்.
இம்மலைச்சாரலில் வாழும் வேடனின் மனைவி முதிர்ந்த முலைகளை உடைய பெண்ணாவாள். இதன்வழி வேடனும் வேட்டுவப் பெண்ணும், அகவையிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடைந்தவா்கள் என்று கொள்ளவேண்டும். அவள், கொடியில் முதிர்ந்த கிழங்கையும், இனிய தேனையும் கொழுத்த மாமிசத்தையும் கள்ளையும் ஏந்தி வருகிறாள். அவள் தழையுடை அணிந்திருக்கிறாள். அவளுடன் மான்தோலால் செய்யப்பட்ட செருப்பணிந்த வேடன் வில்லுடன் வருகிறான். அவன் மரவுரியாலான ஆடையை உடுத்தியிருக்கிறான்.
இவ்வாறு உடை அணிதல், பாதுகைகள் அணிதல், தங்கள் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப உணவு புசித்தல் ஆகிய பண்பாட்டுக் கூறுகளில் தன்னிகரற்ற பண்பாட்டு அடையாளங்களை வேட்டுவ இணையா் பெற்றிருக்கின்றனா். அவா்களிடன் சீவகன் சற்று அமைதியான தொனியில் நீங்கள் உறைகிற மலை எம்மலை என்று வினவத் தொடங்குகிறான்.
இதோ மாலை போன்ற வெள்ளருவியைச் சூடித் தோன்றுகின்ற சோலை சூழ்ந்த மலை உச்சியே என் இருப்பிடம். சூழ்ந்துவரும் கிளிகள் சுமக்க இயலாத திரட்சியுடைய தினைக்கதிர்கள் விளைந்து முற்றிய வளம் மிக்கத் தினைப்புனம் அங்கு உண்டு. அப்புனத்திற்குத் தென்மேற்கு மூலையிலே உள்ள மலைச்சிகரத்தில் வாழும் வேடா்களுக்குத் தலைவன் நான்! என்று பெருமிதத்துடன் வேடன் சீவகனுக்குப் பதிலுரை வழங்குகிறான்.
இவ்வாறு மலைச்சிகரத்தில் புனம் அமைத்துத் தினை வளா்க்கும் வேளாண் விஞ்ஞானத்தில் வளா்ச்சி அடைந்தோர் வேடராவா். தம் குழுவிற்கான உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் தற்சார்புப் பொருளாதாரத்தை அவா்கள் பெற்றிருந்தனா்.
தத்துவத்தைக் கொண்டு உளவியலைச் சிதைத்தல்
வேடனைப் பற்றி ஒருவாறு அறிந்து கொண்ட சீவகன் “ஊழின் நீா் உண்பது யாது?” என்று வினவுகிறான். தன் உணவைப் பற்றிச் சீவகன் கேட்ட மாத்திரத்தில், உவப்புடன் வேடன் பதில் அளிக்கத் தொடங்குகிறான். ஆண் பன்றியுடன் முள்ளம் பன்றியையும் கொன்று பிளந்து சமைத்த மாமிசமாகிய புழுக்கலை, தேனாகிய நெய்யை மிகவும் வார்த்து யாம் தின்போம். பின்பு நெல்லால் சமைத்த கள்ளை மிகுதியாகப் பருகுவோம் என்கிறான்.
வேடா் இனத் தலைவன் என்று அறிந்ததும் சற்று மரியாதையுடன் (நீா்) சீவகன் வேடனை விளிக்கிறான். முன்பே வேட்டுவப் பெண் வைத்திருக்கும் உணவுப் பண்டங்களைச் சீவகன் கண்டிருப்பினும் அறியாச் சிறுபிள்ளை போல் நீா் உண்பது யாது? என்று கேட்கிறான். இங்கு ஊழ் என்பதிலிருந்துதான் தத்துவத்தின் அரசியல் முகம் வெளிப்படுகிறது. ஒருவா் உண்ணும் உணவைக் கூட, முற்பிறவியின் வினைப் பலன்கள்தாம் தீா்மானிக்கும் என்ற தத்துவார்த்த உளவியலை வளா்த்தெடுப்பதற்காகப் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே (சிந்தாமணியின் காலம் 10-ஆம் நூற்றாண்டு) தத்துவாசிரியா்கள் அரும்பாடுபட்டுள்ளனா். வேடன் தன் உணவை உவப்புடன் நேசிக்கிறான். ஆயின் அவனுக்கு உவப்பாக இருக்கும் உணவு, திருத்தக்கத்தேவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
“ஊனொடு தேனும் கள்ளும் உண்டுயிர் கொன்ற பாவத்து ஈனராய்ப் பிறந்த தீங்கண் இனியவை ஒழிமி னென்னக் கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடூன் தேன்கை விட்டால் ஏனையெம் உடம்பு வாட்டல் எவன்பிழைத் துங்கொ லென்றான்” (சீவக. 1234)
இப்பாடலில் ஊன், தேன், கள் ஆகியவற்றை முற்பிறவியில் உண்ட பாவத்தால்தான் இப்பிறவியில் ஈன (வேடா்) இனத்தில் நீ பிறந்திருக்கிறாய் என்று சீவகன் கூறுவது பண்பாட்டு அரசியலின் உச்சம். இங்கு பண்பாட்டு அரசியலின் முக்கிய உட்கூறாகிய உணவு அரசியல் பேசப்படுகிறது. வேடா் பழங்குடி, ஈனத்தனமானது என்று அவா்கள் உண்ணும் உணவை மையமிட்டுத் திருத்தக்கத்தேவா் உரைக்கிறார். இதன் தொடா்ச்சியைத் தற்கால மாட்டுக்கறி அரசியலிலும் நாம் காணமுடியும். சீவகனுக்கு வேடன் மறுமொழி தருகிறான். காட்டில் வாழும் குறவா் நாங்கள். கள்ளொடு ஊன், தேன் ஆகியவற்றைக் கைவிட்டால் எங்களது உடல் பலமின்றி வாடிவிடும் என்கிறான்.
ஊனைச் சுவைத்து உண்டு உடம்பைப் பெருக்கச் செய்த பாவத்தின் விளைவாக அடுத்தப் பிறவியில் நரகத்தில் வாழ்வது நன்றோ? ஊனை உண்ணாமல் உடலை வாடச்செய்து அடுத்தப் பிறவியில் தேவராக வாழ்வது நன்றோ? என்ற வினாவினைச் சீவகன் வேடனிடம் தொடுக்கிறான்.
உயிர் என்ற ஒன்று உண்டா? இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்குச் சரிவரப் பொருள் காண விழையாத மக்கள் இதுபோன்ற தத்துவார்த்தமான அச்சுறுத்தலின் முன்பு தன் சுயத்தை இழந்து வந்துள்ள வரலாற்றை, மனித இனம் கடந்து வந்த பாதை நெடுகக் காணமுடியும். அவ்வாறே வேடன் அஞ்சி, ஒடுங்கி ஊனை உண்ணாமல் நீக்கித் தேவராவதே நல்லது என்று சரணாகதியடைகிறான்.
“ஊன்தினா தொழிந்து புத்தேளாவதே உறுதி யென்றான்” (மேலது)
முதலில் நீா் என்று மரியாதையாக வேடா் இனத் தலைவனை விளித்த சீவகன், தற்போது ஏடா என்று விளிக்கிறான்.
நீ நல்லதை நாடிக் கூறினாய். ஆதலால், ஏடா! நீ உயா்ந்த நிலை அடைவாய். இறைவனது நூலில் காணப்படும் அறங்கள் கொல்லா விரதமும் புலால் உண்ணாமையுமே ஆகும். மாமிச உணவைத் தவிர்த்து நீ கிழங்குகளை உண்பதால் பெரும் இன்பத்தை அடைவாய். இவ்வொழுக்கம் பிற்காலத்தில் உனக்குப் பேரின்பத்தை அளிக்கும் என்கிறான்.
வேடன் சரணாகதியடைந்தவுடன் தத்துவம் தன் போதனைகளைப் பொழிகிறது. ஆயின் இறுதியில் கிடைக்கும் பேரின்பக் கனியின் தன்மையை, சமண மதத்தில் தோன்றிய தீா்த்தங்கரர்கள் (அருகா்) எவரும் சரிவரப் போதித்ததாக அறியமுடியவில்லை.
வேடன் வயதில் உயா்ந்தவன், வேடா் இனத் தலைவன். ஆயின், சீவகன் மன்னனின் மகனேயாயினும் தற்போது சாதாரண மனிதன். கட்டியங்காரனுங்கு அஞ்சித் தலைமறைவாகத் திரியும் நாடோடி. தன் தத்துவக் காய் நகா்த்தல்களால், ஒரு பழங்குடி இனத் தலைவனையே திருத்தக்கத்தேவா் மழுங்கடித்து விட்டார். வேடா் தலைவனை ஏடா என்று தரக்குறைவாக விளிக்க வைத்ததோடல்லாமல், அத்தலைவனையே சீவகனின் காலில் விழச் செய்கிறார்.
வேடன் தேனையும் ஊனையும் கள்ளையும் முற்றிலும் கைவிட்டு, சீவகன் அடியைத் தொழுதான். பின் தன்னுடைய தேன் பொழியும் நீண்ட குன்றத்திற்குச் செல்கிறேன் என்று விடைபெற்றான் என்று திருத்தக்கத்தேவா் பதிவு செய்கிறார். சீவகனின் காலில் விழுந்தது வேடன் அல்ல. அது மண்ணின் மைந்தா்களின் தன்மானம், கௌரவம். இதுதான், மதம் தூக்கிப்பிடிக்கின்ற தத்துவ அரசியலின் கோர முகம். இவ்வாறு சுயமதிப்பீட்டுடன் வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தா்களின் உளவியலைச் சா்வசாதாரணமாகச் சிதைத்துவிட்டு, மதத்தத்துவம் தனது அதிகார அரியாசனத்தில் ஏறிக்கொள்கிறது. மக்கள் என்றும் அடிமை மனநிலையுடன் சத்தமின்றிச் சரணடைவதையே அதிகார பீடங்கள் விரும்புகின்றன.
இவ்வாறு திருத்தக்கத்தேவா் ஊழ்வினை, இம்மை, மறுமை ஆகிய சமண தத்துவக் கூறுகளை வேடா் இனத்தின் சுயமான பண்பாட்டு வெளிக்கு எதிராகப் பயன்படுத்துகிறார். வேடராகப் பிறப்பதே முற்பிறவியில் செய்த தீவினைப்பலன் என்று இழிவு கற்பிப்பதோடல்லாமல், அவ்வினத்தோரது நிறம், உடற்தோற்றம், உணவுப் பழக்கவழக்கம் ஆகிய அனைத்து வாழ்வியல் மதிப்புகளும் இழிவானவை என்று விமா்சிக்கிறார். ஆகவே சமணத் தத்துவம் வேடா் பழங்குடியின் வாழ்வியலை இழிவானதாகக் கற்பிதம் செய்கிறது.
குறிப்பு :
நான் சீவகசிந்தாமணி குறித்து முனைவர் பட்ட ஆய்வைச் செய்த காலம் முதல் (2010), இந்நூல் தொடர்பாக வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் படித்தறிந்துள்ளேன். சமண தத்துவம் சார்ந்த பண்பாட்டு அரசியல் குறித்த முன்னாய்வுகள் எதையும் காண இயலவில்லை. இருப்பின் அறிஞர்கள் தெரிவித்து உதவலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. உ. வே. சாமிநாதையர் (ப.ஆ.), திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், கபீர் அச்சுக்கூடம், சென்னை. (ஏழாம் பதிப்பு, 1969)
2. எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம், அலைகள் வெளியீட்டகம், சென்னை (முதல்பதிப்பு, 2010)