New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்
Permalink  
 


ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்

 

ம. லியோசார்லஸ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.

 

asarakovai.jpg

 

முன்னுரை

 

சமுதாயத்தின் மரபுகளே மனிதனைத் தனக்குள் கட்டுப்படுத்தி நிற்க வைத்து, அறச்செயல்களைச் சட்டங்களாக அமைத்து நடைமுறைப்படுத்தின. சமூகத்தில் ஒன்றுபட்டு வாழக்கூடிய நிலையில் தனிமனிதனை ஒழுங்குபடுத்தும் சில கட்டுப்பாடுகள் மரபுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்கண் ஒருவித ஒழுக்கநிலை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அனைவரும் ஏற்றுக்கொள்பவையாக அமைக்கபட்டன. பழங்காலச் சமுதாயம் ஒன்றில் வாழும் ஒரு மக்கள் தொகுதி அல்லது குழு, மரபு என்னும் பொருண்மைக்கு வடிவம் கொடுக்கலாயின எனலாம். அதன்வழி மரபொழுக்க நிலைக்கு உட்பட்டு பழங்காலந்தொட்டு இன்று வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் அற இலக்கியங்களில் ஒன்றாக விளங்குவது ஆசாரக்கோவை நூலாகும். இத்தகைய நூல் எடுத்தியம்பும் கருத்துகள் யாவும் மரபொழுக்க நிலையை ஏற்று பின்பற்றியவையாகவும் உள்ளன எனுங் கருத்தினைக் காணலாம்.

 

மரபொழுக்க நிலை என்பதன் பொருள்

 

அறவுணர்வுப் படிநிலைகளில் ஒன்றாகக் கருதப்படுவது மரபொழுக்க நிலையாகும். வழக்கம், ஆசாரம், சம்பிரதாயம், சட்டம், ஸ்மிருதி தேவகட்டளை என்பவைகளைக் கொண்டு சமுதாயம் தனி மனிதனுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தி வந்தால் இந்நிலை சம்பிரதாய தருமநிலை ஆகும். இத்தகைய நெறிமுறையினைக் கைக்கொண்டு சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனிமனிதன் தன் வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வது மரபொழுக்க நிலை என்னும் வரம்பிற்குள் அடங்கும்.தனிமனிதன், குடும்பம், சமூகம் என்னும் படிநிலைகளுடன் ஒன்றுபட்டு ஏற்குந்தருவாயிலோ அல்லது மறுக்குந்தருவாயிலோ அமைந்தவையாக மரபொழுக்க நிலை அமைகின்றது. இந்நிலை பின்னர் வழக்கமாகவும் மாறி மக்களை வழிநடத்துபவையாக அமைகின்றன. இவைகளே மரபொழுக்க நிலையாகவும் கொள்ளப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கமரபு நிலையினை ‘அறவியல்’ என்னும் நூல் பின்வருமாறு வரையறை செய்கின்றது.

“மரபுநெறியின் அடிப்படையாக விளங்குவன கூட்டமாக அல்லது மந்தையாக வாழும் இயல்பூக்கமும் (Herd Instinct) அதனுடன் தொடர்புள்ள உடன்பிறந்த போக்குகளான இரக்கம் (Sympathy) மற்றவர்களைப் பார்த்து நடப்பது (Imitation) கருத்தைத் தோற்றுவிப்பது (Suggestion) போன்றவை” (அறவியல் - ஓர் அறிமுகம் ப - 86)

 



ஆசாரக்கோவை நூல் சிறுகுறிப்பு

 

ஆசாரக்கோவையின் மூலநூல் ஆரிடம் என்ற வடமொழி நூல் எனலாம். வெண்பாக்களால் ஆன இந்நூல் 100 பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலினை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் ஆவார். இந்நூல் சைவ சமயம் சார்ந்த நூலாகக் கருதப்படுகின்றது. ‘ஆசாரம்’ என்பதன் பொருள் ஒழுக்கமாகும். ஒழுக்கங்களின் கோவை ஆசாரக் கோவையாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இவை அறப் பிரிவிற்குள் அடங்குபவையாக அமைந்துள்ளன. சான்றோர்களின் பழுத்த அறிவினால் தோன்றியவை என்பதனை உணர்த்தும் விதமாக ‘முந்தையோர் கண்ட நெறி ’, ‘யாவரும் கண்ட நெறி’ , ‘பேரறிவாளர் துணிபு’ , ‘நல்லறிவாளர் துணிபு’ என்னும் தொடர்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

 

ஆசாரக்கோவை உணர்த்தும் மரபொழுக்க அறம்

 

மரபொழுக்க நிலை என்னும் பதம் அறத்தினைப் போற்றுவனாய் அமைந்துள்ளன. அறத்தின் செயல்பாடுகள் யாவும் மரபொழுக்க நிலையினை ஏற்பவையாய் அமைந்துள்ளன. இவ்விதம் குறிக்கப்பெறும் இந்நிலை நாகரீகச் சமுதாயத்தில் சில நேரங்களில் புறந்தள்ளப்படுகின்றன என்றும் கூறலாம். அடிப்படையில் ஆராய முற்படும் வேளையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை நூல் மரபொழுக்க அறநிலையினை ஏற்பவையாக அமைந்துள்ளமையினை அறியலாம். அறிவில் சிறந்த சான்றோர்களாகிய முன்னோர்களின் பட்டறிவுக் கருத்துகளை பிரதிபலிப்பனவாக உள்ளதால் இவை மரபொழுக்கத்தின் வழக்கமாக கொள்ளப்பட்டமை அறிய முடிகின்றது. இந்நூலில் நாள்தோறும் பின்பற்றக்கூடிய நித்திய ஒழுக்கங்களைக் கூறுவதின் நிமித்தம் அறம் வலியுறுத்தப்படுவதை உணர முடிகின்றது.

“வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் 
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை” (ஆசாரக்கோவை, பாடல் எண்: 4 )

இப்பாடலில் ‘முந்தையோர்’ என்னும் பதங்கண்ட அளவில் மரபினால் போற்றப்பட்ட முன்னோர்களின் செயல்பாடுகளை சமூகம் ஏற்றுக்கொண்டமை நன்கு விளங்குகின்றது. ‘அறம்’ எனும் நெறிமுறையில் ஆசாரக்கோவையின் இப்பாடல் மிகத் தெளிவாக மரபொழுக்க அறக்கருத்தினை வலியுறுத்துகின்றது.



ஆதிகாலம் முதற்கொண்டு இவ்வுலகை இறைவன் படைத்தான் என்றும், அதனால் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம். தமிழிலக்கியங்களைக் கண்ணோக்கும் தருவாயில் அதனைப் படைத்தவன் இறைவன் எனவும் நம்புகின்றோம். அதனை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு; மறுத்தவர்களும் உண்டு. இக்கருத்தினை ஏற்றுக் கொண்டவர்கள் மரபொழுக்க நிலையினை எற்றவர்களாகின்றனர். அதன்பேரில் ஆசாரக் கோவையில் சொல்லப்பட்ட செய்திகளும் இவற்றுள் அடங்கும் என்பதில் மாற்றில்லை. 

“உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே 
முந்தையோர் கண்ட முறை” (ஆசாரக்கோவை, பாடல் எண்: 11)

மேற்கூறப்பட்ட பாடலின் வழி பழமையோர் உணர்ந்து போற்றிய செயல்களைப் பின்னும் இறை நம்பிக்கைக் கொண்ட இன்றைய சமூகமும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதனால் மரபொழுக்க நிலை வழுவாமல் அறம் போற்றப்பட்டு வருகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.

“எச்செயல் மக்களால் ‘செய்யப்படவில்லையோ’ அச்செயல் ‘தீய செயல்’ எனவும், ‘எப்போதும் செய்யப்படும் செயல்’‘நல்ல செயல்’ எனவும் ஆகும்” (அறவியல் ஓர் அறிமுகம் ப - 84)

இதனால் நற்செயல், தீச்செயல் என்னும் பதங்கள் யாவும் வெகுசன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைந்துள்ளன. நம்பிக்கையின் வயப்பட்ட தமிழ்ச் சமூகம் சான்றோர்களின் வாக்கு பொய்யாத் தன்மை கொண்டது என்பதனை மனதில் ஏற்று தம் வாழ்வில் கடைபிடிக்கலாயினர். அதனால் மரபொழுக்க அறநிலை இன்றும் சமூகத்தில் நிலவுகின்றது. எத்தகையச் செயல்களைச் செய்ய கடமைப்பட்டுள்ளோமோ அத்தகையச் செயல்களை செய்கின்றோம். நம் முன்னோர்கள் எவ்வகையில் வாழ்ந்தார்களோ அவ்வகையில் நாமும் நம் வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றோம். சமுதாயம் கூறும் எந்தக் கருத்தும் செய்பவன் கருத்தென சிறப்பாக அமைகின்றது. இவ்வகையில் ஒரு சமுதாயத்தின் அறக் கருத்துகள் அறிவுள்ள ஒருவன் ஐயப்படாத வகையில் அவனுக்குத் தானே விளங்கும் அறக் கருத்துகளாக அமைகின்றன.


 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்
Permalink  
 


மற்றவர்களுக்கு இன்பம் தருவது மற்றும் நமக்கு மனமகிழ்ச்சியினைத் தருவது என்னும் உணர்வு நிலையிலும், சமூகம் ஏற்றுக்கொண்ட அனைத்து ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலும், நாம் மரபொழுக்க வழியில் அறத்தினை மேம்படுத்த முயல்கின்றோம். இதனால் தனிமனிதனுக்கு சமூகம் தனி அந்தஸ்தினை அளிப்பதாக உள்ளமையினையும் காண்கின்றோம். சான்றாக நம் மூதாதையர் இறந்து போனபின் அவர்களைப் போற்றி செய்யும் கடமைகளைக் கொள்ளலாம். தனிமனிதனின் செயல்பாடுகள் யாவும் நற்செயலாய் அமைவதற்கான வாயிலாக ‘ஒழுக்கம்’ போற்றப்படுகிறது. அத்தகைய ஒழுக்கம் மூதாதையர்கள் வழியாய் பெறப்படுவது மரபொழுக்கமாகின்றது.

“அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க் குறுகண்ணு மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 47)

மேற்காட்டப்பட்ட ஆசாரக்கோவை பாடலின் வழி நோக்கும்போது அந்தணர்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றிய அட்டமி திதி, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தசி, மன்னர்க்கு துன்பம் வரும் நாள், பூகம்பம் வரும் நாள், தூய்மை இல்லா நாள் போன்ற நாட்களில் எல்லாம் வேதங்கள் ஓதக்கூடாத நாட்களாக கூறப்பட்டுள்ளன. இவைகள் மரபு ரீதியாக இன்றும் அந்தணர்கள் வாழ்வியல் முறைகளில் பின்பற்றி வருகின்றனர். இதனால் மரபொழுக்க அறநிலை ஆன்மீக வாழ்வின் அடிப்படை நாதமாக விளங்கி வருகின்றமையினை உணர்ந்து கொள்ளலாம்.

 



ஏற்கத்தக்க மரபொழுக்க ஆசாரங்கள்

 

மனிதர்களிடம் இயல்பான உணர்வுகள் அல்லது செயல்பாடுகளாக அமைந்துள்ள இரக்கம், மற்றவர்களைப் போல நடப்பது, ஒருவர் கருத்தைப் பலரும் ஏற்பது, நம் அருகில் உள்ளவர்களுக்குப் பிடித்ததையே நாமும் செய்ய வேண்டும் என்பவை யாவும் நம்மை நெறிப்படுத்துவதாக அமைகின்றன. அவ்விதமாகப் பார்க்கும் போது பண்டைய மக்கள் தங்கள் வாழ்வில் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப, உளத்தின் பொருட்டும், உடலின் பொருட்டும் தகவமைத்துக் கொள்ளலாயினர். அதன் விளைவாக, நடத்தைகளின் போக்கு அமையலாயிற்று. பின்னர் தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டு சமூகத்தில் ஏற்கக் கூடியது என்றும், போற்றக் கூடியது என்றும் எண்ணி பின்பற்றலாயினர். இக்கருத்தினை எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில்;

“நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து” (ஆசாரக்கோவை பாடல் எண்: 1)

என்பதன் வழி சொல்லப்பட்ட எட்டுச் செய்திகளும் மரபொழுக்க அறத்தினை விதைப்பதாய் அமைந்துள்ளன. இவை இன்றைய காலகட்டத்திலும் ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படுபவைகளாக அமைந்துள்ளன. ஒரு காலகட்டத்தில் சமூகம் ஏற்றுக் கொண்டதனையே தனிமனிதன் ஏற்கும் மரபொழுக்க அறமாக கருதப்பட்டது. ஏனென்றால் நாகரீக வளர்ச்சியினால் சமூகத்தின் செயல்பாடுகள் மாற்றம் பெற்றதன் விளைவு எனலாம். இதன்படி என்றும் தளர்ச்சியில்லாத உறுதியான உள்ளத்தினை உடையவர்கள் வஞ்சனைச் சொற்கள், பயனற்ற சொற்கள், நாவடக்கமில்லாத சொற்கள், புறங்கூறுதல் ஆகியவற்றினைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தங்கள் கருமமே கண்ணாய் செயல்படுவர். இச்செயல் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் செயல் என்று வரையறுத்தல் என்பது துணிந்து முடிபு. இதனைப் பின்வரும் ஆசாரக்கோவைப் பாடல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

“படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 52)

 



ஏற்கத்தகாத மரபொழுக்க ஆசாரங்கள்

 

ஆசாரக்கோவை நூல் வடமொழியின் தழுவல் என்று சிலர் உரைக்கின்றனர். அதில் சொல்லப்பட்ட கருத்துகள் யாவும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக அமைந்தாலும் சில கருத்துகள் ஏற்கத் தகாதவைகயாகவும் அமைந்துள்ளன. இதன் காரணம் என்னவெனில் நாகரீக வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி வேகம் மக்கள் வாழ்வியல் முறைகளை மாற்றமடையச் செய்துள்ளது.

“பழங்காலச் சமுதாயத்தின் வழக்கங்களுக்கு ஆதரவாக விளங்குவது ‘தடை’ அல்லது ‘இன்னது செய்யக்கூடாது’ என்ற விதியாகும். வழக்கத்துக்கு மாறாக எவனாவது ஒரு செயல் புரிந்தால் அவன் அனைத்துக்கும் மேற்பட்ட சக்தியான கடவுளின் ஆணைப்படி ஏதாவது ஆபத்து ஏற்படும் என்பதுதான் இது” (அறவியல் - ஓர் அறிமுகம் ப - 92)

இவ்விதம் கடவுள் நம்பிக்கையில் மூழ்கித் திளைத்த மக்களின் செயல்பாடுகள் மரபு வழியாக போற்றப்பட்டமையினால், அறிவார்ந்த சிந்திக்கும் மக்கள் இவற்றினை ஏற்றக்கொள்ள இயலாத நிலை அமைகின்றது. இத்தகைய ஏற்கத்ததகாத மரபொழுக்க ஆசாரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

“நின்றக்கால் நிற்க அடக்கத்தா லென்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 74)

இப்பாடலில், ஆசிரியர் முன் மாணாக்கர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. காலச்சூழலுக்கேற்ப இவற்றினை நோக்கும் போது யாவும் இன்று பின்பற்றப்படாத சூழல்தான் நிலவுகின்றது. இவ்விடம் ஆராயப் புகுவோமேயானால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல வகையான மாற்றங்கள் தான் இவற்றிற்கான காரணம் எனலாம். மரபொழுக்க அறவிதிகளைப் பின்பற்றி செயல்படுபவர்கள் யாவரும் பழைமைவாதிகள் என்று அழைக்கப்பட்டு அவர்களின் அறக்கருத்துகள் எற்கப்படாத நிலை உள்ளது. இத்தகைய மரபொழுக்கத்தில், மதச்சடங்குகள் சமுதாயத்தின் அதிகாரத்தினை ஆதரிக்கின்றன. மதத்தின் பெயரால் பிரிவினைகளை விரும்பாத அறிவார்ந்த மக்கள், அதன்வழி சொல்லப்பட்டக் கருத்துகளைப் புறந்தள்ளுகின்றனர். தனிமனிதனை மரபொழுக்க அறநிலை ஆசாரங்கள் கருத்தில் கொள்வதில்லை. சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இவற்றினால் நமக்குப் பயனில்லை என்பதனை உணர்ந்து மரபினை புறக்கணிக்க எண்ணினர். அதனால் மரபொழுக்க நிலை மறைந்து ஆசாரங்கள் போற்றப்படுவதில்லை எனும் சூழல் உருவாகியது. மேலும்,

“உண்டது கேளார் குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனம்திரியார் புல்லரையும்
உண்டது கேளார் விடல்”(ஆசாரக்கோவை பாடல் எண்: 86)

ஐங்குரவர்கள் என்று போற்றப்படும் சான்றோர்களைக் கண்டால் உணவு உண்டீர்களா? என்று வினவுதல் கூடாது என மொழியப்பட்டுள்ளது. ஆனால் இன்று அவ்விதம் அல்லாத நிலை பின்பற்றப்படும் தருவாயில் இவற்றினை ஆராய முற்பட்டால் ஆசாரம் கடைபிடிக்கப்படவில்லை என்று கொள்ளலாம். ஆனால் இன்றைய சூழலைக் கண்டுணர்ந்தால் இச்செயல் சரிதான் என்பது தெளிவாகும். ஏனெனில் பெரியவர்களிடம் உரையாடும் போதும், சந்திக்கும் போதும், வீட்டில் உள்ளோர் நலமாக உள்ளார்களா? என்று வினவிய பின்பு உணவு உண்டீர்களா? என வினவுகின்றோம். அவ்வினா எழுப்புதலின் பொருள் அவர்களுக்கு உபசரிப்பு செய்வதற்காக அவ்வினா எழுப்பப்படுகின்றது. எனவே மரபொழுக்க அறநிலையினைப் பொறுத்த வரையில், பண்டைய காலத்தில் பின்பற்ற வழிமுறைகள் பலவும், நாகரீகக் காலமாகிய இன்று புறந்தள்ளப்படுபவையாக அமைந்துள்ளன எனலாம்.

 

முடிவுரை

 

அறவழியில் மிகச் சிறந்த கருத்துகளையும் விந்தையான செய்திகளையும் உள்ளடக்கிய கலவை நிலையில்தான் பழங்கால விதிகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் அற்பமான விதிகளாக கருதுபவைகள்தான், பழங்காலச் சமூகத்தில் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறமாகவும், ஆசாரமாகவும் விளங்கியது என்பதனை மறுக்க முடியாது. அறிவியல் வளர்ச்சியினாலும், நாகரீக மேம்பாடுகளாலும், மனிதன் அறிவார்ந்த சிந்தனைகளின் வழி பழைமைகளை ஒதுக்க வேண்டும் என்னும் பெயரில் அறிவு தொடர்பான சில ஆசாரங்களை ஒதுக்குவதினையும் நாம் காணலாம். மரபொழுக்க நிலை முன்னோர்களின் அனுபவத்தினால் விளைந்த அறிவுச் சுடர் என்றும், அது மக்களை நல்வழியில் அழைத்துச் செல்பவையாக அமைந்துள்ளன என்றும் கொள்ளலாம். அதன்வழி, ஆசாரக் கோவையில் சொல்லப்பட்ட ஆசாரங்கள் பலவும் ஏற்கத்தக்கனவாக அமையப் பெற்றிருந்தாலும், ஏற்கத்தகாத ஆசாரங்களும் உள்ளன என்பதனையும் மறுக்க முடியாது. ஆனால் ஆசாரக்கோவை நூலில் மரபொழுக்க அற நிலை உணர்வுகள் கருத்துகளாய் மிகுந்து உள்ளமையினால் அவற்றின் மூலம் நல்லொழுக்கச் செயல்பாடுகள் வளர்ந்து சமூகம் மேம்பாடடைய இந்நூல் உதவுகின்றது என்பது புலப்படுகின்றது.

 

துணை நூல் பட்டியல்

 

1. பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை, செல்வகேசவராய முதலியார், கலாரத்னாகரம் பிரஸ், சென்னை (மூன்றாம் பதிப்பு 1916)

2. அறவியல் - ஓர் அறிமுகம், வில்லியம் லில்லி (ஆங்கிலம்), காந்தி கோ. மோ (தமிழ் மொழியாக்கம்), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை (1964)

3. ஆக்க இலக்கியமும் அறிவியலும், சண்முகதாஸ். அ, யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை (1977)

4. இலக்கியமும் உளவியலும், காஞ்சனா. இரா, விஷ்ணுப்பிரியா பதிப்பகம், மதுரை (1997)

5. பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, ஈசுவரப்பிள்ளை. தா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2000)

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard