‘திராவிடநாடு’ மோசடிக்கு
வாய்தா கேட்ட அண்ணா!
தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று மாற்றப்பட்டது. அப்போது தோன்றிய ‘திராவிடநாடு’ கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது.
அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் அது உண்மையல்ல! ‘திராவிடநாடு’ கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு தனது கட்சிக்குள் ‘காலம் கனியும் போது கைவிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு:
திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்…! என்று சொன்னார். உடனே, சம்பத் “கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு அண்ணா “அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு”ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்” என்றார்.
“மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. “ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட ‘ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்’ என்று புத்தகத்தை எழுதிவிட்டு, ‘என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே’ என்றுதான் சொன்னான் அண்ணா!” என்றார்.
சம்பத் சொன்னார். “இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்” என்றார் சம்பத்.
அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ‘கைவிட முடியாது’ என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்” என்றார்.
எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, “அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?” என்று அதட்டி அனுப்பினார்.
மேற்கண்ட இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.
ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; ‘திராவிடம்’ என்ற சொல்லே மோசடி தான். இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்.