தமிழகத்தில் திட்டமிட்டு பெரியாரை பெரியவா போல் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பெரியாரின் கருத்துகளில் ஏதேனும் மாற்று கருத்து வைத்தாலே போதும்.. என்ன பெரியவாளயே எதுத்து பேசுறீயா.. என்று வெகுண்டெழுகிறார்கள் பக்தர்கள். http://bit.ly/2l6fEhd
பெரியாரின் வைக்கம் போராட்ட பில்டப்புகள் குறித்து லைன்ஸ் மீடியாவில் எழுதப்பட்ட கட்டுரையை பலர் வரவேற்றிருந்தார்கள்.
மேலும் பலர் நாகரீகமாக மறுப்பு விமர்சனத்தை முன்வைத்தார்கள். சிலர் கடுமையாக அனுகினார்கள்.
அவர்களால் ‘வைக்கம்’ தாண்டி மற்றவைகளுக்கு எந்த பதிலையும் தரமுடியவில்லை.
தவிர சிலர் ‘’கிசுகிசு” எழுத்தாளர் என்றார்கள். வைக்கம் போராட்டதை ‘’கிசுகிசு சமாச்சாரம்” என்று நினைத்து விட்டிருக்கும் பெரியார் பக்தர்களை என்ன சொல்வது. பெரியார், சமூக நீதிக்கான கொள்கையைப் பற்றி கேட்டால் ‘கிசுகிசு’ விவகாரமா? தெரியவில்லை.
அடுத்து, தந்தை பெரியாரை, கொச்சைப்படுத்துவதாக கூறுகிறார்கள்.
நேற்றுவரை அவர் சாதி ஒழிப்பு போராளி என்றுதான் நாங்கள் நம்புகிறோம். தந்தை பெரியார் என்றுதான் ஏற்றிருந்தோம். ஆனால் திடீர் திடீரென, அவர் “ஈ.வெ.இராமசாமி நாயக்கர்” என வைகோ போன்றவர்கள் நினைவுபடுத்தும் போது என்ன செய்யமுடியும்?
அதைத்தானே நாமும் அழைக்க வேண்டியுள்ளது.
உண்மையைச் சொல்வதென்றால் திராவிடம் பேசுபவர்களை விட, கருணாநிதியைவிட, பெரியாரை வேறு யாரும் கொச்சைப்படுத்தவே முடியாது. வழிதோறும், வரலாறு தோறும் அவர்கள் மட்டுமே பெரியாரை கொச்சைபடுத்தி வருகிறார்கள்.
இப்போதும் சொல்கிறோம். அந்தக் கட்டுரையில் சொன்னதைப் போல், வைக்கம் போராட்டம், பெரியாரின் போராட்டம் அல்ல. அது காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்.
இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அந்த போராட்டத்தில் போய் கலந்து கொண்டார். மற்றபடி அவரது பங்களிப்பை, சிறைவாசத்தை எங்கேயும் நாம் மறுக்கவில்லை.
நம்பூதிரிகள் கும்ப மரியாதையோடு வரவேற்க வந்தார்கள். ஆனால் பெரியார் வேண்டாம் எனக் கூறிவிட்டார் என்றளவில் மூத்த தோழர் மறுத்துள்ளார். தவிர நம்பூதிரிகளின் வீட்டில் தங்காமல் வேறு யார் வீட்டில் தங்கியிருந்தார் என்பதை அவர்கள் சொன்னால் அடியேன் திருத்திக் கொள்கிறேன்.
1925-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டால் வெளியேறினார். பிறகு நீதிக்கட்சியின் பக்கம் திரும்புகிறார். அதிலும்கூட அவர் நீதிக் கட்சியில் அப்போது சேரவில்லை. ஆதரவாளராகத்தான் இருக்கிறார். 1940-ல் தான் அந்த கட்சி தலைவராகிறார் என்றார்கள். இருக்கட்டும்.
சரி, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ‘வைக்கம்’ போன்று எங்கேயும் இல்லையா?
திருச்சி ஸ்ரீரங்கம் தொடங்கி, மதுரை மீனாட்சி கோயில் வரையிலும் ‘ஆதி தமிழர்களுக்கு அனுமதி’ என்றா இருந்தது.
‘வைக்கம் வெற்றி’யைப் போன்று, தமிழகத்தில் ஏன் சாத்தியப் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை. அடுத்து என் கருத்தும் கேள்வியும் ‘பித்தலாட்டம்’ ‘முரண்பாடு’ என்கிறார்கள்.
எது பித்தலாட்டம்.? மறைக்கப்பட்ட வரலாற்றை திரும்பி பாருங்கள். எவ்வளவு பெரிய பித்தலாட்டத்தை, ஏமாற்று வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். http://bit.ly/2l6fEhd
பெரியார் பிறப்பதற்கு எழுபது வருடங்கள் முன்பே பிறந்தவர் அய்யா வைகுண்டர், (1809-1851). தென் மாவட்டத்தில் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்காக போராடிய மகான்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பியவர். கண்டாலே தீட்டு என ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் சமூகத்து மக்களுக்காக மட்டுமல்ல, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 சாதிகளுக்காகவும் போராடியவர்.
சாணார் நாடார் சமூகத்துப் பெண்கள் மாராப்புதுணி, ரவிக்கை அணியக்கூடாது என்ற ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த கலகக்காரர். கோலியாத்துக்களை எதிர்த்த தாவீது.
கடவுள் இல்லை. நீயேதான் கடவுள் என்றவர். சாதி மதம் பேதமேதுமில்லை என்றவர். அந்த காலத்திலேயே எல்லா சாதிகளுக்குமான ‘சமத்துவ புரத்தை’ உருவாக்கிக் காட்டியவர்.
‘சமபந்தி போஜனம்’ தொடர்ந்து நடந்தியவர். பெண் விடுதலை, பொதுக்கல்வி, சாதி ஒழிப்பு, அடிமைத்தனம், பொதுவுடமை கருத்து என அனைத்தையும் பேசியவர். நடைமுறைப்படுத்தியவர்.
துண்டை இடுப்பிலும், கக்கத்திலும் வைத்து பணியாதே. கம்பீரமாய் தலைப்பாகையாய் கட்டிவா, பெண்கள் மாராப்பு துணியணிந்து வா என சுயமரியதையைச் சொல்லிக் கொடுத்தவர். இன்று வரை அவரது வழியை பின் பற்றுபவர்கள் அதை தொடர்கிறார்கள்.
இப்படி எல்லா வழியிலும் முன்னோடியாக இருந்த அய்யா வைகுண்டரை, பெரியார் ஏன் எங்கேயும் பின்பற்றிவில்லை- பின்பற்றி பேசவில்லை. அல்லது அவரில் இருந்துதான் ‘நான் கருத்து திருட்டை’ செய்தேன் என ஒப்புக்கொள்ளவில்லை.
சரி வேண்டாம், அவருக்கு பின் வந்த திராவிட கட்சிகள் ஏன் பெரியாரை மட்டுமே முன்மொழிந்தது?
அய்யா வைகுண்டரை ஏன் பின்னுக்குத் தள்ளியது. பெரியார் நிதிநிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவர்கள், அந்த நிதியில் வைகுண்டர் போன்ற முன்னோடிகளை புத்தகமாக்கி வெளிக்கொண்டு வராதது ஏன்?
ஏன் என்றால், அய்யா வைகுண்டர் வழியை எடுத்தால் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துவிடுமே என்ற பேரச்சம். நடுங்குகிறார்கள். அவ்வளவுதான்.
பெரியார் திடல்-தந்தி அலுவலகம் இடத்தை வாங்கியபோது பெரியாரும்- ஆதித்தனாரும் பார்ட்னர்கள். ஆதித்தனார் பாரிஸ்ட்டர் பட்டம் பெற்றவர். எனில் பெரியார் யாருக்கு சுயமரியாதையை பெற்றுத் தந்தார்.
அடுத்து பெரியார் பிறப்பதற்கு 34 வருடங்கள் முன்பே பிறந்துவிட்ட (1845-1914) அயோத்திதாச பண்டிதரின் புரட்சியை எடுத்துக் கொள்வோம்.
திராவிடக் கட்சிகள் இதையும் மோசடி செய்து இருட்டடிப்பு செய்துவிட்டது.
பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரான அயோத்திதாசர் மிகப் பெரும் கல்வியாளர். சித்த மருத்தவர். இவரது தாத்தா ‘பட்லர் கந்தப்பன்’தான் தன் குடும்பத்தில் பரம்பரை சொத்தாக பாதுகாத்து வைத்திருந்த திருக்குறள் கையெழுத்துப் பிரதியை எடுத்துச் சென்று ‘எல்லீஸ் துரை’யிடம் கொடுக்கிறார். அந்த எல்லீஸ் துரை மூலம்தான் திருக்குறள் வெளி உலகம் வருகிறது.
அந்த பின்னணியைக் கொண்ட அயோத்திதாச பண்டிதரும், சாதி ஒழிப்பு செயல்பாட்டில் பெரியாருக்கு முன்னோடி. சாதி ஒழிப்பு, பெண்களுக்கான விடுதலை, கோயில் நுழைவு கோரிக்கை வைத்து அனைத்து தளத்திலும் இயங்கியிருக்கிறார். (1891-ல் சாதியற்ற திராவிட மஹாஜன சபை”மூலமாக இலவச கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம், என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக்கும் கோரிக்கை வைக்கிறார்.-நிராகரிக்கப்படுகிறது)
1886-ல் ஆதி திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்கிறார். 1891-ல் நடந்த கணக்கெடுப்பில் கிருத்துவர்கள், மற்றும் மூஸ்லீம்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே இந்துக்கள் என்பதை எதிர்த்து, தாழ்த்தப்பட்டவர்களை ‘சாதியற்ற தமிழர்களாக’ அறிவிக்க போராடுகிறார்.
இப்படி பல வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய அயோத்திதாச பண்டிதரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் இருட்டடிப்பு செய்தது ஏன்? (பௌத்த மத சம்மந்தமான விஷயத்தில் பல முரண்பாடுகள் உண்டு)
அயோதித்தி தாசர் பண்டிதரை அடுத்து ‘தாத்தா’ ரெட்டைமலை சீனிவாசன் (பெரியார் பிறப்பதற்கு 20 வருடம் முன் 1859-ல் பிறந்தவர்) எம்.சி.ராஜா,(பெரியாருக்கு 4 வருடம் இளையவர்-சம காலத்தவர்) உள்ளிட்ட பல தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியதைக்காக, உரிமைக்காக, எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு போராடியிருக்கிறார்கள்.
இவர்கள் வந்து படிப்பை சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ‘பாரிஸ்ட்டர் பட்டம்’ பெற்றவர்களாக, சுயமரியாதையோடு நின்றிருக்கிறார்கள். தன் சமூகத்தின் சுயமரியாதையையும் முடிந்த மட்டும் மீட்டிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரை எல்லாம் ஏன் திராவிடக் கட்சிகள் கொண்டாட மறுத்து, ‘தலித்’ தலைவர்களாக மட்டும் தான் பார்த்தது.
நியாப்படி பார்த்தால் அய்யா வைகுண்டரையும், பண்டிதர் அயோத்தி தாசரையும், ரெட்டமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றவர்களையும் தான் “தந்தை பெரியாராக’ பெயர் வைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.
கேட்டால், ‘அய்யா, வைகுண்டர் ஆன்மீகவாதி’ என சப்பைக்கட்டு கட்டுவார்கள்!
சரி இப்போதிருக்கும் திராவிட தலைவர்கள் என்ன கோயில்களை வெடி வைத்து தகர்த்து புரட்சியா செய்தார்கள். அவர்களின் வாரிசுகள் கோயிலை சுற்ற வேண்டாம் என்றா தடுத்தார்கள். அல்லது ஆன்மீகவாதிகளை எல்லாம் நாடு கடத்தி விட்டார்களா?
அயோத்தி தாசர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி கேட்டால், ‘…அவர்கள்..பிரிட்டிஷ் அரசுடன் இ..ன..க்..க..மா..க’ இருந்தார்கள் என்று இழுத்துப் பேசுவார்கள்.