New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது -இந்திரா பார்த்தசாரதி


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது -இந்திரா பார்த்தசாரதி
Permalink  
 


காலம்' என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்த
விஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எழுதியுள்ளார்.
'கால'த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமான
பரிமாணங்களில் ஆராய்கிறார்.

இதைப் படிக்கும் போது எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.

‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.'

இதற்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரையை உடன் வைத்துப் படித்தல் அவசியம்.
ஏனெனில், குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது அவர் உரை.

சரி, இக்குறளின் பொருள் என்ன? அதை முதலில் பார்ப்போம். இக்குறள்
‘நிலையாமை' என்ற அதிகாரத்தில் வருகிறது. ஒரு பெரிய வாள் இருக்கிறது என்று
வைத்துக் கொள்வோம். ஆனால் அது கண்ணுக்குத் தெரியவில்லை. அது மிகவும்
கூர்மையான வாள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்த வாளின் கண் தொடர்ந்து
வெட்டப்பட்டுக் கொண்டே வருகிறது..அறுபடுவதும் நம் கண்ணுக்குத்
தெரியவில்லை. ஒருநாள் உயிர் இல்லாமல்போகும்போதுதான், கண்ணுக்குத் தெரியாத
வாளில், உடம்பு தொடர்ந்து அறுபட்டுக் கொண்டு வந்திருக்கிறது என்பது
நமக்குத் தெரிகிறது.

இந்த வாளின் பெயர் என்ன? ‘காலம்' என்கிறார் வள்ளுவர். காலம் அருவப்
பொருள். உலகக் காரியங்கள் நடைபெறுவதற்காக ‘காலத்தை' நாம், ‘நாள்' என்றும்
‘இரவு' என்றும் கூறு போட்டுக் கணக்கிடுகிறோம். இவ்வாறு கூறு போட உதவுவது,
சூரியனின் உதயம், சூரியனின் அஸ்தமனம் போன்ற கண்ணுக் தெரியும் நிகழ்வுகள்.
‘காலம்' என்ற அருவமான 'வாள்', 'நாள்' என்ற மயக்கத்தை நமக்குத்
தோற்றுவிக்கின்றது. அவ் ‘வாளில்' அறுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று
உணராமல், பொழுது அவ்வளவில் இன்பமாகக் கழிகின்றது என்று மகிழ்பவர் பலர்.
இவ்வாறு அறுபடுவதை உணர்பவர் மிக அரியவர்களாகத்தாம் இருக்கின்றார்கள்.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்: "நாளெ'ன்று அறுக்கப்படுவதொரு கால
வரையறையைப் போல் தன்னைக் காட்டி, ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர்,
அஃது உணர்வாரைப் பெறின். ‘காலமென்னும் அருவப் பொருள் உலகியல் நடத்தற்
பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுதல்லது,
தானாகக் கூறுபடாமையின், ‘நாளென்று ஒன்று போல்' என்றும், அதுதன்னை
வாளென்று உணரமாட்டார் நமக்குப் பொழுது போக நின்றதென்று இன்புறுமாறு
‘நாளாய்' மயக்கலிற் ‘காட்டி' யென்றும், இடைவிடாதி ஈர்தலின் வாளின்
வாயதென்றும், அது ஈர்கின்றமையை உணர்வார்


அரியராகலின், ‘உணர்வார்ப் பெறின்' என்று கூறினார்.'உயிர்' என்ற சாதி
ஒருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ‘ஈரப்' படுவது அதுவே யாகலின்,
‘வாள்' என்பது ஆகுபெயர்.”

பரிமேலழகர் இன்று அரசியல் காரணங்களினால், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி
இருக்கிறார். ஆனால், பரிமேலழகர் உரை இல்லாமலிருந்தால், இக்குறளைப்
புரிந்து கொண்டிருக்கமுடியுமா என்று யோசிக்க வேண்டும். பகவத் கீதையைப்
போல், திருக்குறளும் எல்லா தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய்.
அதனால்தான், அவரவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கேற்ப, குறளுக்கு உரை
கண்டு, இன்று, பரிமேலழகரைத் தூற்றுகிறார்கள்.

குறளை நுனிப்புல் மேய்கின்ற உரைகாரர்கள், ‘ நாள் என்பது நம் வாழ்நாளை
அறுக்கிற வாள்' என்பார்கள். மணக்குடவர் கூறும் உரையும் இதுதான்.
பரிமேலழகர் இதை மறுக்கிறார்.'காலம்' என்பதுதான் ‘நாளெ' ன ஒன்று போல்,
கண்ணுக்குப் புலனாகாத வாள், அதன்கண் அறுபடுவது உயிருடைய உடம்பு என்கிறார்
அவர். ‘நாளென' என்ற சொல்லாட்சியில், 'என'என்பது, பெயர் அன்று, இடைச்சொல்
என்கிறார் பரிமேலழகர். அதாவது, 'நாளென்பது' என்று, ‘என'வைப் பெயராகக்
கொண்டு, ‘நாளென்பது' என்று பொருள் கொள்ளக்கூடாது, ‘நாளென' என்று, ‘என'வை
இடைச் சொல்லாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பரிமேலழகர். பரிமேலழகர்
ஒருவர்தான் வள்ளுவரின் இதயத்தை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், வள்ளுவரின்
சொற்சிக்கனத்தைக் கையாண்டு, ஆழமான உரையை அவரால் எழுத முடிந்திருக்கிறது.

‘உணர்வார்ப் பெறின்' என்பதற்கு அவர் மிக நுணுக்கமாகப் பொருள்
உரைக்கிறார். நிகழும் கணமே சொர்க்கம், அதை அனுபவிப்பதைவிட்டு வரும்
கணத்தைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவது
போல,'epicurean' கோட்பாட்டைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்கள் பலர். ஆனால்,
வாழ்க்கையின் அருமையை உணர்ந்து அது மற்றவர்க்குப் பயன்பட வாழ்கிறார்கள்.
‘பெறின்' என்பது அவ்வாறு வாழ்கின்றவர்கள், ‘அரியராதலின்' என்கிறார்
பரிமேலழகர்.

‘காலம்' என்பது நாமே நம்முடைய சௌகரியத்துக்காக உண்டாக்கிக்கொண்ட ஒரு
தவிர்க்க முடியாத மானசீக ஏற்பாடு என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
“வெளி' (space)யுடன் சேர்ந்து இது நான்காவது பரிமாணம்( fourth dimension)
ஆகின்றது" என்றார் ஐன்ஸ்டீன். பரிமேலழகர் கூற்று, ‘காலம்' என்ற
மானசீகத்தை எவ்வளவு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது பாருங்கள்!

‘'நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு'

‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக
உடையது இவ்வுலகம்' என்பது இதன் பொருள்.

வாழ்க்கையின் மீது ஓர் எதிர் மறை உணர்வை ஏற்படுத்துவதற்காக வள்ளுவர்
இக்குறளை எழுதவில்லை. ஆனால் ‘நிலையாமை'யை உணர்ந்து, மனிதன்
ஆக்கப்பூர்வமாகச் செயல் படவேண்டும் என்பதைக் கூறத்தான் வள்ளுவர் இக்குறளை
எழுதியுள்ளார். ‘ஈண்டு உண்மை ( ‘உளனொருவன்') பிறத்தலையும், இன்மை,
(‘இன்றில்லை') இறத்தலையும் உணர்த்தி நின்றன என்கிறார் பரிமேலழகர்.

‘பிறப்பு எதேச்சை, இறப்பு உறுதி' என்பார்கள், இருத்தலிய வாதிகள்.
(Existentialists). இதனால், வாழும் காலத்துக்குள், நம் ஆற்றலின் எல்லையை
முழுதுறும் உணர்வதற்கு நாம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.ஏன்?

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு'

‘நின்ற நீரின் அளவினவாம் தாளினது நீளங்கள்; அதுபோல் மக்கள்தம் ஊக்கத்தின்
அளவினவாம் அவர் உயர்ச்சி', என்கிறார் பரிமேலழகர்.

‘உள்ளம்' என்றால் இங்கு ஊக்கத்தை அல்லது முயற்சியைக் குறிக்கின்றது.
இதைத்தான் ‘நம் ஆற்றலின் எல்லையை உணர்வதற்கு நாம் வாழ்க்கையில்
மேற்கொள்ளவேண்டிய அகப் பயணம்' என்கிறார்கள் இருத்திலிய வாதிகள். பொருள்
படைப்பதற்கு இவ்வாற்றல் பயன்பட வேண்டும் என்று ஒரு நடைமுறைத் தத்துவத்தை
எடுத்துக் கூறுகிறார் பரிமேலழகர். ‘உயர்தல், பொருள் படைத்தலால் மிகுதல்'
என்பது அவர் வாக்கு. ஆகவே வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து, நாம் நடைமுறைச்
சிந்தனை எவ்வாறு வேண்டுமென்று, வள்ளுவக் கோட்பாட்டுக் கேற்ப உரை
எழுதுகிறார் பரிமேலழகர்.

மற்றொரு குறள்.எல்லோருக்கும் மிக அறிமுகமான குறள்தான்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்'.

பொருள் வெளிப்படை. ‘உழுதுண்டு வாழ்கின்றவர்களே வாழ்கின்றவர்கள் ஆவார்கள்.
மற்றவர்கள் பிறரைத் தொழுது வாழ்கின்றவர்கள் ஆகிறார்கள்'.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். ‘யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து
அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்கு உரியராய் வாழ்கின்றவர்;
மற்றையரெலாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப்
பின்செல்கின்றவர்'.

‘தாமும் உண்டு' என்பதில் ‘உம்'மையைக் கவனித்தீர்களா? அதாவது,
மற்றவர்களுக்கு உணவளிப்பதுதான் மாந்தர்க்கு முதல் கடமை. எஞ்சியதை உண்பது
மனித தர்மம்.

பரிமேலழகர் மேலும் கூறுகிறார்:' தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப்
பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர்பின் செல்பவர்
தமக்குரியர் அல்லர் என்பது கருத்து'.

அதாவது, உண்மையான மக்கட் பிறப்பினர் உழுதுண்டு தம் தனிமனிதச்
சுதந்திரத்தைப் பேணி வாழ்கின்றவர்கள். மற்றவர்கள், தம் தனிமனிதச்
சுதந்திரத்தைப் பேணாமையினால்,. உறுப்பு ஒற்றுமையினால் மக்கட் பிறப்பைச்
சார்ந்தவர்கள் என்று கூறலாமேயன்றி, உண்மையான மக்களல்லர்; தமக்குரியரல்லாத
அடிமைகள். வள்ளுவர் உறுப்பு ஒற்றுமையை அடிப்படையாக வைத்து, அங்கதமாக
எழுதியுள்ள குறள்களும் உண்டு.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்'

‘இதென்ன ஆச்சர்யம்! கயவர்களும் மனித்தப் பிறவியைப் போல் தோற்றம்
அளிக்கின்றார்களே! இரண்டு கண்கள், இரண்டு காதுகள்! இரண்டு கைகள், இரண்டு
கால்கள்! இந்தமாதிரியான ஒப்புமையை நாம் வேறெங்கும் பார்த்ததேயில்லை!'
நாசூக்கான அங்கதத்தின் உச்சம் இதுதான்! ‘கயமை' என்பது இன்று
‘அயோக்கியர்கள்' என்ற பொருளில் வழங்குகிறது. வள்ளுவர் ‘philistine' என்ற
பொருளில் வழங்கியிருக்கலாமென்று தோன்றுகிறது. ‘Philistine' என்பதற்கு
அகராதிப் பொருள், ‘a crass prosaic individual guided by material rather
than intellectual,spiritual or artistic values'.அடுத்த குறளை
நோக்கினால் இக்கருத்து வலியுறும்.

‘நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்'

‘கயவர்கள், தமக்கு வேண்டியன என்னவென்று அறிந்து, ஒரு குறுகிய
வட்டத்துக்குள் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர் என்பதால், மேலும்,
மேலும் அறிய விழைகின்றவர்களைக் காட்டிலும் கொடுத்து வைத்தவர்கள். அறிய
வேண்டுமென்ற ஆவலுமில்லை, அதனால் மனக் கவலையுமில்லை..'

பரிமேலழகர், ‘கீழோர்' என்று குறிப்பாக உணர்த்துவது இப்பொருளைத்தான்.
அதாவது, தமக்கு உறுதியனவற்றை அறியமாட்டாதவர்கள் என்ற பொருள்.
‘அறியுந்தோறும் அறியாமை கண்டற்றால்' என்கிறார் வள்ளுவர் வேறொரு இடத்தில்.
அறிய, அறியத்தான், நமக்குத் தெரியா விஷயங்கள் எத்தனை இருக்கின்றன என்ற
நம் அறியாமையைப் பற்றிய உணர்வு நமக்கு ஏற்படும். இந்தக் கவலை
கயவர்களுக்கு அறவே இல்லை. இதுவே அவர்கள் ‘மகிழ்ச்சி' க்குக் காரணம்.

பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது.


இந்திரா பார்த்தசாரதி

http://www.uyirmmai.com



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது -இந்திரா பார்த்தசாரதி
Permalink  
 


வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப்
பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும்
அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில்,
சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும்
இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ
குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில்
தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின்
பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

சரி அது போகட்டும் இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள்
என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன். # ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...!!வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப்

பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும்
அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில்,
சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும்
இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ
குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில்
தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின்
பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

சரி அது போகட்டும் இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள்
என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன். # ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard