New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிடர் கழக பரம்பரை பேராயர் அன்புராஜ்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திராவிடர் கழக பரம்பரை பேராயர் அன்புராஜ்
Permalink  
 


இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=940:2009-10-25-22-56-23&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மகன் வீ.அன்புராஜ் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பெரியார் தொண்டர்களிடையே இதுகுறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. தோழர் வீரமணி அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. நமது விமர்சனங்கள் அவரை அம்பலப்படுத்த வேண்டும் என்ற அளவோடு நிற்கக்கூடாது. 

கடந்த 1990 ஆம் ஆண்டில் ஈழத்திற்குச் சென்று ஆயுதப் பயிற்சி எடுத்து தனித்தமிழ்நாட்டை உருவாக்கத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரை 1996 ஆம் ஆண்டு சந்திக்க நேர்ந்தது.  அப்போது அவர் சொன்னார், “தி.க.வில் காலத்தை வீணாக்காதே. அது குடும்ப அரசியலில் சிக்கி சீரழியப் போகிறது” என்றார். அன்று அவரைக் கிறுக்கனாகப் பார்த்தேன். ஆனால் அடுத்த ஆண்டே 1997-லேயே அதை அனுபவத்தில் உணர்ந்தேன்.  அன்புராஜ் அவர்களை வாரிசாக்கும் முயற்சி எனக்குத் தெரிய 1997-லேயே தொடங்கிவிட்டது. தி.க  தலைமையோடு நெருங்கிய தொடர்புடைய பலருக்கும் இது இன்னும் முன்கூட்டியே கூட தெரிந்திருக்கலாம். 

1997-இல் தி.க.வில் அதன் செயல்பாடுகளில் கிராமப் பிரச்சாரம் மற்றும் மாணவர் பிரச்சாரப் பயணங்களில் பணியாற்றிய என்னைப் போன்ற பல தோழர்களுக்கும் கடும் விமர்சனங்கள் இருந்தன. அதைப் பலரிடம் பேசியும் பலன் கிட்டவில்லை. இறுதியாக நாங்கள் சென்ற இடம் தோழர் வீரமணி அவர்களின் இல்லம்தான். அவரது குடும்பத்தாரிடம் பேசித்தான் சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.  அப்போதிருந்தே பல முக்கிய முடிவுகள் அவரது ஆலோசனையில் தான் இறுதியாக்கப்படும். அந்த முடிவுகளை மகிழ்வுடன் ஏற்று செயல்பட்டிருக்கிறேன்.  எனவே இன்று திடீரென வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என விமர்சிக்க இயலவில்லை.  வாரிசுகள் இயக்கத்திற்கு வரக்கூடாது, குடும்பத்தினர் இயக்கத்திற்கு வரக்கூடாது என்ற பொருளில் நான் அன்புராஜின் முடிசூட்டு விழாவை விமர்சிக்க விரும்பவில்லை.  தாராளமாக வாரிசுகள் வரலாம். அதற்குரிய உழைப்பைக் கொடுத்து வரவேண்டும் என்பதுதான் நமது குற்றச்சாட்டு.

கடந்த ஆண்டு  ‘வீரமணி ஒரு வீரவிதை’ கட்டுரையில் அன்புராஜ் வாரிசாக்கப்படும் முயற்சி பற்றி எழுதியிருந்தேன். உடனே வெட்டுவேன், அறுப்பேன் என்று பதில் கட்டுரைகள் பெரியார் திடலிலிருந்து வந்தன. சுமார் 10 ஆண்டுகளாக முயற்சி செய்து பல உழைப்பாளிகளையும் செயல்வீரர்களையும் கருத்தாளர்களையும் இயக்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டு தன்னிடம் இருக்கும் உண்மைத் தொண்டர்களையும் மழுங்கடித்து, எந்தத் தகுதியும் இல்லாத தனது மகனை தி.கவின் வாரிசாக்கி தனது திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் தோழர் வீரமணி. இதற்காக அவரை யாரும் அங்கே விமர்சிக்க மாட்டார்கள். விமர்சித்தாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார். ஏனென்றால் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒரு விடுதலை இயக்கத்தை அல்ல, ஒரு மல்டி நேஷனல் கம்பெனியை.

ஒரு கொள்கையுள்ள அமைப்புக்கு ஒரு கொள்கைக்காரன்தான் நிர்வாக வாரிசாக வருவான், வர முடியும்.  ஒரு வியாபாரியின் நிறுவனத்துக்கு நம்பிக்கையான வாரிசாக யார் வர முடியும்? அந்த வியாபாரியின் இரத்த வாரிசுதான் வர முடியும். என்னதான் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்து மதம், இந்துத்துவம் என பரப்பிக் கொண்டிருந்தாலும் யாரோ ஒரு அர்ஜீன் சம்பத்துக்கு தனது சொத்துக்களை எழுதி வைப்பாரா? தனது மகனைத் தானே வாரிசாக்குவார்? அதைத்தான் தலைவர் வீரமணியும் செய்துள்ளார். நாம் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டியது அன்புராஜ் நியமனத்தை மட்டுமல்ல, அதற்கான சூழலையும் தான்.

கடந்த 1980களில் தி.க சார்பில் “வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் தனித் தமிழ்நாட்டுக்கு ஆதரவான பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. அப்போது வெளியான நாட்குறிப்புகளில் தேசிய இன விடுதலை, தேசிய இன விடுதலை குறித்த ஐ.நா.வின் சட்டதிட்டங்கள், பிற நாட்டுப் புரட்சிகள் பற்றி கட்டுரைகள் இருக்கும். பார்ப்பனர் பூணூல் அறுப்புகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அடித்து விரட்டப்பட்டனர், வெட்டப்பட்டனர், மேட்டூரில், பழனியில், ஒரத்தநாட்டில் என பல இடங்களில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் கூட்டமோ, ஷாகா-வோ நடத்த முடியாத நிலை இருந்தது.  விடுதலைப் புலிகள் தோழமைக் கழகம் செயல்பட்டது. பார்ப்பன எதிர்ப்பும், இன விடுதலைக் கருத்துக்களும் இணைந்து நடைமுறையில் இருந்தது. செயல்வீரர்களாக கோவை.இராமகிருட்டிணன், வள்ளிநாயகம்,  கொளத்தூர் மணி, ஆறுச்சாமி, ஆர்.பி.எஸ். ஸ்டாலின், சேதுபதி இன்னும் பல தோழர்கள் தமிழ்நாடு முழுதும் சுற்றிச் சுழன்றார்கள். தோழர் வீரமணி அவர்களை விமர்சனத்தோடு வழிநடத்த இமயவரம்பன், டி.கே.இராமச்சந்திரன், பொத்தனூர் சண்முகம், பிரச்சார பீரங்கியாக செல்வேந்திரன், கருத்துக் கருவூலங்களாக கவிஞர் பூங்குன்றன், லால்குடி முத்துச்செழியன், மெ.அன்பரசு, பேராசிரியர் வீரபாண்டியன், லால்குடி நாகராசன் என பெரும்படையே செயலாற்றிக் கொண்டிருந்தது.  

இவர்களைப் போன்ற தோழர்கள் அனைவருமே அப்போதைய பொதுச் செயலாளரான வீரமணி அவர்களிடம் விமர்சனங்களை நேரடியாகக் கூறியுள்ளனர். தலைமையின் சில தவறான முடிவுகளுக்கு எதிராக கடுமையான‌ எதிர்ப்புகளைக்  காட்டியுள்ளனர்.  அவரும் விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார்.  பிரச்சாரப் பயணங்களில் உடன் வரும் குருவரெட்டியூர் பிரகலாதன் போன்ற தோழர்களின் சாப்பாட்டுத் தட்டுக்களைக்கூட தானே கழுவி வைக்கும் அளவுக்கு சராசரி மனிதராகவே தன்னை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.  நிகழ்ச்சிகளின்போது மாவட்டப் பொறுப்பாளர்கள் கொடி ஏற்ற தாங்களே குழிதோண்டுவதும், சுவரொட்டி ஒட்டுவதுமாக இருந்திருக்கின்றனர். மாநிலப் பொறுப்பாளர்கள் வேலை செய்யும் தோழர்களுக்கு டீ வாங்கிக் கொண்டுவரும் வேலையைப் பார்த்துள்ளனர்.  அந்த நிலை இருந்தவரை சிக்கல்கள் இல்லை. 80களின் இறுதியில் மேலே சொன்ன தோழர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர் - வெளியேற்றப்பட்டனர். 

1990லிருந்தே தத்துவத்தை முன்னிலைப்படுத்தாமல் தனிநபரான வீரமணியை அதிகமாக முன்னிலைப் படுத்தும் செயல்கள் அரங்கேறத் தொடங்கின. “தனித் தமிழ்நாட்டின் போர்க்கள நாயகன் வீரமணி! வாழ்க!” என்பது போன்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கின. நிகழ்ச்சிகளுக்கு தோழர் வீரமணி வந்தவுடன் அவர் வந்து இறங்கும் காரின் கதவை தானே திறந்து வந்த நாட்கள் போய், அந்தக் கார் கதவுகளை மற்ற தோழர்கள் ஓடோடிப் போய் திறக்கத் தொடங்கினர். “கருத்துக்கனல் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி! வாழ்க!” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்கும். அதன் பின் அவரது பாதுகாப்புக்கு என அவரது காருக்கு முன்பு மற்றொரு கார் செல்வது. அந்த முன்னேற்பாட்டுக் காரில் இருந்து 5 பேர் மேடை நோக்கி ஓடுவார்கள். வாழ்க முழக்கத்தில் உச்சரிக்கப்பட்ட வீரமணி என்ற சொல்லைச் சொல்வது கூட குற்றமாகப் பாவிக்கப்பட்டு,  தமிழர் தலைவர் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என முழக்கம் போடுவார்கள், மற்ற இருவர் வேகமாக தலைவரின் காருக்கு சென்று அவரது கதவைத் திறப்பார்கள். 

சில மாவட்டங்களின் சில நல்ல செயல்திறம் மிக்க தோழர்கள்கூட  வீரமணியின் வருகையின் போது சீருடை அணிவகுப்பு, பட்டாசு வெடிப்பது, நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பது, வீரமணிக்கு கட் அவுட்  வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினர்.  நிகழ்ச்சிகளுக்கான துண்டறிக்கைகளில் பின்பக்கங்களைக்கூட வீணாக்காமல் பெரியாரின் கருத்துக்களை அச்சிட்டு விநியோகித்த காலம் போய், கருத்துக்கள் எதுவும் இல்லாமல் வீரமணி நடந்து வருவது போன்ற படங்களை மட்டும் அச்சிடுவது என்ற காலம் வந்தது.  வீரமணி பேசும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதைவிட, அவர் எழுதிய நூல்களை அதிகமாக மக்களிடம் கொண்டு செல்வதை விட, வீரமணியைப் புகழ்வோர்களுக்கே தலைமையில் செல்வாக்கு என்ற நிலை 90களின் இறுதியிலேயே வந்துவிட்டது. தோழர் வீரமணியுடன் விமர்சனக் கண்ணோட்டத்தோடு தோழமையாகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்து தமிழர் தலைவர் வீரமணியை பிரமிப்பாகக் காட்டி தலைமையை அதிகமாகத் துதிபாடுவோரின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.  தன்னைத் துதி பாடுதல் - தன்னை, தனி நபரை முன்னிலைப் படுத்துதல் - தன்னைப் புகழுதல் இவை எந்த மனிதனையும் இளக்கத்தான் செய்யும்.

இது மட்டுமல்ல. தோழர்களை உருவாக்கும் முறையிலேயே கோளாறுகள் உருவாகின. பெரியார் காலத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டோம். வியப்பாக இருக்கிறது. பெரியார் மாளிகையில் தமிழ்நாட்டின் முக்கியப் பொறுப்பாளர்களை வைத்து அவர்களுக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, ஆண்டுக்கு ஒரு முறை குற்றாலத்தில் மூன்று நாள் வகுப்பு இவ்வளவுதான் நடைபெறுகிறது. பெரியாரின் பயிற்சி வகுப்புகளில் பொதுவுடைமை, சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, மதங்கள், மக்கள் விடுதலைத் தத்துவங்கள், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற பிற நாட்டு அறிஞர்களின் வரலாறு மற்றும் தத்துவங்கள், உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள், பிறநாட்டு விடுதலை இயக்கங்கள், விடுதலைப் போராட்டங்கள் ஆகியவை குறித்த வகுப்புகள் தான் நடைபெற்றிருக்கின்றன.  அந்த வகுப்புகளில் பங்கேற்ற தோழர்கள் சர்வதேச அரசியல், பொருளாதாரம் மற்றும் உரிமைப் போராட்டங்களை அறிந்திருந்தனர். அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் எப்படி உருவாகும்? எப்போது உருவாகும்? எப்படி உருவாக்குவது? என அறிந்திருந்தனர்.  மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து முழுமையாக ஒரு போராளியாக பெரியார் உருவாக்கினார்.  

ஆனால் வீரமணி அவர்களோ தி.க.வின் பயிற்சி வகுப்புகளில் “தமிழர் தலைவரின் அணுகுமுறைகள்”, “பெரியாருக்குப் பின் வீரமணி”, “கடவுள் மறுப்பு” ஆகிய தலைப்புகளையே வைப்பார். அதிகபட்சமாக “இடஒதுக்கீடு” என்ற தலைப்பு இருக்கும். அதிலும் 31சி சட்டம் பற்றிதான் செய்திகள் இருக்கும். இடஒதுக்கீடு பற்றி விரிவான வரலாறுகூட இருக்காது.  1957 இல் நடைபெற்ற சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பற்றியோ, இந்திய தேசப்பட எரிப்பு பற்றியோ, தமிழ்நாடு தமிழருக்கே என்பது பற்றியோ, இராவணலீலா பற்றியோ இப்போதைய தி.க தோழர்களுக்குச் சொல்லித் தருவதில்லை. பெரியார் நடத்திய எந்த முக்கியப் போராட்டத்தைப் பற்றியும் எங்கள் தலைமுறைக்கு வகுப்பு எடுத்தது இல்லை. திராவிடர் விவசாயத் தொழிலாளர் கழகத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் அடியோடு மறைக்கப்பட்டன. பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, இடஒதுக்கீடு, ஆளுங்கட்சியோடு அரவணைப்பு இவ்வளவுதான் எமக்கு அளிக்கப்பட்ட உள்ளீடு.

பெரியாருக்குப் பின் இயக்கத்தை எப்படி எல்லாம் வளர்த்திருக்கிறோம் என “ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்” என்ற தலைப்பில் விடுதலையில் பலமுறை கட்டுரைகள் வந்தன. கடைசியாக “எப்படிச் சந்திக்க வேண்டுமோ அப்படிச் சந்திப்போம்” என்றும் ஒரு கட்டுரை வந்தது.  தி.க வின் மீது பல்வேறு அமைப்புகளாலும் பெ.தி.க சார்பிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலாக கண்டபடி எழுதியது அன்புராஜ் அல்ல. மிகச்சிறந்த கருத்தாளரான கவிஞர்.பூங்குன்றன் அவர்கள்தான். பெ.தி.க வின் குடி அரசு வெளியீட்டைக்கூட தனிப்பட்ட முறையில் வருமானம் ஈட்டுவதற்காகச் செய்யப்பட்ட செயல் என கூச்சமின்றி எழுதியவர் கவிஞர்தான். மனதார அப்படி எழுதியிருக்க மாட்டார். ஆனால் அப்படி என்ன தலைமைக் கட்டுப்பாடு? கொள்கைக்காகத் தானே கட்டுப்பாடுகள்? வெறும் கட்டுப்பாடுகளுக்காக கொள்கைக்கு விரோதமாக எழுதவும் பேசவும் கவிஞர் பூங்குன்றனால்கூட  முடிகிறதென்றால் அங்கு வேறு எந்த நல்ல தலைமை உருவாகிவிடும்?

1998 ஆம் ஆண்டு தி.க.வின் உதவிப் பொதுச்செயலாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களிடம் ஒரு விமர்சனத்தை வைத்தோம். அதாவது, தி.க வின் அப்போதைய மாநில இளைஞரணிச் செயலாளர், பிரச்சாரத்துக்கான உதவிப் பொதுச் செயலாளர், அமைப்புக்கான உதவிப் பொதுச் செயலாளர், கிராமப் பிரச்சாரக் குழுக்களின் தலைவர்கள், நகர்வு புத்தகச் சந்தையின் பொறுப்பாளர் இப்படிப்பட்ட முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். திருச்சி கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர், தஞ்சை கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர், சென்னை திடலில் இருந்த முக்கியப் பொறுப்பாளர் என அனைவருமே குறிப்பிட்ட அந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான். ஒரு சாதி ஒழிப்பு இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக அமைந்தது என்ன நியாயம்? என விமர்சனத்தை வைத்தோம்.  உண்மையாகவே மிகப் பொறுமையாக அந்த விமர்சனத்தைக் கேட்டு, அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டு, சில பொறுப்புகளில் மாற்றமும் செய்தார் ஒரத்தநாடு குணசேகரன்.  ஆனால் தோழர் வீரமணி அவர்களோ “இப்படிச் சொன்னவனை அடித்து வெளியேற்ற வேண்டும்” என திண்டுக்கல்லிலேயே என்னை நோக்கியே பேசினார். கலந்துரையாடல் கூட்டத்திலிருந்தே என்னை வெளியேற்றினார்கள். அதன்பிறகும் என்னிடம் தோழமையோடு பழகியவர் குணசேகரன். ஆனால் அப்படிப்பட்ட குணசேகரன் அவர்கள் தோழர் வீரமணி அவர்களின் குடும்பத்தினரை சென்னையில் பெ.தி.க.வினர் (1996 இல் இருந்த பெ.தி.க.)  தவறாகப் பேசிவிட்டார்கள், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என என்னிடம் பேசியபோதே, அவர் மீதிருந்த நம்பிக்கையும் போய்விட்டது.  கொள்கைக்காக  தோழர்கள் அரிவாள் தூக்கிய காலம்போய் தலைவரின் குடும்பத்துக்காக அரிவாள் தூக்கத் தொடங்கி விட்டனர். ஒரே சாதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இன்னும் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆக கருத்தியலிலும் உண்மையான சரியான கொள்கைகள் சொல்லப்படவில்லை. வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆவணப்படுத்தப்படவும் இல்லை. நடைமுறையிலும் பல ஆண்டுகளாக கொள்கை இல்லை.  சாதி ஒழிப்பு இயக்கம் ஒரு சாதிச்சங்கம் போல செயல்படத் தொடங்கியது. இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும். எந்தப் போராளியும் உருவாக முடியாது.   ஒரு வேளை அன்புராஜைத் தவிர வேறு யார் இந்தத் தலைமைக்கு வாரிசாக வந்தாலும்,  அது கவிஞர் கலி.பூங்குன்றனாக  இருந்தாலும், ஒரத்தநாடு குணசேகரனாக இருந்தாலும்  நல்ல உழைப்பாளிகள் தலைமையிலான கார்ப்பரேட் கம்பெனி என்ற நிலைக்கு வேண்டுமானால் தி.க உயரலாம். அந்தத் தலைமைகளாலும் தி.க வை ஒரு மக்கள் விடுதலை இயக்கமாக மாற்ற இயலாது.

“ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்” என தோழர் வீரமணி அவர்களின் கருத்தை கட்டுரையாக்கிருந்தார் கவிஞர் பூங்குன்றன்.  திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை பரபரப்பான செயல்பாடுகளைத் திட்டமிட்டு மறைப்பதாகக் கூறி தி.க வின் சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தார். அதில் முக்கியமாக, 300க்கும் மேற்பட்ட சிறு வெளியீடுகளை வெளியிட்டுள்ளோம். விடுதலை இரண்டு பதிப்புகளாக வெளி வருகிறது. மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு நடத்துகிறோம். இணைய தளம் நடத்துகிறோம். பெரியார் களஞ்சியமாக 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோம் என்ற செய்திகளைத் தான் நீட்டி முழக்கியிருந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

300க்கும் மேற்பட்ட வெளியீடுகளில் பெரியாரின் நூல்கள் வெறும் 130 மட்டும் தான். மற்றவை தோழர் வீரமணி  அவர்களின் புத்தகங்கள். அந்தப் பெரியாரின் நூல்களும் பெரியார் காலத்திலிருந்து வெளியிடப்படுபவை. அதிலும் பல முக்கிய நூல்கள், பல முக்கிய வரலாறுகளை உள்ளடக்கிய ‘பரிதாபத்துக்குரிய பஞ்சமர்கள்’ போன்ற நூல்கள் வெளியிடப்படவில்லை. குடிஅரசின் பல முக்கியக் கட்டுரைகள் சிறு சிறு நூல்களாக பெரியார் காலத்தில் வெளியாயின. அவை எதுவும் வீரமணி காலத்தில் வெளியிடப்படவில்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அளவுக்குக் கூட இப்போது வெளியிடப்படுவதில்லை.

விடுதலை இரண்டு பதிப்புகளாக வருவதாகச் சொன்னாலும் இரண்டு பதிப்பும் சேர்த்து 6000 பிரதிகள் தான் அச்சாகின்றன. அதைப் பத்தாயிரம் என உயர்த்தப் போவதாக அன்புராஜ்கூட உறுதி ஏற்றிருக்கிறாராம். 1927 ஆண்டே குடிஅரசின் சந்தா எண்ணிக்கை 7000. 1938 வரையிலான சுயமரியாதைக் காலத்தில் குடிஅரசு சுமார் 15000,  ஜஸ்டிஸ் ஆங்கில ஏடு 8000, திராவிடன் 8000 என்ற அளவில் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றது. அப்போது சென்னை ராஜதானியின் மக்கள் தொகை 2 கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 10 சதத்துக்கும் குறைவானவர்களே.

ஆனால் இப்போது பழைய சென்னை ராஜதானியின் அளவு மக்கள்தொகை தொகை சுமார் 10 கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தோர் 80 சதத்துக்கும் அதிகம். இயக்கம் வளர்ந்திருக்கிறது என்றால் இப்போது விடுதலை குறைந்தபட்சம் ஒரு இலட்சம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும். மாடர்ன் ரேசனலிஸ்ட் 50 ஆயிரம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும். 1938 அண்டுக்கு முந்தைய 15 ஆயிரம் எண்ணிக்கையையே ஒரு இலக்காகக் கூட வைக்க முடியாத நிலைக்குப் பேர் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இணையதளத்தில் மின்நூல்கள் வெளியிடுவது பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் சவாலாகவே கேட்டிருந்தோம். அனுமதி மட்டும் கொடுங்கள் தி.க வின் இணைய  தளத்துக்கே இலவசமாக பணியாற்றித் தருகிறோம். நீங்கள் சொல்லும் 300 நூல்களை உலகம் முழுதும் இலவசமாக பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றித் தருகிறோம் என கேட்டிருந்தோம். அதைக்கூட ரோசப்பட்டு செய்யத் துப்பில்லை. இதுதான் வளர்ச்சியா?

பெரியார் காலத்தைவிட கல்வி நிறுவனங்களை வளர்த்திருக்கிறோம் என தோழர் வீரமணியும் அடிக்கடி பேசுகிறார். கல்வி நிறுவனங்களை வளர்ப்பதா பெரியாரின் இலட்சியம்? பொழுதுபோக்கிற்காகத் தான் இயக்கம் நடத்தினாரோ? பெரியார் விட்டுச் சென்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மைதான்.  ஆனால் நீங்கள் எதுவும் செய்யாமல் அவற்றை வங்கியில் போட்டிருந்தாலும் அவை வளர்ந்துதான் இருக்கும். அதற்கு ஒரு இயக்கம் தேவையில்லை. ஒரு சாதாரண நம்பிக்கையான வியாபாரி போதும். சாதாரணமாக தொடங்கப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் 10, 15 ஆண்டுகளுக்குள் மிகப்பிரமாண்டமாக வளர்கின்றன. அந்த நிறுவனங்கள் ஒரு மனிதன் தன் சுற்றம் சூழங்களை சாதியினரை நம்பாமல் தனித்து வாழும் நம்பிக்கையை ஆயிரக்கணக்கானோர்க்கு உருவாக்குகின்றன.   அந்தக் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இறுதிவரை கிறிஸ்தவர்களாக வாழும் நிலையைக் கூட உருவாக்குகின்றன. 

ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் விவேகாநந்தா கல்லூரிகளைப் பாருங்கள். அவற்றால் உருவாக்கப்படுபவர்கள் இறுதிவரை ஆர்.எஸ்.எஸ்.காரனாக வாழ்கிறார்கள். புதுடெல்லியில் ஐ.ஏ.எஸ்க்கான முதன்மைத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும் நேர்காணலுக்கு வரும் மாணவர்களுக்கும் தனிப் பயிற்சி அளித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, அவர்களை முன்னாள் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ் அதிகார மைய வலைப்பின்னலை உருவாக்கியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். சாரதா மடங்களைப் பாருங்கள். இந்து சமய மறுமலர்ச்சிக்கு அவர்கள் எப்படி தனது பொருளாதார வளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காணுங்கள். உண்மையில் மேற்கண்ட நிறுவனங்களை உன்னிப்பாக் கவனித்திருக்கிறேன். தி.க.வின் நிறுவனங்களையும் கவனித்திருக்கிறேன். ஒரு கிறிஸ்தவ நிறுவனம், ஒரு இந்து நிறுவனம் தனது அடிப்படைக் கொள்கைகளுக்கு உழைப்பதில் 10 சதவிகிதம் கூட பெரியார் நிறுவனங்கள் உண்மையாக உழைப்பதில்லை. நீங்கள் சமுதாயப்புரட்சி நடத்த வேண்டாம். குறைந்தபட்சம் சரியான நிறுவனமாகவாவது நடக்க வேண்டாமா? நிறுவனங்களாகக்கூட சரியான பாதையில் உரிய வளர்ச்சியைப் பெறவில்லை என்பதே உண்மை.

வளர்ச்சி என்றால் என்ன? பெரியாரின் பொதுவுரிமைப் பயணத்தில் அவருக்குப் பின் நாம் எந்த இடத்தில் உள்ளோம்? 49 சதம் இடஒதுக்கீட்டை 69 ஆக்கியுள்ளோம். அதுவும் அரைகுறையாக. தீண்டாமைகளும் ஒழிக்கப்படவில்லை. சாதியும் அசைக்கப்படவில்லை. இரட்டைக்குவளைகள், ஊர்-சேரி எனும் இரட்டை வாழ்விடங்கள் இன்னும் அதே நிலையில் உள்ளன. சாதிச்சங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சாதி ஒழிப்பு நடவடிக்கைகள் குறைந்துள்ளது. பெரியாரின் பொதுவுடைமை நோக்கங்கள் எந்த நிலையில் உள்ளன? அது பற்றி பேசினாலே தி.க விலேயே குற்றவாளி என்ற நிலைதான் உள்ளது. பெண்விடுதலைக் கனவுகள் எந்த அளவுக்கு உள்ளன? தி.க ஆதரவாளரான சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரே சுடிதார் அணிவது, ஜீன்ஸ் அணிவது குற்றம் என அறிக்கைவிடும் நிலையில் உள்ளது. ஒரு திராவிடர் கழக ஆண் தான் சாப்பிட்ட சாப்பாட்டுத் தட்டை தானே கழுவி வைப்பதைப் பார்த்த மற்றொரு தி.க தோழர் அதை ஒரு மிகப்பெரும் புரட்சியாகக் கருதும் நிலையில் உள்ளது.

பெரியார் காலத்தில் நடந்த அளவுக்கு இப்போது சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுகிறதா? விதவை மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகிறதா? மாற்றுவிழாவாக பொங்கலை முன்னிறுத்தினார் பெரியார். திருக்குறளை மாற்று இலக்கியமாக அப்போது முன்னிறுத்தினார் பெரியார். அதைப் போன்ற காரியம் இப்போது என்ன நடந்திருக்கிறது? அந்தக் காலத்துக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயங்கியது சரிதான். ஆனால் இப்போது பெரியார் டேட்டிங் சென்ட்டர் உருவாகியிருக்க வேண்டுமே? அதுவும் இன்டர்கேஸ்ட் டேட்டிங் சென்ட்டராக உருவாகியிருக்க வேண்டும். இன்னும் சுயமரியாதைத் திருமண நிலையம் வைத்துக் கொண்டு அதில் தன் சாதிக்குள் வரன் பார்த்துக் கொண்டிருக்கும் கொடுமையை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

வளர்ச்சி என்பது இந்தப் பாதைகளில் இருந்திருக்க வேண்டும். பெரியார் பாதையில் தி.க செல்லவில்லை. இனி செல்லவும் வாய்ப்பில்லை. அவர்களை விமர்சிப்பதில் இனி எந்தப் பயனும் இல்லை. இப்போது அன்புராஜ். நாளை மாணவரணிச் செயலாளராக கபிலன் வருவார். பார்க்கத் தான் போகிறோம். தி.க இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளானது திடீரென ஒருநாளில் ஏற்பட்ட சம்பவத்தால் அல்ல. அது ஒரு நீண்டநாளைய நோய். மெல்ல மெல்ல ஒரு அமைப்பை அரித்துச் அரித்து செரித்து விட்ட நோய்.  தி.கவுக்கு மாற்றாக இருக்கும் ஒரே அமைப்பான பெ.தி.க.வை அந்த நோயின் கோரப் பசியிலிருந்து காப்பதுதான் இப்போது நாம் மேற்கொள்ள வேண்டிய சரியான பணி. ஏனெனில் இப்போது பெ.தி.க வில் செயல்படும் நான் உட்பட பல தோழர்கள் அந்த நோயுடைய அமைப்பை சகித்துக் கொண்டு அங்கேயே பலகாலம் இருந்தவர்கள்தான்.

கொள்கைக்காக கடும் விலை கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். சிறை செல்ல அஞ்சுவதில்லை. அரச அடக்குமுறைகளுக்கு அடங்குவதில்லை. நம் சக்தியை மீறி செயல்பாடுகளைச் செய்து வருகிறோம். எல்லாம் சரி. நம் இலக்கு என்ன என்று நமக்கு விளக்கப்பட்டிருக்கிறதா? நாம் இலக்கு நோக்கித்தான் செல்கிறோமா? நமக்கு உள்ள காலம் மிகக்குறைவு. நமக்கு உள்ள சக்தியும் மிகக்குறைவு. பெரும்பாலான தோழர்கள் நாற்பதைத் தொட்டுவிட்டோம். இனியும் இது இளைஞர் பட்டாளம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. பெரியார் சென்ற பாதை என்ன? அவர் பணி தடைபட்ட இடம் எது? அதைத் தாண்டி நாம் போகிறோமா? அல்லது அந்த இடத்தையாவது தக்க வைத்துக் கொண்டோமா? என சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

நமது ஊரில் நமது மாவட்டத்தில் என்ன செய்தோம்? எத்தனை கூட்டம் நடத்தினோம்? எத்தனை தோழர்களை உருவாக்கினோம்? என்ற கணக்குகளைப் போடும் அதே நேரத்தில் ஒட்டு மொத்த பெரியார் கொள்கைகளுக்காக அதை நோக்கிய பயணத்திற்காக என்ன செய்தோம்? இனி என்ன செய்யப் போகிறோம்? என்பதையும் யோசிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் - நமது ஊரில் இன்னும் இரட்டைக்குவளை இருக்கிறதா? இரட்டை வாழ்விடம் இன்னும் ஒழியவில்லையா? தாழ்த்தப்பட்டோருக்கு நடக்க உரிமை உள்ளதா? மண்டபங்களில் இடம் கிடைக்கிறதா? கல்விக்கூடங்களில் சமமாக நடத்தப்படுகிறார்களா?  நம் வீட்டில் பெண்களுக்கு உரிய உரிமைகள் இருக்கிறதா? பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா? நம் திருமணம் சாதி கடந்து நடந்ததா? இனியாவது நம் குடும்பத்தில் சாதி கடந்து திருமணம் நடக்குமா? இந்து மதம் உருவாக்கியுள்ள வாழ்வியல் என்றால் என்ன? அவை எவை? அவற்றிற்கு எதிரான பெரியார் வாழ்வியல் என்றால் என்ன? அவை எவை? என்ற கருத்துக்கள் நமக்குத் தெரியுமா?  இந்த நாட்டின் உற்பத்தி முறை என்ன? உற்பத்தி உறவுகள் எப்படிப்பட்டது? உபரி உற்பத்தி என்றால் என்ன? உபரி உற்பத்தி இந்தியாவில் எந்த வடிவில் உள்ளது? மற்ற நாடுகளின் உற்பத்தி முறை என்ன? குடும்பம் சொத்து அரசியல் பற்றிய பெரியார் பார்வை என்ன? தேசிய இன விடுதலை - சமுதாய விடுதலை இரண்டில் எது முதன்மையானது?  இவை போன்ற பல கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடை காண வேண்டும். நமது பயிற்சி வகுப்புகளில் இவை குறித்த தலைப்புகள் இருக்க வேண்டும். நடைமுறையிலும் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களைப் போடுகிறோம். கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக கொள்கைத் தெளிவில்லாத யார் யாரையோ பேச அழைக்கிறோம். அந்தக் கூட்டங்களால் எத்தனை பேர் இயக்கத்துக்கு வந்தார்கள், அதில் எத்தனை பேர் கொள்கையாளர்களாக மாறினார்கள்  என்ற கணக்கைப் போட மறந்துவிடுகிறோம். உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் - இந்திய தேசிய முதலாளிகள் மக்களின் அருகாமை நோக்கி செல்கிறார்கள். ரிலையன்ஸ் ஒவ்வொரு நகரத்தின் சந்து சந்தாக வணிக நிறுவனங்களை உருவாக்குகிறான். மக்களைத் தேடிச் செல்கிறான். டாடா நிறுவனம் அலைபேசி விற்பனைக்காக கிராமங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில்கூட கடைவிரிக்கிறான்.  ரஷ்ய நாட்டு அலைபேசி நிறுவனம் ஒவ்வொரு கல்லூரி வாசலுக்கும் செல்கிறது. அதே சமயம் மக்களுக்காக உழைக்கும் நாம் நகரங்களில் பிரமாண்டக் கூட்டங்களைக் கூட்டி மக்களை அங்கே வா  என அழைத்துக் கொண்டிருக்கிறோம். கூட்டங்களில் எளிமையும் எழுச்சியும் குறைந்து ஆடம்பரமும் வெறும் கடமையுணர்ச்சியும் வளர்கிறது. கூட்டங்கள் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதில் உள்ள ஆர்வம் கூட்டங்களை வைத்து இயக்கத்திற்கு புதிய வரவுகள் இருக்க வேண்டும் என்பதில் இருப்பதில்லை.

1989-90 களில் ஈழத்திற்குச் சென்று ஆயுதப் பயிற்சி எடுக்கத் துணிந்து சிறைப்பட்டவர்கள் யாரும் எந்த பிரம்மாண்டக் கூட்டத்தையும் கேட்டு போராடச் சென்றவர்கள் அல்ல. மேடை ஏறவோ, மேடையில்  ஏறிப் பேசவோ  எதுவுமே தெரியாத தோழர்களின் நேரடியான பேச்சைக் கேட்டுத்தான் ஆயுதம் தூக்கச் சென்றார்கள்.

பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டிகளிலும் கல்லூரி வாயில்களிலும் சிறு சிறு புத்தகங்களை விற்பனை செய்வது, அப்போது கிடைக்கும் தொடர்புகளை வைத்து ஆங்காங்கே சிறு சிறு கலந்துரையாடல்களை நடத்துவது, அதன் மூலமே அமைப்பு கட்டுவது என செயல்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் புதிய தோழர்களை உருவாக்கியிருக்கிறார்கள். திராவிடர் கழகமும்  80 களிலும் அப்படித்தான் அமைப்புக் கட்டியிருக்கிறது. பெரியார் காலத்தில் ஒரு கிளர்ச்சி ஒரு போராட்ட அறிவிப்பு. அதை விளக்கி நாடெங்கும் பிரச்சாரம். அதன் மூலம் அமைப்பு உருவாக்கம். பிறகு மீண்டும் கிளர்ச்சி - பிரச்சாரம் இப்படித்தான் இயங்கியுள்ளது. வெறும் பொதுக்கூட்டங்கள் கூட அப்போது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் காலம். ஆனால் இப்போது பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து விட்டது. எனவேதான் கூட்டத்தைக் கூட்ட நாம் எதையாவது செய்ய வேண்டியருக்கிறது. அரசியல் கட்சிகளைப் போல ரிக்கார்டு டான்ஸ்களையும், ஆடல் பாடலைகளையும் தான் நாம்  இன்னும் பயன்படுத்தவில்லை. இதற்கு மாற்றாக வேறு பிரச்சார முறைகளை யோசிக்க வேண்டும். குறும்படங்கள், வீதி நாடகங்கள், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

ஏசு அழைக்கிறார் என்பது போல பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகளில் உரையாற்றும் தலைவர்களின் பெயர்களை மட்டும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் போக்கும் தொடங்கியுள்ளது. சுவரெழுத்து வாசகங்கள் எழுதுவது நின்றுவிட்டது. கூட்டங்களுக்காக மட்டுமே தோழர்களைச் சந்திப்பது மற்ற எந்த நேரத்திலும் அவர்களைத் தொடர்பு கொள்வதில்லை என்ற போக்கு உள்ளது. தோழர்களின் குடும்பங்களுக்கிடையேயான உறவுகள் குறைந்துவிட்டன.  விடுமுறைக் காலங்களில் நமது இல்லக் குழந்தைகள் நமது இரத்த சொந்தங்களின் வீடுகளுக்கு மட்டுமே செல்கின்றன. தோழர்களின் இல்லங்களுக்கு சொந்தக்காரர்களின் வீடுகளுக்குச் செல்வது போல நாம் போவது இல்லை. கொள்கை அடிப்படை இல்லாமல் நாம் நடத்தும் இல்ல விழாக்களுக்கு திருமணங்களுக்குக்கூட இயக்கத் தலைவர்களை அழைத்து நமது கொள்கைத் தவறுகளை நியாயப்படுத்தி வருகிறோம். குடும்ப விழாக்கள் நடத்தப்படுவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான தோழர்கள் மட்டுமே தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி தோழர்களுடனும் உறவில் உள்ளார்கள். மற்றவர்களுக்கு பக்கத்து மாவட்டத் தோழரையே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். இதில் எப்படி கொள்கைச் சொந்தங்கள் உருவாகும்? வெறும் கட்சியாக நாம் சுருங்கி வருகிறோம்.  

 தவறாகவாவது வீரமணி ஒரு வாரிசை உருவாக்கிவிட்டார். அவரது சுமை இறங்கிவிட்டது. ஆனால் நமது சுமை? நாம் இயக்கத்தில் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி. நாம் இல்லாத நேரங்களில் அந்த வேலையை, நாம் செய்ய வேண்டிய பணியை வேறொரு தோழரால் செய்து முடிக்கும் நிலை இருக்கிறதா? இல்லையென்றால் இந்த 10 ஆண்டுகளில் அப்படி ஒரு மாற்றினை நாம் உருவாக்கத் தவறியிருக்கிறோம் என்றால், தவறு செய்திருக்கிறோம் என்று தான் பொருள். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த இயக்கம் தொடங்கிய போது ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய நான்கு ஒன்றியங்களில் அமைப்பு இருந்தது. இன்னும் அவற்றில் மட்டும் தான் அமைப்பு உள்ளது. இந்த நிலைதான் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது. நாம் தற்போது செய்து வரும் பணியைச் சரியாக செய்து முடிக்கும் வண்ணம் மற்றொரு தோழரை உருவாக்கிவிட்டு நாம் அடுத்தகட்டப் பணிக்கு விரைந்து செல்வது தான் வளர்ச்சி. எந்த ஒரு பொறுப்பிலும் இரண்டு அல்லது மூன்று அண்டுகளுக்குள் அந்தப் பொறுப்புக்குரிய கடமைகளை முடித்துவிட்டு அடுத்த கட்டப் பணிக்கு செல்லாத நாம் அனைவருமே தவறு செய்கிறோம்.

கொள்கையில் தெளிவு - திட்டமிடப்பட்ட கொள்கைப் பயணம் - விமர்சனம் - சுயவிமர்சனம் - தனிநபரை முன்னிலைப்படுத்தாமல் கொள்கையை முன்னிலைப்படுத்துதல் - சிறைக்கு அஞ்சாத துணிச்சல் இவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  நிறுவனமாகவாவது தி.க நன்கு வளர வேண்டும். கொள்கையை நாம் பார்த்துக் கொள்வோம். யாருக்கும் அறிவுரை சொல்லவோ யாரையும் காயப்படுத்தவோ இதை எழுதவில்லை. எழுதுவதற்கு எனக்குத் தகுதி இருப்பதாகவும் எண்ணவில்லை. இந்த காலச்சூழலில் இதைச் சொல்ல வேண்டும். அது என் கடமை என உணர்ந்து எழுதியுள்ளேன்.

- அதிஅசுரன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard