யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்படவில்லையா? - வெடிக்கும் சர்ச்சை!
ந.பொன்குமரகுருபரன்
யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்படவில்லையா? - வெடிக்கும் சர்ச்சை!
‘தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை’ என்ற அனல் கிளப்பும் வாதம் ஒன்று தமிழகத்தில் அக்னி வெயிலுக்கு ஈடாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இவ்விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
பெரியாருக்கு ‘யுனெஸ்கோ விருது’ வழங்கப் பட்டதாக விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்பவர், ‘1998 வரையில், யுனெஸ்கோ விருது பட்டியலில், பெரியாரின் பெயர் இடம்பெறவில்லை’ என்று சுட்டிக் காட்டியதையடுத்து, விக்கிபீடியாவிலிருந்து மேற்கண்ட தகவல் நீக்கப்பட்டுவிட்டது. இந்த நிகழ்வுதான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பொதுவாக, விக்கிபீடியாவில் நேரடியாக யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்துவிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பதிப்பாசிரியர்கள் மட்டுமே ஒரு செய்தியைச் சேர்க்கவும் நீக்கவும் இயலும். ஆதாரமற்ற தகவல்கள் சேர்க்கப் பட்டுள்ளதாக விக்கிபீடியா விடம் வாசகர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், அந்தத் தகவலுக்கு வலுசேர்க்கும் விதமாக உரிய ஆதாரங்களையும் இணைக்க வேண்டும். இதை அடுத்தே புகாரின் உண்மைத் தன்மையைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட செய்தி விக்கிபீடியாவில் நீக்கம் செய்யப்படும். பெரியாரின் யுனெஸ்கோ விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்பவர், இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறார். ஐ.நா-வின் அதிகாரபூர்வ கிளையான யுனெஸ்கோ மன்றம்தான் இந்த விழாவை நடத்தி, பெரியாருக்கு விருது வழங்கியது. விருதைப் பெற்றுக்கொண்ட தந்தை பெரியார், ‘அறியாமைக்கு, மூடநம்பிக்கைக்கு, அர்த்தமற்ற சம்பிரதாயத் துக்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று ஏற்புரையும் வழங்கினார். ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் விக்கிபீடியாவின் காதைத் திருகி, உண்மையை நிலைநாட்டுவோம்” என்று சீறியிருந்தார்.
1970-ம் ஆண்டைச் சர்வதேச கல்வி ஆண்டாக அறிவித்திருந்தது, ஐ.நா-வின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைந்த சகோதரரும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான க.அறிவழகன் தலைமையில் இயங்கிய ‘யுனெஸ்கோ மன்றம்’ என்கிற அமைப்பு, பெரியாருக்கு விருது வழங்கியுள்ளது. 1970-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் சார்பில், ‘புது உலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்ற வாசகங்கள் பொறித்த கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய பெட்ரோலியத் துறை பொறுப்பு அமைச்சர் திரிகுண சென் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தி.க தலைவர் கி.வீரமணியிடம், “யுனெஸ்கோ-விலிருந்து வந்திருந்த யாரேனும் அந்த விழாவில், கலந்துகொண்டார்களா?” என்று கேட்டோம். “அந்த விழாவில் யுனெஸ்கோ அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் வரவேண்டிய அவசியமும் இல்லை. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘யுனெஸ்கோ மன்றம்’ என்கிற அமைப்புதானே விருது கொடுத்தது. தவிர, அந்த நிகழ்ச்சி அரசு முறையிலான நிகழ்ச்சியாகும். அதில் தவறு நடக்குமா? விழாவில், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் திரிகுண சென், தமிழக தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ் ணன் ஆகியோர் கலந்துகொண் டார்கள். பெரியாரை இன்றைய இளைஞர்கள் பலரும் பின்பற்றுகிறார்கள். பெரியாரின் பிம்பத்தை உடைக்க வேண்டும், அவரது புகழைச் சிதைக்க வேண்டும் என்கிற விஷம புத்தியுடன் சிலர்செய்யும் பிரசாரத்துக்கு, நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவை இல்லை. யுனெஸ்கோ மன்றம் என்பதை மைனஸ் செய்துவிட்டால், பெரியாரின் புகழ் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே ‘யுனெஸ்கோ பார்வையில் பெரியார்’ என்கிற புத்தகமும் எழுதப்பட்டது. அதில், ‘யுனெஸ்கோ மன்றம்’ விருது அளித்ததாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இன்றளவில், 100 நாடுகளில், கிட்டத்தட்ட நான்காயிரம் யுனெஸ்கோ மன்றங்கள் செயல்படுகின்றன. கல்வியை ஊக்கப்படுத்துவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற பணிகளை இந்த மன்றங்கள் செய்துவருகின்றன. இவற்றின் செயல்பாடுகளுக்கு ‘யுனெஸ்கோ’ பொறுப் பேற்காது என்று அந்த அமைப்பின் இணைய தளத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ‘ஒரு சில இடங்களில் தேவைகள், ஆக்கபூர்வ பணிகளைப் பொறுத்து நிதி உதவியும், ஆலோசனையும் வழங்கப்படுமே தவிர, மன்றங்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது’ என்று அந்த அமைப்பு தெளிவாகக் கூறியுள்ளது.
ஆக, ‘யுனஸ்கோ’ அமைப்பு நேரடியாக விருதை வழங்கவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம், ‘யுனஸ்கோ’வின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ‘யுனஸ்கோ மன்றம்’ விருது வழங்கியிருப்பது உண்மை. எனவே, ‘யுனஸ்கோ மன்றம் விருது அளித்திருக்கிறது’ என்று குறிப்பிட்டு விஷயத்தையே முடித்திருக்கலாம்.
இதுபோன்ற விருதுகள் வாங்கியிருப்பதாகப் புகழப்படுவதாலோ, அல்லது வழங்கப்படவில்லை என்று இகழப்படுவதாலோ ஒருபோதும் பெரியார் குறைந்துவிடப் போவதில்லை. அவருடைய சமூக செயல்பாடுகளே ஆயிரமாயிரம் காலத்துக்கும் அவரைத் தூக்கிச் சுமக்கும் என்பதை அனைவருமே உணரவேண்டும்.