New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
Permalink  
 


ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

January 31, 2012
சுப்பு rss_icon16.jpg

 

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும், அல்லது ஆரிய இனமாக இருக்கும்.

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை.

முதலில் ஆரியம்.

நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா? ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள், ஆரிய இனத்தவருக்கும் மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள். ஆரியர், அஸுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர். அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும்: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை!!“.

ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இதுவும் தவறு.

வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிறமுடையவர்களாக இருந்திருக்கிறர்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் (10:31:11) இருக்கிறது. இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும் , யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான ‘கிருஷ்ணா’ என்பதும் கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.

வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை!!

தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “…ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்” என்கிறது குறுந்தொகை..

திருநாவுக்கரசர் தேவராத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு), இறைவன் வடமொழியும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவசிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது. “ஆரியம் தமிழோடிசையானவன் கூரிய குணத்தார் குறிநின்றவன்” என்பது திருநாவுக்கரசர் பாடல் (176)

மாணிக்கவாசகர்,(கி.பி. எட்டாம் நூற்றாண்டு) ‘ஆசாரியன்’ என்ற பொருள்பட சிவ புராணத்தில் “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” (64) என்று பாடுகிறார். பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில்,


இற்றைநாள்வரை முதலியான் முன்செய்தன
குற்றமு முளவெனிற் பொறுத்தி கொற்றவ;
அற்றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய!
பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான்.

– (கம்ப ராமாயணம் யுத்த காண்டம், கும்பகர்ணன் வதைப் படலம்)

என்று வருகிறது. இந்த இடத்தில், உரையாசிரியர்கள் “ஆரிய” என்பதைத் “தலைவன்” என்று எழுதுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் (கி.பி. 1370 — 1443) “வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேச ரத்ன மாலை) என்று எழுதுகிறார்.

வேதாந்த தேசிகர்(கி.பி. 1269—1370), “காண்பனவு முரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பாண்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நாம் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே” (அம்ருதாஸ்வாதி – 37) என்கிறார். இங்கே “ஆரியன்” என்பதை “சிறப்புடையவன்” என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (கி.பி. 1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார், இதை இன அடையாளமாக மாற்றினார்.

கால்டுவெல் வழி வந்த சி. என். அண்ணதுரை, ’ஆரிய மாயை ‘(1943) என்ற புத்தகத்தில், “நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்” (ப..26) என்று எழுதினார்.

பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்ட்ரம் ஆகியவை நர்மதையின் தெற்கே உள்ளன என்று தெரிந்து விடும். சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோடியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தாம் விளக்க வேண்டும்.

அடுத்தது திராவிடம்.

“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள், முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள். எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.. பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு) “….வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார். வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.

ராபர்ட் கால்டுவெல்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (கி.பி. 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.

“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான “திராவிட இனம்” என் கருத்தாக்கம்தான்.

கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :

A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils to allied people in inferior grades of culture. The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an ethnological distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory

P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார். ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ.வெ.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.

ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது. தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில், ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.

நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் “திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். – ஜனவரி 5, 2011.

மேலும் அறிய:

  1. புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி. வி. ஜகதீச ஐயர், 1918, சந்தியா பதிப்பகம், 2009.
  2. மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, கே வி. ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை, 2009.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

vedamgopal on January 31, 2012 at 8:01 pm

சமீபத்தில் ஹிந்து ஆண்மிக கண்காட்சியில் “ஆரியமாவது திராவிடமாவது“ என்ற புத்தகம் வாங்கினேன். இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதியது. இந்த நூலின் பழைய பிரிதியை கொடுத்து உதவியது திரு.சுப்பு மற்றும் பழங்காசு சீனிவாசன் என்று முன்னுரையில் கூறியுள்ளார்கள். இது விஜயபாரதம் வெளியீடு. விலை ரூபாய் 20 தான். இதை தமிழ் ஹிந்து வாசகர்கள் எல்லோரும் நிச்சயம் படிக்கவேண்டும். நான் ஒரு 10 பிரதிகளாவது வாங்கி இலவசமாக சிலருக்கு கொடுக்க எண்ணியுள்ளேன்.
இந்த புத்தகத்தில் நான் மிகவும் ரசித்த சில வரிகள் – தமிழ் அரசு என்ற தலைபில் –
மூவேந்தர் பெரும் புகழ் நாம் பேசுகிறோம். ஆனால் அவர்கள் அருங்குணத்தில் கூசுகிறோம் அவர்கள் வீரத்தை வாழ்த்துகிறோம் ஆனால் அதன் சுகத்தைத் தாழ்த்துகின்றோம். அவர்கள் விட்டுவைத்த சரித்திரத்தில் களிக்கின்றோம் ஆனால் அவர்கள் கட்டிவைத்த கோயில்களைப் பழிக்கின்றோம். அவர்கள் போர் திறத்தைச் சொல்லி நித்தம் கதைக்கின்றோம் ஆனால் அவர்கள் சேர்த்துவைத்த நல்லறிவைச் சிதைக்கின்றோம். அவர்கள் மாட்சிமிக்க அரசியலில் மலைக்கின்றோம் ஆனால் அவர்கள் ஆட்சிகண்ட அமைதிககை் குலைக்கின்றோம். அவர்கள் செய்யாதது இல்லை என்று மகிழ்கின்றோம் ஆனால் அவர்கள் செய்துவைத்த இலக்கியத்தை இகழ்கின்றோம். அவர்கள் நீதி நெறிமுறைகளை வந்தித்தோம் ஆனால் அவர்கள் ஆதரித்த புலவர்களை நிந்தித்தோம். மாண்டுபோன அம்மண்ணர்களுக்காக கண்ணீர் விடுகிறோம் ஆனால் மாளாதிருக்கும் அவர்கள் அறப்பயிர்களுக்கு வெந்நீர் விடுகிறோம். அவர்களது புற சின்னங்களாகிய வில் மீன் புலிக்கொடிகளை ஏற்றுகின்றோம் ஆனால் அவர்கள் அற சின்னங்களான அன்பு தெய்வம் அறங்களை தூற்றுகின்றோம். களை எடுக்க எண்ணி முளைஎடுக்க முனைந்து விட்டோம். சீர்திருத்தம் பேசி வேர் பறித்தல் செய்கிறோம். சமாதானம் காட்டி சண்டைகளை மூட்டகின்றோம். அன்பென்று பேணி வம்புகளை வளர்க்கின்றோம். அறமென்று நினைத்து மறங்களிலே மனம் செலுத்துகிறோம்.
தமிழ் பண்பு என்ற தலைப்பில் – தமிழ் பண்பு இறைவன் உண்மையை மறுக்காது தெய்வ நிந்தனை பொறுக்காது பெரியோரை பிழை சொல்லாது முன்னோர்களை மூடர்களாக்காது பழைமையைப் பழிக்காது நிகழ்கால அவசரத்தால் நிதானம் தவறிவிடாது எதிர்கால ஆசைகளுக்காக எதையும் செய்துவிடாது. இந்த தமிழ் பண்பினால் நாம் என்ன பலன் கண்டோம் என்று வெகு எளிதாக் கேட்டுவிடலாம். அதற்கு இந்தப் பண்பில்லாத ஏனைய நாடுகள் அடைந்துவிட்ட நலன்களைச் சற்றாகிலும் எண்ணிப்பார்த்தால் தக்க பதில் கிடைக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நெஞ்சுக்கு நீதி on February 3, 2012 at 3:19 pm

திரு சாரங் !

உங்கள் எதிர்கருத்து நிறைய சொற்களை அள்ளித்தெளித்த‌ கோலம் நேரம் விரையமாக்கப்பட்டிருக்கிறது.

போகட்டும். அவர் கேட்டதை இப்படியும் எதிர் நோக்கலாம். முயன்று பாருங்கள்.

வடமொழி (சமசுகிருதம்)தமிழகத்துக்கு எங்கிருந்து வந்தது?

உடனேயே அஃது ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அது தமிழரின் தாய்மொழியன்று. அவர்தம் தாய் மொழி தமிழே. பிறமொழிகள் – அவையெவையாயினும் ஈண்டிழுத்து வரப்பட்டவையே. இதுகொண்டு, வடமொழி எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பதில் உங்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக்கூச்சம் போலும்.

உண்மைகளை ஒத்துக்கொள்வதனால் யாதொறு கேவலமில்லை. அப்படி ஒத்துக்கொள்ளும்போது “அதன் பின்னர் யாது செய்யலாம் நலத்திற்காக?” என எண்ணம் தோன்ற நலல சமூகம் சம்பவிக்கும். மறுக்கமறுக்க உங்கள் கட்சி வலியிழந்தே போகும். மேலும், புண்கள் ஆழப்படும். குணமாகா.

ரா. ராகவையங்காரின் ‘தமிழர் வரலாறு’ கண்டிப்பாக உங்களைப்போன்றோர் படிக்கவேண்டிய பனுவல் அவர் எழுதுகிறார் “…இதனால், கூடலில் வடமொழிப் பட்டிமண்ட்பம் ஒன்றிருந்ததென்றும் அதன்கணிருந்த குயக்கோடன் “ஆரிய நன்று தமிழ் தீது” எனக் கூறினன் என்றும் அது கேட்டு நக்கீரர் தமிழன்னையின் சார்பாக அவனைச்சபித்தனர் என்றும் பின் பலர் வேண்ட உயிரிபபித்தனர் என்றும் தெரியலாம்….”

ஆக, திரு சாரங், ஆரியம் என்றழைக்கபபடுவது வடமொழியே. அஃது சங்ககாலம் தொட்டே தமிழோடு மோதி வந்திருக்கிறது. அஃதாவது இப்படிப்பட்ட குயக்கோடன்கள் இன்று மட்டும்ன்று; தொன்று தொட்டு தமிழகத்தில் நின்று நிலவி தமிழை இழிவுபடுத்தியே வந்திருக்கின்றனர்.

அந்த நக்கீரருக்கு இருக்கும் தாய்மொழிப்பற்று நமக்கிருக்கவேண்டும்.

தமிழே தமிழரின் முதல் மொழி. தாய் மொழி. ஒருவனுக்குத் தாய் ஒருத்தி மட்டுமே. மற்றவரெவராயினும் அவள் செவிலித்தாய் மட்டுமே. நம் தாயை நாம் விட்டுக்கொடுக்கலாமா? அல்லது, அவளை இன்னொருத்திக்குச் சமம் எனப்பிதற்றலாமா அந்த இன்னொருத்தி தேவதையேயாயினும் ?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard