New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 38. கட்சி மாறிய கருணாநிதி


Guru

Status: Offline
Posts: 24625
Date:
38. கட்சி மாறிய கருணாநிதி
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 38

October 18, 2009
சுப்பு rss_icon16.jpg

 

கட்சி மாறிய கருணாநிதி

kbsundarambalகே.பி. சுந்தராம்பாளின் சாரீரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். ஐந்தரை கட்டை ஸ்ருதியில், உச்சஸ்தாயியில் பிருக்காக்களை அவுட் பாணம் போல் உதிர்க்கும்போது நாடகாபிமானிகள் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அடுத்தாற்போல் ராஜபார்ட் நடிகர் வந்து நின்று என்னதான் உயிரைவிட்டுக் கொண்டு பாடினாலும் துளிகூடக் களை கட்டாது. உடனே ”உள்ளே போ!” என்ற கூச்சல் கிளம்பும். அந்த நடிகரும் உள்ளே மட்டுமல்ல, ஊருக்கே போய்விடுவார்.

இப்படியாக ஒரு வருஷ காலத்தில் பல ராஜ்பார்ட்டுகள் முறியடிக்கப்பட்டு திரும்பியதில் ஒப்பந்தக்காரர் மனமுடைந்து போனார்.

இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் எஸ்.ஜி.கிட்டப்பா…

‘இலங்கையில் சுந்தராம்பாள் கொடி பறக்கிறது! அங்கே போய் சிக்கிக்கொள்ள வேண்டாம்’ என்று கிட்டப்பாவுக்கு சிலர் அறிவுரை கூறினர்.

சுந்தராம்பாள் காதுபடவே ”கிட்டாபாவுக்கு எதிராக நின்று பாடிச் சுந்தராம்பாள் பாராட்டுப் பெற முடியுமா?’ என்று பேசிக்கொண்டனர்…

’கிட்டப்பா ராஜபார்ட்! சுந்தராம்பாள் ஸ்திரி பார்ட்!’ என்று கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாம்… இருவர் பக்கமும் பலர் புரளி கிளப்பி விட்டாலும் சுந்தராம்பாளோ கிட்டப்பாவோ ஒருவருக்கொருவர் அஞ்சி பின்வாங்கிவிடவில்லை…

1926-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிட்டப்பா – சுந்தராம்பாள் நடித்த ‘வள்ளித் திருமணம்’ கொழும்புத் தமிழர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. ‘மோட்சமுகலது’ என்ற பாடலை கிட்டப்பா தனக்கே உரிய அற்புதமான குரலில் பாட ஆரம்பித்தார். சுந்தராம்பாள் இன்னிசை முழுக்கம் புரியத் தொடங்கினார். ஒருவருக்கு ஒருவர் சோடை போகவில்லை. குரல் இணைந்தது. உள்ளமும் இணைந்தது.

-கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு/ப. சோழநாடன்/ரிஷபம் பதிப்பகம்

sgkittappaமேடையில் இணைந்த கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் வாழ்க்கையிலும் இணைந்தனர். இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்புத் திருமணமுமாகும். கிட்டப்பா பிராமணர், கே.பி. சுந்தராம்பாள் கவுண்டர். சுந்தராம்பாளைச் சந்திக்கும்போது கிட்டப்பாவுக்குத் திருமணமாகிவிட்டிருந்தது.

புகழ்பெற்ற கன்னையா கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜி கிட்டப்பா அதிலிருந்து விலகி சுந்தராம்பாளோடு சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். கன்னையா கம்பெனியின் தசாவதார நாடகத்தில் கிட்டப்பா பரதனாகத் தோன்றினார். அப்போது அவர் பாடும்,

”தசரத ராஜ குமாரா
அலங்காரா சுகுமாரா.. அதிதீரா

என்ற பாடலுக்குத் தனியாக ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஒரு பாடல் மட்டும் முன்று மணிநேரம் பாடப்படும்.

மகாத்மா காந்தி மீது அபிமானம் கொண்டவர் கிட்டப்பா. அவர் கதர் ஆடைகளைத்தான் அணிவார். அவர் காங்கிரஸ் கட்சி நிதிக்காக தொடர்ந்து நாடகங்கள் மூலம் நிதி திரட்டிக் கொடுத்தார்.

கிட்டப்பா 1933இல் இறந்தார். கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகும் காங்கிரஸ் மேடைகளில் சுந்தராம்பாளின் குரல் ஒலித்தது.

‘காந்தியோ பரம ஏழை சன்னியாசி’ என்ற பாடல் தமிழ் நாட்டில் காந்திக்கென்று வெகுஜன ஆதரவை உருவாக்கியது.

1934ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றதற்கு கே.பி. எஸ்ஸும் ஒரு முக்கியக் காரணம்.

கொள்கையில் சமரசம் இல்லாமல் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் கே.பி.எஸ். திரைப்படங்களில் நடித்தபோதும் அவர் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை.

மு. கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான பூம்புகார் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. (1964.) இந்தப் படத்தில் கே.பி.எஸ்ஸுக்கு கவுந்தி அடிகள் வேடம்.

கவுந்தி அடிகள், கோவலனுக்குத் தரப்பட்ட தண்டனையைக் கண்டித்துப் பாடுவதாக ஒரு காட்சி.

கவிஞர் மாயவநாதன்,

’’அன்று கொல்லும் அரசனின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது’’

என்று எழுதியிருந்தார். பாடல் வரிகளைப் பார்த்த கே.பி.எஸ். கடவுளை நிந்திக்கும் இந்த வரிகளை நான் பாடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பிறகு கவிஞரும் கருணாநிதியும்தான் கட்சி மாறினார்கள்.

பாடல் வரி,

‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’

என்று மாற்றப்பட்டது. இதைத்தான் கே.பி.எஸ். பாடினார்.

தமிழகத்தில் தேசிய உணர்வை வளர்ப்பதற்காக நாடகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

நாடகங்களின் ஆரம்ப காலத்தில் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா, மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா, முத்துக் கிருஷ்ணன் பாய்ஸ் கம்பெணி என்று சிறுவர்களை நடிகர்களாக்கும் கம்பெனிகளுக்குப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. மக்கள் பொதுவாக பாய்ஸ் கம்பெனி என்று அழைத்தார்கள்.

போக்குவரத்து வளர்ச்சி அடையாத காலம் என்பதால் ரயில் அல்லது மாட்டு வண்டிகளே போக்குவரத்துச் சாதனங்களாகப் பயன்பட்டன. அல்லது யாராவது ஒருவர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்ல, மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

பாலாமணி அம்மாள் என்பவர் நடத்திய நாடகக் கம்பெனியில் எல்லோரும் பெண்கள்தான். அவரும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் அந்த கம்பெனியை நடத்தினர்.

பாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது.

இதைப் பார்ப்பதற்காக மாயவரத்திலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும் நாடகம் நடக்கும் கும்பகோணத்துக்கு விசேஷ ரயில் விடப்பட்டது. ரயிலின் பெயர் ‘பாலாமணி ஸ்பெஷல்.’

அடித்துப் பிடித்துக்கொண்டு பாலாமணி ஸ்பெஷல் மூலம் வந்தவர்களுக்கு, அவர் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தார் என்ற விவரம் தெரியாது.

நல்லதங்காள் நாடகமும் மிகவும் வரவேற்கப்பட்டது. பாலாமணி கவர்ச்சி என்றால் நல்லதங்காள் கண்ணீர். வறுமையால் வாடும் நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டுப் பாடியபடியே நல்லதங்காள் கிணற்றில் எறிந்துவிடுவாள். சங்கரன் கோவில் அருகிலுள்ள செண்பகபுரம் என்ற ஊரில் நாடகம் நடந்தபோது, நல்லதங்களாக நடித்தவர் ஒரு குழந்தையைத் தாலாட்டுப் பாடாமல் கிணற்றில் போட்டுவிட்டார்.

மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். மேடையில் ஏறி, கிணற்றில் இருந்த குழந்தையை எடுத்து நல்லதங்காளிடம் கொடுத்து, மீண்டும் அழச் செய்தார்கள்; மீண்டும் தாலாட்டுப் பாடச் செய்தார்கள். இதுதான் தமிழகத்தில் 1924 ஆம் வருட நாடகச் சூழல்.

1930 முதல் 1940 வரை புராணம், சம்ஸ்கிருதக் காவியங்கள், தேசிய உணர்வு, சமுதாயச் சிந்தனை ஆகியவை நாடகங்களில் இடம்பெற்றன.

தாசிகளால் ஏற்படும் கேடுகளை விவரிக்கும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற பிரபலமான நாடகத்தின் கரு இதுதான்.

1937 ஆம் ஆண்டில் து.அ.வை. செட்டியார் இயற்றிய ‘பீமசேனனும் சந்திரிகாவும்’ என்ற நாடகமும், 1938 ஆம் ஆண்டில் கே.வி. சேஷய்யர் எழுதிய ‘ஆத்மநாதன்’ என்ற நாடகமும் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.

தேவதாசி குலத்தில் பிறந்த ஒருத்தி உத்தமியாக இருக்கிறாள் என்ற கருத்தோடு மாங்குடி துரை ராஜய்யர் ‘மித்திர பாசம்’ என்ற நாடகத்தை உருவாக்கினார். சுத்தானந்த பாரதியார் எழுதிய நாடகத்தில் தேவதாசிப் பெண்ணுக்கும் பிராமண இளைஞனுக்கும் திருமணம் நடக்கிறது.

pammalசீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர் ஒரு நீதிபதி.

தமிழ் நாடக மேடையில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பம்மல் சம்பந்த முதலியார். இவருடைய நாடகங்களில் தந்திரக் காட்சிகள் இடம்பெறும். 1891 முதல் 1958 வரை சம்பந்த முதலியாரின் நாடகப் பணி தொடர்ந்தது. பழமையைப் பலிகொடுக்காமல் புதுமைக்கு இடம் கொடுக்கவேண்டும் என்பது இவரது அணுகுமுறை.

கன்னையாவின் நாடகக் கம்பெணி பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளைக் கொண்டது இவர் நடத்திய ‘பகவத் கீதை’ நாடகம் 1008 முறை நடிக்கப்பட்டது.

தமிழ் நாடகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சங்கரதாச சுவாமிகள். 1910 இல் இவர் உருவாக்கிய ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவில் மதுரை மாரியப்ப சுவாமிகளும், எஸ்.ஜி. கிட்டப்பாவும் நடித்துப் புகழ் பெற்றனர்.

tks_brothers‘மதுரை மீனலோசணி வித்துவ பாலசபை’ என்ற நாடகக் குழுவை சங்கரதாச சுவாமிகள் 1918 இல் ஏற்படுத்தினார். புகழ்பெற்ற நடிகர்களான டி.கே.எஸ் சகோதரர்கள் இங்கேதான் பயிற்சி பெற்றனர்.

இவருடைய நாடகங்களில் பாட்டும், வசனமும் கலந்து இருக்கும்’; நாடகங்களின் கருத்து புராணங்களில் இருந்தும், இந்து சமயத் தொடர்புடையனவாகவும் இருந்தது.

தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் என்ற நாடக ஆசிரியர் ‘கதர் பக்தி’ என்ற நாடகத்தை எழுதினார்.

பாட்டி நூற்ற ராட்டை நூலில்
ஸ்பேட்டு போட்ட சீட்டி வாங்கித்
தரவேண்டும் எனதாசை மணவாளரே
நாட்டுக் கதர்த்துணி வாங்கித்
தரவேண்டும் எனதாசை மணவாளரே

என்று நாடகத்தில் வலுவான கதர்ப் பிரசாரமும் இடம்பெற்றது. இவருடைய நாடகங்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டன. இவர் லண்டனுக்குச் சென்று அங்கு நடந்த கண்காட்சியில் ‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்திக் காட்டினார்.

viswanadhadasஎஸ்.எஸ். விசுவநாத தாஸ் 1917 ஆம் ஆண்டில் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டார். புராண நாடகங்களில் நடுவில் தேசிய கீதங்களைப் பாடியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயல் தியேட்டரில் விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்’ நாடகம் நடைபெற்றது. முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ் கன்னட தேவ காந்தாரி ராகத்தில் உச்சக் குரலில் ‘சம்போ மகாதேவா’ என்று பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் உயிர் பிரிந்துவிட்டது.

mathurakaviமதுரகவி பாஸ்கரதாஸ் (1892-1952) எழுதிய பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கான பிரசாரங்களாக அமைந்தன. இவரது பாடல் நூலை அரசாங்கத்தார் 1932 இல் தடை செய்தனர்.

‘காந்தியோ பரம ஏழை சன்னியாசி’ என்ற பாடலை இயற்றியவர் இவர்தான்.

தந்திரக் காட்சிகளை வடிவமைப்பதில் விசேஷ கவனம் செலுத்தியவர் நவாப் ராஜமாணிக்கம். இவருடைய நாடகங்களில் முக்கியமானவை, சம்பூர்ண ராமாயணம் மற்றும் சுவாமி அய்யப்பன் ஆகியன.

ஒருமுறை தன்னுடைய ஆஸ்டின் காரையே மேடையேற்றி ஓட்டச் செய்தவர் நவாப் ராஜமாணிக்கம். மின் விசிறி இல்லாத காலத்தில் பார்வையாளர்களின் சவுகரியத்துக்காக பங்கா இழுப்பவர்களை இவர் வேலைக்கு வைத்திருந்தார்.

கடையநல்லூர் மஜீத் என்ற நடிகர் முருகன் மீது ஈடுபாடு கொண்டவர். ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் இவர் முருகனாக நடிப்பார்.

டி.எம். காதர் பாட்சா என்ற நடிகர் தேசிய உணர்வு உள்ளவர். தேசபக்திப் பாடல்களைப் பாடியதற்காக இவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இறுதியில் இவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சுருளிமலை மேவும் சீலா – உன்னை
தோத்தரித்தேன் சுப்பரமணிய வேலா

என்று அங்கேயே ஆர்மானியத்தோடு பாடினார். தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் சினிமாவில் பேச்சும் பாட்டும் அறிமுகமாகியது. இதன் விளைவாக நாடக கம்பெனிகள் பாதிக்கப்பட்டன.

சு.தியேடர் பாஸ்கரன் இது பற்றி எழுதுகிறார்.

“1931இல் ஒரே ஒரு படம் தயாரிக்கப்பட்ட காலம் மாறி, மூன்றாண்டு காலத்திற்குள் 14 தமிழ்ப்படங்கள் உருவாயின. சினிமாவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்பது தெளிவாயிற்று.

எனவே மேடையிலிருந்து சினிமா நோக்கிய படையெடுப்பு தொடங்கியது. 1934க்குப் பின் இவ்வரவு அதிகரித்தது. சென்னையிலேயே பேசும் பட ஸ்டூடியோ நிறுவப்பட்டதும், இது மேலும் அதிகரித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற வாத்தியார்கள் ஸ்டூடியோக்களுக்கு இடம்பெயர்ந்தனர். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.”

-பக் 78, ‘எம் தமிழர் செய்த படம்’, உயிர்மை பதிப்பகம்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பயன்பட்ட நாடகத் துறை பிற்பகுதியில் திராவிட இயக்கங்களிடம் சிக்கிக்கொண்டது. அது பற்றிய விவரங்களை அந்தப் பகுதியில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

இன்றைய இந்தியாவில் பல மொழிகளில் பண்பாட்டுத் துறைகளில் சீரிய சாதனையாளர்கள் சிறந்த முறையில் ஊடகங்களாலும் பொது மக்களாலும் ஆட்சியாளர்களாலும் போற்றப்படும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த இழிநிலை? பாரதியும் புதுமைப் பித்தனும் புறக்கணிக்கப்படுவது ஏன்? சிந்திக்கவேண்டும்.

– தி.க. சிவசங்கரன், கணையாழி, ஆகஸ்டு 1998



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ந.உமாசங்கர் on October 21, 2009 at 7:55 pm

///கருணாநிதி கட்சிமாறினார்` போன்ற விசமத்தனமான தலைப்புகளை வைத்து யாரையும் ஏமாற்ற முடியாது.///
///அரசியலை எழுதுவதாகச் சொல்லும் சுப்புவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதுதான் நாடகத்தின் பக்கம் நகர்ந்துவிட்டார்.///

1967 ‍காமராஜ் தலைமையிலான காங்கிரசுக்கு எதிராக சுத‌ந்திராக் க‌ட்சியுட‌ன் கூட்டு, எம்.ஜி.ஆர் தி.மு.க‌வில் இருந்தார்
1971 காமராஜ் தலைமையிலான காங்கிரசுக்கு எதிராக இந்திராவுட‌ன் கூட்டு, எம்.ஜி.ஆர் தி.மு.க‌வில் இருந்தார்
1977 எம்.ஜி.ஆருக்கு இந்திரா ஆதரவு, அதனால் இந்திராவுக்கு எதிராக‌ காம‌ராஜ் வ‌ழிவ‌ந்த, மூதறிஞர் வ‌ழிவ‌ந்த‌ ஜ‌ன‌தாவுட‌ன் கூட்டு
1980 எம்.ஜி.ஆருக்கு இந்திரா எதிர்ப்பு, அத‌னால் இந்திராவுட‌ன் கூட்டு, ஜ‌ன‌தாவுக்கு எதிர்ப்பு.
1984 எம்.ஜி.ஆருக்கு இந்திரா ஆதரவு, அதனால் இந்திராவுக்கு எதிராக‌ காம‌ராஜ் வ‌ழிவ‌ந்த, மூதறிஞர் வ‌ழிவ‌ந்த‌ ஜ‌ன‌தாவுட‌ன் கூட்டு
1987 இந்திரா மறைந்ததால் எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாததால் குழ‌ப்ப‌ம், எம்ஜி.ஆருக்கு ராஜிவ் த‌லைமையில் க‌ங்கிர‌ஸ் ஆத‌ர‌வு. திமுக‌, காங்கிர‌சுக்கு எதிர்ப்பு
1989 “சொந்த‌க்காலில்” மூப்ப‌னார் நின்றார். அ.தி.மு.க‌ பிள‌வு, தி.மு.க‌. வென்ற‌து.
1991 ராஜிவ் திட‌மாக‌ ஜெய‌ல‌லிதா ப‌க்க‌ம் போக‌, க‌ங்கிர‌ஸ் எதிர்ப்பு, ராஜீவ் சாக‌, ப‌டுதோல்வி.
1996 மூப்ப‌னார், ர‌ஜ‌னி ஆத‌ர‌வு, த.மா.கா என்ற‌ காங்கிர‌ஸ் பிரிவுட‌ன் கூட்டு.
1998 மூப்ப‌னார் காங்கிர‌சுட‌ன், ஐக்கிய‌ முன்ன‌ணி
1999 பா.ஜ‌.க‌. கூட்ட‌ணி
2001 காங்கிரஸ் எதிர்ப்பு, அத‌னால் தோல்வி.
2003 காங்கிர‌ஸ் கூட்ட‌ணி, அத‌னால் வெற்றி.
2006 காங்கிர‌ஸ் கூட்ட‌ணி, அத‌னால் பாதி வெற்றி
2008 காங்கிர‌ஸ் கூட்ட‌ணி, அத‌னால் வெற்றி

அர‌சிய‌ல் கேட்ட‌ த‌த்வ‌ன் அவ‌ர்க‌ள் அர‌சிய‌லில் க‌ருணாநிதியின் க‌ட்சித்தாவ‌ல் ச‌ரித‌ம் எழுதினால் அது ம‌ஹாபார‌த‌ம் போல‌ப் பெரிய‌ ச‌ரித‌மாக, அதைவிட, திடுக்கிடும் திருப்ப‌க்க‌ள் நிறைந்த‌தாக‌ இருக்கும் என்ப‌தை ச‌ற்று யோசிக்க‌ட்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard