கப்பலேறிப் போயாச்சி!
வேதாரண்யத்தில் வைரப்பன் என்றொரு நாவிதர். உப்புச் சத்தியாகிரகத்தில் போலிசார் தொண்டர்களை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டு இவர் மனம் கலங்கினார். இதனால் இவர் போலிஸ்காரர்களுக்கு முடிதிருத்துவதில்லை என்று முடிவெடுத்தார். சத்தியாகிரகம் நடந்து வந்த போது இவருக்கு ஒரு சோதனை வந்தது. ஒரு போலிஸ்காரர் அவரை ஏமாற்ற நினைத்து போலிஸ் உடைகளுக்குப் பதிலாக சாதாரண உடையில் வந்து தனக்கு முகச்சவரம் செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டார். வைரப்பனும் அவரை உட்காரவைத்து வேலையை ஆரம்பித்தார். முகத்தில் ஒரு பக்கம் வழித்தாகிவிட்டது.
அந்தச் சமயம் பார்த்து அங்கே வந்த ஒருவர் வைரப்பனிடம் ‘என்ன போலிஸ்காரருக்கு முகச் சவரம் செய்கிறார்போல் இருக்கிறதே’ என்று குட்டை உடைத்துவிட்டார்.
அவ்வளவுதான், வைரப்பன் போலிஸ்காரரை அப்படியே அரைகுறை சவரத்தோடுவிட்டுவிட்டு எழுந்துவிட்டார். போலிஸ்காரர் மிரட்டிப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் மசியவில்லை. இறுதியில் போலிஸ்கார் வைரப்பன் மீது பொய்வழக்கு போட்டு அவரை கோட்ர்டுக்கு இழுத்துச் சென்றார். நீதிபதி வைரப்பனிடம் ‘மிச்ச சவரவேலையும் செய்து முடி’ என்றார்.
அதற்கு வைரப்பன் சொன்னார். ‘நம்மாலே அது முடியாதுங்க, சாமி வேணுமானா நீங்களே செய்துவிட்டுடுங்க’ என்று சொல்லிக்கொண்டே தனது ஆயுதப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீதே வைத்துவிட்டார். வைரப்பனுக்கு ஆறுமாத சிறைதண்டனை கிடைத்தது.
வைரப்பனின் வீர வரலாற்றை சர்தார் வேதரத்னம் அவர்கள் சாத்தான்குளம் எனும் ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வரலாற்றைக் கூட்டத்தில் விவரித்த குற்றத்திற்காக அவருக்கு ஆறுமாத சிறைதண்டனை கிடைத்தது.
மற்றொரு நிகழ்ச்சி. அருணாசல தேசிகர் என்ற புரோகிதரையும் போலிசார் கைது செய்துவிட்டனர். சிறை அதிகாரிகள் முன்பு தேசிகர் நிறுத்தப்பட்டார்.
அதிகாரி : உமது பெயர் என்ன?
தேசிகர் : என் பெயர் அருணாசல தேசிகர்.
அதிகாரி : வயது?
தேசிகர் : ஐம்பது.
அதிகாரி : தொழில்?
தேசிகர் : புரோகிதம் செய்து வைப்பது.
அதிகாரி : இங்கே உமக்கு என்ன வேலை கொடுப்பது?
தேசிகர் : நாம் கருமாதி செய்து வைக்கும் புரோகிதர். பிரிட்டிஷ் ஆட்சிதான் இறந்து போய்விட்டதாமே. அதனால் அதற்கு கருமாதி செய்வதாக இருந்தால் செய்து வைக்கிறேன்.
இந்தக் குறும்புத்தனமான பதிலால் தேசிகருக்கு ஒரு வருஷ சிறை தண்டனை கிடைத்தது.
– கே. அருணாசலம் / குமரி மலர் / ஜூலை 1970
ராஜாஜி தலைமையில் திருச்சியில் தொடங்கி, வேதாரண்யத்தில் முடிந்தது உப்புச் சத்தியாகிரகத்துக்கான நடைப்பயணம். (1930.)
வழியெல்லாம், வாசல் தெளித்து, கோலமிட்டு, மேளதாளத்தோடும் பூர்ண கும்பத்தோடும் மக்கள் சத்தியாகிரகிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
அங்கங்கே சில இடங்களில் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளான சுயமரியாதைக்காரர்கள் கலவரம் செய்தனர். கும்பகோணத்தில் ராஜாஜி பேசிய கூட்டத்தில் அச்சடித்த அறிக்கைகள் வீசப்பட்டன. ராஜகோபாலாச்சாரி என்கிற பெயருக்கு முன்னால் ‘சக்கரவர்த்தி’ என்ற பட்டம் இருக்கிறதே, நீங்கள் எந்த நாட்டுக்குச் சக்கரவர்த்தி என்பது போன்ற ஏளனமான வாசகங்கள் அந்த நோட்டீசில் இருந்தன. கள்போதையில் இருந்த சுயமரியாதைக்காரர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்தனர்; மண்ணை எடுத்து வீசினர். உண்டியலைத்தான் அவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் உண்டியலை உடனே அப்புறப்படுத்தினர்.
தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும்தான் சுயமரியாதைக்காரர்களின் சலசலப்பு இருந்தது. மற்றபடி இந்தியாவெங்கும் எழுச்சி அலை பரவிவிட்டது. ஒரே வருடத்தில் ஒரு லட்சம் பேர் சிறைக்குள் அடைக்கப்பட்டனர். பெஷாவரில் முஸ்லிம்களால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்குவதற்காக ராணுவத்தின் கார்வால் பிரிவைச் சேர்ந்த துருப்புகள் கொண்டுவரப்பட்டன. கிளர்ச்சி செய்த முஸ்லிம்களைச் சுடுவதற்கு அவர்களுக்கு ஆணை இடப்பட்டது. இந்துக்களான ராணுவ வீரர்கள் முஸ்லிம்களைச் சுட மறுத்தனர்.
புரட்சியாளர்களால் சிட்டகாங்கில் ஆயுதக் கிடங்கு கைப்பற்றப்பட்டது.
பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் மக்கள் காவல் நிலையங்களைத் தாக்கினர். போலிஸார் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர். நிர்வாகம் காங்கிரஸ் தொண்டர்கள் கைக்கு வந்தது.
வெளிநாட்டுத் துணிகளை விற்கும் கடைகள்முன் காங்கிரஸ் தொண்டர்கள் மறியல் செய்தனர். இதன் விளைவாக காங்கிரஸால் அங்கிகரிக்கப்பட்ட மில்களின் துணிகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலைமை உருவானது. மில் முதலாளிகளான ஆங்கிலேயர்கள் ஆடிப்போனார்கள். காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்திற்கு வெள்ளையர்களான மில் முதலாளிகளும் மனுப்போட்டார்கள்; நாங்களும் சுதேசிகள் என்றார்கள்.
நெல்லூரில் காந்திக் குல்லாய் அணிந்த குற்றத்திற்காக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். நீதிக்கட்சியின் சட்ட அமைச்சராக இருந்த எம். கிருஷ்ணன் நாயர் இந்த தண்டனை நியாயமானது என்றார். அட்வகேட் ஜெனரலாக இருந்த டி.ஆர் வெங்கட்ராம் சாஸ்திரியை உயர்நீதிமன்றத்தில் வாதாடி தண்டனையை உறுதி செய்யும்படி கிருஷ்ணன் நாயர் கேட்டுக்கொண்டார். மனசாட்சி உள்ள டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். பாதிக்கப்பட்ட தொண்டருக்காக வாதாடி தண்டனையை ரத்து செய்யும் தீர்ப்பை பெற்றுத் தந்தார்.
பம்பாய் நகரத்தின் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பிரிட்டிஷ் அசோஷியேஷன் வெகுஜனங்களின் கருத்தையும் உணர்ச்சியையும் மதித்து லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு பிரதிநிதியை அனுப்ப மறுத்தது. ஆனால் நீதிக்கட்சி தன்னுடைய பிரதிநிதியாக ஏ.டி. பன்னீர்செல்வத்தை லண்டனுக்கு அனுப்பியது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சாமி வெங்கடாசலம் செட்டி மற்றும் ஆர்.என். அரோக்கிய சாமி முதலியார் போன்றவர்களால் சென்னை சட்டசபையில் ஒத்திவைப்புத் தீர்மானங்களும் வெட்டுத் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. நீதிக்கட்சி உறுப்பினர் எவரும் சட்டசபையில் இது பற்றிப் பேசவில்லை. அடக்கு முறையை கண்டிக்கவில்லை.
நீதிக்கட்ட்சிக்காரர்கள் விடுதலைப் போராட்டத்தைக் கேலி செய்தனர். நீதிக்கட்சி அரசில் கல்வி அமைச்சராக இருந்த எஸ். குமாரசாமி ரெட்டியார் 1935-இல் உதகமண்டலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்:
நாட்டின் சட்டங்களுக்கும் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய மறுத்து கணக்கற்ற இளைஞர்களைச் சிறைக்கு அனுப்பினர். நாட்டிற்கு எந்த வித லாபமும் இன்றி கண்க்கிலடங்கா தீங்குகளைச் செய்துள்ளனர்.
– சுதேசமித்திரன், 28. 06. 1935
மலபார் மாவட்டத்தில், தெலிச்சேரி என்ற ஊரில், திருமதி லீலாவதி பிரபு என்பவர் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்தற்காகக் கைது செய்யப்பட்டார். டாட்வெல் என்ற நீதிபதி அந்தப் பெண்மணிக்கு அபராதத்தைச் செலுத்தவேண்டுமென்று திருமதி பிரபு வற்புறுத்தப்பட்டார். அபராதத்தைச் செலுத்த முடியாது, சிறைத் தண்டனைதான் வேண்டும் என்றார் அந்த வீரப் பெண்மணி. நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘உன் கழுத்தில் இருப்பதை விற்கலாமே’ என்றார் நீதிபதி. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் அழுதுவிட்டார்கள். நீதிமன்றத்தில் கலவரம் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது.
தாலியின் புனிதத் தன்மையைப் பற்றி வழக்கறிஞர் ஒருவர் விளக்கியதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்டாயமாகத் தாலி கழற்றப்பட்டது. திருமதி பிரபுவைப் போலவே தண்டனை பெற்ற இரு பெண்களின் தாலிகளும் கழற்றப்பட்டன.
பின்னர் 1934 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி சார்பின் எஸ்.சத்தியமூர்த்தியும் அவரை எதிர்த்து நீதிக்கட்சி ஆதரவாளரான சர் ஏ. ராமசாமி முதலியாரும் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டனர்.
தலிச்சேரி ‘தாலி பிரச்சினை’ இந்தத் தேர்தலில் வெகுவாகப் பேசப்பட்டது. பிராமணரல்லாதார் அதிக அளவில் இருந்த இந்தத் தொகுதியில் பிராமணரல்லாதாரான சர் ஏ. ராமசாமி முதலியார் தோல்வியடைந்தார். பிராமணரான எஸ். சத்தியமூர்த்தி வெற்றி பெற்றார்.
ஜமீன் ரயத் என்ற பத்திரிகை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக எழுதியது :
”இந்த மாகாணத்தில் பிளேக் நோய்போல் நீதிக்கட்சி மக்களை வேதனைப்படுத்தி, அவர்களது இதயத்தில் நிரந்தரக் கசப்புணர்வை விதைத்துள்ளது. எனவே ஒவ்வொருவரும் கொடுங்கோன்மையானது என்று கருதும் நீதிகட்சி ஆட்சி வீழ்ச்சி அடைவதையும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி துவங்குவதையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொப்பிலி ராஜாவின் அமைச்சரவை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கிராமங்களில் உள்ள வயதான மூதாட்டிகள் கூட கேட்கின்றனர்.”
நீதிக்கட்சியின் ‘திராவிடன்’ பத்திரிக்கை ‘காந்திஜியின் இயக்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தானாகச் செத்து விழுந்துவிடும்’ என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியது.
நீதிக்கட்சி வெள்ளைக்காரர்களுக்கு அடியாளாகச் செயல்பட்ட போது ஈவெரா என்ன செய்து கொண்டிருந்தார்?
சுயமரியாதை இயக்கத்தில் ஈ.வெ.ராவோடு தோள் கொடுத்தவரும் காங்கிரஸ் வீரருமான கோவை அய்யாமுத்து கூறுகிறார் :
”கதர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த என்னை நாயக்கர் தேடிவந்து, ஈரோட்டிலே எம்.ஆர். ஜெயகர் தலைமையில் தாம் நடத்தவிருக்கும் சுயமரியாதை மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார்.
இராஜாஜி அவர்கள் அரசியல் உரிமைக்காகச் சட்டங்களை மீறிச் சிறை செல்லட்டும். நாம் சமுதாய உரிமைக்காக சத்தியாகிரகம் செய்து சிறை செல்வோம் என்று கூறினார். அவருடைய வார்த்தையை நான் மெய்யென நம்பி, உப்புப் போரில் பங்கு கொள்ள வேண்டுமென்று தோழர் ப. ஜீவானந்தம் கொணர்ந்த தீர்மானத்தைத் தோற்கடிக்க உதவினேன். ஆனால் அம்மாநாடு முடிந்ததும் நாயக்கரும் இராமநாதனும் அன்னிய நாடுகளுக்குக் கப்பலேறிவிட்டார்கள். நானும் என்னைப் போன்று நாயக்கரை நம்பி ஏமாந்தவர்கள் பலரும் இலவு காத்த கிளிகள் போலானோம்.
உடனடியாக கோவை சாமி சினிமாக் கொட்டகையில் தேசிய சுயமரியாதை மாநாடு ஒன்றைக் கூட்டினேன். உப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும், நாயக்கரின் பொறுப்பற்ற செய்கையைக் கண்டித்தும் அம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கூட்டத்தில் பேசக்கூடாதென எனக்கு இருந்த அரசாங்கத் தடை உத்தரவை நான் மீறியதற்காக மாநாடு முடிந்த மறுநாள் எனக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை கிடைத்தது.”
– பக் 28, 29 இராஜாஜி என் தந்தை / கோவை அய்யாமுத்து
உப்புச் சத்தியாகிரகத்தின் வெற்றியை உலகமே பாராட்டிக் கொண்டிருந்த வேளையில், ‘கப்பலேறிப் போயாச்சி’ என்று கண்மறைவாகப் போனார். ஈ.வெ.ரா. விடுதலைப்போரின் வெற்றியை அவர் விரும்பவில்லை.
நாவிதர் முதல் புரோகிதர் வரை என்று நாடே கொந்தளித்திருந்த நிலைமையில் நழுவிப்போனார் ஈ.வெ.ரா. வெள்ளைகாரனின் வீழ்ச்சியை அவரால் ரசிக்கமுடியவில்லை.
அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றி அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
எப்படியிருந்தாலும் சரி, உப்புக் காய்ச்சும் சட்ட மறுப்பு வெற்றி பெற்றுத் தெருத்தெருவாய் உப்பு மலையாய்க் குவிந்து கிடந்தாலும் சரி, அதோடு வெள்ளைக்காரர் ராஜாங்கமே ஒழிந்து இந்தியா பூரண சுயேச்சை அடைந்து இங்கிலாந்து தேசமும் நம் கைக்கு வருவதாயிருந்தாலும் சரி, இது சம்பந்தமான சட்ட மறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதைத் தைரியமாகச் சொல்வதோடு, இதனால் இந்தியாவுக்கு ஒரு வளைந்துபோன குண்டூசியளவு நன்மை ஏற்படாது என்றும் கோபுரத்தின் மீதேறிக் கூறுவோம்
– ஈவெரா / குடி அரசு, 13. 04. 1930