வைகோ-விடம் உள்ள ஏற்பாடு
2006 சட்டமன்றத் தேர்தலில் நான்காவது இடத்திலிருந்து மதிமுக மூன்றாவது இடத்திற்கோ ஒருவேளை இரண்டாவது இடத்திற்கோ முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தபோது ஏழாவது இடத்திற்கோ எட்டாவது இடத்திற்கோ பின்தள்ளப்பட்டு விட்டது என்பதை கழகத் தோழர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை…
அதைத் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நம் அனைவருடைய நம்பிக்கையையும் உடைத்து நொறுக்கிவிட்டது. அதிமுக அணி தோல்வி அடைந்தது. மதிமுக படுதோல்வி அடைந்தது…
இந்த நிலையில் ஆருயிர் இளவல் காளிமுத்து அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.
நான் முதல்நாள் இரவே புறப்பட்டு விருதுநகருக்குச் செல்கிறேன். அங்கு அருமைச் சகோதரர்கள் ஆர்.எம்.எஸ்., சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோர் காத்திருந்து என்னை அரசுப் பயணியர் விடுதியில் தங்கச் செய்தார்கள். நான், கம்பம் இராமகிருஷ்ணன் வீர இளவரசு ஆகிய மூவர் மட்டும் ஒரு காரில் காளிமுத்து ஊருக்குச் செல்கிறோம்.
செல்கிறபோது அவ்விருவரும் மறைந்த காளிமுத்து பற்றி பேசாமல் மதிமுக-வின் நிலை குறித்து விவாதித்தது எனக்கு வியப்பைத் தந்தது. அவர்கள் கூறியதெல்லாம், நான் எப்படியும் இந்த சோதனையிலிருந்து மதிமுக-வைக் காப்பாற்றவேண்டும் என்பதே. நான் கூறியதெல்லாம் எனக்கு எந்த வழியும் புலப்படவில்லை என்பதே. அவர்கள் ஆக்கபூர்வமான வழிமுறைகளைக் கூறுவார்களானால் அதன்படி நானும் செயல்படத் தயாராக இருக்கிறேன் என்பதே. பேசிக்கொண்டு செல்லும்போதே கம்பம் இராமகிருஷ்ணன், “அண்ணே நீங்கள் நாத்திகர்; ஆனால் நானோ ஆத்திகன். நான் கூறுவதை நீங்கள் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இனிமேல் நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஆண்டவன் விட்டவழிதான்.”
நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது திருமங்கலத்தில் இராமகிருஷ்ணன் இறங்கிக் கொண்டுவிட்டார்.
– எல். கணேசன் எம்.பி. / யார் துரோகி / மங்கை புக் டிஸ்டிரிபுயூட்டர்ஸ்.
மக்களவை உறுப்பினரான எல். கணேசன் ஒப்புதல் வாக்குமூலம் இது.
மதிமுக-வை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு அதனுடைய முன்னணி வீரர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அவர் குறிப்பிடுகிறார். பகுத்தறிவு பயன்படவில்லை; பலவகையில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
மதிமுக நிறுவனரான வைகோ-வின் கைவசம் ஏதோ ஒரு ஏற்பாடு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
சுயமரியாதை இயக்கம் என்று சூரத்தனமாகப் புறப்பட்டு நீதிக்கட்சி என்று ஆட்சியையும் அதிகாரத்தையும் வெகுஜன விரோத அரசியலையும் ருசிபார்த்து, திராவிடர்க் கழகம் என்று அறுபது ஆண்டுகாலம் இனவெறியை உற்பத்தி செய்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஊழல் முறையை உருவேற்றி, அதிமுக, மக்கள் திமுக, எம்.ஜி.ஆர் கழகம், மதிமுக, லட்சிய திமுக என்று பலவகையாகச் சிதறுண்டுவிட்ட கலாசார மாற்றத்தின் எச்சம் மிச்சம் இதுதான்.
பெரும்பாலான சுயமரியாதைக்காரர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாத்திகமாகத் தொடங்கிய பயணம் நம்பிக்கையைப் பார்த்துவிட்டது. ஆனால் வீட்டுக் கதவைத் தட்டாமல் வீதியில் நிற்கிறது.
எல். கணேசனின் வார்த்தைகளுக்கு இவ்வளவு விளக்கமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி.
இந்தச் செய்தி முரசொலி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி வந்திருக்கிறது.
பொங்களூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஏ.எஸ். மணி ஏற்பாடு செய்திருந்த 86 இலவசத் திருமணவிழா பற்றிய செய்தி இது. இந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி,” திருமணம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு பிரசாரப் பகுதி. திருமணம் என்பது வாழ்க்கையிலே ஒரு கட்டம் என்றாலும் கூட, திமு கழகத்தைப் பொருத்தவரை இந்த இயக்கத்தினுடைய வேர் சுயமரியாதை இயக்கம். அந்த வேரை பலப்படுத்தி நம்மிடத்திலே ஒப்படைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்,” என்று பேசியிருக்கிறார்.
அந்த விழாவில் மணமக்களுக்கு வழங்கப்பட்ட சீர்வரிசைகள் விழா நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும் முரசொலி இதழில் உள்ளன.
‘ஆயூர் ஆரோக்கிய, ஐஸ்வர்யத்தோடு வாழ்க’ என்று அந்த மணமக்களை வாழ்த்திவிட்டு நம்முடைய சந்தேகங்களைக் கேட்கிறோம்.
சீர்வரிசையில் குத்துவிளக்கு எதற்கு?
சீர்திருத்தத் திருமணத்தில் மங்கல நாண் எதற்கு?
மங்கல நாண் என்று நான் சொல்லவில்லை. முரசொலியில் உள்ள வண்ணப் புகைப்படத்தின் கீழ் ‘86 இணைகளுக்கான மங்கல நாண்களைத் தொட்டு வாழ்த்தி வழங்குகிறார் முதல்வர் கலைஞர்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
திராவிட இயக்கங்களின் வளர்ச்சி நிலை பற்றித் தெரிந்து கொள்ள புறச்சான்றுகளே தேவையில்லை முரசொலி, எல். கணேசனின் புத்தகம் போன்ற அகச்சான்றுகளே போதும்.
தமிழர்களுக்குத் தாலி தேவையில்லை; தமிழர் மரபில், தமிழ் இலக்கியத்தில் தாலி இல்லை என்று வாதம் செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ‘தாலி உண்டு’ என்று கூறியபோதும் அதை மறுத்து டாக்டர் ம. இராசமாணிக்கனார், ‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்ற புத்தகம் எழுதினார் (1954)
மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட, கண்ணகியின் கையைப் பற்றி கோவலன் தீவலம் வந்தான்; மகளிர் பாலிகை ஏந்தி நின்றனர் என்று கூறிய சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் ‘மங்கல அணி’ பற்றியும் எழுதியுள்ளார். இது ‘மாங்கலிய சூத்திரம்’ என்று பொருள்கொள்ளப்பட்டது.
’மங்கல அணி’ என்பது ’மாங்கல்ய சூத்திரம்’ அல்ல என்று வாதம் செய்தார் இராசமாணிக்கனார்.
ஆனால் கழகத்தவரும் அவர்களுடைய காவலனாக இருந்த சில தமிழறிஞர்களும் எத்தனை முயற்சி செய்தாலும், தமிழர் வாழ்விலிருந்து தாலியை அகற்ற முடியவில்லை என்பதையே அறிவாலய விழா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
தாலியைக் கழற்ற முடியாமல் கதாநாயகி தவிக்கிற கிளைமாக்ஸ் காட்சி கே. பாக்கியராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் வரும். ‘காதல் முக்கியமல்ல; கழுத்தில் இருக்கும் தாலிதான் முக்கியம்’ என்று சொல்லி முடித்துவிடுவார்கள். தமிழகத்தின் மூலைமுடுக்கில் எல்லாம் இந்தத் திரைப்படம் வசூலைக் குவித்தது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆண்டவனையே கேள்வி கேட்க ஆரம்பித்தவர்கள் மங்கல நாணை மகிழ்ச்சியோடு தொடுகிறார்கள் என்றால் அவர்களுடைய பயணம் வெகுதூரம் வந்துவிட்டது. வெகுவேகமாக வந்துவிட்டார்கள்; ஆனால் பயணம் முடியும்போதுதான் அது எதிர்த்திசையில் வந்துவிட்டதைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.
அவர்களுடைய பயணக் களைப்பை போக்குவதற்காக ஒரு கதை சொல்லட்டுமா?
ஒரு பையன்; ஒரு பெண்; இந்தப் பெண்ணுக்கு தன்மீது ஆசை உண்டு என்பது பையனுடைய நம்பிக்கை. அவளும் அவ்வப்போது அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறாள்.
அவளை மகிழ்விப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் அவன். பரிசுப் பொருள் வாங்கித் தரலாம் என்றால் அதற்கேற்ற பணவசதி இல்லை. வீரமாக ஏதாவது விளையாடலாம் என்றால் அவனுடைய உடல்வாகும் உள்ளமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. கவிதையாகக் கடிதம் எழுதலாமென்றால் அதற்கு இலக்கிய பயற்சியும் இலக்கணப் பரிச்சயமும் தேவை.
சிந்தித்துப் பார்த்தான்; மீண்டும் சிந்தித்துப் பார்த்தான். கடைசியில் செலவில்லாத வழி ஒன்று சிக்கியது.
மீசை இல்லாது இருந்தது அவன் முகம்; அதில் சிறிய மீசை ஒன்றை வளர்த்துக்கொண்டான். மீசையைப் பார்த்த காதலி, ‘ஆகா, அற்புதம்!’ என்றாள்.
அவனுக்குக் கால் தரையில் ஒட்டவில்லை. கொஞ்சம் முயற்சி செய்து மீசையைப் பெரிதாக்கிக் கொண்டான். இந்தமுறை அவள் அருகேயே வந்துவிட்டாள்.
“இப்போதுதான் உங்களுடைய கவர்ச்சி வெளிப்படுகிறது,” என்றாள்.
சுதாரித்துக் கொள்வதற்கு அவனுக்குக் கொஞ்சநேரம் ஆனது. இவளைத் தொட்டுவிடலாம் போலிருக்கிறதே என்கிற எண்ணத்தில் சில இரவுகளில் தூக்கத்தை இழந்தான்.
மீசைபோதாது என்று சிறிய தாடி வைத்துக்கொண்டான். கணக்கு தப்பவில்லை; அவள் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
ஒரு பத்துநாள் காதலியை பார்க்ககூடாது என்று முடிவுசெய்தவன், தாடியையும் பெரிதாக்கிக் கொண்டான்.
அதற்குமேல் நடந்ததைப் பற்றி எழுதமுடியாது; தமிழ் இந்துக்காரர்கள் தடையுத்தரவு வாங்கிவிட்டார்கள்.
இருந்தாலும் அவனுக்கு இந்த மர்மம் பிடிபடவில்லை. தாடியும் மீசையும் எப்படி ஒருவனை அழகாக ஆக்கமுடியும் என்ற கேள்வி அவனைக் குடைந்தது.
ஆசை என்று வரும்போது காதலியையும் அறிவு என்று வரும்போது நட்பினையும் தேடவேண்டும் அல்லவா?
அவன் நண்பனைத் தேடினான். நடந்ததை எல்லாம் நண்பனிடம் சொல்லி இதற்கு என்ன விடை? என்று கேட்டான்.
நண்பன் கொஞ்சம் அழுத்தமான ஆள்; அடுத்தவன் விஷயத்தில் எல்லோரும் அழுத்தமாகத்தான் இருப்பார்கள்.
‘எனக்குப் புரிந்துவிட்டது; ஆனால் உனக்கு எப்படிச் சொல்வது என்று யோசிக்கிறேன்’ என்றான் நண்பன்.
‘சொல்லு சொல்லு’ என்று நண்பனை உலுக்கி எடுத்தான் இவன்.
‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன்.
திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதைத்தான் எல். கணேசன் சொல்கிறார். இதைத்தான் மங்கல நாணும் சொல்கிறது.
இந்தத் தொடரின் அடுத்தப் பகுதிக்குப் போவதற்குமுன் ஒரு விளக்கம். சென்ற பகுதியில் தராசு என்ற நண்பர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
‘திராவிடக் கழகச் சார்புடைய முஸ்லீம்கள் தங்கள் மதத்தவர்களால் செருப்பால் அடிக்கப்பட்டனர் என்பது உண்மையா?’ என்று கேட்டிருந்தார்.
ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுதுவதில்லை. ஆனால் ஆதாரம், அடிக்குறிப்பு, பக்க எண் என்று போட்டுக்கொண்டே போனால் படிப்பவர்களுக்கு ஆயாசம் ஏற்படும் என்பதால் சில இடங்களில் அதைத் தவிர்த்து விடுகிறேன். இருந்தாலும் தராசுவுக்காக இதோ அந்த ஆதாரம்,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போன்ற இடங்களில் திக ஆதரவு முஸ்லீம்கள் வன்முறைக்கு ஆளாயினர், மதார்ஷா, ஹாஜா மொஹிதீன் ஆகிய இருவரும் அபராதம் விதிக்கப்பட்டு பத்துமுறை செருப்பால் அடிக்கப்பட்டனர்.
– விடுதலை, 3.10.1952
மேற்கோள் மேடை:
தமிழகச் சூழலில் பெரியாரியம் மேலுக்கு வந்த நிலையில் மதம் என்பது முற்றாக மூடத்தனம். பார்ப்பனியப் படைப்பு என்று மட்டுமே பரப்புரை செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழரின் பக்தி இலக்கியம் முதலியவற்றை நாம் மதிக்கத் தவறினோம். மெய்யியல் என்பதேகூட மதம் என்று சாடப்பட்டதன் மூலம் வாழ்வியல் குறித்த ஆழ்ந்த பார்வை நமக்கு இல்லாமல் போயிற்று. மதம் என்பதே மூடத்தனம் என்ற பகுத்தறிவின் மூலம் நாம் இழந்தவை பல.
(கோவை ஞானி / பக். 71 வரலாற்றில் தமிழர், தமிழ் இலக்கியம் / காவ்யா.)