நாகூர் அனீபாவின் நண்பர்கள்
பொதுவாக கருணாநிதி மட்டுமல்ல, தி.மு.க-வில் பெரும்பாலோர் இந்துமதத்தைக் கடுமையாக எதிர்ப்பதுதான் முஸ்ஸீம்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு மார்க்கம் என்கிற தவறான கருத்தில் இருந்தார்கள். ரம்ஜான் நோன்பு விழாவில் ஒரு முறை கருணாநிதி பேசுகின்றபோது, ‘முஸ்ஸீம்களாகிய நீங்கள் இருப்பது நோன்பு, இந்துக்கள் செய்வது வம்பு’ என்று பேசினார். முஸ்ஸீம் சமுதாயக் கூட்டத்தில் போய் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காலத்திலிருந்தே திமுக-வில் நிலவி வந்த போக்கு இது.
என்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்…
அண்ணா பேசவிருந்ந்த பொறையார் கூட்டத்தில் போய் நான் அமர்ந்தேன். கூட்டத்திற்கு அண்ணா வருவதற்குக் காலதாமதமாயிற்று. நாகூர் ஹனீஃபா, இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ஒரு பாட்டில் இந்துக் கடவுள்களான விநாயகர், முருகன் ஆகியோரைக் கேவலமாக வர்ணித்துப் பாடியதுடன் அந்தக் கடவுள்களை வழிபடுகின்ற இந்துக்களைப் ‘பொச கெட்டப் பசங்களா’ எனக் கேலிசெய்தும் பாடினார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஒரு முஸ்ஸீம் இந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்திப் பாடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் பொறுமையுடன் இருந்தேன்.
அண்ணா வந்து பேசினார். கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு பொறையார் ஜம்பு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அருந்திவிட்டு அண்ணா வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் நாகூர் ஹனிஃபா உட்கார்ந்திருந்தார். எதிர்த் திண்ணையில் நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அண்ணா ஹோம்லேண்ட் இதழ் பற்றி சற்றுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அதைப் பற்றி அவர் பேசி முடிந்தவுடன், கூட்டத்தில் நாகூர் ஹனிஃபா இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பாடியதைப் பற்றிச் சொல்லிவிட்டு மூடநம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்ஸீம், இந்துமதத்தைப் பற்றி மட்டும் இழிவாய் பாடுவது என்ன நியாயம்? வேண்டுமானால், ஹனிஃபா இஸ்லாமிய மதத்திலுள்ள பிற்போக்கான கோட்பாடுகளைப் பற்றிப் பாடலாமே என சற்றுக் காரசாரமாகவே கேட்டேன்.
அண்ணா புன்முறுவலுடன் ஹனீஃபாவைப் பார்த்து, ’கணேசன் எனக்குச் சொல்லவில்லை, உனக்குத்தான் சொல்கிறார்’ எனச் சொல்லி, அவருக்கே உரிய ராஜதந்திரத்துடன் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்துமத எதிர்ப்பும், ஏனைய மதச்சார்பும் ஒருபோதும் பகுத்தறிவுக்கு விளக்கமாகிவிட முடியாது.
– பி.சி. கணேசன் / பக். 186/191 திரும்பிப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு பகுத்தறிவாளரும் பதில்சொல்லவேண்டிய கேள்வியைத்தான் பத்திரிகையாளர் பி.சி. கணேசன் கேட்டிருக்கிறார்.
இந்து முஸ்லிம் விரோதத்தைத் தேவையில்லாமல் கிளரும் விவகாரத்தில் அண்ணாதுரை அமைதியாக இருந்திருக்கிறார், கருணாநிதி கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார். கண்மணிகள் கைதட்டி ரசித்திருக்கிறார்கள்.
ஆகமொத்தம் பகுத்தறிவு அகராதியில் இஸ்லாம் என்றால் இனிப்பு, இந்து என்றால் கசப்பு என்று ஆகிவிட்டது. சீர்திருத்தத்தைப் பற்றி அவர்கள் மற்ற மதத்தவரிடம் வாய் திறக்கவே வெட்கப்படுகிறார்கள்.
இதற்காக ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மதச் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு 2005ஆம் ஆண்டில் கிடைத்தது.
உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிறது முஸபர் நகர். அதன் அருகில் உள்ள சர்தாவால் கிராமத்தில், முஸ்லிம் பஞ்சாயத்தின்முன், ஒரு விவகாரம் தீர்வுக்காக வைக்கப்பட்டது.
இம்ரானா என்ற பெண்ணை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார். பஞ்சாயத்தில் இம்ரானாவும் அவருடைய கணவரும் புகார் செய்தனர்.
வழக்கை விசாரித்த பஞ்சாயத்து, இம்ரானா ஏழுமாதகாலம் தனியாக இருந்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்; பிறகு மாமனாருக்கு மனைவியாக வேண்டும்; தற்போதைய கணவனை மகனாகக் கருதவேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீயோபந்தில் இருக்கும் தாருல்-உலூம் என்ற முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்து ஃபட்வா வெளியிட்டது.
இந்த ஃபட்வாவுக்கு நாடெங்கிலும் பலத்த கண்டனம் எழுந்தது. பத்திரிகைத் தலைப்புகளில் தீப்பொறி பறந்தன.
மாதர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.
அகில இந்திய ஷியா பர்சனல் லா போர்டு ஃபட்வாவைக் கண்டித்தது. இஸ்லாமிய கிரிமினல் சட்டப்படி ’கற்பழித்தவனைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும்’ என்பதை சில முஸ்லிம்களே நினைவூட்டினார்கள்.
’மதச் சட்டங்களில் மாற்றங்கள் செய்வதைப் பற்றி யோசிக்கவேண்டும்’ என்று பாஜக கூறியது.
மார்க்சிஸ்ட் கட்சி சார்புடைய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் இம்ரானைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அகில இந்திய முஸ்லிம் பெண்கள் பர்சனல் லா போர்டு, ‘மவுலானாக்கள், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவும் பாதிக்கப்பட்டவரைத் தண்டிப்பதற்காகவும் இஸ்லாமியச் சட்டங்களை வளைக்கிறார்கள்’ என்று சொல்லி ஃபட்வாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
- உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களிடம் பிடிகொடுக்காமல் நழுவினார்.
நாகூர் ஹனிஃபாவின் நண்பர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
- அப்துல் ரகுமான் என்ற கவிஞர் திராவிட இயக்கங்களுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார். இம்ரானா விவகாரத்தில் இவருடைய கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
- கஸ்பருடைய கருத்து என்ன?
- சோலை ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
- சின்னக் குத்தூசியின் சிந்தனை என்ன?
- சுப வீரபாண்டியனுக்கு சொந்தக் கருத்து ஏதாவது உண்டா?
- மதிமாறனிடமிருந்து மறுமொழி உண்டா?
- நன்னனிடமிருந்து ஏதாவது நற்செய்தி உண்டா?
இம்ரானின் துன்பத்தில் இவர்களுக்குப் பங்கில்லை. இவர்கள் பிரியாணி விருந்தில் மனித உரிமைகளை மறந்துவிட்டார்கள்.
அந்தப் பக்கம் போனால் அடிவிழும் என்பதால் இந்தப் பக்கமே இவர்களுடைய காற்று வீசுகிறது. முஸ்லிம்களோடு ஏற்பட்ட மோதலைப் பற்றி திமுக தலைவரான மு. கருணாநிதி எழுதுகிறார்:
1953 ஜூன் 21ம் நாள் திருச்சியிலேயுள்ள மதுரைரோடு திமு கழகத்தின் திறப்பு விழாவை நடத்தி வைக்கச் சென்றிருந்தோம். அன்று காலை தோழர் கண்ணதாசனும் வந்திருந்தார். தஞ்சையிலிருந்து நண்பர் சண்முக வடிவேலும் வந்திருந்தார்.
ஒரு பீடி முதலாளி – அவரும் முஸ்லிம்தான். நல்ல பணபலம் உடையவர். ஆளும் கட்சியின் ஆசி தேவை என்பதற்காக அடிமைப் பேரிகை கொட்டும் ஒரு சில முஸ்லிம் பெரியவர்களைப் போன்ற பண்பு பெற்றவர் அவர். தானே முன்வந்து நின்று கூட்டத்திலே சோடா புட்டிகள வீசி, கம்புகொண்டு மக்களைத் தாக்க முற்பட்டார்.
‘ஏனோ தெரியவில்லை ஒரு சில முஸ்லிம் பெரியவர்களும் வாலிபர்களும் நமது திராவிட இயக்கத்தை எதிர்த்திடவும் அவதூறாகப் பேசவும் எழுதவும் முற்பட்டிருக்கின்றனர். நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே – அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே. அப்படியிருக்க அவர்களில் சிலர் நம்மீது காய்ச்சுவானேன் – பாய்வானேன்?
– மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்
வரலாற்றை உள்ளதை உள்ளபடி பதிவுசெய்ய வேண்டியதுதான் நம்முடைய வேலை. முஸ்லிம்கள் திராவிட இயக்கங்கள் உறவில் ஆரம்ப கட்டத்தில் சில உரசல்கள் இருந்தன என்பதும் கால ஓட்டத்தில் இவை காணாமல் போய்விட்டன என்பதும் வரலாற்றுச் செய்திகள்.
குடிஅரசு இதழில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகக் கட்டுரைகள் வெளிவந்தன. புரட்சி இதழிலும் இத்தகைய கட்டுரைகள் வெளிவந்தன.
- கோஷா முறைக்கு குரானில் ஆதாரம் – 04. 12. 1927
- பர்தாவின் கொடுமை – சிறுமுகை எஸ்.ஜே. அப்துல் அஜிஸ் / 25. 11. 1928
- இந்தியாவில் பர்தாமுறை ஒழிக்கவேண்டிய அவசியம் – 14. 10. 1928
- சமதர்மத்திற்கு பெண்கள் விடுதலை அவசியம் – 15. 04. 1934 (புரட்சி)
- முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான் – 28.01.1934 (புரட்சி)
முஸ்லிம்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’என்று அது எச்சரித்தது.
‘பிறை’ என்ற முஸ்லிம் இதழ் திராவிட இயக்கங்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்தது.
சில இடங்களில் திராவிட இயக்கத்தை ஆதரித்த முஸ்லிமகள் சமூக விலக்கு செய்யப்பட்டனர். விவாகரத்துகளும் நடைபெற்றன. சிலர் செருப்பால் அடிக்கப்பட்டனர்.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் ‘புரட்சி ஏடு’ நிறுத்தப்பட்டதாக ஈ.வெராவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
கிருத்துவர்களின் எதிர்ப்பைக் கண்டபிறகு ஈவெரா ’ஜகா வாங்கியிருக்கிறார்’ என்று முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன். இஸ்லாத்திற்கும் அது பொருந்தும்.
முஸ்லிம்களோடு சமரசம் செய்து கொண்ட ஈவெராவுக்கு 1962-ல்தான் அவர்கள் பிரச்சினையானார்கள். அப்போது திமுக, சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் கூட்டு ஏற்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணி பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் ஈவெரா செய்த விமர்சனங்களை அந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை :
‘மகமதியரல்லாதவரைக் கொல்லவேண்டும் என்ற வசனம் குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை சாத்தியப்படாது’ என்று சுயராஜ்ஜியாவில் லாலா லஜபதிராய் எழுதியிருக்கிறார்.
– (பெரியார் களஞ்சியம் – பாகம் 3, பக்கம் 120.)