வாரியார், எம்.ஆர். ராதா சந்திப்பு
1971- ஆம் ஆண்டு குமுதம் வார இதழுக்காக திருமுருக. கிருபானந்த வாரியாரும் நடிகர் எம்.ஆர். ராதாவும் சந்தித்துக்கொண்டார்கள். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.
எம்.ஆர். ராதா: எனக்கு ஒரு சந்தேகம். நாம் பேசுவது எல்லாம் தமிழா? நான் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளணும்னுதான் வந்தேன்.
கிருபானந்த வாரியார்: வேற்றுமொழி கலந்திருக்கும்.
எம்.ஆர். ராதா: திருப்புகழ், நொண்டிச்சிந்து எல்லாம்தானே தமிழ்?
கிருபானந்த வாரியார்: இது உரைநடை, அது செய்யுள் நடை, உரைநடைங்கறது வசனம்.
எம்.ஆர். ராதா: நாங்களெல்லாம் ஆங்கிலோ இண்டியன் போல. எனக்குப் பெரிய சந்தேகம். நாங்கள் பேசுறது எல்லாம் தமிழா? நீங்க பாடுவதெல்லாம் பேசுவதெல்லாம்தான் தமிழ். நீங்க பேசறதுக்கு அர்த்தம் தெரியாமல் சும்மாதான் தலையை ஆட்றோம். நீங்க வியாக்கியானம் பண்றீங்க, உரைநடையிலே சொல்லித் திருப்திப்படுத்தறீங்க. ஆங்கிலோ இண்டியனுடைய இங்கிலீஷ் எப்படியோ அதைப்போலத்தான் நமது தமிழும் இன்றைக்கு இருக்கிறது. கொச்சைத் தமிழ்தான் பேசுகிறோம்…
நீங்கள் சாப்பிட்டீர்களா?
கிருபானந்த வாரியார்: நான் ராத்திரியிலே சாப்பிடுவதில்லை. கஞ்சிதான் குடித்தேன்.
(மதம் பற்றிய பேச்சு தொடர்கிறது)எம்.ஆர். ராதா: நமக்கு ஏது மதம்? நாங்கள் எங்கள் சந்தேகத்தைத்தான் கேட்கிறோம். சீர்திருத்தமா பண்ணுகிறோம். எங்களுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கிறோம். அவ்வளவுதான்.
கிருபானந்த வாரியார்: மதம் என்ற வார்த்தைக்கு கொள்கை என்று பொருள். மதம் என்ற சொல்லுக்கு அகங்காரம் என்றும் பொருள். ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’….
எம்.ஆர். ராதா: அழிவு வரும்போது நல்லவர்கள்மேல் பாயறாங்க. நெய்வேலி சம்பவம் பற்றிச் சிறையிலே நான் வருத்தப்பட்டேன். அதற்காக நான் அழுதேன். ஆனால் அப்புறம் மாற்றிக்கொண்டேன். சினிமாவில் நடித்ததற்காக ஐயாவுக்கு அது பனிஷ்மெண்டு என்று நினைத்தேன். (வாரியார் சிரிக்கிறார்)
எங்களுக்கெல்லாம் கெட்டுப்போன உடம்பு. ஐயா உடம்பெல்லாம் கெடாது. ஏதோ நான் சீக்காய் இருப்பதாகச் சொல்லவில்லை. நான் கொஞ்சம் ‘ட்ரிங்க்’ பண்ணுவேன். இப்போது எவ்வளவோ மாற்றிக்கொண்டேன். நான் செயின் ஸ்மோக்கராக இருந்தேன். இப்போது விட்டுவிட்டேன்.
கிருபானந்த வாரியார்: சிகரெட்டையெல்லாம் விட்டுவிட்டீர்களா?
எம்.ஆர். ராதா: புலாலையும் விட்டுவிட்டேன்.
கிருபானந்த வாரியார்: தாயுமானவர் சொல்கின்றார். ‘பார்க்கிற மலரினூடும் நீயே இருத்தி…’பார்க்கிற ஒவ்வொரு புஷ்பத்திலும் கடவுள் இருக்கிறாரே. நான் எப்படி அந்தப் புஷ்பத்தை எடுப்பேன் என்று கேட்கிறார்.
எம்.ஆர். ராதா: ஏதோ நானும் யோசித்தேன். தங்கம் இங்கேயும் இருக்கிறது. கோலாரிலும் இருக்கிறது. இங்கே பத்துலட்சம் செலவு செய்தால் ஒரு பவுன் தங்கம் எடுக்கலாம்; அங்கே ஒரு பவுன் செலவு செய்தால் பத்துலட்சம் பவுன் தங்கம் எடுக்கலாம். கோவிலே அடக்கம்தான்: சமாதிதான்; யாரோ ஒரு நல்ல மனிதரைப் புதைத்திருக்கிறார்கள். எல்லாம் பவர்தான்.
கிருபானந்த வாரியார்: ஆமாம் பவர்.
எம்.ஆர். ராதா: அந்தப் பவர்களை எல்லாம் நம்மால் காணமுடியாது. இவர் நெய்வேலியில் கூட ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை. எந்த டாக்டர்கள் வந்தாலும் அந்த டேட்டை மாற்ற முடியாது, யாராலும் முடியாது என்றார். யாருடைய மனமும் புண்படும்படி ஐயா பேசியதில்லை.
– குமுதம் / 1971
தமிழக முதல்வரக இருந்த சி.என். அண்ணாதுரைக்குப் புற்றுநோய் ஏற்பட்டது சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வந்தனர். சிகிச்சைக்குப் பலனில்லை. அண்ணாதுரை இறந்துவிட்டார். (1969)
இந்த நேரத்தில் நெய்வேலி அருள் நெறித் திருக்கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று உரையாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார், ‘விதி வலிமையுடையது. ஊழை வெல்ல முடியாது,’ என்று குறிப்பிட்டார்.
அண்ணாதுரையின் மறைவால் தமிழ்நாட்டில் சோக அலை எழுந்தது. ‘வாரியார் அண்ணாவைத் தாக்கிப் பேசிவிட்டார்’ என்ற வதந்தி நெய்வேலியில் பரப்பப்பட்டது.
அதன் விளைவாக ஒரு ஆவேசக்கும்பல் வாரியார் இருந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டது, அந்த வீட்டைத் தாக்கியது. வாரியார் வழிபடும் விக்கிரகங்கள் வீசி எறியப்பட்டன. மயில் உடைந்தது.
ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடைய ஆளுமையால் கட்டிப் போடும் ஆற்றலுடையவர்; தங்குதடையில்லாமல் தமிழ் பேசும் முதியவர்; நெற்றியிலே திருநீறும், நெஞ்சினிலே கருணையும் அணிந்தவர்; வறியவருக்கும் திருப்பணிக்கும் வாரி வாரிக் கொடுத்தவர்; குறையொன்றுமில்லாத கொள்கை உடையவர் கிருபானந்த வாரியார். அந்தத் தமிழ் முனிவரைத் தாக்கிவிட்டார்கள் கழகத்தவர்கள்.
காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வாரியார் அங்கிருந்து வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார்.
இதைக் கேள்விப்பட்ட ராஜாஜி மனம் வருந்தினார். சேங்காளிபுரம் அனந்தராம திக்ஷிதர், வாரியாருக்குக் கடிதம் எழுதினார்.
முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு வாரியாருக்கு ஒரு கடிதம் வந்தது. வாரியாரைத் தாக்க வந்தவராக தன்னைக் குறிப்பிட்டுக்கொண்ட ஒருவர், ‘மரணப் படுக்கையில் இருக்கிறேன். என்னை மன்னித்து, விபூதி கொடுக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
அவருக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்பட்டது..
வாரியார் தாக்கப்பட்டது ஒரு முறையல்ல; பலமுறை. அண்ணாதுரை மறைவுக்கு முன்பும் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருக்கிறார்.
65 வயதுப் பெரியவரைக் கும்பலாகத் தாக்குவதுதான் கழகத்தவரின் வீரமாக இருந்திருக்கிறது.
எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.
வாரியாரின் சமயச் சொற்பொழிவை இடையூறு செய்தவர்கள், கேள்வி கேட்டவர்கள், கேலி செய்தவர்கள் இதே நியாயத்தை மற்ற மதத் தலைவர்களிடம் கடைப்பிடித்தார்களா?
எந்த மசூதியிலாவது, எந்த கழகக் கண்மணியாவது ஏதாவது குறுக்குக் கேள்வி கேட்டிருக்கிறார்களா?
சாதிக் பாட்சா என்பவர் முஸ்லிம்; இவர் திமுகவின் பொருளாளராக இருந்தார். இந்த முன்னணி வீரர் தன்னுடைய அறிவாராய்ச்சியை இஸ்லாத்தின் மீது திருப்பியிருக்கிறாரா?
எந்தத் தேவாலயத்திலாவது எந்த சுயமரியாதைக்காரராவது பகுத்தறிவோடு இடைமறித்திருக்கிறாரா?
இல்லை, இல்லை, இல்லை என்பதுதான் இதுவரை எனக்குக் கிடைத்த பதில்.
இருந்தாலும் ஒரு விசேஷத் தகவலை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
ஈ.வெ.ரா தன்னுடைய வேலையை கிறித்துவரிடமும் காட்டியிருக்கிறார். ஆனால் கிறித்துவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவிட்டார்கள். அன்று ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ்காரர்களும் கிறித்துவத்திற்கு ஆதரவாக இருந்தனர். அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட விரும்பாததாலும் கிறித்துவரின் தீவிரத்தைக் கண்டதாலும் ஈ.வெ.ரா, ‘ஜகா’ வாங்கிவிட்டார். இதுதான் சாரம்; விவரங்களைக் கொடுக்கிறேன்.
- சுயமரியாதைத் திருமணங்கள் தொடங்கிய காலத்தில் தஞ்சாவூரில் மட்டும் 150 கிறித்துவர்கள் சுயமரியாதைத் திருமணத்தை மேற்கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
- புதுச்சேரியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் (1931) பேசிய குத்தூசி குருசாமி, கத்தோலிக்க பாதிரிகளின் பித்தலாட்டங்களையும் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்தார்.
- பெட்ரண்ட் ரஸ்ஸில் எழுதிய, ‘நான் ஏன் கிறிஸ்துவனல்ல’ என்ற நூலை குத்தூசி குருசாமி தமிழில் மொழிபெயர்த்தார்.
- 1933 ஆம் ஆண்டில் ஏசுவின் போதனைகளைக் கேலிசெய்து, கத்தோலிக்கப் பாதிரிகளின் ஒழுக்கத்தைக் குறைகூறி பல கட்டுரைகள் குடிஅரசில் வெளிவந்தன.
- தஞ்சை மாவட்டம், திருச்சி மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10,000 கிறித்துவர், சமயத்திலிருந்து வெளியேறினர் என்ற செய்திகள் குடிஅரசில் வெளிவந்தன.
- ரெவரண்ட் ஜி. டவுண்செண்டின், ‘The celebacy of the priests’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்டது.
கிறித்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டார்கள்.
- சுயமரியாதை இயக்கத்தவரைக் கண்டித்து கத்தோலிக்கர்களின் இதழான Kings Rally கட்டுரைகளை வெளியிட்டது.
- அரசுக்கு நெருக்கமான நாளிதழான மெட்ராஸ் மெயிலில் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கடிதங்கள் அச்சேறின.
- சென்னை செயின்ட் மேரி ஹாலில் (17.04.1933) நடந்த கத்தோலிக்க மாநாட்டில் ஈ.வெ.ரா மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்தது.
- கத்தோலிகர்கள் கூடிய திருச்சி மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தாரோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் கிறித்துவத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற எச்சரிக்கை தரப்பட்டது.
- கத்தோலிக்கர்கள் சார்பாக போப்பாண்டவர் பயஸ் XI (Pope Pius XI) க்கு முறையீடுகள் சென்றன.
- கிறித்துவர்களின் எதிர்ப்பு, அரசு நடவடிக்கையாக உருவெடுத்தது. குடிஅரசு நிர்வாகத்தாரிடமிருந்து பிணையத் தொகையாக ரூயாய் ஆயிரம் கேட்கப்பட்டது.
- இதற்கிடையே மத்திய சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. (1934 நவம்பர்.) இந்தத் தேர்தலில் ஈ.வெ.ரா நீதிக்கட்சியை ஆதரித்தார். தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வியடைந்தது.
- சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த கிறித்துவர்கள் மனம் திருந்தி தேவாலயங்களுக்கு வரத்தொடங்கிவிட்டனர் என்று Kings Rally (1935 மார்ச்) எழுதியது.
கிறித்துவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும், ஆங்கில அரசின் ஆதரவைப் பெறுவதற்காகவும் ஈ.வெ.ரா ஒரு அறிக்கையைத் தயாரித்தார்.
சுயமரியாதை இயக்கம், தோழர் ஈ.வெ.ராமசாமி அறிக்கை என்ற பெயரில் மார்ச் 6, 1935-ல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,
சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பி விடப்பட்ட பல விதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுள் சில தப்பு அபிப்ராயங்கள் பரவிவருவதாகத் தெரிகின்றது..
சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்லவேண்டி வருமானால், அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்..
எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக்கொள்ளுவதும் இல்லை….
காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயமாகும்.
என்று சொல்லியிருந்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை லட்சியமான பொருளாதாரக் கொள்கைகளை ‘பொசுக்’ கென்று போட்டுவிட்டார் ஈ.வெ.ரா. அரசாங்கத்தோடு ’ராஜி’ செய்துகொள்வதாக அவரே சொல்லியிருக்கிறார்.
ஈ.வெ.ராவின் ‘சோமர்சால்டை’ அவருடைய தோழர்கள் ரசிக்கவில்லை. ப. ஜீவானந்தம், அ. இராகவன், நீலாவதி, வல்லத்தரசு ஆகியோர் இயக்கத்தைவிட்டு வெளியேறி வேறு அமைப்பை உருவாக்கினர்.
கத்தோலிக்கர்களிடம் காயம்பட்ட ஈ.வெ.ரா கிறித்துவ எதிர்ப்பைக் கைகழுவினார்.
கிறித்துவர்களின் தாக்குதல் கடுமையாக இருந்ததால் அடுத்த முப்பது வருடங்களுக்கு கிறித்துவர்களைப் பற்றி அவர் விமர்சனம் செய்யவில்லை.
சிலுவை வடிவ பிளாஸ்திரியை அவராகவே உதடுகளில் ஒட்டிக்கொண்டார்.
பிறகு 1962 இல் சில இடங்களில் கிறித்தவர்களைk கண்டித்துப் பேசியிருக்கிறார். அது பற்றிய விபரங்களை அந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
இத்தனை ஆண்டுகள் அயோக்கியத்தனமாகப் பொய்யும் புரட்டுகளும் சொல்லி, அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் அழுத்தி வைத்ததற்காக நான் மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் – என்று ஒவ்வொரு பாதிரிமாரும் யோக்கியமாக ஒப்புக்கொண்டு உலக முன்னேற்றத்திற்கு வேண்டிய துறைகளில் ஈடுபட்டு ஏழை மக்களின் தொல்லையைத் துடைப்பதில் ஈடுபட வேண்டும்.
– குத்தூசி குருசாமி / கத்தோலிகர்களின் ஆவேசம் / குடிஅரசு, 30. 04. 1933.