சாமானியனுக்கு ஒரு சந்தேகம்
அந்தக் காலகட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரை– குறிப்பாகக் கலைஞரை– எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்குக் கிடைத்த முழுக் கல்வியை இவரும் அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்….
ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்ஸ்பெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப்போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை, படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே …
படிக்காத மனிதர்கள் கூட, மேடையில் திமுக-வினர் காமராசரை படிக்காதவர் என்று சொல்லும்போது இவர்கள் என்னவோ லண்டனில் படித்துவிட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன்.
பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன்.
உண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலைப் பிடித்துக்கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். கொஞ்ச நஞ்சம் கிடைத்த அரிசியை செல்லம்மா புடைக்கும்போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்கப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ, இந்த இயக்கத்தின் முன்னோடியாகச் சித்தரிக்கப்பட்ட அவர்மீது எனக்குத் தீராப் பகை ஏற்பட்டது.
சு. சமுத்திரம் / பக் 42, 43, 44, என் பார்வையில் கலைஞர்.
சு. சமுத்திரம் மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையாளர்களுக்கு, கலை, இலக்கியத் தொடர்பு உடையவர்களுக்குக் கழகங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருந்ததாகத் தெரியவில்லை.
எனவே இந்த முறை இலக்கியம்.
கழகத்தவர்களே ஒருவருக்கொருவர் பட்டம் கொடுத்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் நாவலர் என்றும் காவலர் என்றும் பாவலர் என்றும் நாலுவிதமாகப் புகழ்ந்துரைத்துக்கொண்டதை நேர்மையான இலக்கியவாதிகள் புறக்கணித்தனர்.
இது குறித்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னணியில் இருக்கும் சில எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?
’நல்ல இலக்கியத்தைப் படைப்பதும், படிப்பதும் ஆன்மாவை மேம்படுத்தும் என்பதை நினைவில்கொண்டு உலகம் திரும்பிப் பார்க்கிற மாதிரி எழுத வேண்டும்’ என்று சொல்பவர் பிரபஞ்சன். இவருடைய கருத்து இதோ:
’வாழ்க்கைக்கும் பேச்சிற்கும் இடைவெளி அதிகமாக அதிகமாக இலக்கியம் பொய்யாகிவிடும். திராவிட எழுத்துக்களில் பொய் அதிகம். தவிர மோசமான சுவையை முதன்முதலில் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான்.’
கலை இலக்கியங்களை வரலாற்று வழியாக ஆராய்ச்சி செய்த ‘இலக்கிய கலாநிதி’, பேரா. ந. வானமாமலை எழுதுகிறார்:
’படித்த இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்து கொள்ள, தொடர் நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். திமுக எழுத்தாளர்கள்.
இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரசாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதேயன்றி, சிறந்த இலக்கியப் படைப்புகள உருவாக்க இயலவில்லை…
எனவே செயற்கையான திமுக நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.’
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான ச. செந்தில்நாதன் சொல்வது இது:
’விதிவிலக்காகச் சில படைப்புகள் இருந்தபோதிலும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் எதார்த்தப் படைப்பாளிகளாக மலராமல் போனார்கள். அதனால்தான் இலக்கிய உலகில் சில தரப்பினரால் திராவிட இயக்கப் படைப்பாளிகள் இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. திராவிட இயக்கப் படைப்பாளிகள் எல்லாம், ஆட்சியில் இருக்கும்போது ‘அரசு விருது’ பெறுபவர்களாகவே ஆகிப்போனார்கள்.’
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் கருவோடும் உருவோடும் கலாபூர்வமாகப் பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். திராவிட இயக்கத்தாரைப் பற்றிப் பண்பாட்டுத் தளத்தில் இவர் செய்யும் விமர்சனம் இது:
’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’
சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்படி எழுதுபவருமான இந்திரா பார்த்தசாரதி தில்லி மற்றும் வார்ஸா பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். இவருடைய கருத்து:
’திராவிட இயக்கம் தமிழ் மொழியை பலப்படுத்தி பிரபலமாக்கியதே தவிரவும் இலக்கியத்தில் ஒன்றும் சாதிக்கவில்லை.’
விடுதலைப் போராட்ட வீரரான ம. பொ. சிவஞானம் சிலப்பதிகாரத்தின் சிறப்பை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தவர். ம. பொ. சி. எழுதுகிறார்:
’தமிழ்மொழிக் கலைகளுக்கோ காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டைவிட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்பாள், மிஸஸ் மிராண்டா என மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும் பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே தமிழை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடர்கள். அதனால் சைமன் ஸ்டாலின், எட்வர்டு மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு நாராயணசாமி நெடுஞ்செழியரானார்; ராமையா அன்பழகனரானார்; நடராஜர் கூத்தரசரானார். ஆம் விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல் புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர்.’
நம்மிடையே வாழ்கின்ற இலக்கியப் பிதாமகர், கலை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் வெங்கட் சாமிநாதன். இவர் சொல்கிறார்:
’தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்க் கலாசாரம் இவற்றைப் புத்துயிர்ப்பதாக, காத்து வளர்ப்பதாகக் கோஷமிட்டு இயங்கிய அரசியல் இயக்கங்கள் எல்லாம் அண்மையில் இம்மூன்றின் தேய்வுக்கே வழிவகுத்துள்ளன.’
பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் சிலப்பதிகார மாநாட்டில் பேசும்போது கூறினார்:
’திராவிட இயக்கத்தார் வளர்த்துள்ள தமிழும் தமிழ்ப் பற்றும் என்ன? இப்படி நாடு கெடும், மக்களுக்கு இழிநிலை வரும் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை.’
இதெல்லாம் அறிஞர்களின் கருத்துகள். என்னைப் போன்ற சாமானியனுக்கு ஒரு சந்தேகம்.
தமிழ் வாசகர்கள் விரும்பிப்படிக்கும் எந்த இதழாவது திராவிட இயக்கத்தவரின் கதை, கவிதை அல்லது கட்டுரையை வெளியிட்டிருக்கிறதா?
கலைஞர் கருணாநிதி தன் குடும்பப் பத்திரிகையில் தன்னுடைய எழுத்துக்களை வெளியிடுகிறார். அது அவருடைய வசதியைப் பொருத்த விஷயம்.
கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைகள் இதழ்களிலும் புத்தக வடிவிலும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசனை திராவிட இயக்கத்தவர் என்று சுட்டிக்காட்ட முடியாது. அந்த மர்மலோகத்தின் ரகசியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டியவர் அவர்.
திராவிட இயக்கத்தவர் எழுத்துக்கு விலையும் இல்லை; விற்பனையும் இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் திரைப்பட துறையில் கழகத்தவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நான் மறுக்கப்போவதில்லை.
அந்த சரித்திரத்தையும் சாரத்தையும் இன்னொரு சமயம் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி வட்டத்தில் உள்ள கல்குறிச்சி பெரியார் சமத்துவபுரத்தில் ஆறுமுகம் என்கிற தலித்தின் குடும்பத்தினர் அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி செருப்பாலும் கம்பாலும் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கமுயன்றபோது ‘நீ சமத்துவபுரத்தில் இருக்கிறாய். அதனால் சாதி பற்றிப் பேசக்கூடாது. எனவே நீ அடிபட்டதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்’ என அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.
– குமுதம் ரிப்போர்ட்டர் – 09. 07. 09