எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை?
திராவிடர் கழக 18-வது மாநாடு, 8, 9-05-1948 தேதிகளில் தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மலேயா, இலங்கை, மைசூர், கொச்சி முதலான ஊர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். கருப்புச் சட்டை அணிந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, தலைவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். வெள்ளம் போல திரண்டுவந்த கூட்டம் வசதியாக இருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் முறையில் மாநாட்டுப் பந்தல் வ.உ.சி. மைதானத்தில் அர்ச்சுனன் பந்தல் என்ற பெயருடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. தாய்மார்களுக்குத் தனியாக இடவசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மாநாடு பகல் 11 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் K.K. நீலமேகம் அவர்கள் கொடியேற்று விழாவை நடத்தினார். தலைவர் பெரியார் அவர்கள் பெருத்த கைத்தட்டுதலுக்கிடையே எழுந்து தம்முடைய தலைமைப் பிரசங்கத்தை மூன்றுமணி நேரம் ஆர்வத்தோடு பேசினார். ‘காந்தியடிகள் மறைவு – திராவிட மக்களுக்குப் பெருத்த நட்டமும் ஏமாற்றமும்’ என்பதைக் குறித்து விரிவாகப் பெரியார் அவர்கள் தம்முடைய தலைமையுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.
பெரியார் பேசும்போது கருத்து வேறுபாடு குறித்துக் கோடிகாட்டினார்.
“புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது இயற்கைதான். ஆகவேதான் நான் நீடாமங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக்கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று…..
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல உங்கள் மனசாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.”
– 1948 மே மாத நாளிதழ்கள்.
தூத்துக்குடி மாநாடு நடந்த ஒரு வருட காலத்திற்குள் நிலைமை மாறிவிட்டது.
தலைவர் சொற்படி பகுத்தறிவையும் மனச்சாட்சியையும் மூட்டைகட்டி வைத்திருந்தவர்கள் தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்தது அப்போது. ஈ.வெ.ரா மணியம்மை திருமணத்தை ஒட்டி திராவிடர்க் கழகம் பிளவுபட்டது; 70 வயதைக் கடந்தவருக்கு 30 வயதுப் பெண்மணியோடு திருமணம் (1949)ல் நடந்தது.
மனச்சாட்சியின்படி நடக்க விரும்பியவர்களில் ஒருவர் இராம. அரங்கண்ணல். அவர் தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்தார்.
‘வயதானவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்ற பொருள்பட ஈ.வெ.ரா பல மேடைகளில் முழங்கியிருந்தார். அந்தப் பேச்சுக்களைத் தொகுத்து ஈ.வெ.ரா-வுக்குத் தெரியாமல் இந்த (அ)சந்தர்ப்பத்தில் விடுதலை இதழில் அச்சேற்றிவிட்டார் அரங்கண்ணல். அவர் விடுதலை இதழில் துணையாசிரியராக இருந்தார்.
விடுதலை இதழின் உரிமையாளர் ஈ.வெ.ரா. அதில் வெளிவந்ததோ ஈ.வெ.ராவின் பேச்சு. தன்னுடைய கையால் தன் கண்ணைக் குத்துகிறார்களே என்ற கோபம் ஈ.வெ.ராவுக்கு; அரங்கண்ணல் வெளியேற்றப்பட்டார்.
பகுத்தறிவாளர்களின் பயணத்தில் இது இன்னொரு மைல்கல்.
நாம் 1927-க்குப் போகலாம்.
இந்தியாவுக்கான சுயாட்சியை ஆரய்வதற்காக, ஆங்கில அரசு 1927 இல் ஒரு ஆய்வுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. சர். ஜான் சைமன் என்ற வழக்கறிஞர் இந்தக் குழுவின் தலைவர்.
சைமன் கமிஷனில் ஒரு இந்தியர் கூட உறுப்பினராக இல்லை. ஆகவே இந்தக் கமிஷனுக்கு இந்தியாவெங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சைமன் சென்ற நகரங்களில் எல்லாம் கடையடைப்பு நடந்தது. ’சைமனே திரும்பிப் போ’ என்ற முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொலித்தது.
பம்பாயில் நடந்த வரவேற்பு விழாவில் ஆங்கில அரசிடம் சர் பட்டம் பெற்றவர்கள்கூட கலந்துகொள்ளவில்லை.
பஞ்சாபைச் சேர்ந்த லாகூரில், சைமன் கமிஷனுக்கு எதிராக பிரம்மாண்டமான ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு லாலா லஜபதி ராய் தலைமை வகித்தார். ஊர்வலத்தின் மீது போலீஸார் கடுமையான தடியடி நடத்தினார். தடியடியில் காயமடைந்த லஜபதி ராய் இரண்டு வாரத்தில் மரணமடைந்தார்.
ஜவகர்லால் நேரு கோவிந்த வல்லப பந்த் கலந்துகொண்ட கூட்டம் ஐக்கிய மாகாணத்தில் லக்னோவில் நடந்தது. கூட்டத்தில் குதிரைப் போலீசார் தாக்குதல் நடத்தினர்; பந்துக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.
போலீஸ் தடியடியில் காயமடைந்த தொண்டர்கள் ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தபோது நேருவை அணுகிய ஒரு இளைஞன் தன்னிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும் அதைக் கொடுக்கிறேன் என்றும் கூறினான். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு விசாரித்ததில் அந்த இளைஞன் போலீஸ் அனுப்பிய கையாள் என்பது தெரியவந்தது.
நாடெங்கும் தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் கைதாயினர்.
சென்னை நகரத்தில் முழுக் கடையடைப்பு, டிராம்கள் ஓடவில்லை. கல்லூரி மாணவர்கள் திரண்டு உயர்நீதி மன்றம் அருகே கூடினர்; உயர்நீதி மன்றத்தை மூடச்சொல்லி குரல் எழுப்பினார்கள். நீதிமன்ற வளாகத்தில் இருந்த கார் ஒன்று தீயிடப்பட்டது.
அந்தப் பகுதியில் ராணுவத்தினர் குவிந்தனர். ஒரு பக்கம் துப்பாக்கிகளின் அணி; எதிரே கொந்தளிப்பான மனநிலையில் மாணவர்கள். ‘சைமனே திரும்பிப் போ’ என்ற கோஷம் காதைப் பிளந்தது.
தடியடி நடத்தியும் கூட்டம் கலையவில்லை. காங்கிரஸ் தலைவர்டி. பிரகாசம் துப்பாக்கிகளுக்கு நேரே நின்றுகொண்டு சட்டையை திறந்து மார்பைக் காட்டி ‘என்னைச் சுடுங்கள்’ என்று சவால்விட்டார்.
அன்று மாலை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் சத்திய மூர்த்தி, புலுசு சாம்பமூர்த்தி ஆகியோர் பேசவிருந்தனர். மேடையில் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கேஸ் விளக்கை போலீசார் உடைத்துவிட்டனர். கூட்டத்தில் புகுந்த குதிரைப் போலீசார் மக்களைக் கலைத்து விரட்டினர்.
காவல் துறை உதவி ஆணையராக இருந்த அனந்த நாராயணன் குதிரை மேல் இருந்தார். இவர் புலுசு சாம்பமூர்த்தியைத் தமது பூட்ஸ் காலால் எட்டி உதைக்க முயன்றார். பக்கத்திலிருந்த துர்கா பாய் என்ற இளம்பெண் அந்த போலிஸ் அதிகாரியின் காலைப் பிடித்து வேகமாக இழுத்தார் கீழே விழுந்த அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
சென்னை மாகாண சட்டமன்றத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் டாக்டர். பி. சுப்பராயன் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அவருடைய அமைச்சரவை சகாக்களே தீர்மானத்தை ஆதரித்தனர்.
சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தவர் சர்.ஏ. ராமசாமி முதலியார். இவர் நீதிக்கட்சியின் தலைவர். சைமன் கமிஷனுக்கு ராமசாமி முதலியார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்களும் நீதிக்கட்சியினரும் மட்டுமே கலந்துகொண்டனர். பெரும்பான்மையான மாநகராட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
பின்னர் மாநகராட்சி உறுப்பினர்களிடம் ராமசாமி முதலியார் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சைமன் கமிஷன் இந்தியா வந்த வேளையில் தேசிய எழுச்சி எப்படி இருந்தது என்பதைப் பார்த்தோம். இந்திய விடுதலைப் போரில் சுயமரியாதைக்காரர்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போமா?
செங்கல்பட்டு நகரில் 1929 -இல் கூட்டிய மாகாண சுயமரியாதை மாநாட்டில் சைமன் கமிஷனை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் பிராமணரல்லாதாரின் சுயமரியாதைக்கு ஏற்றது என்றும் சொல்லப்பட்டது.
இதோ அந்தத் தீர்மானம்:
இந்தியாவிலுள்ள பல வகுப்பாரின் உரிமைகளும் அபிப்ராயங்களும் ஒன்றுக்கொன்று மாறாக இருப்பதாலும் இந்திய அரசியல் விசாரணைக் கமிஷனில் இந்தப் பலவகுப்புகளுக்கும் பிரதிநிதிகள் நியமிப்பது சாத்யமல்லவென்று இந்தியா மந்திரி பார்லிமெண்டில் கூறியிருப்பதாலும் இந்தியர்களில் எல்லா சமூகத்தாருக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒருவரைச் சேர்க்க முடியாத நிலமையில் நமது தேசம் இருக்கிறபடியாலும் இந்திய அங்கத்தினர் நியமிக்கப்படவில்லையென்னும் காரணத்தைக்கொண்டு கமிஷனை பகிஷ்கரிப்பது நியாயம் அல்ல வென்று இம்மாநாடு கருதுகின்றது.
பிரிட்டிஷ் பார்லிமெண்டார் இந்திய தேசத்தை ஆண்டு வருகிற உரிமையையும் இந்திய அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறதையும் இந்த தேசத்திலுள்ள எல்லா ராஜ்யக் கட்சியும் ஏற்று அடங்கி ஒத்துழைத்து வருகிற இக்காலத்தில் அதே பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் சொல்வது இந்தியாவில் சுயமரியாதைக்கு விரோதமென்று சொல்லுதல் பொருத்தமுள்ளதல்ல வென்று இம்மாநாடு கருதுகின்றது.
ஊரே திரண்டு ஓட ஓட விரட்டிய சைமன் கமிஷனுக்கு பந்தல் அமைத்து கொடுத்தவர்கள் பகுத்தறிவுக்காரர்கள்.
சைமன் கமிஷனுக்கு வரவேற்பு கொடுத்தது பற்றி எழுதி அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார் நீதிக்கட்சியின் தலைவரான பி. டி, ராஜன்.
“டாக்டர் சுப்பராயன், கமிஷனை முதல் அமைச்சர் என்ற முறையில் வரவேற்கிறார். மேலும் கமிஷனின் தலைவரான சர். ஜான் சைமனும் அவரும் ஆக்ஸ்ஃபோர்டில் வாதாம் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதாம்.”
– பக். 52 / நீதிக்கட்சி நினைவுகள் / சர். பி. டி. ராஜன்
திராவிடர் இயக்கத்தின் மற்றொரு தலைவரான இரா. நெடுஞ்செழியன் எழுதுகிறார் –
“சென்னை ஆளுனர் கோஷனிடத்திலும், டாக்டர். சுப்பராயன் அமைச்சரவையிடத்திலும் நீதிக்கட்சிக்கு நல்லிணக்க உறவு ஏற்பட்டதன் விளைவாக சைமன் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது என்ற முடிவுக்கு நீதிக்கட்சி வந்தது.”
– பக் 276 / திராவிட இயக்க வரலாறு / இரா. நெடுஞ்செழியன்.
நீதிக்கட்சி சைமன் கமிஷனை வரவேற்றது என்பதைப் பார்த்தோம். ஈ.வெ.ரா என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறது.
அதற்கும் நெடுஞ்செழியன் பதில் தருகிறார்.
“சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது அதனை வரவேற்க வேண்டும் என்று பெரியார் முதல் குரல் எழுப்பினார்.”
– பக். 471 / தி. இ. வ / இரா. நெடுஞ்செழியன்.
அடிமைத்தனம் அகலக்கூடாது என்பதில் ஈ.வெ.ராவும் அவருடைய கூட்டாளிகளும் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.
இன்று இந்தியா சுதந்திர நாடாக இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் கண்ணீரோடு கதறியதற்கும் பூமியிலே புரண்டதற்கும் பலனில்லை; வெள்ளைக்காரன் வெளியேறிவிட்டான்.
மாறுபட்ட சூழ்நிலையில் இன்று மதிப்பு தேவைப்படுகிறது. விடுதலைப் போராட்டத்திற்கு வினையாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்ள மனது இல்லை. ஆகவே மாற்றிப் பேசுகிறார்கள்.
“நானோ வீரமணியோ காங்கிரஸ்காரர்களாக இல்லாமல் இருக்கலாம். பிறந்தபொழுதே காங்கிரஸ்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாரால் வளர்க்கப்பட்டவர்கள் என்றால் காங்கிரஸ் இயக்கத்தைத் தமிழ்நாட்டிலே கட்டிக்காத்த தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்கிறபோது எங்களுக்கும் இந்த நாட்டின் விடுதலை அத்தியாயத்தில் சிறப்பான அம்சமுண்டு. நாங்கள் அன்றைக்குப் பிறக்காதது எங்கள் குற்றமா?” என்று குறைபட்டுக்கொண்டார் ஒருவர். அவர் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வரான மு. கருணாநிதி.
அவருடைய பேச்சு (29. 04. 1986) அன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. அந்தப் பேச்சில் உள்ள விஷயத்தை ஆராயலாமா?
- 1924 இல் பிறந்தவர் மு. கருணாநிதி.
- சென்னை நகரில் கொடுங்கோலன் நீல் சிலையகற்றும் போராட்டம் நடைபெற்றது 1927இல்.
- வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடந்தது 1930-இல்
- திருப்பூரில் கொடிகாத்த குமரன் உயிர்விட்டது 1932-இல்.
- மகாத்மா காந்தியின் ஆணைப்படி தனிநபர் சத்தியாகிரத்தில் வீரர்கள் கைதானது 1940 இல்.
- புரட்சிவெடித்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்று நாடு ஒரே குரலில் முழக்கமிட்டது 1942 இல்.
- தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கியது 1943-இல்.
- மகாத்மா காந்தி பயணம் செய்த ரயிலை மதுரைக்கருகே அம்பாத்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் மறித்தது 1946-இல்.
ஒவ்வொரு வரலாற்று நிகழ்ச்சியையும் ஆராய்ந்து முதல்வரால் அதில் பங்கெடுத்திருக்க முடியுமா என்ற கேள்விகளுக்கான பதில்களை வாசகர்கள் யோசிக்கவேண்டும்.
மேற்கோள் மேடை :
திராவிட இயக்க உணர்வுக்கும் தோற்றத்திற்கும் ஆங்கில ஆட்சியே மறைமுகக் காரணமென்று கூறலாம். ஆட்சியில் நிலைத்திடவேண்டும் என்பதற்காக மக்களிடையே அவர்கள் கைக்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி, அவர்களின் ‘பிரித்து ஆளுதல்’ என்னும் கொள்கை முதல் காரணமாயிற்று.
– பக். 52 / சுயமரியாதை இயக்கம் / மங்கள முருகேசன்