ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!
சோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?
வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….
சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.
வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?
சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்
வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?
வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?
சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…
வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?
சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.
வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.
-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்
விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.
‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.
கி. வீரமணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். பத்திரிகைப் பேட்டியில் அவர் குறிப்பிடும் வார்த்தைகள் நிச்சயமாக அந்த இயக்கத்தின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்
திராவிடர் கழகத்தின் நிறுவனரான ஈ. வெ. ரா, இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது.
– குடி அரசு. ஆக. 23, 1931.
ஈ. வெ. ரா இஸ்லாத்தை பகுத்தறிவு மார்கமென்கிறார், அவரது சீடரோ இஸ்லாமியக் கடவுளும் தேவையில்லை என்கிறார்.
இதில் எது கொள்கை? எது சுயமரியாதை? எது பகுத்தறிவு?
இது விஷயமாக நடந்த கொள்கைக்கூத்தின் முழு விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.
இப்போது சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப கட்டமான 1926-க்குப் போகலாம்.
1926 நவம்பர் 8 ஆம் நாளில் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் கைப்பற்றினர். நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பனகல் அரசர் மட்டும் வெற்றிபெற்றார். மற்ற தலைவர்களான திரு. கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர். சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.
சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பாக எஸ். சீனிவாச ஐய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தியும் நடத்திய பிரசாரத்தின் விளைவு இது.
தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பெற்றுவிட முடியும் என்ற மிதப்பில் இருந்தனர் நீதிக்கட்சியினர். சுயராஜ்ஜியக் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தனர். அவர்களுடைய பிரசாரம் மக்களைக் கவரும் விதத்தில் இருந்தது. கோகலே மண்டபம் போன்ற கட்டடங்களைவிட்டு வெளியேறிய அவர்கள் கடற்கரையில் பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தினர். தெரு முனைகளில் கூட்டம் போட்டனர். நீதிக்கட்சியினர் வழக்கம்போல் சரிகைத் தலைப்பாகையோடு ஆளில்லாத மண்டபங்களை அலங்கரித்தனர்.
இந்தத் தேர்தலில் நீதிக்கட்சிக்கு ஈ. வெ. ரா கொடுத்த ஆதரவால் எந்தப் பயனும் இல்லை.
எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர். பி. சுப்பராயன் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. டாக்டர். பி. சுப்பராயன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார்.
1926, டிசம்பரில் பதவியேற்ற சுப்பராயன் அமைச்சரவை 1930 அக்டோபர் வரை நீடித்தது.
டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியாரும் எம். ஆர். சேதுரத்தினம் ஐயரும் அமைச்சர்களாக இருந்தனர். இந்த அமைச்சரவையின் காலத்தில்தான் அரசு வேலைவாய்ப்பில் வகுப்புரிமைக்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது. இது நீதிக்கட்சியின் ஆட்சி அல்ல என்பதையும், அதில் ஒரு பிராமணர் அமைச்சராக இருந்தார் என்பதையும் வாசகர்கள் குறித்துக் கொள்ளவேண்டும்.
தேர்தல் பிரசாரத்தால் எதுவும் தேறவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார் ஈ. வெ. ரா; அவரது கவனம் சுயமரியாதைத் திருமணங்களின் பக்கம் திரும்பியது.
இந்த ஆரம்பகாலத் திருமணங்களைபற்றி அவர்கள் தரப்பில் சொல்வதைக் கேட்போமா?
1928-ம் வருடத்தில் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா சுக்கல நத்தம் கிராமத்தில் நடந்த திருமணங்களைப் பற்றி எழுதுகிறார் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி.
காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு பெரியார் காங்கிரசைவிட்டு விலகி வந்து காங்கிரஸ் எப்படி ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கிறது என்று பிரசாரம் செய்தபோது சுப்பா ரெட்டியார் காங்கிரஸ் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்….
சுக்கல நத்தத்தைச் சுற்றியுள்ள 116 கிராமங்களில் ‘குடி அரசு’ பத்திரிகையை வரவழைக்கச் செய்து பாமர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் சுப்பா ரெட்டியார்….
சுப்பா ரெட்டியார் பக்கத்து வீட்டுப் பெரியவர்களான மு. அழகர்சாமி ரெட்டியாரையும். மு.சி. சீனிவாச ரெட்டியாரையும் தனித்தனியாக அனுகி, ‘என் பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர விருப்பமா’ என்று கேட்டார். இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு ‘என் பெண்ணைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள்….. அப்பாக்கள் இப்படி சுப்பா ரெட்டியார் வீட்டில் சம்பந்தம் கொள்ள போட்டி போட்டபோது அவர்களது பெண்களோ வேறுவிதமாக அதிசயக்கத் தக்க வகையில் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அழகர்சாமி ரெட்டியாரின் மகள் நாகம்மாளும், ஸ்ரீ நிவாச ரெட்டியாரின் புதல்வி ரத்தினத் தாயம்மாளும் இளம்வயது முதல் இணைபிரியாத தோழிகள்!
அவர்கள் இருவரும் ‘மணந்தால் ரெட்டியாரின் மகன் அரங்கசாமியையே இரண்டுபேருமே திருமணம் செய்து கொள்வது. இல்லாவிட்டால் இரண்டு பேருமே கடைசி வரையில் திருமணமே செய்துகொள்வதில்லை’ என்று சூளுரை செய்துவிட்டார்கள்
பெற்றோருக்குத் தங்களது பெண்ணின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஏற்பாட்டை மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டுமே! மனம் கலங்கி நின்றார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அரங்கசாமியோ ‘குடி அரசு படித்து குடி அரசின் பெண்களாகவே சொல்லப்படும் இந்த இரு பெண்களையுமே திருமணம் செய்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். பெண்ணைப் பெற்றவர்கள் மண்ணுலகம் முழுவதுமே தங்கள் கைவசப்பட்டுப் போனதுபோல மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள்.
தந்தைப் பெரியார் அவர்களுக்கு விவரங்களை எழுதி திருமண நிகழ்ச்சிக்குத் தேதி கேட்டார்கள். 28-05-1928 திருமணத்தை நடத்திவைக்க அய்யா மனமுவந்து ஒப்புதல் அளித்தார்.
– பக் 106, 107 : புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு.
சுப்பா ரெட்டியாரின் மகனுக்கு மட்டுமல்ல, அவருடைய உறவினர் ஒருவருடைய மகனுக்கும் அதே நாளில் ஈ. வெ. ரா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திலும் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள்தான்.
சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.
ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய கழக வீரர்கள் அறிவதில்லை.
அவர்கள் ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.
திருநெல்வெலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஈ. வெ. ரா வொடு பாரதியாரை ஒப்பீடு செய்திருக்கிறார். (16. 12. 2007)
‘கவிதையில் பெண்ணியத்தைத் தூக்கிப்பிடித்த பாரதி கூட தனது கட்டுரையில் தடம்புரண்டு இருக்கிறார். பாரதியை விஞ்சும் வகையில் உண்மையான பெண்ணியத்தை அதிகம் பேசியவர் பெரியார்’ என்கிறார் அவர்.
அவருக்கு அரசியல் அறிவும் அனுபவமும் குறைவு என்பதால் வார்த்தைகள் அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றன. இரட்டை மணப்பெண்கள் விவகாரத்தை இவர் இருட்டடிப்பு செய்துவிட்டார்.
பதவி தரும் பாதுகாப்பு இப்படியெல்லாம் பேசவைத்திருக்கிறது. பாரதியார் மீதே பழி சொல்லத் துணிந்துவிட்டார். தமிழ் மக்கள் எண்ணத்திலும் எழுச்சியிலும் பாரதியின் பாடல்கள் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. ஆனால் அதைத் தடை செய்த பிரிட்டீஷ் ஆட்சி காணாமல் போய்விட்டது. இதை அவரும் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் அறியவேண்டும்.
மேற்கோள் மேடை:
‘சுயமரியாதை இயக்கம்’ என ஓரியக்கம் சென்ற ஆண்டில் நம் தென்னாட்டில் தோன்றியது. அவ்வியக்கத்தைச் சார்ந்த சிலர் பழையனவற்றைப் பழித்தலைப் பேரறமாக மேற்கொண்டனர். திருக்குறளோ பழையனவற்றில் எல்லாம் பழையதாக அவர்கள் எதிர் நின்றது.
– தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் / 05. 03. 1930