சுயமரியாதையின் ரிவர்ஸ் கியர்
திருவாரூரில் நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாவட்ட மாநாட்டைத் திருவாரூரில் நடத்த வேண்டுமென்று சம்பத் விரும்பினார். வேறுவழியில்லாமல் நானும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தலானேன்.
இரண்டு நாள் மாநாடாக நடந்தது. முதல் நாள் சமூக சீர்திருத்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தந்தை பெரியார், திருவாரூர் தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் பங்கேற்றார்கள். அப்போது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (ஸ்ரீதரின் படம்) வெளிவந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் கண்ணதாசன் ‘முத்தான முத்தல்லவோ’ என்று குழந்தையின் பெருமையை சிலாகித்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அதில் ‘கடவுள் தந்த பொருளல்லவோ’ என்று ஒரு வரி. கடவுளின் அருளினால்தான் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது என்கிற பொருளில் எழுதப்பட்ட வரி அது.
திருவாரூர் தங்கராசு பேசும்போது, ‘கடவுள் தந்த பொருள் என்று குழந்தையை வர்ணித்திருப்பது மூடநம்பிக்கையின் அடையாளம்,’ என்று பேசினார். அடுத்துப் பேசின கண்ணதாசன் ‘நான் எழுதியது சரிதான், கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும். பெரியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதைத் தங்கராசு ஏனோ மறந்துவிட்டுப் பேசுகிறார்’ என்று ஆணித்தரமாக வாதிட்டார். கவிஞர் என்ன இப்படிப் பேசுகிறாரே என்று கூட்டத்தினர் திகைத்தார்கள்.
– பக். 61, 62 திரும்பிப் பார்க்கிறேன் / பி. சி. கணேசன்
கண்ணதாசனின் பதில் கச்சிதமானது.
கல் சூடாக இருக்கும்போதுதான் தோசையைப் போடவேண்டும். கழகத்து மேடைகளில் கடவுளைப் பற்றிப் பேசும்போதே அதற்குப் பதிலடி கொடுத்திருக்கவேண்டும்; கொடுக்காததன் விளைவைத் தமிழகம் எண்பது ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
நாம், ஈ.வெ.ரா. காங்கிரசைவிட்டு வெளியேறிய காலத்திற்குப் போகலாம். ‘குடி அரசு’ என்ற பெயரில் ஒரு வார ஏட்டை ஈரோட்டில் தொடங்கினார் ஈ.வெ.ரா. 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாளில் இது வெளிவந்தது.
ஈ. வெ. ராவின் ‘குடி அரசு’ இதழைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா?
அவர், ஞானியாரடிகள்.
சைவத் திருமுறைகளை ஓதி ஓதி உணர்ந்த உத்தமர் ஞானியாரடிகள். இவர் திருக்கோவிலூர் ஆதினத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்; தவ நெறியால் பண்பட்ட உடலில் எப்போதும் ருத்திராட்ச மாலைகளை அணிந்தவர்.
சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நிகரற்ற புலமை உடைய ஞானியாரடிகளின் பிரசங்கங்கள் மணிக்கணக்காக மக்களைக் கட்டிப்போடும்; ‘காமாட்சி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி திருக்கல்யாணம்’ முதலிய உபன்யாசங்கள் புகழ் பெற்றவை.
தம்மிடம் பாடம் படித்தோருக்கு இலக்கிய நயங்கள் இலக்கண நுட்பங்கள் தவிர சமயத்தின் சூட்சுமங்களையும் விளக்கி கூறுவார் இவர்.
ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறு நீ பேசு
என்ற திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய சந்நிதி முறைப் பாடலைப் பாடும்போது ஞானியாரடிகள் கண்ணீர் உகுத்தபடியே மௌனமாக இருந்து விடுவார்கள். பிறகு சுயநினைவு வந்துதான் சொற்பொழிவு தொடரும்.
சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்ற பெயருடைய ஞானியாரடிகள்தான் ஈ.வெ.ராவின் ‘குடி அரசு’ இதழைத் துவக்கி வைத்தார்.
“இப்பத்திரிகையைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அஃதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்,” என்று ஈ.வெ.ரா கேட்டுக் கொண்டார்.
குடி அரசின் முதல் இதழில் வர்ணாசிரமப் பிரிவுகளை ஆதரித்து எஸ். ராமநாதன் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வெளிவந்தன. ராமநாதனின் கட்டுரையில்
முக்தி நெறிக்கும் உடனுண்ணல் முதலான இயற்கைத் தொழில்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது
என்றும்,
பழைய பிராமண தர்மமாகிய தியாக புத்தியும், ஆண்மை அறிவும், சத்திரிய தர்மமாகிய வீரமும், வைசிய தர்மமாகிய விருந்தோம்பலும், சூத்திர தர்மமாகிய ஊழியமும் திருப்தி குணமும் மீண்டும் நம் நாட்டில் உயிர்ப்பிக்கச் செய்தல் காண்பற்கரிய கனவேயாகும். எல்லாத் தேசத்திற்கும் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற இத் தர்மங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதில் யானும் ஒருப்படுகிறேன்.
என்றும் எழுதினார்.
சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை தோன்றிய காலத்தில் வெளியிடப்பட்ட கருத்து இது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் ஈ.வெ.ராவின் வர்ணாஸ்ரம எதிர்ப்பு; இன்னொரு புறம் ராமநாதனின் வர்ணாஸ்ரம ஆதரவு; குடிஅரசின் கொள்கை எது என்ற அறிய விரும்புவோரின் தலையில் முடி மிச்சமிருக்காது.
குடிஅரசின் மேலட்டையில் ‘சாதிகளில்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் அதற்கு அருகிலேயே ஆசிரியர் பெயர் இருந்தது. ஆசிரியர்கள் இருவர்: ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மற்றும் வ.மு. தங்கப் பெருமாள் பிள்ளை. 02. 05. 1925 முதல் 25. 12. 1927 வரை ஈ. வெ. ரா வின் பெயர் ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரோடுதான் வெளிவந்தது.
குடி அரசில் காந்தி, பாரத மாதா படங்களும், மாதா கோவில், மசூதி, கோவில் கோபுரம், முனிவரின் தவக்கோலம் ஆகிய படங்களும் இருந்தன.
‘வர்ணப் பிரிவுகளை மாற்றிக் கொள்ளலாம்’ என்றும் வர்ணாசிரமம் என்பது தொழில் பிரிவுதான், பிறவியால் வருவதல்ல என்றும் கூறியவர் பாரதியார். இதற்கு ஆதரவாக பகவத் கீதையை அவர் மேற்கோளாகக் காட்டினார்.
பாரதியாரின் புரட்சிகரமான எழுத்துகளோடு ராமநாதனின் சொற்பொழிவை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாரதியாரின் கருத்துகள் வெளியான பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதன் இவ்வாறு பேசுகிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
காஞ்சிபுரம் மாநாட்டுப் பந்தலைவிட்டு வெளியேறிய ஈ.வெ.ரா உடனடியாக காங்கிரசைவிட்டு விலகவில்லை; தன்னுடைய கருத்துகளை பரப்புவதற்காக அங்கங்கே ’சுயமரியாதைச்’ சங்கத்தின் கிளைகளை ஏற்படுத்தினார்.
’சுயமரியாதை’ என்பது சம்ஸ்க்ருத சொல் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
’காங்கிரஸ் குழுவின் பதினைந்தாவது விதிப்படி ஸ்ரீமான். நாயக்கர் கமிட்டி அங்கத்தினராக இருக்கமுடியாததால் அவர் கமிட்டியிலிருந்து விலகினதாகக் கருதப்படுகிறார். ஆகையால் அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கபடுவார்’ என்று தமிழ்மாகாணத் காங்கிரஸ் குழுக்கூட்டம் 29.08.1926 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
1926, 27 ஆகிய ஆண்டுகளில் ஈ.வெ.ரா நீதிக்கட்சிகாரர்களோடு நெருக்கமான உறவு கண்டார். 1929 இல் சுயமரியாதை சங்க மாநாடு நடைபெற்றபோது நீதிக்கட்சியாளர் பெருமளவில் பங்குபெற்றனர்; காங்கிரஸ்காரர்கள் பங்கேற்கவில்லை.
வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ ஏடு சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்ப்பாக விளங்கியது.
“ரத்தம் சிந்தியாவது, தேச பக்தர்கள் புற்றீசல் போல உயிர்துறந்தாவது சுயமரியாதைப் பிரசாரத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்றும் இரண்டு வருடங்களாக எச்சரித்தேன் நாயக்கர் சீர்படவில்லை,”
என்றும் வரதராஜுலு எழுதினார்.
1926இல் தொடங்கப் பெற்ற சுயமரியாதை இயக்கத்தைப் பதிவு செய்ய முடியவில்லை.
ஈ.வெ.ரா-வோடு கருத்து வேற்றுமைகொண்டு விலகி இருந்தவர்களான டபிள்யு.மி. சவுந்தரபாண்டியன், வி.வி. ராமசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், ஜெ.எஸ். கண்ணப்பர், சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலம், எஸ். ராமநாதன், வை.சு. சண்முகம் ஆகியவர்கள் ‘சுயமரியாதை சங்கம்’ என்ற பெயரில் 1945 இல் சட்ட பூர்வமாகப் பதிவு செய்துவிட்டார்கள்.
சுயமரியாதைத் திருமணங்கள், சுயமரியாதைப் பிறந்தநாள் விழா, சுயமரியாதை காதுகுத்துதல் விழா, சுயமரியாதைக் கருமாதி நிகழ்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் குடி அரசில் வெளியிடப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, சமூகத்தில் இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் இன்றைய நிலைமை பற்றி அறிந்துகொள்ள ஒரு ‘சாம்பிள்’ பார்ப்போமா?
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பூந்தோட்டம்.
ஐயர்களையும், புரோகிதர்களையும் அகற்றுவதற்காக உருவான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை விளக்குவதற்காக ஈ.வெ.ரா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் இந்த ஊரில் நடத்தப்பட்டது.
கூட்டத்தின் பலனாக, கிராமம் சுயமரியாதைக்கு மாறியது. கிராமக் கோவிலில் இருந்த கடவுள் சிலைகள் அகற்றப்பட்டன. கருமாதிகளுக்குப் பதிலாக படத்திறப்பு விழா நடத்தப்பட்டது. திருமணங்களில் ஐயரோ, அக்கினியோ சேர்க்கப்படவில்லை.
பஜனை மடம் கிராம முன்னேற்றக் கழகமாக மாறியது. கோவில் நிலத்தின் வருமானம் ஆக்கப்பணிகளுக்குச் செலவிடப்பட்டது.
இப்படியே இருந்த ஊரில் ஒரு தலைமுறைக்குப் பிறகு மாற்றத்தைக் கொண்டுவந்தவர் பிள்ளையார். ஊரிலிருந்த குளம் ஆழப்படுத்தப்பட்டபோது சிலையாக வெளிப்பட்டார் இவர். அந்தச் சிலையை எடுத்து பூஜை செய்ய முயன்றனர் சில இளைஞர்கள். ஆனால் அந்தச் சிலை காணாமல் போய்விட்டது. இதற்கிடையே சில ஐயனார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இப்போது ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோடும் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். முருகன் கோவில் ஒன்றும் உருவாகி உள்ளது.
ஐயர் நுழைய முடியாத ஊரில் கணபதி ஹோமம் நடக்கிறது.
கணேசாய நம;
ஏக தந்தாய நம:என்ற மந்திரங்கள் காதில் விழுகின்றன.
பகுத்தறிவு படுத்துவிட்டது.
இதுதான் சுயமரியாதையின் ரிவர்ஸ் கியர்.
மேற்கோள் மேடை:
ஒரு சமயம் தி.க. காரன்கிட்ட நான் சொன்னேன்.. கழுதை வந்து கடவுளைக் கும்பிடுவதில்லை, கூப்பிடுவதும் இல்லை. அப்ப அதுதான் அருமையான சிந்தனையாளன் இல்லையா? கனவும் கற்பனையும் மறைஞ்சு போச்சுன்னா கழுதையா நிக்கணும் நீ. மனுஷ சமுதாயம் இருக்கிற வரைக்கும் அற்புதமான கற்பனையும் கனவும் இருக்கும்
— (மார்க்சியவாதியான) எஸ். என். நாகராஜன் / காலச்சுவடு நேர்காணல்கள்.