யானை பிழைத்த வேல்.
வெள்ளையர் ஆட்சி பற்றி மக்களிடையே நிலவி வந்த மயக்கத்தை மாற்றி விடுதலை ஆர்வத்தையும், தியாக உணர்ச்சியையும் விளைவித்து மக்களின் மனதைப் பண்படுத்தியது 1921 – 31க்குமிடையே நடந்த கிராமப் பிரசாரமே.
பத்திரிக்கைகள் மூலம் இந்தப் பணியை செய்ய முடியாத காலம் அது.
4000 ஜனத்தொகை உள்ள ஊரில் யாராவது ஒரு பணக்காரர் வீட்டில் ஏதோவொரு தினசரிப் பத்திரிக்கை வரும். இந்த நிலையில் ஒவ்வொரு ஊரிலும் பொதுவிஷயங்களைத் தெரிந்து கொள்பவர்கள் பத்து பேர்கள் கூட இருக்க மாட்டார்கள்.
தமிழ் மாநிலத்திலுள்ள சுமார் 10 ஆயிரம் கிராமங்களில் 7 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பத்திரிக்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருந்தார்கள். சுதேசமித்திரன் என்ற உன்னதமானப் பத்திரிக்கையைப் படிப்பவர் தொகை ஏழாயிரம்கூட இல்லை.
ஆகவே, வாய்மொழிச் சொற்பொழிவுகள் மூலம்தான் சுதந்திர உணர்வுகளை ஊட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய முடியும்.
நான், டி. எஸ். சொக்கலிங்கம், கோமதி சங்கர தீட்சிதர், அம்பாசமுத்திரத்தில் அச்சகம் வைத்திருந்த சிதம்பரம் பிள்ளை ஆகியோர் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக, பிராமணர் வீடுகளும், பிள்ளைமார் வீடுகளும் உள்ள அத்தாழ நல்லூர் என்ற ஊருக்குப் போயிருந்தோம்…
சாப்பாட்டுக்கு என்ன வழி?? பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பிடப் போனால் என்னையும், சொக்கலிங்கத்தையும் (பிள்ளை ஜாதி) ஒரே பந்தியில் வைத்துச் சாப்பாடு போடுவார்களா என்று சந்தேகம். பிராமணர் அல்லாதார் வீட்டில் போய்ச் சாப்பிட்டால் “இவன் யாரப்பா ஒரு சாதிகெட்ட பாப்பான்” என்று பிராமணர் அல்லாதவரே சொல்வார்கள். ஆகையால் வெளியூருக்குப் போகும்போது கேப்பை மாவு அல்லது சத்துமாவு, தண்ணீர் விடாமல், உப்பு, புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து இடித்த ஒரு கலவைத்துவையல் ஒரு பொட்டலம், தயிர் வாங்க ஒரு கிண்ணம் இவற்றைப் பையில் போட்டுக்கொண்டுதான் போவோம்.
– ஏ. என். சிவராமன் / தினமணி சுதந்திரப் பொன்விழா மலர்.
விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த பத்திரிக்கையாளருமான ஏ. என். சிவராமனின் அனுபவக் குறிப்பு இது. சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் அந்த மாவட்டங்களில் உள்ள நிலையைத் தெரிவிப்பதற்காகவே இதைக் கொடுத்திருக்கிறேன்.
தேசியவாதியான சிவராமனின் அனுபவத்தைப் பார்த்தோம். பொது உடைமைக் கட்சியின் தலைவர் ஒருவர் சொல்கிறார்.. கவர்னர் மாளிகையில் விருந்துக்காகப் போகும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிச்செம்பில் பாலை எடுத்துக்கொண்டு போவார்கள். அங்குதரப்படும் உணவைத் தொடாமல் இந்தப் பாலைத்தான் குடிப்பார்கள் என்கிறார் அவர்.
அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்துண்ணும் வழக்கம் அப்போது சமூகத்தில் இல்லை. புரட்சிகரமாகவும், பரீட்ச்சார்த்தமாகவும் சில இடங்களில் மட்டும் ஒன்றாக உண்ணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட சீர்திருத்தவாதிகளில் பிராமணர்களும் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்போடு சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையை அணுகினால் நியாயமான விடைகள் கிடைக்கும்.
சராசரி மனிதர்களைவிட்டு விடுவோம். உயர்ந்த உள்ளத்தோடு நாட்டுக்காக இணையற்ற தியாகம் செய்த வ. உ. சிதம்பரம் பிள்ளை கூட சிறையிலிருந்த நேரத்தில் பிராமண சமையல்காரர் வேண்டும் என விரும்பியிருக்கிறார். இது அவருடைய சுய சரிதையில் பதிவாகி இருக்கிறது.
இனி ஐயருக்கு ஆதரவான விஷயங்களைப் பார்ப்போம். முதலில் ரா. அ. பத்மநாபன் எழுதிய “வ. வே. சு. ஐயர்.”
குருகுலம் தோன்றியது 1922ல். ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்த அரசியல், சமூகச் சூழ்நிலையில், எல்லாப் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிலும் உணவு ஏற்பாடு பிராமணருக்குத் தனியாகவும், மற்றவர்களுக்கு தனியாகவுமே இருந்து வந்தது. அரசாங்கக் கல்விக் கூடங்களிலும் சரி, தனியார் கல்விக்கூடங்களிலும் சரி, எங்கும் இதே நிலை. சில தேசிய ஸ்தாபனங்களில் மட்டும் ஜாதிபேதமற்ற சமபந்தி உணவுமுறை அமல்செய்ய முயற்சி நடந்தது. – பக் 235.
எப்படி ஐயருடைய நிலையைக் காங்கிரசிலிருந்த எல்லாப் பிராமணர்களும் ஆதரிக்க வில்லையோ, அதுபோல டாக்டர் நாயுடுவின் நிலையையும் காங்கிரசிலிருந்த எல்லா பிராமணரல்லாதாரும் ஆதரித்ததாகச் சொல்ல முடியாது. வக்கீல் எம். பக்தவத்சலம் நீண்டதொரு அறிக்கையில், டாக்டர் நாயுடு “உண்மையைத் திரித்துக்கூறி பிராமணரல்லாதாரைத் தவறான வழியில் இழுத்துச் செல்ல முயலுகிறார்” என்று குற்றம் சாட்டினார். – பக். 242, 243
ஆரம்ப முதலாகவே குருகுல விஷயத்தில் நடுநிலைமை வகித்து கிளர்ச்சியின் இரு கட்சிச் செய்திகளையும் பட்சபாதமின்றி வெளியிட்டு டாக்டர் நாயுடுவினால் பாராட்டப் பெற்றிருந்தது. “ஹிந்து” – பக். 244
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான யாகுப் ஹுஸைன் டாக்டர் நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குருகுலத்திற்கு 5000 ரூபாய் அளித்தது தேசியக்கல்வி என்ற நோக்கத்திற்காகவே. பணம் பெற்றவர்கள் தொகையை வேறு எந்தக்காரியத்துக்கும் உபயோகிக்காத வகையில், குருகுல நிர்வாகத்தில் தலையிடவோ சமையல், சமபந்தி அல்லது மதபோதனை போன்ற இதர விஷயங்களைப் பற்றி ஆலோசிக்கவோ இடமில்லை” என்று கூறினார். பக். 246, 247
குருகுலத்திற்கும், காங்கிரஸ் கமிட்டிக்கும் உள்ள ஒரே தொடர்பு கமிட்டி அளித்த 5000 ரூபாய் நன்கொடையேயாகும். தமிழ்நாட்டில் கதர் வேலைக்காகச் சில பிரமுகர்களுக்குக் கமிட்டி 3 லட்ச ரூபாய் தந்ததே, அதைப்பற்றி என்ன செய்தது.?? கொடுத்த தொகைகள் குறித்த காரியத்திற்காக உபயோகிக்கப்பட்டனவா என்று யாராவது பார்த்தார்களா என்று டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் காங்கிரஸ் கமிட்டியில் பேசினார். – பக். 251
நாமக்கல் உஸ்மான் சாகிப்பும், திருச்சி ஹமீத் கானும் டாக்டர் நாயுடுவுக்கு எதிர்ப்பு இயக்கம் நடத்தப்போவதாக எச்சரித்தார்கள். திருச்சி வேங்கடாசலரெட்டியார் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். -பக். 257
தஞ்சாவூரில் சி. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக்கூட்டம் “ குருகுலக் கிளர்ச்சி மூலம் வகுப்புத்துவேஷத்தை கிளறி விடுவதற்காக டாக்டர் நாயுடுவைக் கண்டித்தது. – பக் 256, 257.
சேலத்திலிருந்து “ ஹிந்து” பத்திரிக்கைக்கு டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அனுப்பிய தந்தியில் குருகுலப் பிரச்சினையில் சமரச முடிவை அடையும் தருணத்தில் ஐயர் மறைந்தது பெரிய நஷ்டமாகும் என்றார். – பக் 268, 269.
குருகுலப் பிரச்சினையில் தமிழ்நாடே பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிளவுபட்டதைப் போல இப்போது ஒரு பொய்க்கதை சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை மேலே சுட்டிக்காட்டப்பட்ட மேற்கோள்கள் தெரிவிக்கின்றன.
வ. வே. சு. ஐயர் அரசியல்-இலக்கிய பணிகள் என்ற புத்தகத்தை இப்போது பார்க்கலாம். இதை எழுதியவர் பெ. சு. மணி, வெளியிட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
வ. வே. சு. ஐயர் சாதிவேற்றுமை பாராட்டாத சமரச நோக்குடையவர். அவர் ஹரிஜனத் தலைவர் சுவாமி சகஜானந்தாவுடன் காரைக்குடியில் தேசபக்தர் ராய. சொக்கலிங்கம் செட்டியார் வீட்டில் உண்வருந்தியதை ராய. சொ. குறிப்பிட்டுள்ளார். – பக் 89
புகழ் பூத்த சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞர் “காவ்ய கண்ட” கணபதி முனிவர் (1878 – 1936) காந்தியுகத்தில் காங்கிரசில் சேர்ந்தார். 1924-ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டிற்குப் பெரியார் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையேற்றபொழுது, மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றவர் “காவ்ய கண்ட” கணபதி முனிவர். இவர் தீண்டமையை எதிர்க்க சாத்திரச் சான்றுகளை ஓதிவந்தவர். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த மாநாடுகளில் கலந்துகொண்டவர்…. இவரிடம் வரதராஜுலு நாயுடு குழுவினர் பெருமதிப்பு வைத்திருந்தனர். வ. வே. சு ஐயரும் 1926-ல் திருவண்ணாமலை வந்து கணபதி முனிவரைச் சந்தித்தார்.
குருகுலச் சிக்கலில் “காவ்ய கண்ட” ருடைய கருத்துக்கள் வேண்டப்பட்டன. சம்ஸ்கிருத மொழியில் உள்ள இவருடைய வாழ்க்கை வரலாற்றில் “ வாசிஷ்ட வைபவம்” என்னும் நூலில் வ. வே. சு ஐயர் நிறுவிய குருகுலத்தைப் பற்றித் தனி அத்தியாயம் உள்ளது. இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் பேரறிஞர் டி. வி. கபாலி சாஸ்திரி ஆவார்…
வாசிஷ்ட வைபவத்திலிருந்து சில வரிகள்…
குருகுலப் பிரச்சினைக்குப் புரட்சிகரமான ஒரு தீர்வைக் காவ்ய கண்ட கணபதி முனி வெளியிட்டார். ஆதிதிராவிடரைச் சமையல்காரராக நியமிக்க வேண்டும் என்பதுதான் புரட்சிகரமான அம்சமாகும்…
இதைக் கேட்டு குருகுல ஆசிரியர் நடுங்கிவிட்டார். பிராமணரல்லாத எதிர்ப்பாளர்கள் சமரச யோசனையை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொண்டால், பிராமணர் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆதி திராவிடர் சமைக்கும் உணவைச் சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். குருகுல ஆசிரியரின் கருத்தும் இதுவே. ஒப்புக்கொள்ளாவிடில் தங்களுடைய நிலையும் வீழ்ந்துவிடும் என்று பிராமணரல்லாத எதிர்ப்பாளர்கள் கருதினார்கள். பக்-97, 98, 99
அதாவது, பிராமணரோடு சமநிலை வேண்டும் என்று போராடிய வரதராஜுலுவும் ஈ. வெ. ராவும் அதே உரிமையை தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சேரன்மாதேவி குருகுலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இல்லை, அவர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை என்பது நமக்கு உறுதிப்படுகிறது.
இறுதியாக இந்தப் பிரச்சினை குறித்த நமது கருத்து இதோ:
அரசுப்பள்ளிகளில் சமபந்தி போஜனம் நடைமுறையில் இல்லை. அப்போது ஆட்சி செய்தது நீதிக்கட்சி என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவேண்டும். இதைப்பற்றி ஈ. வெ. ரா பேசவில்லை.
சேரன்மாதேவி குருகுலத்தில் ஐயரும், அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தியும் அனைவருடனும் சேர்ந்துதான் சாப்பிட்டிருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவரை சமையல்காரராக்க வேண்டும் என்பது வேதம் அறிந்த முனிவரின் தீர்ப்பு. இதை இருதரப்பும் ஏற்கவில்லை.
தேசியக்கல்விக்காக பணம் வசூலித்துவிட்டு மாணவர்களுக்குள் வேற்றுமைக்கு இடம் தந்தது ஐயரின் தவறுதான். மிகப்பெரிய பணியை மேற்கொண்ட ஐயர் அதில் தோல்வியடைந்துவிட்டார். அவருடைய தன்னலமற்ற தன்மையையும், வீரத்தையும் கரையற்ற கல்வித்தேர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் குருகுல முயற்சி ஒரு சறுக்கல்தான். லட்சிய வேகத்தோடு மோதிய ஐயரின் குறி தவறிவிட்டது.
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
என்பது இதற்குப் பொருத்தமான திருக்குறள். இந்தத் தொடரில் திராவிட இயக்கம் பற்றி நாம் பக்கம் பக்கமாக விமர்சனம் செய்கிறோம். ஆனால், தேசியத் தரப்பிலும் சில தவறுகள் நடந்துள்ளன. அதில் இது ஒன்று.
மேற்கோள் மேடை:
இமயமலைக்குத் தெற்கே, குமரி முனைவரை வாழ்கின்ற ஒரு சமுதாயமே ஹிந்து சமுதாயம் இதில் பல சமூகங்கள் உண்டு. அவை ஹிந்து சமூகங்களே ஆகும்.
இது காரணம் பற்றியே, ‘இந்த மண்ணில் பிறந்த ஒவ்வோர் அணுவும் ஹிந்துவே’ என்பார் சுவாமி விவேகானந்தர்.
இதில் நாத்திகர்களும் சமூகப் புரட்சியாளர்களும் அடங்குவர் என்பதற்கு ஆதாரம்:
நான் ஒரு நாஸ்திகன் என்று பிரகடனப் படுத்திக்கொண்ட பகத்சிங்க் அங்கம் வகித்த புரட்சிக் குழுவுக்கு ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஆர்மி’ என்று பெயரிட்டிருந்தனர்.