புறநானூற்றுப் பூனைகள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதப் பயிற்சி அளிப்பதற்காக திருவாங்கூர் அரசர் ரூ. 1 லட்சம் நிதி அளித்திருந்தார். இதை ஏற்றுக் கொண்டால் தமிழர் வாழ்வு கெட்டுவிடும் என்று சொல்லி ‘குய்யோ முறையோ’ என்று கூப்பாடு போட்டார் ஈ. வெ. ரா. பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்தை மிரட்டினார். ஈ. வெ. ரா வின் மிரட்டலின் விளைவாக அந்தப் பணம் திருப்பித் தரப்பட்டது.
பல்கலைக் கழகத்தில் மொழிப்பயிற்சி தரக்கூடாது என்கிற பாசிச மிரட்டல் இங்கேதான் நடந்தது. இந்திய வரலாற்றிலேயோ உலக அளவிலேயோ இந்தக் கொடுமை வேறெங்கும் நடந்ததில்லை..
இந்தச் சூழலில் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தில் பேச அழைக்கப்பட்டார் பேராசிரியர் க. அன்பழகன். வருடம் 1955. தமிழகமெங்கும் இருந்த கல்லூரிகளைல் தமிழ்ச் சங்கங்களைச் சாக்கிட்டு திராவிட இயக்கப் பேச்சாளர்களை அழைப்பது வழக்கமாக இருந்தது.
அழகப்பா கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்பழகன் சம்ஸ்கிருதத்தின் மீதிருந்த குரோதத்தை வெளிப்படுத்தினார். ‘சம்ஸ்கிருதம் என்றால் சாத்தான்’ என்கிற தொனியில் அவர் பேசினார்.
கல்லூரி முதல்வரான A. நராயண தம்பி மேடையில் இருந்தார். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர்; பிரமணரல்லாதவர்; மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; அன்பழகன் கக்கிய அமிலம் முதல்வரைப் பாதித்துவிட்டது. ‘இங்கு சொல்லப்படும் கருத்துக்களை கண்டித்து நான் வெளியேறுகிறேன்’ என்று சொல்லியபடி அவர் கிழே இறங்கிவிட்டார். மாணவர்கள் பதறிவிட்டனர்.
அன்பழகனால் தொடர்ந்து பேசமுடியவில்லை. இத்தனைக்கும் மாணவர்களில் ஒரு பகுதியினர் திராவிட இயக்க சார்புடையவர்கள். பேரா ஊரணியைச் சேர்ந்த கு. மாஸ்கோ என்பவரும் அவர்களில் தீவிரமாக இருந்தார்.
முதல்வரின் முடிவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்பழகனை நெருக்கினார்கள். அவரும் ‘என் கருத்துக்களில் மாற்றம் இல்லை, மற்றவர் மனம் புண்படும்படியாகப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று சொல்லி ஒருவாறு உரையை முடித்தார்.
– காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கூறியது.
அன்று அன்பழகன், இன்று யாழ்வாணன். அன்று சம்ஸ்கிருதம் இன்று அன்பு. பொன்னோவியம். ஆறாட்டம் ஒன்றுதான், அளவில்தான் வித்தியாசம். அப்போது ‘மண் ஒட்டவில்லை’ என்று சொல்லி மன்னிப்புக் கேட்டார்கள். இப்போது அதிகாரமும் காசும் அதிகமாக இருப்பதால் ‘அநாமதேயம்’ என்கிறார்கள் நம்முடைய தொடரின் பாதையிலிருந்து சற்று விலகி இந்த முறை யாழ்வாணனுக்குப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன். நியாயத்தை எடுத்துச் சொல்லிய வெங்கட் சுவாமிநாதன், ம. வெங்கடேசன், ஆ. பத்மாவதி ஆகியோருக்கு நன்றி.
இனி பொன்னோவியம் பற்றி:-
மலேசியாவில் உள்ள பினாங்கு நகரில் பிறந்தவர் அன்பு பொன்னோவியம். ஆண்டு 1923. பெற்றோர் அன்பு பெருமாள் பிள்ளை, கங்கைய்ம்மாள். சிறுவயதிலேயே பொன்னோவியம் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டார்.
பாட்டனாரோடு இந்தியா வந்த பொன்னோவியம் (1933) திண்டிவனத்திற்கு அருகே வாழ்ந்தார். பிறகு சென்னைக்கு வந்தவர் எழும்பூரில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
பழங்குடி மக்களின் நலனில் ஆர்வம் கொண்ட பொன்னோவியம் பழங்குடி மக்களில் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்த பொன்னோவியம், அருங்காட்சியகத்தின் பொறுப்பலுவலராக ஆனார். (1951). 1983-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பொன்னோவியத்தின் முயற்சியால் ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தொகுப்புநூல் வெளியிடப்பட்டது. பொன்னோவியம் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ளது.
அந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு மேற்கோள்களை மட்டும் கொடுக்கிறேன்.
1928 – 29 ஆம் ஆண்டில் ஆதி திராவிட ஆசிரியர்கள் 343 ஆக இருந்தது 1929-30 இல் 266 ஆகக் குறைந்துவிட்டது. மொத்தம் 16283 பள்ளிகளில் 6565 பள்ளிகளில் மட்டுமே ஆதிதிராவிடப் பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டனர். 9723 பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரிகளிலும் இக்கொடுமை நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. நமது தந்தையவர்களின் (எம். சி. ராஜா) ஓயாத உழைப்பால் ஓரளவு அவை நீங்கப்பெற்றன. பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள 21. 11. 1927 இல் தான் முடிவு செய்யப்பட்டது – பக் 49
ஒழுக்கமும் புலமையும் ஒருவரை சமூகத்தில் உயர்த்தவல்லது என்பதற்கு ம. பழனிச்சாமி என்ற பழங்குடித் தலைவர் உதாரணமாகத் திகழ்ந்தார். இவருடைய நற்பண்புகளாலும் புலமையாலும் ஈர்க்கப்பட்ட சங்கராச்சாரியார் அவர்கள் இவருக்கு 1923 இல் பொன்னாடை போர்த்திப் பெருமைபடுத்தினார். – பக். 76
பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை மறுக்கப்பட்ட காலத்திலேயே, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரை சங்கராச்சாரியார் கௌரவித்திருக்கிறார் என்பதைக் குறித்துக் கொள்ளவும். இத்தகைய செய்திகளைப் பதிவு செய்தவர் அன்பு. பொன்னோவியம் என்பதையும் தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.
அன்பு. பொன்னோவியம் எழுதி சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ‘உணவில் கலந்திருக்கும் சாதி.’ இந்தப் புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
1923 இல் தாழ்த்தப்பட்டோர் குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்ற பெரும்தலைவர் எம். சி. ராஜா, சென்னை ஆளுநரிடம் அறிக்கை அளித்தபோது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு நீதிவழங்கவில்லை என்று கூறினார். – பக். 35
நீதிக்கட்சியிலிருந்த ஜமீன், மிட்டா, மிராசு, செல்வம் செல்வாக்கு கல்வி பெற்றவர்களில் எத்தனைபேர் ஆளுவோராக பெருந்தலைவர்களாக வரமுடிந்தது? ஏன் இவர்கள் குறைந்த காலத்திலேயே காணாமல் போனார்கள்? நீதிக்கட்சியின் 16 ஆண்டுகால ஆட்சியில் அமைந்த அமைச்சரவை அவலங்களே அவர்களிடமிருந்த மாநில வேற்றுமை, மொழி, இன, சாதி, பதவிவெறி ஆகியவற்றைத் தெளிவாகக்காட்டுகின்றன. – பக்கம் 43, 44
இராமநாதபுரம் பஸ் முதலாளிகள் ஆதி திராவிடர்களை பேருந்துகளில் ஏற்ற மறுக்கிறார்கள் என்றும் அப்படி மறுத்தால் அவர்களுடைய லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் திரு. சௌந்திரபாண்டியன் அச்சுறுத்தியதாகவும் ஒருவர் எழுதுகிறார். நீதிக்கட்சியைச் சேர்ந்தவர் சௌந்திரபாண்டியன். இது ஒரு பொய்ச்செய்தி என்று தாழ்த்தப்பட்டோர்களின் தலைவர்கள் கூறுகிறார்கள். – பக்கம் 61
சௌந்திர பாண்டியன் செய்யாத காரியங்களை செய்து விட்டதாக விளம்பரம் செய்யப்படுகிறது என்று குடியரசு இதழ் 01. 01. 1931 கூறுகிறது. பக்கம் -61.
இன்றுவரை எழுதியவர்களெல்லாம் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்காகவே தொடங்கப்பட்டதென்றும் அக்கட்சி தோன்றாமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டோர் சீரழிந்து போயிருப்பார்கள், பிராமணர் சதியால் பலியாகியிருப்பார்கள் என்றெல்லாம் எழுதித் தாழ்த்தப்பட்ட மக்களை நம்ப வைத்தது மட்டுமில்லாமல் அதை சரித்திரமக்கிவிட்ட போக்கு வரலாற்றுத் துரோகமாகும். பக் – 83
நீதிக்கட்சி குறித்த அம்பேத்கரின் கருத்தையும் பொன்னோவியம் பதிவு செய்திருக்கிறார். அது இதோ..
1937ம் ஆண்டு தேர்தலில் இக்கட்சி ஏன் தோல்வியடைந்தது. பார்ப்பனரல்லாதவர் ஓட்டுதானே அதிகமாயிருந்தது? அவர்களிடம் இக்கட்சிக்கு ஏன் செல்வாக்கில்லாமல் போனது? – பக் – 69
பட்டம், பதவி வாய்ப்புப்பெற்றவர்கள் தங்களையும் தங்கள் சுற்றத்தார்களையும் பார்த்துக்கொண்டார்களே தவிர பாமர மக்களை, கிராம மக்களை கவனித்து, அவர்கள் வாழ்க்கையில் செல்வந்தர்களிடமும், முதலாளிகளிடமும் சிக்கி அல்லல் படுவதை சிறிதும் கவனிக்கவில்லை.
பொன்னோவியம் யார் என்று யாழ்வாணனும் அவரைச் சார்ந்தவர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
யாழ்வாணன் ஒரு கருவிதான். அந்தக் கருவிக்குப் பின்னாலிருக்கும் கரங்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவை.
தமிழ்ச் சமூகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும், அதன் மூலம் வெளிநாட்ட்டவருக்கு வெண்சாமரம் வீசவேண்டும் என்பதுதான் அந்தத் தரப்பின் நோக்கம்.
இந்தப்பிரிவு ஒரு கற்பனைக் கோட்டால் உருவாக்கப்பட்டது என்று தெரிவிப்பதே நம்முடைய வேலை. அதற்காகவே யாழ்வாணனுக்கான பதில் தேவைப்பட்டது.
இந்துக்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதிலும், எதிர்த் தரப்பினரின் பிரச்சாரங்களை முறியடிப்பதிலும் பல நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். அவரவர் நிலையிலிருந்து வழிமுறைகளை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். என்னுடைய வழிமுறையை விளக்குவதற்காக பூனைக்கதை ஒன்று சொல்கிறேன்.
போர்த்தந்திரங்களை வகுப்பதற்காக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் அந்தப் படைத்தலைவர், அருகே சில தளபதிகள்.
“முரண்டு பிடிக்கிற பூனை ஒன்று. அதை மிளகுத்தூள் சாப்பிடச் செய்ய வேண்டும். எப்படிச் செய்வீர்கள்?” என்று கேட்டார் தலைவர்.
“பூனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிளகுத்தூளை அதன் வாய்க்குள்போட்டு, ஒரு குச்சியல் குத்தினால் மிளகுத்தூள் உள்ளே போய்விடும்” என்றார் ஒரு தளபதி.
“மிளகுத்தூள் போகிறதோ இல்லையோ, அவஸ்தையில் பூனையின் உயிரே போய்விடும். இது வேண்டாம்” என்றார் தலைவர்.
“பத்து நாட்கள், உணவே இல்லாமல், தண்ணீரே காட்டாமல் அதைத்தவிக்க விட வேண்டும். பிறகு மிளகுத்தூளைக் கொடுத்தால் தானாகவே சாப்பிட்டு விடும்” என்றார் அடுத்தவர்.
பத்துநாள் வரை அது ஜீவித்திருக்குமோ சொல்ல முடியாது. இதுவும் வேண்டாம் என்றார் தலைவர். முடிவாக, அவரே ஒரு வழி சொன்னார்.
“ மிளகுத்தூளை பூனையின் உடம்பில் தேய்த்துவிடவேண்டும். எரிச்சல் தாளாமல் பூனை மிளகுத்தூளை நக்கித் தின்றுவிடும்” என்பதுதான் அந்த வழி.
திராவிட இயக்கத்தவரை கையாளுவதற்கு இருப்பதிலேயே இதுதான் சாத்வீகமான வழி என்று நமக்குத் தோன்றுகிறது.
ஆகவே இந்தப் புறநானூற்றுப் பூனைகளின் உடலில் சரித்திர உண்மைகளைத் தேய்த்து விடுகிறேன். நக்கித்தின்னும் காட்சியை நாட்டோர் ரசிக்கட்டும்.
அடுத்த பகுதியில் சேரன்மாதேவி குருகுலம்..
மேற்கோள் மேடை:
இன்றைக்கு என்ன நிலை? சாதியை யார் உருவாக்கினார்கள் என்று சொல்கிறோமோ அந்த பிராமணர்கள் எங்கேயாவது ஆதி திராவிடர்களோடு சண்டை போடுகிறார்களா?? ஒரு பிராமணரும் ஒரு தாழ்த்தப்பட்டவரும் மோதிக்கொண்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறதா??
– மு. கருணாநிதி / தினத்தந்தி/12. 07. 1999