‘‘வேர் இஸ் த பார்ட்டி’’
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும்.
ஒருநாள் அவர் புதிதாக வெளியாகி இருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.
ஒரு புத்தகத்தை விரித்தான்.
நல்ல பண்பாடுள்ள கதை அது!
“வாழமுடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. கதையென்ன தெரியுமா??
படிக்காதவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய புண்ணிய கதையல்லவா! விபரமாகவே சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலிஸ்காரன், வறுமை தவழ்ந்து விளையடும் சின்னஞ்சிறு வீடு அவனது குடியிருப்பு. மாண்டு போன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளைவிட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக்கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன. திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். அவன் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தான்.
தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக் கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’ ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில் பலரிடம் கெட்ட ஒருத்தியைப் பளபளப்பாக வர்ணித்திருப்பார் கட்சியின் மூத்த தலைவர்…
ஓடிப்போனவள் கதியும், உருப்படாதவன் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கு எழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும், நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.
— பக்144/148 வனவாசம், கண்ணதாசன்.
சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான். இதைத்தான் கண்ணதாசன் உதாரணத்தோடு உணர்த்தியுள்ளார். தமிழகத்தில்தான் இந்தத் தலைகீழ் ஆட்டம் சாத்தியம். ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.
அமெரிக்க நாட்டு அடிமை ஒருவர் பெற்ற விடுதலையின் சிறப்பை நூல்வடிவாகக் கொடுத்தார் வ.வே.சு அய்யர். இதைப்பற்றி தமிழகத்தில் யாருக்குத் தெரியும்???
புக்கர் டி. வாஷிங்டன் 1856 முதல் 1915 வரை வாழ்ந்தவர். இவர் அமெரிக்க நீக்ரோ கல்வியாளர். தன் சுயசரிதையை அவர் ‘Up from Slavery’ என்ற நூலாக எழுதினார். இதன் தமிழ் வடிவத்தை வ.வே. சு. அய்யர் கொடுத்துள்ளார். “நமது ஜனங்களிடத்தில் ஊக்கமும், திறமையும் நயமும், தொழில் செய்யும் திறமையும், ஹரிஜன் அபிமானமும் வரவேண்டுமானால் நமது நாட்டில் இந்த வாஷிங்டனைப் போன்ற தந்நலம் கருதா மகாத்மாக்கள் பலர் வேண்டும்” என்று ஐயர் எழுதினார். இதை நடைமுறைப் படுத்தவே ஐயர் சேரன்மாதேவியில் குருகுலம் அமைத்தார்.
தேசியக் கல்வியை வளர்ப்பதற்காக ஐயர் செய்த முயற்சி வேறு சில விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. திராவிட இயக்கத்தின் வலிமைக்குக் காரணமாகிவிட்டது.
சேரன்மாதேவி குருகுலத்தில் ஏற்பட்ட சர்ச்சையை ஆராய்வதற்கு முன், அந்தக் காலகட்டத்தில் பிராமணரல்லாதார் அமைப்புகளுக்கும் மற்ற சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸ் மாநாடுகளில் சீர்திருத்தக் கருத்துக்கள் அப்போது பரவலாக பேசப்பட்டன. ‘வேதத்தில் தீண்டாமை இல்லை’ என்று காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள் போன்ற அறிஞர்கள் சமூக சீர்திருத்த மாநாடுகளில் பேசிவந்தனர். காங்கிரஸ் மாநாடுகளுக்கு அமைக்கப்பட்ட மேடைகளையே பயன்படுத்தி இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் தீவிரமாக ஈடுபட்ட ஜி. சுப்ரமணிய ஐயரின் ஆதரவோடு உருவானது ‘இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்’ என்ற ஆங்கில இதழ். இந்த இதழில் ‘Caste and the Non-Brahmin’ என்ற தலைப்பில் வெளிவந்த (08. 04. 1917) கட்டுரையின் சில பகுதிகளைக் கொடுத்திருக்கிறேன்.
பிராமணரல்லாதார் இயக்கம் எனும் துரதிருஷ்டவசமான பெயராக இருந்தாலும் நம்மில் பலர் இந்த இயக்கத்தை மக்கள் விழிப்பின் அடையாளமென வரவேற்கிறோம்… இந்த இயக்கம் சாதி வெறுப்புணர்வையும், ஒதுக்கி வைக்கும் உணர்வையும் மாய்த்திட முயற்சிக்கும் என எண்ணினோம். ஆனால் நாம் காண்பது என்ன?? பிராமணர்களைமுற்றிலுமாக அழித்திட ஆர்வம் காட்டுகிறது. சாதி வேற்றுமைகளை நிலைநிறுத்தவும் ஆர்வம் காட்டுகிறது…
செட்டியார் செட்டியாராக இருக்க விரும்புகிறார். நாயர் நாயராக இருக்க விரும்புகிறார். ஆனால் அனைவரும் பிராமணர்கள் போக வேண்டும் என ஏகமனதுடன் இருக்கின்றார்கள். இது ஜஸ்டிஸ்! இது சமூக சீர்திருத்தம்!
பிராமணரல்லாதார் இயக்கத் தலைவர்களில் எவ்வளவுபேர் தங்கள் சாதிப் பெயர்களை விட்டிருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். படித்த, நாகரிகமிக்க, பஞ்சமர்களைத் தங்கள் வீட்டில் விருந்துண்ண அழைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா???
இப்போது அவசியம் எது என்றால், பிராமணர் அல்லாதார் இயக்கமல்ல, சாதி எதிர்ப்பு இயக்கமாகும்.
–பக்கம் 254, 255 & 256 / நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் – ஓர் ஆய்வு. பெ. சு. மணி, பூங்கொடி பதிப்பகம்.
திராவிட இயக்கத்தவரை நோக்கி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன. இன்றுவரை இதற்கு முறையான பதில் இல்லை.
இருந்தாலும் நம்மைப் பொருத்தவரை நியாயமாக நடக்க முயற்சி செய்வோம்.
இந்து ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் சாதிவேறுபாடு இடையூறாக இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால் சுயமரியாதைக்காரர்கள் சாதிப்பெயரை தூக்கிப் பிடித்தார்கள். அதற்கு சமூக நீதி என்று பெயர் வைத்தார்கள். ஆகவே அதை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையில் ஈ.வே.ரா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்பதை முதலில் எடுத்துக்கொள்வோம்.
இனி வருவது, மங்கள முருகேசனின் ‘சுயமரியாதை இயக்கம்.’
சேரன்மாதேவியில் வ.வே.சு ஒரு குருகுலம் அமைத்தார். முதலில் அது கல்லிடைக் குறிச்சியில் அமைக்கப்பட்டது. பின்னர் அது சேரன்மாதேவிக்கு மாற்றப் பெற்றது. மரபு வழிப்பட்ட தேசிய உணர்வை வளர்க்கும் நோக்குடன் இக்குருகுலத்தை வ.வே.சு உருவாக்கினார்…
குருகுலத்தை நடத்திச் செல்ல தனியரிடத்தும், பல்வேறு வகுப்பாரிடத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடை பெற்றார்…
சில நாட்களுக்குள் சேரன்மாதேவியில் சாதிக்குழப்பம் எழுந்தது. ‘உணவில் சாதி வேற்றுமை கருதப்படுகிறது’ என்ற கூக்குரல் நாடு முழுவதும் கிளம்பியது.
1925 சனவரியில் பெரியார் குருகுலம் மாணவர்களிடமிருந்து புகார் ஒன்று வரப் பெற்றார். பார்ப்பனச் சிறுவர்களுக்கும், பார்ப்பனரல்லாத சிறுவர்களுக்கும் தனித்தனியே உணவு அளிக்கப்படுகிறது என்றும், பார்ப்பனச் சிறுவர்களுக்கென தனியான தண்ணீர்ப் பானையே வைக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வியுற்றார்.
குருகுலம் உருவாக நிதி அளித்தவர்களும் பார்ப்பனரல்லாதவர்களுமான தமிழ்ச் சமுதாயத்தினர் இச்செய்தி கேட்டுக் கொதித்தெழுந்தனர். இதைக் கண்டபின்னர் பெரியாரால் வாளாயிருக்க இயலவில்லை. எனவே இதில் தலையிடுவது என்றும் நிலையை சரி செய்ய முயல்வது என்றும் முடிவெடுத்தார்.
இதற்கென உண்மையை அறிய நியமிக்கப் பெற்ற ஒரு குழு ஒன்று, இரு பார்ப்பனச் சிறுவர்கள் தனியே சமையலறையில் உணவருந்த வ.வே.சு. ஒப்புதல் அளித்திருந்தார் என்பதும் அவர்களுடைய பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் அவ்வாறு செய்தார் என்பதும் வெளியாயிற்று.
சேரன்மாதேவி குருகுலத்திற்கு எதிரான கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது. திரு.வி.க., வ.வே.சுவைக்கண்டு விசாரித்து வ.வே.சு அதற்குக் கூறிய பதிலை நவசக்தி ஏட்டில் வெளியிட்டார்.
வ.வே.சுவின் பதில் இதுதான். “என்னைப் பொருத்த அளவில் வேற்றுமை கிடையாதென்பது உங்களுக்குத் தெரியும். சேரன்மாதேவியைச் சூழ்ந்துள்ள பிராமணர் கொடிய வைதீகர். உடன் உண்ணலுக்கு அவர் ஒப்பவில்லை. யான் என்ன செய்வேன்” என சமாதானம் கூறினார்.
அவர் பதிலில், அவர் முடிவில் மாறுதல் இல்லை என்பது வெளியானதும் பெரும் போராட்டம் எங்கும் வெடித்தது. எதிர்ப்புணர்வு அலைகள் உயரே எழுந்தன.
ஒன்று அவர் நடைமுறைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தமிழ்நாடு காங்கிரசு என்னும் பொது நிறுவனத்திலிருந்தும் பெற்ற தொகையைத் திருப்பி அளித்திட வேண்டும் என்றும் கருத்துக்கள் எங்கும் பரவின.
ராமனாதன் வீட்டில்தான் முதன்முதல் குருகுலத்தை எதிர்த்து அதை ஒழித்து விட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அப்போது கூடி ஏற்பாடு செய்தவர்கள் ராமனாதன், பெரியார், திரு.வி.க, தண்டபானி ஆகியோர் டாக்டர். வரதராசுலுவைத் தலைவராகக்கொண்டு குருகுலத்தை ஒழிக்க முடிவு செய்தனர்.
ஆனால் குருகுலச் சிக்கலில் வ.வே.சு. வை ஆதரித்தவர்கள் சமுதாயத்தில் கலந்துண்ணல் இல்லாதபோது குருகுலத்தில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தச் சொல்வது முற்றும் முறையற்றது என்ற சொத்தை வாதத்தை முன்வைத்தனர்.
வரதராசுலுவும், பெரியாரும் அரசியல் பிரச்சினைகளில் கருத்து மாறுபாடு பல கொண்டிருந்தபோதிலும் குருகுலச் சிக்கலைப் பொருத்தவரை ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர்.
குருகுலச் சிக்கலில் காந்தியடிகள் குறிக்கீடும் பிரச்சினையை தீர்க்க வகை செய்யவில்லை. “வைக்கத்தில் தங்கி இருந்த காந்தியை வ.வே.சு அய்யர் சந்தித்து சேரன்மாதேவி குருகுலத்திலேயே சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வருவதைப் பற்றிக் கருத்துக் கேட்டார். அதற்கு காந்தியார், ‘‘சமபந்தி போஜனம் வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக் கூடாது. மேலும் ஒரு சாரார் மற்றவர்களோடு அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டும்’’என்று குறிப்பிட்ட செய்தி 12.03.1925ம் தேதியிட்ட இந்துவில் வெளியாயிற்று.
அத்துடன் காந்தியடிகள், ‘ஏற்கனவே வாக்களித்துவிட்டபடியால் இரு பார்ப்பனச் சிறுவர்கள் மட்டும் தனியே உணவருந்தட்டும். எதிர்காலத்தில் இத்தகைய தடை ஏதும் யாருக்கும் விதிக்கக்கூடாது’ என்றவாறு சமரசதிட்டம் அளித்தார். அத்திட்டம் ஏற்கப்படவில்லை.
குருகுல நிகழ்ச்சியில் வ.வே.சுவின் நிலையை முழுமையாக ராஜாஜி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….
திருச்சியில் நடந்த காங்கிரசு குழுக் கூட்டத்தில் காங்கிரசு 5000 ரூபாய் வழங்கியதைக் குறித்து வருந்தும் வரதராசுலுவின் தீர்மானத்தையும், “வேறுபாடின்றி எல்லோரும் கலந்துண்ணும் முறையை நிறைவேற்றுவது குருகுல நிர்வாகத்தினரின் பொறுப்பு” என்னும் ராஜாஜியின் தீர்மானத்தையும் காங்கிரசு ஏற்கவில்லை. இடையில் குருகுலத்திலிருந்து வ.வே.சு விலகினார் என்ற செய்தி வெளியாயிற்று.
தேசிய இயக்கத்தில் பங்குபெறும் எந்த நிறுவனமும் பிறப்பு அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்னும் ராமநாதனின் தீர்மானம் மட்டும் நிறைவேறியது…
வரதராசுலு வகுப்புத்துவேசத்தை வளர்க்கிறார் எனவும் தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார் எனவும் அவருக்கெதிராக ராஜாஜி கொண்டுவந்த தீர்மானம் ஐந்து வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியுற்றது. தீர்மானத்தை ஆதரித்தவர் எழுவர். எதிர்த்தவர் பன்னிருவர்.
டாக்டர் சாமிநாதன், டி.எஸ்.எஸ். இராஜன், கே. சந்தானம், ஹாலாஸ்யம், என். எஸ், வரதன், சேலம் அப்பாராவ், வி. கிருஷ்ணமாச்சாரி ஆகிய பார்ப்பனர்கள் இராஜாஜியின் தீர்மானத்தை ஆதரித்தவர்கள்.
திரு.வி.க, பெரியார், இராமநாதன், இராமசாமி, இராமச்சந்திரன், சிங்காரவேலு, தங்கப்பெருமாள், புதுப்பாளையம் ரத்தினசாமி, சேலம் ஆதிநாராயணன், ஓ.பி. ராமசாமி, ஆகிய பார்ப்பனரல்லாதவர்கள் இராஜாஜியின் தீர்மானத்தை எதிர்த்தவர்கள்.
குருகுலப் பிரச்சினைக்குப் பிறகு வரதராஜுலு நாயுடு தடம் மாறினார். சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கி, இந்து மஹாசபை வரை ஒவ்வோர் கட்சியாக ‘வேர் இஸ் தி பார்ட்டி’ என்று அடிக்கடி கட்சி மாறினார். காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தை நாயுடு எதிர்த்தபோது அவருக்குக் கூட்டம் குறைந்துவிட்டது. நாயுடுவின் ‘தமிழ்நாடு’ தினமணியோடு போட்டி போட்டுத் திணறியது. வாசகர்களைக் கவருவதற்காக பெரிய பெரிய போஸ்டர்களை அனுப்பினார் அவர். முகவர்கள் ‘போஸ்டர்களை மட்டும் அனுப்பினால் போதும்’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அரசியலில் இருந்து விலகிய அவர் பொருட்காட்சி நடத்தி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானார்.
குருகுல விவகாரத்தில் ஐயர் சார்பாக சொல்லப்படுவதை அடுத்த முறை பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
சேர்மாதேவி குருகுல விடுதியில் பிராமணருக்கும், பிராமணரல்லாதார்க்கும் இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகள் நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஏராளமாகப் பேசினார், எழுதினார், மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றினார் என்று சொல்லிக்கொண்டிருப்பது தீர்வாகாது.
– உணர்வில் கலந்திருக்கும் சாதி / அன்பு பொன்னோவியம்