[இந்தத் தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்]
அங்காந்திருக்கும் அவையோர்கள்
பாரதிதாசனுக்கு சந்தர்ப்பம் சூழ்நிலை யாவும் எப்போதுமே சாதகமாகவே அமைந்திருந்தன. பாரதிக்கோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கோ சந்தர்ப்பம் சூழ்நிலை இப்படி சாதகமாக அமைந்திருக்கவில்லை. பாரதிதாசன் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணி ஏற்று உறுதியான வருவாயுடன் வாழ்ந்தவர். 1937 இந்தி எதிர்ப்புக்காகவோ, 1944 திராவிட நாடு கோரிக்கைக்காகவோ அவர் தனது ஆசிரியர் வேலையை உதறியவரல்லர்.
பாரதிதாசன் 37 ஆண்டுகள் ஆசிரியர் பணியை முழுவதாகச் செய்தபின்னர் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கால ஊதியத்தையும் ஓய்வு அநுகூலங்களையும் ஒழுங்காகப் பெற்றுக்கொண்டவர். ஆசிரியர் பணி ஊதியம், ஓய்வு ஊதியம் இப்படிப்பட்ட நிலையான வருவாய் வந்தது என்பது மட்டுமல்ல திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதன் மூலமும் நூல்கள் பதிப்பித்தது சார்பாக பதிப்பகத்தார் மூலமும் கவிஞருக்கு நிறைய நிதி வந்து கொண்டிருந்தது.
மற்ற கவிஞர்களைப்போல பாரதிதாசன் வருவாய் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டவரல்லர். பாரதியைப் போல அரசாங்கக் கெடுபிடியோ மறைந்து வாழவேண்டிய நிர்பந்தமோ சிறைவாசமோ பாரதிதாசனுக்கு நேர்ந்ததில்லை.
சிறிதுகாலம் இவர் சிறைப்பட்டதாக ஒரு தகவல். அதுகூடப் பொதுக்காரணத்திற்காக அல்ல, தனிப்பட்ட சொந்தக் காரணத்திற்காக. ஏதோ ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்மக்கள் இவரை நையப்புடைத்ததாகவும் அவரை நன்கறிந்தோர் கருத்து கூறுகின்றனர். அந்தக் காலத்தில் அச்சடித்து விநியோகிகப்பட்ட சிற்றறிக்கை ஒன்றும் இதை உறுதி செய்கிறது.
-பக்கம் 3,4 / பாரதிதாசன் பொற்கிழி, தமிழியக்கம் / முருகு. இராசாங்கம், டாக்டர் கோ. கேசவன் / செங்குயில் பதிப்பகம்.
‘ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துத் தகர்க்க வேண்டும்’ என்று எழுதிய பாரதிதாசனின் ஒழுக்கம் எவ்வளவு உயர்வானது என்பதை வாசகர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இந்தச் செய்தியைக் கொடுத்திருக்கிறேன்.
பாரதிதாசனின் வேறுசில குண விசேஷங்களையும், தனக்குப் பொற்கிழி கொடுத்த அண்ணாதுரைக்கு இவர் நடத்திய ‘அர்ச்சனையை’யும் பிறகு விவரமாகப் பார்க்கலாம்.
பாரதிதாசன் ஒரு குறியீடுதான்.
போலிகளால் நிரம்பிய இந்தப் புல்லர் கூட்டத்தில் சிற்றின்ப விளையாட்டு சிறுதொழிலாக நடத்தப்பட்டது. ‘அங்காந்திருக்கும் அவையோர்களே’ என்று தொடங்கி நம் தமிழன் கற்பு, செந்தமிழர் வீரம் என்று எதுகையோடு ஏப்பம் விடுவதும், சங்கதி முடிந்து சபை கலைந்த பிறகு அபசாரக் கலைகளை அரங்கேற்றுவதும் அந்தப் பரம்பரையில் இப்போதும் அடியொற்றி நடக்கிறது.
நாம் பகுத்தறிவு இயக்கத்தின் வரலாற்றுக்கு வருவோம்.
சென்ற பகுதிகளில் தாழ்த்தப்பட்டோரை திராவிட இயக்கத்தினர் நடத்திய விதம், ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயை, வைக்கம் போராட்டம் குறித்த உண்மைகள் இடஒதுக்கீடு வந்த வழி, பகவத் கீதை, 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தின் முக்கிய நிகழ்வுகள், கால்டுவெல் எழுதிய கதைவசனம், வெளிநாட்டுப் பாதிரிமார்களின் மதமாற்ற முயற்சிகள், கிறித்துவத்தில் சாதிப் பாகுபாடுகள், இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தமிழக வேளாண்மை, பொருளாதாச் சுழல், வெகுசன இலக்கியங்கள், சினிமாவின் தோற்றம், டி.எம். நாயரின் அடிமைப் புத்தி, ஈ.வெ.ராவின் பிராமண எதிர்ப்பு மகாத்மா காந்தியின் தமிழக விஜயம், தேசிய இதழ்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.
இந்த வரலாற்றைத் தொடருவதற்கு முன், அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
*17.12.1920 – திவான்பகதூர் சுப்பராயலு தலைமையில் சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி பதவியேற்றது. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நீதிக்கட்சி அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த அமைச்சரவையை ‘தமிழர்களின் முதல் மந்திரிசபை’ என்று பாராட்டுகிறார் மு.கருணாநிதி (நெஞ்சுக்கு நீதி / பக் 35)
* நீதிக்கட்சி ஆட்சியில் முதல் பனிரெண்டு வருடங்கள் தமிழர் யாரும் முதலமைச்சராக முடியவில்லை. நீதிக்கட்சியின் பதினாறு ஆண்டு கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் எவரும் அமைச்சராக்கப்படவில்லை. பிறகு (1937) ராஜாஜி தலைமையில் உருவான காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவரான வி.ஜ. முனுசாமிப் பிள்ளை அமைச்சரானது குறிப்பிடத்தக்கது.
*11.07.1921 – உடல்நலக்குறைவால் சுப்பராயலு பதவிவிலகிய பிறகு, பனகல் அரசர் என்றழைக்கப்பட்ட பி. இராமராய நிங்கார் முதலமைச்சரானார்.
*1921 – சென்னை பெரம்பூர் பக்கிங்ஹாம் கர்நாடிக் ஆலைகளின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதற்கு ஆதிதிராவிட தொழிலாளர்கள் ஆதரவு அளிக்கவில்லை. நீதிக்கட்சித் தலைவராக இருந்த பிட்டி தியாகராய செட்டியார் ஆதிதிராவிடர்களை சென்னை நகரிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று பரிந்துரை செய்தார்.
*11.09.1921 – மகாகவி பாரதியார் மறைந்தார்.
*15.01.1922 – வேல்ஸ் இளவரசர் சென்னைவருகை காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. நீதிக்கட்சியின் ஆதரவாளர்களும் பிரிட்டிஷ் அரசும் இணைந்து இளவரசருக்கு வரவேற்பளித்தன.
* 20.01.1922 – தாழ்த்தப்பட்டோரை ஆதிதிராவிடர் என்று அரசாணையில் குறிப்பிடவேண்டும் என்ற தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. இந்தப் பெயர் மாற்றம் தமிழ் பேசும் மாவட்டங்களில்தான் செல்லுபடியாகும் என்று சொல்லப்பட்டது. தெலுங்கு பேசும் மாவட்டங்களில் ‘ஆதி ஆந்திரர்’ என்றும் கன்னடம் பேசும் மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்ற பெயர் நீடிக்கும் என்று அரசு தெரிவித்தது. அந்தப் பகுதிகளில் இருந்த தாழ்த்தப்பட்டமக்கள் ‘திராவிடர்’ என்ற பெயரை நிராகரித்துவிட்டனர்.
*11.02.1922 – உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் அருகே உள்ள சௌரி சௌரா என்ற ஊரில் ஒரு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தைக் கலைப்பதற்காகப் போலிசார் சுட்டனர். குண்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில் போலிஸ் ஸ்டேஷனை மக்கள் சுற்றிவளைத்தனர். போலிஸ் ஸ்டேஷனுக்குத் தீவைக்கப்பட்டது. 20 போலிசார் பலியானார்கள். பர்தோலியில் கூடிய காங்கிரஸ்காரியக் கமிட்டி சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டது.
*17.09.1922 – தில்லியில் காங்கிரசின் விசேஷ மாநாடு நடைப்பெற்றது. தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசாருக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*டிசம்பர் 1922 – கயாவில் கூடிய மாநாட்டில் சட்டசபை பிரவேசம் கூடாது என்ற தீர்மானம் நிறைவேறியது. மாநாட்டுத் தலைமை வகித்த ஸி.ஆர். தாஸ் ராஜிநாமா செய்தார். தாஸும் மோதிலால் நேருவும் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சியைத் துவக்கினர்.
*31.10.1923 – இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சியினரும் சுயராஜ்ஜியக் கட்சியினரும் போட்டியிட்டனர். மொத்தத் தொகுதிகள் 98. இதில் 61 இடங்களில் நீதிக்கட்சியினர் வெற்றி பெற்றனர். கட்சியின் முன்னனித் தலைவர்களாக இருந்த எம்.சி. ராஜா, ஓ. கந்தசாமி செட்டியார், சி. நடேச முதலியார் ஆகியோர் கட்சித் தலைமைமீது அதிருப்தி கொண்டனர். நீதிக்கட்சிக்குள் தெலுங்கர் தமிழர் என்ற பிரிவினை உணர்வு வலுத்தது.
*டிசம்பர் 1923 – காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்ஜியக் கட்சியினர் தேர்தலில் போட்டியிடலாம், அவர்கள் காங்கிரசில் நீடிக்கலாம் என்ற சமரசத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் உடைய நாவலாசிரியர் அ. மாதவையா பனகல் அரசரை நோக்கி ‘பார்ப்பான் உன்னை நடத்தவேண்டுமென்று நீ நினைப்பது போல் பறையனை நீ நடத்துகின்றனையோ’ என்று கேள்வி எழுப்பினார்.
*1924 – கேரளத்தைச் சேர்ந்த வைக்கத்தில், கோவிலுக்கு அருகே உள்ள தெருவில் தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்ற தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து அங்கிருந்த காங்கிரஸ்கார்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஈ.வே.ரா தலைமை தாங்கினார். பிறகு காந்திஜியின் முயற்சியால் தடைநீக்கப்பட்டது; போரட்டம் முடிவுற்றது.
* தேசியக் கட்சியான காங்கிரசில் இருந்தபடி, கதர் விற்பனை கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஈ.வே.ரா வைக்கத்திற்குப் பிறகு வழி மாறினார். குடியரசு என்ற இதழைத் துவக்கி பிராமண எதிர்ப்பையும் இந்துமத எதிர்ப்பையும் வலுவாக வெளிப்படுத்தினார்.
காலமுறைப்படி வைக்கத்திற்குப் பிறகு ‘குடியரசு’ இதழ் பற்றித்தான் எழுதவேண்டும். வைக்கம் போராட்டம் 1924 இல். குடியரசு வெளிவந்தது 1925 இல். ஆனால் நண்பர் ம. வெங்கடேசன் இதே இணைய இதழில் இன்னொரு பக்கத்தில் இது பற்றி விவரமாக எழுதிவிட்டார். அவரிடம் இருப்பது எழில்மிகுந்த ஏவுகணைகள்.
ஆகவே, குடியரசு பற்றியும் ஈ.வே.ராவின் கடவுள் கொள்கை பற்றியும் இன்னொரு சமயத்தில் எழுதுகிறேன். இப்போது நாம் பார்க்கவேண்டியது 1924 மற்றும் 1925 வருடத்திய சேரன்மாதேவி குருகுலச் சர்ச்சையை.
அது அடுத்தப் பகுதியில் வரும்.
மேற்கோள் மேடை:
வட இந்தியாவில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவர் கழுத்தை இன்னொருவர் நெருக்குவது போன்ற சூழ்நிலை இருக்கலாம். அதுபோலவே தென் இந்தியாவில் பிராமணர்களும் பிராமணரல்லாதாரும் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள் என்று கருதவேண்டாம். சமூக அளவில் வெறுப்புணர்ச்சி இல்லை; அவர்கள் தோழமை உணர்வோடு சந்தித்துக் கொள்கிறார்கள்.
வைசிராய் இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு எழுதிய கடிதம் / 30/06/1923.