ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்
‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?’ என்னும் கலப்படப் பெயர் கொண்ட இவ்வியற்றமிழ் பெருநூல், ஒரு வரலாற்று நூல் அல்ல – அல்லது ஒரு சிலர் பலரது வாழ்க்கைக் குறிப்பு நூலும் அல்ல! ஆனால் தமிழ் நிலத்து வரலாற்று நூலுக்குக் குறிப்பாக, இப்பெருநில (முழு இந்திய) அரசியல் நிலை காட்டும் நடுநிலை நூலுக்குத் தூண்டுகோலாக நிற்கும், ஓர் தனித்தமிழ் நூலாகும். மறைத்து விடப்பட்ட – சிறந்த உரிமைப் போர் புரிந்த – புரிகின்ற இன முன்னேற்றத்திற்காகப் போராடுகின்ற தமிழ்த் தலைவர்களது அரும்பணிகளையும், மறஞ்செறிந்த தன்னுணர்வுத் தமிழ்நில உழைப்பாளிகளது பெரும்பணிகளையும், பிற அருந்தலைவர்களது அரிய செயல்களையும், தமிழர்க்குரிய தமிழ்நிலத்தின், பழங்கால – இடைக்கால ஐந்தாம் படைகளது மறைமுக வெளிமுக அழிவுத் திருப்பணிகளையும் அடக்குமுறைக் கொடுமைத் திருப்பணிகளையும் இன்றைய ஏமாந்த தமிழரது மடமை – அடிமை – இழிவுச் செயல்களையும்; பண்டைய தமிழ் மக்களது அற-மறம் செறிந்த பெருஞ்செயல்களையும் பற்றிய சில பல குறிப்புகளை எடுத்துக் காட்டிடத் தமிழருக்கு அறிவுறுத்தும் அறிவியல் நூலாகும், இந்நூல்!
– கு.மு. அண்ணல் தங்கோ / மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா
வாசகர்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். இது ஒரு சிறு பகுதிதான். இது முன்னுரையின் பகுதி; முன்னுரை மட்டும் இதே பாணியில் 21 பக்கங்கள். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமல் களையிழந்த செக்குமாடு மாதிரி சுற்றிச் சுற்றிவரும் உரைநடை 300 பக்கங்களுக்கு அப்பால் முடிவடைகிறது.
நடிகர் வடிவேலு பாஷையில் சொல்லுவதென்றால் மக்களை நோகடிப்பதற்காக ‘ரூம் போட்டு யோசிப்பார்கள்’ போலத் தெரிகிறது.
வார்த்தைகளால் வறுத்தெடுத்தவர் கு.மு. அண்ணல் தங்கோ. இவரைப் பற்றிச் சொல்லும்போது ஐரோப்பிய வரலாற்றிலிருந்து ஒரு சுவையான சம்பவம் நினைவிற்கு வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சு நாட்டில் உள்ள லக்செம்பர்க் அரண்மனையில் ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது புதிதாக உருவாகி வந்த ஒரு முறைப்படி வரையப்பட்ட ஓவியங்கள் அங்கே வைக்கப்படிருந்தன. கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர் தன்னுடைய அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அது இதோ:
அந்த ஓவியத்தின் எதிரே ஓர் இளைஞனும், இளம்பெண்ணும் இருந்தார்கள். இளம்பெண்ணை இளைஞன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்; அவள் அலறிக் கொண்டிருந்தான். “ஓவியப் போட்டியில் பரிசு வாங்கிய எனக்கு இப்படி ஒரு தண்டனையா?” என்று அவள் சத்தம் போட்டாள். அவளுடைய கழுத்தைப் பிடித்து ஓவியத்தின் பக்கமாகத் திரும்பினான் அந்த இளைஞன். “கணவனுக்கு மரியாதை கொடுக்காதவளுக்கு இதுதான் தண்டனை” என்றான் அவன்.
பிரான்சு நாட்டிலே கொடுக்கப்பட்டது ஓவிய தண்டனை. தமிழ்நாட்டிலே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுக்கப்பட்டது, காவிய தண்டனை. ஆமாம். அண்ணல் தங்கோவின் புத்தகம் காவியமாகவே போற்றப்பட்டது.
இத்தனைக்கும் இவர் நீதிக்கட்சியிலோ, சுயமரியாதை இயக்கத்திலோ திராவிடர் கழகத்திலோ, திராவிட முன்னேற்றக் கழகத்திலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்.
வெளிவட்டத்தில் இருப்பவரின் உரைநடையே இப்படி நம்மை மிரட்டினால் உள்ளேயிருந்தவர்களின் சொற்பிரவாகத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
ஒரு சாக்கு மூட்டையில் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளை எல்லாம் போட்டுக் கட்டி, நன்றாகக் குலுக்கி, கட்டை அவிழ்த்துக் கவிழ்த்துக் கொட்டினால் அது வேகமாகத்தான் விழும். வேகமாக சேர்ந்து விழுவதையெல்லாம் பொருள் நிறைந்த வாக்கியமாகக் கொள்ள முடியாது.
ஆனால் தமிழக மக்களில் ஒரு பகுதியினர் ஒரு காலத்தில் இந்தத் தயாரிப்புகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள், மாயாஜாலத்தில் மயங்கி வியந்து போனார்கள், பயத்தில் பரிவட்டம் கட்டினார்கள், போலிகளுக்குப் புகழாரம் சூட்டினார்கள், சரக்கு இல்லாதவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள் என்பதுதான் உண்மை.
உள்ளத் தெளிவும், நேர்மையுணர்வும், தமிழ் அறிவும் உடையவர்கள் கருமேகம் விலக்குவதற்காகக் காத்திருந்தனர்; காத்திருக்கின்றனர்.
பேச்சையும் எழுத்தையும் வைத்துக் கொண்டே பேரிழப்பை உண்டாக்கி விட்டவர்கள் திராவிட இயக்கத்தினர். தமிழரின் கலையும், பண்பாடும், சமயமும் இலக்கியமும் பகுத்தறிவு என்ற பாசியால் மூடப்பட்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் தொடர்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் முக்கியமான சொற்பொழிவு ஒன்றையும், மெளனத்தால் மக்களைக் கவர்ந்த தேசபக்தர் ஒருவரைப் பற்றியும் இந்த முறை பார்க்கலாம்.
நீதிக் கட்சியை நிறுவிய டாக்டர். டி.எம். நாயர், அக். 7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு அந்த இயக்கத்தவரால் சிறப்ப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். இந்த சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரஞ் செறிந்த, எழுச்சி மிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று வர்ணனை செய்கிறார் இரா. நெடுஞ்செழியன்.
இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு.
இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது என்ற தகவலை இரா. நெடுஞ்செழியன் சொல்ல மறந்துவிட்டார்; நான் சொல்கிறேன்.
இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிகப்பட்டனர்.
இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்.
இரா. நெடுஞ்செழியனால் எழுதப்பட்ட ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள டாக்டர் டி.எம். நாயர் உரையையும், அதற்கான விமர்சனத்தையும் இப்போது பார்க்கலாம்.
இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே விவரமாகப் பார்க்கலாம்.
1. அந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்றது.
– பக். 217
“குறிப்பிட்ட நாளில் திரு. இரட்டை மலை சீனிவாசன் இங்கிலாந்து நாட்டில் இருந்தார். அவர் தலைமேயற்றதாக சொல்வது தவறு” என்கிறார் அன்பு பொன்னோவியம் (உணவில் ஒளிந்திருக்கும் சாதி/ பக். 45)
2. இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடர் போன்ற ஆரியர் இனம்.
(பக்.217)
திராவிட, ஆரிய இனப் பிரச்சினைக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே போகலாம். இந்திய தேசியத்திற்கு எதிராகக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தின் அடிப்பகுதி இதுதான். இதை அசைக்க வேண்டும்; அசைத்தாயிற்று. ஆரியம், திராவிடம் என்பதை அறிஞர்கள் மறுத்து விட்டார்கள். ஆனால் இந்தச் சேதி பொதுமக்களிடம் போய்ச் சேரவில்லை, ஆரிய இனம் இப்போது இல்லை, ஆரியப் படையெடுப்பு எப்போதும் இல்லை என்று கூறிய அறிஞர்களின் மேற்கோளைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் முறையே சுவாமி விவேகானந்தர், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், நாமக்கல் கவிஞர், அம்பேத்கர், ரொமிலா தாப்பர், ஜெயகாந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன் மற்றும் அ. மார்க்ஸ்.
இந்த பதில் போதாது என்று நினைப்பவர்களுக்கு இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்: The Myth of the Aryan Invasion by David Frawley published by Voice of India, The Invasion that Never Was by Michel Danius Published by Michel Danino.
வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் இந்தியப் பழங்குடியரிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள்; பழங்குடியனரை அழித்துவிட்டு ஆரியர் இங்கே குடியேறினார்கள் என்று ஐரோப்பிய அறிஞர்கள் சொல்வது முட்டாள்தனமானது, எந்த அடிப்படையும் அற்றது.
-சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை.
இரண்டு இனமும் கலப்புற்று நீண்ட நாளாகியதையும் இரண்டு நாகரிகமும் கங்கையும் யமுனையும் போல ஒன்றுபட்டு விட்டமையும் இந்நாளில் இன்னார் திராவிடர் இன்னார் ஆரியர் என்று பிரித்தல் இயலாமையையும் விளக்கினேன்.
-திரு.வி. க / பக். 211 / திரு.வி. க. வாழ்க்கைக் குறிப்பு.
ஆந்திரம், மலையாளம், துளுவம், கன்னடம் என்பன முறையே அவ்வம் மொழிக்கும், நாட்டுக்கும் பெயராகவே வழங்குகின்றன். அம் மொழியினர் தம் நாட்டையோ, மொழியையோ, திராவிடம் என்று சொல்லுவதில்லை, தங்களைத் திராவிடர் என்றுகூடப் பேசுவதில்லை. தமிழர் சிலர் மட்டும் இப்போது சில காலமாகத் தம் நாட்டைத் திராவிட நாடு எனவும் தம்மைத் திராவிடர் எனவும் பேசக் கூசவில்லை… திராவிடம் என்று ஒரு தனி நாடோ தனி ஒரு மொழியோ கிடையாது.
– நாவலர் சோமசுந்தர பாரதியார் / செங்கோல் 21.01.1951
தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடன் என்று சொன்னதில்லை, தமிழன் தன்னை ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொண்டால் அவன் கூசாமல் தன்னை ‘ஆரியன்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
– நாமக்கல் கவிஞர் / பக். 43 / தமிழ்மொழியும், தமிழரசும்.
ஆரிய இனத்தைப் பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை. ‘தாஸ்யுக்கள் இந்தப் பழங்குடியினர், இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள்’ என்பதற்கும் வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.
– பி. ஆர். அம்பேத்கர் / Dr. Ambedkar: A True Aryan
சிந்துவெளி நாகரிமும் நகரங்களும் அழிந்ததற்குக் காரணம் ஆரியர்களின் படையெடுப்பு அல்ல; மாறாக மிகப் பரவலாகவும் ஆழமாகவும் ஏற்பட்டு வந்த சூழலியல் மாற்றங்கள்தான்.
– ரொமிலா தாப்பர் / Interpreting Early India / Oxford University Press
திராவிடர் சமுதாயம் என்பது எது என்னும் கேள்விக்கு விளக்கமோ பதிலோ தெளிவாக இதுவரை நமக்குக் கிடைத்ததில்லை. அது தமிழர் என்றும் தென் இந்தியர் என்றும் பார்ப்பனரல்லாதோர் என்றும் பலபடக் குழப்பியடித்தது. ஆராய்ந்தும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தோரை அணுகியும் அறிய முற்படுகிறபோது அந்தத் திராவிடர் என்னும் சொல் குறித்த பொருள் மிகக் கொச்சையானதாகவே இருந்தது.
– ஜெயகாந்தன் / பக்.71 / எனது பார்வையில் / கவிதா பப்ளிகேஷன்
இல்லாத திராவிட இனத்தை இருப்பதாகச் சொல்லி இயக்கம் நடத்தியதால்தான் பல கோளாறுகள் ஏற்பட்டன.
– ச. செந்தில்நாதன் / பக். 33 / தமிழ்–தி.மு.க–கம்யூனிஸ்ட் / சிகரம் வெளியீடு.
இந்து சமயம், இந்து தத்துவங்கள் அவற்றோடு தொடர்புடைய கலாசாரக் கூறுகள் என்பவற்றின் உருவாக்கத்தில் ஆரியர் ஆரியர் அல்லாத தொல்குடியினர் (தமிழர் உட்பட) ஆகிய இரு சாராரின் சிந்தனைகளும் இணைந்துள்ளன என்பதே வரலாறு தரும் செய்தி.
– கலாநிதி. நா. சுப்பிரமணியன், கெளசல்யா சுப்பிரமணியன் / பக்.262 / இந்தியச் சிந்தனை மரபு / சவுத் ஏசியன் புக்ஸ்.
இன்றைய வரலாற்றறிஞர்கள் ஆரியப் படையெடுப்பையும் ஆரிய இனம் என்கிற கருத்தாக்கத்தையும் ஏற்பதில்லை.
– அ. மார்க்ஸ் / பக். 10 / வால்மீகி ராமாயணம்