ஈ.வே.ரா.வின் பிராமண எதிர்ப்பு
1909-ஆம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தப்படி ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண மேல்சபைக்கு கவர்னர் தலைவரானார். ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. சென்னை நகராட்சிக்கான மசோதா மீது பேசத் துவங்கினார் பி.வி. நரசிம்ம ஐயர் (13.03.1919). இவர் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். தமிழில் பேசிய நரசிம்ம ஐயரை கவர்னர் பென்ட்லான்ட் பிரபு இடைமறித்தார்; ஆங்கிலத்தில் பேசும்படி அறிவுறுத்தினார்.
‘நான் விரும்பும் மொழியில் பேசக்கூடாது என்று எந்த சட்டப் பிரிவு சொல்கிறது?’ என்று கேட்டார் நரசிம்ம ஐயர். ‘என்னுடைய தாய்மொழியில் பேசுவதை யாரும் தடுக்க முடியாது’ என்றார் அவர்.
சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. ‘ஆங்கிலத்தில் பேசுவதானால் நரசிம்ம ஐயர் பேசலாம்’ என்று கவர்னர் தீர்ப்பளித்தார். ‘தமிழைத் தவிர வேறு மொழியில் பேச விரும்பவில்லை என்று நரசிம்ம ஐயர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
பக். 262, 263 / A Hundred Years of the Hindu.
தமிழுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சபையில் நீதிக்கட்சியைத் தோற்றுவித்த டாக்டர். டி.எம். நாயரும் இருந்தார். அவர் பிராமண எதிர்ப்பில் காட்டிய வேகத்தைத் தமிழை ஆதரிப்பதில் காட்டவில்லை.
முதன்முதலில் சட்டமன்றத்தில் தமிழில் பேச முயன்றவர் பி.வி. நரசிம்ம ஐயர் என்ற செய்தி தமிழ் ஆர்வலர்களுக்குக் கூடத் தெரியவில்லை. நரசிம்ம ஐயர் பின்னாளில் துறவியாகி அகில இந்திய சாய் சமாஜத்தை ஏற்படுத்தினார்.
பி.வி. நரசிம்ம ஐயர் பிராமணர் என்ற ஒரே காரணத்தால் அவருடைய தமிழ்ப்பற்று மறைக்கப்பட்டு விட்டது. கடந்த 190 ஆண்டுக் காலமாக ஒரு சாராரால் பிராமணர்களின் அறிவும், தியாகமும், வள்ளல் தன்மையும், தமிழ்ப்பற்றும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு உதாரணமாகத்தான் பி.வி. நரசிம்ம ஐயரின் சட்டமன்ற உரையைக் குறிப்பிட்டேன்.
காலக் குடுவையைக் கவிழ்த்து வைத்து 38 வருடங்களுக்குப் பிறகு நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் பற்றிச் சொல்லவேண்டும்.
1957 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் அனந்தசயனம் ஐயங்கார்.
ஒருநாள், சம்பத் ‘அவைத் தலைவர் அவர்களே’ என்று தமிழில் பேசத் தொடங்கினார்.
சபாநாயகர் அனந்தசயனம் ஐயங்கார் சம்பத்தைப் பார்த்து ‘பேசுங்கோ, பேசுங்கோ’ என்று தமிழில் சொல்லி உற்சாகப்படுத்தினார். ‘ஆங்கிலம் தெரிந்த சம்பத் தமிழில் பேசலாமா?’ என்று ஓர் உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினை கொண்டு வந்தார். அதைச் சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பி.வி. நரசிம்ம ஐயர், அனந்தசயனம் ஐயங்கார் ஆகியோரின் பெயரைத் தமிழறிஞர்கள் கேள்விப் பட்டிருக்கிறார்களா? அது அவர்களுடைய குற்றமில்லை. தமிழ் என்ற அருமருந்தைத் தயாரித்தவர் ஈ.வே.ரா, அதைத் தாளிப்பு செய்தவர் அண்ணாதுரை, பதப்படுத்தியவர் கருணாநிதி, பரிமாறியவர் கனிமொழி என்று எல்.கே.ஜி. ஆயா முதல் எண்பேராயங்கள் வரை எடுத்துரைக்கும் போது ஆள்பலம், பணபலம், அதிகார பலம் அவர்களிடம் இருக்கும்போது, ஏழைப் புலவர்கள் என்ன செய்ய முடியும்?
ஈ.வே.ரா. தமிழைத் தாக்கினாலும் அதை பாலீஷ் போட வேண்டும்; பிராமணர்களின் தமிழ்ப்பற்றை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதுதானே இன்றைய அரசியல் நெறியாகவும் கல்விக் கொள்கையாகவும் இருக்கிறது.
இப்படி பிராமணர்களின் உரிமையற்ற நிலைக்கு முக்கியமான காரணம் ஈ.வே.ரா.வும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும்தான். ஈ.வே.ரா.வின் பிராமண எதிர்ப்பு எங்கே துவங்கியது, எப்படி வளர்ந்தது அதில் உள்ள முரண்பாடுகள் என்ன என்பதை இந்தமுறை பார்ப்போம்.
ஈரோட்டில் வணிகராக இருந்த வெங்கட்ட நாயக்கர், ஈ.வே.ரா.வின் தந்தை; தாயார் சின்னத்தாயம்மாள்.
1879 செப்டம்பர் 17ஆம் நாளன்று ஈ.வே. ராமசாமி பிறந்தார். அவருடைய சிறுவயது பற்றிய விவரங்களை இரா. நெடுஞ்செழியன் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ முதல் தொகுதியில் காணலாம். வாசகர்களுக்காகச் சில வரிகளை இங்கே கொடுத்திருக்கிறேன்:
பெற்றோர்களின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் இராமசாமி வளர்ந்தார். தம் விருப்பம்போல் எங்கணும் அலைந்து திரிந்து வேடிக்கைகளிலும் விளையாட்டிலும் சண்டை சச்சரவிலும் அடிதடிக் கலவரங்களிலும் தமது பொழுதைப் போக்குவது அவரது இயல்பாக இருந்து வந்தது.
ஈ.வே.ரா.வின் இளம் வயதைப் பற்றித் தெரிந்து கொள்ள ‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்’ என்ற தலைப்பி அவரே எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.
நான் திண்ணைப் பள்ளிக் கூடத்திற்குப் போவது நிறுத்தப்பட்டது. பின்னர் அரசுப் பள்ளிக் கூடத்திற்கு அதாவது நகராட்சி ஆரம்பப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அதுவும் இரண்டு ஆண்டிலேயே அதாவது எனது 12 வயதிலேயே நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டேன்.
எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சமயப் பிச்சைக்காரர்களுக்கும், பார்ப்பனப் புரோகிதர்களுக்கும் வித்வான்களுக்கும் மிகவும் செல்வாக்கு இருந்ததாலும் அவர்களை அடிக்கடி கண்டு கண்டு எனக்குப் பிடிக்காததாலும் அவர்கள் சொல்லுவதையெல்லாம் பரிகாசம் செய்வேன். அவர்களிடம் விதண்டாவாதக் கேள்விகளையெல்லாம் கேட்பேன்.
எனது நல்ல இளமைப் பருவத்தில் அதாவது 20, 22 வயதுடையவனாய் நான் இருந்த போது என்னுடைய நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலோரும் மது அருந்துபவர்களாகவே இருந்து வந்தனர். என்னிடம் அதிக அன்பு கொண்ட அரசு அதிகாரிகள், சமீன்தார்கள் மிட்டா மிராச்தாரர்கள் பலரும் மது அருந்துபவர்கள். அப்படியெல்லாம் இருந்தும் எனக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படவில்லை. என்னை அந்தச் சாற்றுச் சார்பு எந்த வகையிலும் கெடுக்கவில்லை.
நான் இப்படிப்பட்ட கூட்டத்தினிடையே, கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலே கூட எனது வர்த்தகத் தொழிலில் ஒரளவுக்கு வெற்றி பெறவே செய்தேன்.
எங்கள் ஊர்ப் பொதுக் கோயில்கள், அரசுக் கோயில்கள் தொடர்பான பணிகள் பெரிதும் எங்கள் வீட்டுச் சொந்தப் பணிகள் போலவே நடைபெறும். ஆதலால் அவற்றிற்கெல்லாம் என்னையே முதன்மை ஆக்கிவிட்டார்கள். எனக்கு எப்படியும் கடவுள் பக்தி ஏற்பட்டுவிடலாம் என்ற எண்ணத்தினாலோ என்னவோ கோயில் நிருவாகக் குழுச் செய்லாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் நான் ஆக்கப்பட்டுவிட்டேன்.
பணபலம், வேண்டாத நட்பு, அராஜகப் போக்கு என்று இருந்த ஈ.வே.ரா.வின் வாழ்க்கைத் தடம் மாற்றப்பட்டு அவர் பொது வாழ்விலும் அரசியலிலும் முனைப்பாக இருந்ததை நெடுஞ்செழியன் எழுகிறார்.
செல்வர்களின் சேர்க்கை, அறிவாளிகளின் கூட்டுறவு அரசியல்வாதிகளின் தொடர்பு போன்றவை ஏற்பட்டவுடன் அவரது போக்குகளில் பெரும் மாறுதல்கள் காணப்பட்டன. குறும்புத்தனம் விளையாட்டுத்தனம் – முரட்டுத்தனம் போன்றவைகள் மறைந்து அவர் பெருந்தன்மைக்கும் பெருமதிப்புக்கும் உரியவராகக் காட்சியளிக்கத் தொடங்கினார்.
பெரியவர் இராமசாமி அவர்கள் பொதுநல நோக்கு, பொதுத் தொண்டாற்றும் பாங்கு ஆகியவற்றின் காரணமாக 1910க்கும் 1919க்கும் இடையில் பல்வேறு பொதுநல அமைப்புகளில் பங்கு கொண்டு ஈடுபட்டு வந்தார்.
பெரியார் இராமசாமி அவர்கள் ஈரோட்டு நகராட்சி மன்றத் தலைவராக இருந்த போது திரு. சக்ரவர்த்தி இராசகோபாலச்சாரியார் சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
பஞ்சாப் மாகாணத்தில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலைகளை காரணமாக வைத்துப் பெரியார் அவர்களும் இராஜாஜி அவர்களும் தங்கள் தங்கள் நகராட்சி மன்றத் தலைவர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். பெரியார் அவர்கள் வகித்து வந்த எல்லா மதிப்புறு பதவிகளையும் அடியோடு துறந்துவிட்டுக் காங்கிரசின் சார்பாகத் தீவரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ஈ.வே.ரா.வை முதலில் ஈர்த்தது ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்ற அமைப்பு. இந்தச் சங்கம் பற்றி திரு.வி.க. தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். நீதிக்கட்சியின் பிராமண எதிர்ப்பை முனைமுறியச் செய்வதற்காக காங்கிரசில் உள்ள பிராமணரல்லாதார் இந்த அமைப்பை ஏற்படுத்தினர் (1917). தி.வி. கோபாலசாமி என்பவர் இந்த அடிப்படையில் தனிச்சங்கம் அமைக்கும் பொருட்டுக் கோகலே மண்டபத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். ஓ. கந்தசாமி செட்டியார் தலைமையில் நீதிக்கட்சியினர் அக்கூட்டம் நடைபெறாதவாறு தடுத்தனர்.
திரு.வி.க. எழுதுகிறார்:
ஓ.கந்தசாமி செட்டியார் தலைமையில் ஜஸ்டிஸ் சிறுபடையொன்று திரண்டு கோகலே மண்டபத்தில் பேராரவாரஞ் செய்தது. அதனால் கூட்டம் நடைபெறாமல் போயிற்று. ஆரவாரத்திடையே செருப்புகள் பறந்த காட்சியில் என் கருத்துச் சென்றது.
மீண்டும் அதே மண்டபத்தில் அடுத்த வாரம் அருணகிரி என்பார் தலைமையில் கூட்டம் கூடி ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்று பெயர் சூட்டினர்.
நீதிக்கட்சிக்குப் போட்டியாக சென்னை மாகாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சியினரின் முயற்சியால் மாற்றார் கூட்டத்தில் செருப்பு பறந்த காட்சி மேலே சொல்லப்பட்டது. அன்று எடுத்த செருப்பு அப்படியேதான் இருக்கிறது.
1972இல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார். சட்டசபையில் நடந்த அமளியைத் தொடர்ந்து அந்த வளாகத்தில் எம்.ஜி.ஆர். மீது செருப்பு வீசப்பட்டது. ‘முதலமைச்சராகத்தான் இந்த அவைக்கு வருவேன்’ என்று சபதம் செய்தார் எம்.ஜி.ஆர்.; அதை நிறைவேற்றியும் காட்டினார்.
தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் திராவிட இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அதில் யாராவது ஒருவர் ‘காலணி வீசும் கலாசாரத்தைப் பற்றியும் ஆய்வு செய்யலாம்’ என்று நான் பரிந்துரைக்கிறேன்.
ஈ.வே.ரா. சென்னை மாகாண சங்கத்தின் உதவித் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு இரண்டு ஆண்டுகளே நீடித்தது. ‘அக்காலத்தில் தாம் ஏமாந்து போய் இந்த அமைப்பில் சேர்ந்ததாக’ பிற்காலத்தில் ஈ.வே.ரா. கூறிக் கொண்டார். அவர் முதலில் ஏமாந்தாரா, காங்கிரசை விட்டு விலகிய பிறகு ஏமாந்தாரா, இல்லை ஏமாந்ததாகச் சொல்லி ஏமாற்றினாரா என்பதை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
ஈ.வே.ரா. எப்படிச் சொல்லிக் கொண்டாலும் கள் ஒழிப்பிலும் கதர் இயக்கத்திலும் ஒரு காலத்தில் ஈ.வே.ரா. சிறப்பாகப் பணியாற்றினார் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. தன் துணைவியார் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாளுடன் 1921இல் கள்ளுக்கடை மறியலில் ஈ.வே.ரா. ஈடுபட்டார்.
“எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக பெரியார் இருக்கிறார்” என்று மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் (16.10.1924) ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார்.
ஈ.வே.ரா. 1920ல் காங்கிரஸ் உறுப்பினரானார். காங்கிரஸ் இயக்கத்தின் உள்ளே அவர் தொடர்ந்து வகுப்புரிமைக்காக வாதாடி வந்தார். ஆனால் இந்தக் காலகட்டத்தில் அவரிடம் பிராமண துவேஷம் இல்லை. இது விஷயமாக அவர் சொல்வதைக் கேட்கலாம்.
தேச முன்னேற்றத்தை நாட்டக் கிளர்ச்சி செய்யும் காலத்து இந்தியாவில் பிறந்த எந்தச் சகோதரர்கள் மீதும் துவேஷம் காட்டலாகாது. பிராமணத் துவேஷம் காட்டலாகாது.
– 13.10.1919
எல்லாப் பிராமணர்களையும் நாம் ஒரே மாதிரியாய் நினைத்துக் கொண்டிருப்பதால் நமக்கு இவ்வித பயம் ஏற்படுகிறது. பிராமண சமூகத்தில் நேர்மையானவர்களும் பொது நோக்குடையவர்களும் இருக்கிறார்கள் என்பதை இவர்களுக்கு தேசத்தில் உண்மையான செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறவாமல் இருந்தால் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
– நவசக்தி 28.02.1925
சாதிக் கர்வமும் மூட நம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடமாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு. பிராமணரல்லாத சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது.
– குடி அரசு / 02.08.1925
1925க்குப் பிறகு ஈ.வே.ரா.வின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தீவிரமான பிராமண எதிர்ப்பைக் கையிலெடுத்த அவர் அடுத்த 48 ஆண்டுகளுக்கு அதைத் தொடர்ந்தார். இந்தியாவுக்கு எதிர்ப்பு, வட இந்தியருக்கு எதிர்ப்பு, காங்கிரசுக்கு எதிர்ப்பு, இந்து சமயத்திற்கு எதிர்ப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பு, தமிழ் இலக்கியங்களுக்கு எதிர்ப்பு என்று அவர் ஆற்றலையெல்லாம் செலவிட்டார். பிராமணருக்கு எதிர்ப்பு என்ற வகையில் அவர் எழுதியதும் பேசியதும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. அவர் வாக்குக்கு வல்லமை இருந்தால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் நடமாடவே முடியாது. ஆனால் தமிழ்ச் சமுதாயம் அவருடைய வசவை அங்கீகரிக்கவில்லை.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தில் பிராமணர்கள்மீது அவர் காட்டிய வெறுப்பை இங்கே எழுத முடியாது. ஆபாசம் மிகுந்த கொச்சையான அவருடைய பாஷையிலிருந்து ஒரளவு நாகரிகமானவற்றைக் கொடுத்திருக்கிறேன்.
காங்கிரஸ் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஜனங்களுக்கு உழைப்பதாகப் பாசாங்கு பண்ணி சுயராஜ்ஜியக் கட்சி என்று சொல்லிக் கொண்டும் ஏமாற்றவே பிராமணர்கள் கிளம்பியிருக்கிறார்கள். பிராமணரல்லாத ஒவ்வொரு தமிழனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
– குடி அரசு /17.10.1926
பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், சாதித் தத்துவங்களையும் இந்தத் தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூட நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தை ஒழிப்பது என்ற கொள்கை மீது சுயமரியாதை என்ற இயக்கத்தைத் தோற்றுவித்து நானே தோற்றுவித்தவனாகவும் தொண்டாற்றுபவனாகவும் இருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன்.
– குடி அரசு / 01.11.1926
மதத்தையும் சாத்திரத்தையும் எதிர்க்கிறேன் என்று வீரவசனம் பேசிய ஈ.வே.ரா., மூன்று மாதங்களுக்குள்ளேயே தடம் மாறுகிறார். ஈ.வே.ரா.வின் சகோதரர் ஈ.வே. கிருஷ்ணசாமியின் மூத்த மனைவி பெரிய நாகம்மாள் மறைவு குறித்து குடிஅரசு இதழில் வந்த அறிவிப்பே இதற்குச் சான்றாகும்.
ஸ்ரீமான் ஈ.வே.ரா. செங்கல்பட்டு முதலிய இடங்களில் அழைப்புக்கிணங்கிப் போகத் தீர்மானித்தபடியால் வெள்ளிக் கிழமையே கிரமமாகத் தங்கள் குல வைஷ்ணவ சம்பிரதாயப்படி வேண்டிய கிரியையெல்லாம் பார்ப்பனரல்லாத பாகவதர்களைக் கொண்டு சகோதரரோடு கூடவே இருந்து நடத்திவிட்டு அன்றிரவே மேற்குறித்த இடங்களுக்குச் செல்ல சென்னைக்குப் பயணமானார்.
– குடி அரசு / 10.02.1927
அவ்வப்போது ஜகா வாங்கிய ஈ.வே.ரா.வின் அரசியல் பயணத்தின் முக்கிய நோக்கம் பிராமண எதிர்ப்பாகத்தான் இருந்தது. அதற்கு ஏற்றவாறு மற்ற கொள்கைகளை அவர் வளைத்துக் கொண்டார். அவருடைய குறிக்கோளை விளக்குவதற்காக வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பேசியவற்றிலிருந்து மூன்று சாம்பிள்களைக் கொடுக்கிறேன்.
கடவுளை ஒழிக்க வேண்டுமென்றால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்.
– விடுதலை / 19.10.1958
எவ்வளவு பகுத்தறிவதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.
– விடுதலை / 20.10.1967
தி.மு.க. ஆட்சியாளர் ஓடாத தேரையெல்லாம் ஓட வைக்கக் காரணம் பார்ப்பானின் செல்வாக்குக்கு அரசு இன்னும் பயப்படுகிறது என்பதுதான்.
– விடுதலை / 23.05.1971
ஈ.வே.ரா. ஜகா வாங்கினார் என்று மேலே உள்ள பாராவில் எழுதியிருக்கிறேன். அது என்ன என்று அறிந்துகொள்ள வாசகர்களும் ஆவலோடு இருப்பார்கள் என்பதையும் அறிவேன். அது அது அந்தக் காலகட்டத்தில் வெளிப்படும். இப்போதைக்கு 1935-இல் எஸ். கிருஷ்ணமாசாரிக்கு ஆதரவு, 1942-இல் அம்மு சாமிநாதனுக்கு ஆதரவு, 1947-இல் அருணாசல அய்யரை ஆதரித்தது, 1949-இல் மாவூர் சர்மாவோடு தோழமை, 1962-இல் சீனிவாச அய்யருக்கும் டி.டி. கிருஷ்ணமாசாரிக்கும் ஆதரவு என்கிற தலைப்புகளை மட்டும் கொடுக்கிறேன்.
தனக்கு சவுகரியப்பட்ட போது சில பிராமணர்களோடு அவர் அரசியல் உறவு வைத்திருக்கிறார். இதுகுறித்து அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அதில் தற்போதைய தமிழக முதல்வரும் ஒருவர்.
ஈ.வே.ரா. சார்புடையவர்களுக்கு இந்த விஷயங்கள் நெருடலாகத்தான் இருக்கின்றன. அவர்களுக்குத் தலைவரின் சித்தாந்தம் பிடிபடவில்லை. ஆனால் நாம் தெளிவாக இருக்கிறோம்.
ஈ.வே.ரா.வின் மனோபாவத்தை வியக்கக் கூடிய மாமியார் கதை ஒன்று நமக்குத் தெரியும். அதை நண்பர்களுக்கும் தெரிவிக்கிறோம்.
கணவன், மனைவி, கணவனின் தாய் என்ற மூன்று பேர் கொண்ட குடும்பம் அது. கச்சிதமாகக் குடும்பம் நடத்தலாம். ஆனால் விதியின் கணக்கு வேறுவிதமாக இருந்தது. பையன் அம்மாவுக்கு அடங்கியவன். அம்மாவோ, அடக்கி ஆள்வதுதான் குடும்ப தர்மம் என்று நினைப்பான். மருமகள், காலம் மாறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் காலையில் வீட்டு வாசலில் பிச்சைக்காரன் வந்துவிட்டான். மாமியார் கொடுப்பதில் விருப்பமில்லாதவள் என்று மருமகளுக்குத் தெரியும் பிச்சைக்காரனை அவள் அனுப்பி விட்டாள்.
உள்ளே இருந்த மாமியாருக்கு மூக்கில் வியர்த்து விட்டது. ‘வாசலில் யார் வந்தது?’ என்று விசாரித்தாள்.
‘பிச்சைகாரன் வந்தான். அவனை அனுப்பிவிட்டேன்’ என்றாள் மருமகள் ‘அவனை ஏன் அனுப்பினாய்?’ என்று மாமியார் குதியாய் குதித்தாள். மருமகளின் சமாதானம் எடுபடவில்லை.
இந்தப் பிரச்சினை தீராது என்று நினைத்த பையன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்து பிச்சைக்காரனைத் தேடினான். பிச்சைக்காரன் அதற்குள் அடுத்த தெருவுக்குப் போய்விட்டான்.
ஒரு வழியாக அவனைக் கண்டு பிடித்து, சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து அழைத்து வந்தான் பையன்.
அந்தப் பெண்மணி வீட்டு வாசலிலேயே காத்திருந்தாள்.
ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளோடு பிச்சைக்காரன் கிழே இறங்கினான்.
‘நான்தான் இந்த வீட்டின் அதிகாரி. உனக்குப் பிச்சை கிடையாது. நீ போகலாம்’ என்றாள் அவள்.
ஈ.வே.ரா.வோடு கொள்கைப் பயணம் போனவர்களுக்கு பையன் நிலைமைதான் சாத்தியம். அதில் ஒழுங்கையோ, தெளிவையோ எதிர்பார்த்தால் அது கிடைக்காது.
ஈ.வே.ரா.வை பாதித்தவர்கள் பிராமணர்கள், ஈ.வே.ரா.வால் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அந்த பாதிப்பை ஓரளவாவது சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பகுதி எழுதப்பட்டது. மற்றபடி ‘பிராமண சமூகம் விசேஷ கவனத்திற்குரியது’ என்பது என் எண்ணமல்ல.
அடுத்த பகுதியில் அரசியல் வரலாறு தொடரும்.
மேற்கோள் மேடை:
தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களுடைய யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்லுவது மிக்க மோசமான காரியம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
– ஈ.வே.ரா. / குடி அரசு 27.07.1930