கால்டுவெல்லின் தாயாதிகள்
ஒருநாள் தியாகராச செட்டியாரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து இறங்கினார். அவர் வந்து இறங்குவதைக் கண்ட தெருவார் பலர் கூட்டமாகக் கூடி விட்டனர்…
அப்போதுதான் செட்டியர் சிவபூசையை முடித்து உணவுண்டு கையில் ஒரு விசிறியுடன் வந்து புறத்திண்ணையில் அமர்ந்திருந்தார்; முழங்கால் வரையிலுள்ள ஒரு துண்டு மாத்திரம் இடையில் இருந்தது…
செட்டியார் துரையை வரவேற்றார்.
“தங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையே, காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த துரை யாரேனும் அனுப்பினார்களா?” என்று கேட்டார் செட்டியார்.
“இல்லை; நானேதான் தங்களைத் தேடி வந்தேன்; மதுரையிலிருந்து வருகிறேன். தமிழ் படித்து வருகிறேன்”.
அந்தத் துரை குழறித் குழறித் தமிழிலே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே அவர் ஒரு பாதிரியாராக இருக்க வேண்டுமென்பதைச் செட்டியார் ஊகித்துக் கொண்டார்.
“சந்தோஷம். படிக்கப் படிக்க இனிமை தரும் பாஷை தமிழ்” என்றார் இவர்.
“நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறள் படித்தேன். அந்த இலக்கணத்தின்படி குறளைச் சில இடங்களில் திருத்தியிருக்கிறேன். தங்களிடம் காட்ட வந்தேன்”.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் திடுக்கிட்டார்.
“என்ன, குறளையா திருத்தினீர்கள்?” என்று படபடப்போடு கேட்டார்.
“ஆமாம். எதுகை மோனை சில இடங்களில் சரியாக அமையவில்லை…”
செட்டியாருக்குக் கோபம் மூண்டது.
“தக்கார் தகவிலார் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்றிருக்கிறதே; இதில் எதுகை நன்றாக அமையவில்லையே. இரண்டாவது அடியை ‘மக்களாற் காணப்படுமெ’ன்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?”
அவரை மேலே பேசவொட்டாமல் செய்தது செட்டியாரின் செய்கை. இவர் எழுந்து நின்றார்; தலையிலே அடித்துக் கொண்டார்; காதைப் பொத்திக் கொண்டார். துரை ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகி விட்டீரோ! குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்றும் மக்களென்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையிலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் இவர் கதவை அடைத்துக் கொண்டார்…
துரை வேறு வழியொன்றும் காணாராய் வந்த வழியே திரும்பச் சென்றார்.
– பக். 520-523 / டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் உரைநடை நூல்கள் / தொகுதி 3.
‘தமிழைப் பாதிரியார்கள் தாங்கிப் பிடித்தனர்’ என்ற கருத்து திராவிட இயக்கத்தின் ஆதரவாளர்களால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. அது முழு உண்மை அல்ல என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
முதலில் திருக்குறளைச் திருத்தத் தொடங்கிய கிறித்தவர்கள் இப்போது திருவள்ளுவரையே திருத்தத் துணிந்துவிட்டார்கள். தங்களுடைய மெளடீகத்தை மறைப்பதற்காக கரென்சியால் எடை கட்டுகிறார்கள். கோடிகளைக் கொட்டித் தயாரிக்கப்படும் புனித தாமஸ் திரைப்படத்தில் தாமஸின் சீடராகத் திருவள்ளுவர் தோன்றப் போகிறார்.
திரைப்படத்துக்கு முன்னோடியாக புத்தகம் ஒன்று வெளிவந்து தமிழ் மண்ணில் நச்சுக் காற்றை வீசிக் கொண்டிருக்கிறது.
முனைவர் மு. தெய்வநாயகம் என்ற கிறித்தவர் ‘திருக்குறள் கிறித்தவ நூலே’ என்பதை நிறுவிவிட்டதாக சொல்லிக் கொண்டு அலைகிறார். கருணாநிதியின் காரோட்டியைப் பற்றிக்கூட ‘கவர் ஸ்டோரி’ எழுதும் விகடன் குழுமத்தில் தெய்வநாயகத்திற்குக் கெளரவம் தரப்படுகிறது. தமிழகத்திலுள்ள ஆதிக்க சர்ச்சுகளும் தெய்வநாயகத்திற்கு ஆதரவு தருகின்றன. (பார்க்க: சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்).
சில கிறித்தவர்களால் பேசப்படும் அபத்தங்களையும், நிகழ்த்தப்படும் அபசாரங்களையும் தட்டிக் கேட்பதற்காகத் தமிழ்க் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கும்பகோணத்தில் உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம் ஒன்று தமிழர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தமிழுக்கும் தமிழருக்கும் இன்று கிறித்தவர்களால் ஏற்பட்டிருக்கும் அபாயங்களை அறிய விரும்புவோர் தமிழ் இந்துவில் வெளிவந்த உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
தெய்வநாயகம் போன்றவர்களுக்குத் திருக்குறள் மீதுள்ள அபிமானம் பற்றி அறிய விரும்புவோர் பட்டடையைப் பற்றிப் பேசும் குறளைப் (821) படித்துப் பார்க்கவும்.
1917-க்கு முன்பு தமிழகத்துக்கு வந்த பாதிரியார்களின் சொல்லையும், செயலையும் பற்றி இந்தப் பகுதியில் நாம் சிந்திக்கலாம்.
டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப் பட்டணத்திலும் (1647), நாகைப்பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.
1706-ல் ஸீகன்பால்க் என்ற டேனிஷ் புராட்டஸ்டன்ட் பாதிரி தஞ்சைக்கு அருகில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்தார். அப்போது தரங்கம்பாடியில் கத்தோலிகர்களுக்கும் புராட்டஸ்டன்டுகளுக்கும் தனித்தனி சர்ச்சுகள் இருந்தன.
ஸீகன்பால்க் தமிழர்களின் மதங்கள், நடைமுறைகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத் தமிழறிஞர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். தனக்குக் கிடைத்த பதில்களை ‘Malabarische Correspondence’ (தமிழ்க் கடிதங்கள்) என்ற பெயரில் ஜெர்மானிய மொழியில் வெளியிட்டார்.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வந்து இறங்கிய போர்ச்சுகீசியர்கள் அந்த இடத்தை ‘மலபார்’ என்றும் அந்த மக்களை ‘மலபாரிகள்’ என்றும் அழைத்தனர். பிறகு கிழக்குக் கடற்கரைக்கு வந்த போதும் இந்தப் பெயரே நீடித்தது. அதாவது மலபாரின் என்றால் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விவரங்கள் அ.மார்க்ஸ் எழுதிய ‘தமிழில் அச்சுப் பண்பாடு – சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்’ என்ற நூலில் உள்ளன; வம்சி வெளியீடு.
கிறித்தவம் குறித்து தமிழர் ஒருவர் எழுதிய பதில் இது:
“பசுக்களைக் கொன்று தின்னும் வழக்கத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவர்களை வெறுக்கிறோம். மலம் கழித்தபின் அவர்கள் நீர்கொண்டு சுத்தம் செய்வதில்லை. கடும் போதையுள்ள சாராயம் அருந்துகின்றனர். இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைவதற்கு ஏற்ப இறப்புச் சடங்குகளை செய்வதில்லை. திருமணங்களை அவர்கள் கொண்டாடுவதில்லை”.
அன்றைய தமிழர்களின் சமயப்பற்றும் சுகாதார உணர்வும் உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ்ச் சமூகம் குறித்த உயர்வான கருத்துக்களை ஐரோப்பிய கிறித்தவ இறுமாப்பு (Christian Arrogance) அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. ஸீகன்பால்க் எழுதிய ‘நீதி வெண்பா’ மொழிபெயர்ப்பு, தமிழ்ச் சமூகம் குறித்த நூல்கள் எல்லாம் வெளியிடப்படாமல் ஆவணக் காப்பகங்களில் முடக்கப்பட்டன. ‘இந்தியாவில் அஞ்ஞானத்தை அழித்தொழிப்பதற்காகத்தான் மிஷனரிகளை அனுப்பி வைத்தோம். இந்த அபத்தங்களை ஐரோப்பா முழுவதும் பரப்புவதற்கு அல்ல’ என்றார்கள் அவர்கள்.
ஸீகன்பால்கும் அந்த இறுமாப்பைக் காட்ட வந்தவர்தான். அவர் நடந்த வழியில் தென்பட்ட அம்மன் கோவிலின் வெளிப்புறம் இருந்த சிலை வடிவங்களைத் தான் உடைத்தது பற்றி அவரே எழுதியுள்ளார்.
ஆட்சி நம்முடையது என்ற ஆணவம்தான் இதற்கு அடிப்படை. கிறித்தவர்களைப் பொறுத்தவரை முடிந்தால் ஆட்சி செய்வார்கள்; இல்லாவிட்டால் ஆட்சியில் இருப்பவர்களை ஆதரித்து விடுவார்கள்.
இதை நான் சொல்லவில்லை. மூத்த அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜோதிபாசு சொன்னது இது.
முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசுவுக்கு கல்கத்தாவைச் சேர்ந்த கிறித்தவர்கள் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். அந்த விழாவில் பேசிய ஜோதிபாசு கிறித்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை என்றார். அவர்கள் எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களைத்தான் ஆதரிப்பார்கள் என்றார் அவர்.
வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிமார்களைப் பற்றி இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்.
சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அரசுப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றார். ஸ்வீடன் நாட்டு அரசர் நேருவுக்கு விருந்தளித்தார். ‘ஸ்வீடனைச் சேர்ந்த பாதிரிமார்கள் 300 பேர் இந்தியாவில் இருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகள் அந்தப் பாதிரிமார்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும்’ அரசர் நேருவிடம் தெரிவித்தார். ‘இந்தியாவிலிருந்து 1000 துறவிகளை அனுப்பினால் ஸ்வீடன் ஏற்றுக் கொள்ளுமா?’ என்று கேட்டார் நேரு. ‘இது இந்தியாவின் அரசியல் சம்பந்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பாதிரியார்கள் 5700 பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இது போதும். இந்தியக் கிறிஸ்தவர்களே இந்தியாவில் சமயப்பணி செய்து கொள்ளலாம்’ என்றார் நேரு.
நேருவுக்கு இந்து சமயத்தில் பற்றும் இல்லை; பயிற்சியும் இல்லை. அவரை இயக்கியது மேற்கத்திய கலாசாரமும் பொருளாதாரக் கொள்கைகளும்தான். அவருக்கே ‘அந்நியப் பாதிரிகளின் நடவடிக்கைகள் அதீதம்’ என்று தெரியும்போது சராசரிக் குடிமகன் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறான் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் வாழ்ந்த (1709-1761) ஆனந்தரெங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பில் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தை கிறிஸ்தவர்கள் இடித்தது பற்றி விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால் அந்தக் கொடுமையைப் படித்த பிறகு உங்கள் ரத்தத்தின் கொதிநிலை உயர்ந்தால் அதற்கு நான் காரணமல்ல.
பிரான்சு நாட்டைச் சேர்ந்த ழான் வெனான் பூஷே (Jean Venant Bouchet, 1655-1732) என்ற பாதிரியார் தென் இந்தியாவில் 40 வருடங்கள் சமயப் பிரசாரம் செய்தார். 1689ல் பாண்டிச்சேரிக்கு வந்த இவர் 1702 க்குள் 20,000 பேரை மதம் மாற்றியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைப் பற்றி இவர் எழுதியுள்ளதைப் பார்ப்போம்:
காசியைவிட ரமணன்கோரைப் பற்றி என்னால் விவரமாகச் சொல்ல முடியும். இதை இந்தியர்கள் ராமேஸ்வரம் என்று அழைக்கின்றனர். ஆலயம் இருக்கும் தீவில் நான் பத்து நாட்கள் தங்கி இருந்தேன். இந்தத் தீவைப் பற்றி பல கதைகள் உள்ளன. அழகான மரங்கள் சூழ்ந்திருக்க, ஆலயம் தெற்குப் பகுதிக் கடற்கரையில் உள்ளது. பெருமையாகச் சொல்லப்படும் 300 கல்தூண்களை நான் பார்க்கவில்லை. இங்கே கடலில் குளிப்பதால் பாவங்கள் நீக்கப்படுகின்றன என்று இந்துக்கள் நம்புகிறார்கள், அதிலும் சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும்போது நீராடுவது மிகவும் விசேஷமானது என்ற நம்பிக்கை இருக்கிறது.
பிசாசைக் கும்பிடுவதற்காக இத்தனை பேர் வருகிறார்களே என்று நான் வருத்தப்பட்டேன். ஆனால் இறைவன் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்கிறான். அருகே உள்ள ஒரு கிராமத்தில் சர்ச் இருக்கிறது. அங்கே குழந்தைகளுக்கு நான் ஞானஸ்நானம் செய்வித்தேன்.
-பக். 19, 20 / Fr. Bouchet’s India / Francis X.doony / Satya Nilayam Publications.
ஸ்ரீரங்கம் தீவிலும் ஒரு சர்ச் ஏற்படுத்த பூஷே (Bouchet, 1700) முயற்சி செய்திருக்கிறார். பெருமாள் கோவிலுக்கு அருகே கட்டப்பட்ட சர்ச்சுக்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கிறித்தவர்களை வெளியேறச் சொன்னபோது, கிறித்தவர்கள் உள்ளூர் கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கி விடுகின்றனர். முடிவில், சர்ச்சில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. கிறித்தவர்களே சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.
ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறித்தவப் பாதிரியார்கள் இறங்கியபோது, இன்னொரு பக்கம் கிறித்தவத்தை முன்னிலைப்படுத்தாமல் இந்துக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி தொடங்கியது. இந்துக்களை மதமாற்றம் செய்தவர்கள் அனைவரும் கால்டுவெல்லின் தாயாதிகள். மற்றவர்கள் கூரையையும் சுவர்களையும் அசைக்க முயன்றபோது பிஷப் கால்டுவெல் அஸ்திவாரத்தில் கண் வைத்தார்.
இந்திய தேசிய ஒற்றுமைக்கு எதிராக ‘திராவிடம்’ என்ற சொல்லை பிஷப் கால்டுவெல் தூக்கிப் பிடித்தார். மொழிப்பற்று காரணமாக கால்டுவெல் தமிழகத்தில் சிறப்பிக்கப்படுகிறார். இருந்தாலும் அவருடைய நோக்கங்களை ஆராய வேண்டும்.
இது தொடர்பாக கணையாழி, ஏப்ரல் 1997 இதழில் முனைவர் க. முத்தையா எழுதிய ‘கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன் (பக். 58/66):
பிரதேச வாதத்தை முக்கியப்படுத்தும் முயற்சியில் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) எட்கர் தஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) கில்பர்ட் ஸ்லேட்டர் (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு) ஆகியோர் இறங்கினர். இவர்களின் பிரதேச வாதத்திற்குத் தனியான அரசியற் காரணங்களும் உண்டு…
கால்டுவெல்லின் ஒப்பியல் அறிவு திராவிட மொழி ஆய்வுகளில் சில அரசியல் உள்நோக்கத்தோடே பயன்படுத்தப்பட்டுள்ளது…
அவர் வருகையின் நோக்கம் தென்னிந்திய மக்களை எப்படியாகிலும் சமய மாற்றம் செய்து அவர்களைக் கிறித்தவர்களாக்குவதேயாகும். அவருக்கு இடப்பட்ட சமயப் பணியில் வெற்றியும் கண்டார். தாம் இடையான்குடி கிராமம் வருவதற்கு முன்னர் ஆறாயிரமாக இருந்த திருநெல்வேலி கோட்டக் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இலட்சமாக்கிய பெருமை அவரையே சாரும்….
அவர் ஆய்வை ஊன்றிப் படிக்கும்போது தமிழின் தொன்மையை நிறுவுவதைவிட, தமிழர்களின் தனித்தன்மையை விளக்குவதைவிட சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இந்துமத இகழ்ச்சி ஆகியனவற்றை விளக்குவதே தம் ஆய்வின் நோக்கமாகக் கொண்டுள்ளார். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தம் ஆய்வில் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்…
இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
இம் முயற்சியின் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாகத் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.
கால்டுவெல்லுக்கு முன் டி. நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘திராவிடம்’ என்ற சொல்லாட்சி இல்லை. கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இணக்கமான மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது.
கால்டுவெல் வகையறாவைப் பற்றி விளங்கிக் கொள்ள அராபியப் பழங்கதை ஒன்றை சொல்கிறேன்.
பாலைவனக் குளிரில் சிக்காமல் பாதுகாப்பாகக் கூடாரத்தில் இருந்துதான் அந்த அராபியன். தனக்குக் கிடைத்த வசதிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான் அவன். பிறகு தூங்கிப் போனான். நடு இரவில் தூக்கம் கலைந்து பார்த்தபோது, கூடாரத்திற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒட்டகம் உள்ளே மூக்கை நுழைத்திருப்பதை அவன் கண்டான். ‘அடடா, ஒட்டகத்திற்குக் குளிர் தாங்கவில்லை’ என்று பரிதாபப்பட்டு, தன் கால்களை மடக்கிக் கொண்டு ஒட்டகத்தின் முகம் உள்ளே வருவதற்கு இடம் கொடுத்தான். மீண்டும் தூக்கம்.
தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருந்தபோது, முகத்தில் தொடங்கி, கழுத்து, உடல், கால்கள் என்று எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்துவிட்டது ஒட்டகம், அடிக்கடி புரண்டு படுத்த அராபியன் மெதுவாக வெளியேற்றப்பட்டான்.
குளிர்காற்று தாக்கியபோது கண்விழித்த அராபியன் ஒட்டகம் உள்ளே இருப்பதைக் கண்டான்; ‘இறைவா, இது நியாயமா’ என்று கேட்டான். இவனுடைய இயலாமைக்கு இறைவன் என்ன செய்ய முடியும் என்பதாகக் கதை முடியும்.
கால்டுவெல் தொடங்கிவைத்த கருத்தாக்கம்தான் ஒட்டகம், தமிழ்ச் சமூகம்தான் அராபியன். இரவு முடிவதற்குள் ஒட்டகத்தை அதன் இருப்பிடத்திற்கு அனுப்ப வேண்டும்.
செய்வீர்களா?
இடஒதுக்கீடு பற்றி மறுமொழி எழுதியுள்ள நண்பர் அன்பழகனுக்காக ஒரு விளக்கம். இந்தத் தொடரின் காலத்தை 1977 ஆம் ஆண்டு என்ற எல்லையோடு நிறைவு செய்வதாக இருக்கிறேன். அன்பழகன் குறிப்பிடும் ‘மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு’, ‘உள் ஒதுக்கீடு’ ஆகியவை இந்தக் காலவரம்பிற்குள் வராது. இன்னொரு சமயத்தில் இன்னொரு இடத்தில் இதுபற்றிப் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
இந்தியாவில் தமது ஆட்சியை வலுப்படுத்தி வந்த ஆங்கில ஆட்சியாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி ஆரிய–திராவிட முரண்பாடு உருவாகவும் மிகப் பெரிய சமுதாய அரசியல் வடிவம் பெறவும் ஏதுவாய் அமைந்தது.
– க. கைலாசபதி