வையாபுரிக்கு வணக்கம்
1937-38ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள், வள்ளுவக்குடி வாத்தியார் பெத்தபெருமாள் என்பவரைக் கொண்டு வந்து பாங்கல் ஆற்றங்கரையில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள். அவருக்கு மாதம் கால் ரூபாயும் குறுவை சம்பாவில் ஒரு பருவத்திற்கு ஒரு மரக்கால் நெல்லும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. பெத்த பெருமாள் பெரியார்–அம்பேதகாரின் தீவிர ஆதரவாளர்.
அவர் திருவாரூரில் பெரியார் பேசிய கூட்டங்களுக்கு தனுஷ்கோடியை அழைத்துப் போனார்; பெரியாரின் பிராமண எதிர்ப்புப் பிரசாரம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று…
ஒரு மாத காலத்திற்குப் பின் திருத்துறைப்பூண்டியில் பெரியார், ஈ.வி.கே. சம்பத், எம்.ஆர். ராதா, அண்ணாதுரை, நெடுஞ்செழியன் பேசிய கூட்டத்திற்கு தனுஷ்கோடி சென்றார். வேட்டி, பனியன், கிராப்பு சகிதம் போனார். கூட்டத்திற்குச் சென்று திரும்பும் போது அவருக்கு ஒரு பெரும் அனுபவம் கிடைத்தது. அதை அவரே கூறுகிறார்:
“அந்த ஊரில் சன்னாலுர் பக்கிரிசாமிபிள்ளை என்பவர் ‘டீக்கடை’ வைத்திருந்தார். அவர் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு மனைவிகள். அவரது மனைவிகள், குழந்தைகள் அனைவருமே கறுப்பு உடைதான் அணிவார்கள். அந்த அளவு பெரியார் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். நான், பெரியார், அம்பேத்கார் பேட்ஜை அணிந்து கொண்டு அவரது கடைக்குள் சென்று டீ குடிக்க அமர்ந்தேன். என்னுடைய தோற்றத்தில் இருந்தே நான் ஒரு அரிஜன் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவ்வளவுதான் அங்கேயே என்னைப் புரட்டி எடுத்துவிட்டார். அவர் மட்டுமல்ல, கடையில் இருந்த அனைவருமே என்னை புரட்டி புரட்டி எடுத்தனர், நையப் புடைத்தனர்…
“நான் பெரியார் கட்சிக்காரன்” என்று கத்தினேன். “என்னடா பெரியார் கட்சி” என்று கேட்டு அடித்தார்.
-பக். 51,52 / ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம் / என். ராமகிருஷ்ணன் / சவுத் விஷன்
திராவிட இயக்கத்தவரால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை இந்தத் தொடரில் சொல்லி வருகிறேன். அதில் தனுஷ்கோடியின் காயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமதர்மம் என்றும் சாமானியர் என்றும் இவர்கள் பேசுவார்கள்; அதனால் கிடைத்த அரசியல் ஆதாயத்தை கவனமாக அயல்நாடுகளில் முதலீடு செய்வார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் விழிப்படையக் கூடாதென்று உஷாராக இருப்பார்கள். திராவிடர் ஆட்சியில்தான் கீழ்வெண்மணிக் கொடுமை நடந்தது, திராவிடர் ஆட்சியில்தான் மேலவளவு முருகேசன் படுகொலை நடந்தது, திராவிடர் ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டவர்களான பெண்கள் தாமிரபரணியில் மூழ்க வைக்கப்பட்டார்கள், திராவிடர் கட்சியினர்தான் திண்ணியம் கொடுமையை நடத்தினார்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
யாராவது ஒருவர் இந்தச் சான்றுகளைப் பார்த்த பிறகு உண்மையை உணர்ந்து தனக்குப் போடப்பட்ட முகமூடிகளைக் கழற்றி வைப்பாரென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
இந்தமுறை முதலில் சொல்வது, வையாபுரிக்கு வணக்கம். நம்முடைய எழுத்தை இவர் ரசிக்கிறார்; இருந்தாலும் ஈ.வே.ரா. மீதான விமர்சனங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள இவரால் முடியவில்லை. இவருடைய ஐயப்பாடுகளுக்கு என்னால் இயன்றவரை பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.
எங்கே தொடங்குவது!
விநாயகரோடு தொடங்குவதுதானே நம்முடைய வழக்கம். பார்க்கலாம். விநாயகரைப் பற்றி பெரியாரிஸ்டுகள் என்ன சொல்கிறார்கள் என்று. ஆவேசத்தோடு அவர்கள் விநாயகர் சிலைகள உடைத்தது ஒரு காலம். இன்றைய நிலைமை என்ன?
“இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”
என்கிறார் பெரியாரிஸ்டான புதிய மாதவி. கவிதா சரண் / ஜன–ஜூலை 2007.
தமிழர்கள் விநாயகர் வழிபாட்டிற்குக் கொடுக்கும் முன்னுரிமையைப் பார்த்தோம். சோவியத் நாட்டிற்குப் பயணம் போன ஜெயகாந்தன் நண்பர்களுக்குப் பரிசுப் பொருளாக விநாயகர் சிலைகளையே எடுத்துச் சென்றதாக ஒரு சுவையான கட்டுரையில் சொல்லியிருக்கிறார். இந்து மதத்திற்குப் பாதகம் செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தவர் ஈ.வே.ரா. அவருடைய தோல்விகளில் தலைமை இடம் விநாயகர் எதிர்ப்புப் போராட்டத்திற்குத்தான்.
விநாயகரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு மேலே போகலாம்.
‘ஈ.வே.ரா. சமூக சீர்திருத்தவாதி’ என்கிறார் நண்பர் வையாபுரி.
இந்தப் பெருமை குறித்து ஈ.வே.ரா.வின் கருத்தை வையாபுரியின் பார்வைக்கு வைக்கிறேன்.
“நமது இயக்கம் சீர்திருத்த இயக்கம் அல்ல. அழிவு வேலை இயக்கம். இன்றைய நிலையில் சமத்துவத் தன்மைக்கு மத சம்பந்தமாக, கடவுள் சம்பந்தமாக, பொருளாதார அரசியல் சம்பந்தமாக அனுகூலமானவை இல்லை. ஆகவே எப்படிச் சீர்திருத்தம் செய்வீர்கள்… நாம் பொதுச் சேவைக்காரர்கள் அல்ல, புரட்சிக்காரர்கள். நமக்கு சீர்திருத்தக்காரர்களும் பொதுநலச் சேவைக்காரர்களும் பெரிய விரோதிகள்”.
– கோவை கூட்டத்தில் ஈ.வே.ரா. பேசியது / 30.01.1933
ஈ.வேராவின் வார்த்தைகளைப் பார்த்த பிறகு வையாபுரி தன்னுடைய மதிப்பீட்டை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
“பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. என் போன்றவர்கள் இன்று அரசுப் பணியில் இருப்பதற்கு அவர்தான் காரணம்” என்கிறார் வையாபுரி.
இனி, அரசுப்பணி, இட ஒதுக்கீடு, தாழ்த்த்ப்பட்டோர் பற்றிப் பார்ப்போம்.
இட ஒதுக்கீடு எப்படி, எப்போது துவங்கியது, அதை யார் உருவாக்கினார்கள், யார் பயனடைந்தார்கள் என்பதையும் பார்ப்போம்.
பிராமணர் அல்லாதவர்களின் வேண்டுகோளை ஏற்று மைசூர் சமஸ்தானத்தின் அரசர் கிருஷ்ணராஜ உடையார் (1921) ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழுவின் பரிந்துரைப்படி வேலைவாய்ப்பில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு தந்து ஓர் ஆணையைப் பிறப்பித்தார்.
மதராஸ் ராஜதானியில் டாக்டர். சுப்பராயனின் அமைச்சரவை 1926 இல் பதவியேற்றது. இவருடைய அமைச்சரவை சுயேச்சை அமைச்சரவை; சேதுரத்தினம் எம்.ஆர். என்ற பிராமணரும் எஸ். முத்தையா முதலியாரும் அமைச்சர்களாக இருந்தனர். எஸ். முத்தையா முதலியார் வகுப்புரிமைக்காகக் கொண்டு வந்த அரசு ஆணை எண் 1129/15.12.1928 மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்வதாகச் சொல்லியது. இது குறித்த விவரம்:
வகுப்பு | இடங்கள் |
பிராமணர் அல்லாத இந்துக்கள் | 5 |
பிராமணர்கள் | 2 |
முஸ்லீமகள் | 2 |
ஆங்கிலோ இந்தியரும் கிறித்துவரும் | 2 |
தாழ்த்தப்பட்டோர் | 1 |
மொத்தம் | 12 |
இட ஒதுக்கீடு வழங்கிய அமைச்சரவையில் ஒரு பிராமணரும் இருந்தார் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
1937இல் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அமுல் நடத்தப்பட்டது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, சுப்பராயன் அமைச்சரவைக்கு ஈ.வே.ரா.வின் சுயமரியாதை இயக்கம் ஆதரவளித்தது என்பதால் அந்த இட ஒதுக்கீட்டுக்கான உரிமையை திராவிட இயக்கத்தினர் கொண்டாடுவது நியாயம்தான்.
1947ல் சென்னை மாகாணத்தில் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அந்த அரசு முதல் முறையாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தரும் ஆணையை வெளியிட்டது (21.11.1947). அதன்படி
வகுப்பு | இடங்கள் |
பிராமணர் அல்லாத முற்பட்டோர் | 44 சதவீதம் |
பிராமணர்கள் அல்லாத பிற்பட்டோர் | 14 சதவீதம் |
பிராமணர் | 14 சதவீதம் |
முஸ்லீமகள் | 7 சதவீதம் |
ஆங்கிலோ இந்தியர், கிறித்துவரும் | 7 சதவீதம் |
தாழ்த்தப்பட்டோர் | 14 சதவீதம் |
மொத்தம் | 100 சதவீதம் |
இந்திய அளவில் இட ஒதுக்கீடு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம். சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை ஆறு பேர் கொண்ட வரைவுக் குழு உருவாக்கியது: குழுவின் தலைவர் டாக்டர். அம்பேத்கர்; சிறுபான்மைச் சமூக உறுப்பினர் முகமத் சாதுல்லா; அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி. கிருஷ்ணமாசார், கே.எம். முன்ஷி மற்றும் கோபாலசாமி அய்யங்கார் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட சட்டத்தின் பிரிவுகள் 340, 16(4), 15 ஆகியவை பிற்படுத்தப்பட்டவர் மேம்பாட்டிற்காகவும், பிரிவுகள் 342, 366, 366(24), 341 போன்றைவை தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக உருவக்கப்பட்டவை. அரசியல் சட்டத்தின் 46வது பிரிவு ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு மிகுந்த அக்கறையோடு நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று விளக்கம் தருகிறது வழிகாட்டல் கோட்பாடுகள் (Directive Priciples).
இந்திய அரசியல் சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை உருவாக்கியதில் முதலிடம் டாக்டர். அம்பேத்கருக்குத்தான். இருந்தாலும் அந்த அவையில் பெரும்பான்மையினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவால்தான் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னை மாகாணத்தில், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு ஒன்று 1951இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதே இந்த வழக்கின் அடிப்படை. சென்னை மாகாண அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அரசியல் சட்டத்தின் பிரிவு 29(2)க்கு எதிரானது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்சநீதி மன்றமும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
அந்தச் சமயத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஈ.வே.ரா. கிளர்ச்சி செய்தார். மாகாணமெங்கும் பரவலாக நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்திய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்தை முன்மொழிந்தவர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த டாக்டர். அம்பேத்கர். வாக்கெடுப்பில் (01.06.1951) திருத்தத்திற்கு ஆதரவாக 243 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாயின. இந்த அவையில் காங்கிரசார் பெருமளவில் இருந்தனர் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிரதமர் நேரு தீவிரமாக இருந்தார்.
மொத்தத்தில் என்னுடைய வாதம் இதுதான்:
1. தாழத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடியவர் டாக்டர். அம்பேத்கர்.
2. இந்திய அளவில் இட ஒதுக்கீட்டைச் சாத்தியமாக்கியது டாக்டர். அம்பேதகர். அதற்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு மிக முக்கியமானது.
3. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்காக ஈ.வே.ரா. போராட்டம் எதுவும் நடத்தவில்லை.
4. இட ஒதுக்கீட்டிற்கு ஈ.வே.ரா.தான் காரணம் என்பதை ஏற்க முடியாது.
5. 1928ல் முத்தையா முதலியார் வெளியிட்ட அரசாணைக்கு ஆதரவு அளித்தவர் ஈ.வே.ரா. 1951ல் இட ஒதுக்கீட்டிற்காக அரசியல் சட்டத்திருத்தம் கோரிக் கிளர்ச்சி செய்தவர் ஈ.வே.ரா. இட ஒதுக்கீடு வரலாற்றில் இவை இரண்டும் முக்கியமானவை. ஆனால் இது வரலாற்றின் ஒரு பகுதிதான்.
6. கிளர்ச்சி செய்து ஈ.வே.ரா. சாதித்ததைவிட காங்கிரஸ் இயக்கம் இந்த விஷயத்தில் சாதித்தது மிக அதிகம்.
இந்த விளக்கங்களின் அடிப்படையில் வையாபுரி தன்னுடைய நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.
இனி, திராவிட இயக்கத்தின் தாக்கம் பற்றி இன்னும் சிலருடைய கருத்துக்களைப் பார்க்கலாம்.
தமிழ் மண்ணின் வரலாறு தலித்துகளின் எழுச்சியைக் கொன்றழித்து ‘பிராமணரல்லாதார்–பிராமணர்’, ‘திராவிடம் –ஆர்யம்’ என்ற மாயையை ஏற்படுத்தி அதையே அரசியலாகவும் ஆட்சியாகவும் செய்து வருகின்றதென்பதே உண்மை.
– பக். 17 / புதிய கோடாங்கி / பிப்.2006 / மா. வேலுசாமி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், காலச்சுவடு செப்-அக்.2000 இதழில் எழுதிய கட்டுரையில் ஈ.வே.ரா. குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார்.
சாதி ஒழிப்புக் குறித்து பெரியார் பேசியவைகூட பிரக்ஞை பூர்வமாகப் பேசப்பட்டவையா என்ற ஐயம் உண்டாகிறது. தனது 85வது பிறந்த நாள் செய்தியாக அவர் சொன்னவற்றைப் பார்த்தால் நாம் வேறு விதமாக எண்ணத் தோன்றுகிறது. “நமக்கு சமுதாய எதிரிகளாக நான்கு கூட்டங்கள் இருக்கின்றன – பார்ப்பனர்கள், நம்மில் கீழ்த்தர மக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்” எனப் பெரியார் அதில் குறிப்பட்டிருக்கிறார். “நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு இந்த நான்கு குழுவினரும் பெரும் கேடர்களாக இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்… ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் ஏன் தங்களுடைய இழிநிலை பற்றியும் கூடக் கவலை இல்லாமல் சோறு-சீலை-காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள்” என்று தலித் மக்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பெரியார். இப்படிப் பேசுகிற ஒருத்தரின் மற்ற வார்த்தைகளை எப்படி நம்ப முடியும்?
நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராவ் பகதூர் எம்.சி. ராஜா கூறுகிறார்.
நீதிக்கட்சி மூலம் சாதி இந்துக்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் தாழ்த்தப்பட்டோர் நலத்துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. துறைகளே மூடப்படும் பீதியும் உள்ளது. நல்ல காலமாக நீதிக்கட்சியின் பதவிக்காலம் இரண்டாண்டுகளோடு முடிந்து விட்டது. கடவுள் நம்மைக் காப்பாற்றினார்.
தேவேந்திர குலவேளாளர் சார்பாக வெளியிடப்பட்ட தலித் சிந்தனை விவாதம் என்ற நூலில் சொல்லப்பட்டிருப்பது / பக்.33:
பெரியாருக்கு இந்தியக் கலாசாரத்தில் பிடிப்பு இல்லை. இங்கு பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை. தனக்குச் சாதகமானவற்றைக் கூட. இங்கிருந்த மறைஞானிகள் முதலியோரை அவர் அறிந்திருக்கிவில்லை…
அவருடைய அணுகுமுறை குறுகலானது. இந்த தேசத்தின் பாரம்பரியத்தை (அறிவார்ந்த அணுகுமுறைகளைக்) கற்கவும் ஆராயவும் அவர் முற்படவில்லை…
இந்து மதத்தைப் பழிப்பது, சாதியை ஒழிப்பது, கடவுளை ஒழிப்பது என்ற கொள்கைகள் பல நூறு ஆண்டுகளாக திருவள்ளுவர் காலத்திலிருந்து முயன்று தோல்வி கண்ட கொள்கைகள். இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் வெற்றி பெற முடியாத இந்தியச் சூழலில் அவைகளை அழிக்கும் வீண் முயற்சியில் காலத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை.
தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் என்ற நூலில் கோவை ஞானி எழுதுகிறார்:
திராவிடர் இயக்கம் பிராமணருக்கு எதிராக நிற்கும் போதும் ஆவேசம் கொள்ளும் போதும் சாதி இந்துக்களுக்குத் துணையாகச் செயல்படுகிறது. இந்தச் செயல்பாடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதுதான்.
தலித்துகள் சார்பாகப் பேசப்பட்ட குரல்கள் இவை. இந்நேரம் நண்பர் வையாபுரியின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன். வாசகர் மன்றத்தில் இது தொடர்பான விஷயங்களைச் சொல்வதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆகவே மீண்டும் வையாபுரிக்கு வணக்கம்.
மேற்கோள் மேடை:
திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தலித்துகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலைப்பாடே ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு கால அரசியல் சூழ்ச்சி எனவும் பிராமணரல்லாதாரின் முன்னெடுப்பை உறுதி செய்வதற்கான ராஜ தந்திரமே சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுக் கொள்கைகளும் கடவுள் எதிர்ப்பும் என்பதுமறியாமல் தலித்துகள் ஏமாந்து வந்துள்ளனர்.
– பக். 32, முதல் பகுதி, மண்டல் கமிஷன் அறிக்கை, 1980.