மூவருக்கு எதிராக ஒருவர்
மகாத்மா காந்தி 1921 செப்டம்பரில் தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாகச் செட்டி நாடு செல்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் தங்கியிருந்த மகாத்மாவை (செப்டம்பர் 19, 1921) ‘புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த பகுதிக்குள் பிரவேசிக்கக் கூடாது’ என்ற உத்தரவைக் கொடுத்தார். மகாத்மா காந்தி அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் ஊழியர்களும் மற்றவர்களும் சாப்பிட அழைக்கப்பட்டனர். இலைகள் போட்டு உணவு வகைகள் பறிமாறப்பட்டன. டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனும் மற்றும் சில தொண்டர்களும் பரிமாறிக் கொண்டு வந்தனர். சாப்பிடுவோர் வரிசையில் அந்தப் போலீஸ் அதிகாரியும் அமர்ந்திருப்பதை டாக்டர் ராஜன் பார்த்து விட்டார். அவ்வளவுதான், கையிலிருந்த பாத்திரத்தைக் கிழே வைத்துவிட்டு, அந்த அதிகாரியைப் பார்த்து, ஆத்திரத்துடன் “ஒய், உம்மை யாரையா இங்கு சாப்பிட உட்கார்த்தியது? எழுந்திரும். மகாத்மாவுக்குத் தடையுத்தரவைக் கொடுத்துவிட்டு சாப்பிடவும் உட்கார்ந்து விட்டீரே” என்று கத்தினார். அந்த அதிகாரியின் முகம் சுண்டிவிட்டது. சரேலென்று எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவம் காந்திஜியின் காதுக்கு எட்டிவிட்டது. அவர் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டு, டாக்டர் ராஜனைக் கூப்பிட்டு அனுப்பினார். “ராஜன், அஹிம்சை தர்மத்திற்கு முரணான காரியத்தைச் செய்துவிட்டீர்களே. அந்த அதிகாரி தன் கடமையைச் செய்தார். அவரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவரை அழைத்து வந்து சாப்பிடச் செய்யும் வரையில் நான் சாப்பிடப் போவதில்லை” என்று காந்திஜி கூறிவிட்டார்.
டாக்டர். ராஜன் பஸ்நிலையத்திற்குச் சென்று அந்த அதிகாரியைப் பார்த்து மன்னிப்புக் கேட்டார். அதிகாரியின் உள்ளம் நெகிழ்ந்தது. இருவரும் ஜாகைக்குச் சென்றனர்.
– பக்.373, 374 / மகாத்மா காந்தி நூல்கள் (18) / வர்த்தமானன் பதிப்பகம்.
மகாத்மாவின் அரசியல் நிலைப்பாடுகளை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில கருத்துகளைப் பற்றிய விமர்சனங்கள் நமக்கு உண்டு; ‘பெரும்பான்மையினர்தான் அடங்கிப் போகவேண்டும்’ என்ற கொள்கையும் அதை நடைமுறைப்படுத்த அவர் கையாண்ட வழிமுறைகளும் நாட்டிற்குப் பேரிழப்பை உண்டாக்கி விட்டன. ஆனால், விடுதலைப் போரிலும், சமயப் புரட்சியிலும் அவருடைய ஆளுமை வரலாற்றில் ஏற்கனவே பதிவாகிவிட்டது. அதில் ஓட்டை போடுவோரோடு நாம் ஒத்துழைக்க முடியாது. காந்திஜியின் நோக்கங்களைச் சந்தேகிக்கும் யோக்யதை நமக்குக் கிடையாது.
மகாத்மாவின் பண்பாட்டு நிலையை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது; அதற்குக் கொஞ்சம் பக்குவம் தேவை. ஆனால் கடவுளையே வாய்க்கு வந்தபடி பேசிய ஈ.வே.ரா.வுக்கும் அவரது வழிவந்தவர்களுக்கும் மகாத்மாவைக் குறை சொல்வதில், அதற்காக வரலாற்றைப் புரட்டுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. நாக்கை வளைப்பதுதான் நாகரிகம், வசைபாடுவதுதான் வழக்கம் என்று பொதுவாழ்வைக் களங்கப்படுத்திவிட்டார்கள் அவர்கள்.
வைக்கம் போராட்டத்தைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவர்கள் மகாத்மாவைக் கண்டனம் செய்கிறார்கள்; காங்கிரஸ் என்றவுடன் கண்ணை மூடிக் கொள்கிறார்கள்; பிராமணர்கள் வைக்கம் போராட்டத்தை எதிர்த்தார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இனி, அவர்களுடைய, தரப்பையும் அதற்குப் பதிலாக உள்ள சான்றுகளையும் பார்ப்போம்:
1. வைக்கம் சத்தியாகிரக சரித்திரம் ஒரு பெரிய சூழ்ச்சிக் கதையாகும். அது இந்தியா முழுமைக்குமே சமுதாய சரித்திரத்தில் இடம் பெறத்தக்க நிகழ்ச்சியாக முடிந்துவிட்டது. அதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும் காந்தியாரும் கொடுத்த தொல்லைகள், செய்த சூழ்ச்சிகள் அளவிடற்குரியதல்ல.
-ஈ.வே.ரா. கட்டுரை / 19582. வைக்கம் போராட்டத்தில் – முதலாவது உண்மை என்பது அந்தப் போராட்டத்தினை காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது. போராட்டம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே காந்தியார் கடைசி நேரத்தில் அதில் அக்கறை காட்டினார்…
அதை வரவேற்று அதன் மூலமாக சாதி ஒழிப்புக்கு, மனித உரிமைகளுக்கு மிகப் பெரிய கருவியாக அதை ஆக்கியிருக்க வேண்டிய காந்தியார் – அந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கக் கூடாத அளவிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்தார்.
இப்படிச் சொல்வது ரொம்பப் பேருக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூட இருக்கும். காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் எனபதுதான் உண்மை. எப்போது அதை அங்கீகரிக்கத் தொடங்கினாரென்றால் – அது வெற்றியின் நுழைவாயிலில் நுழைந்துவிட்டது என்ற பிறகுதான் காந்தியார் வரவேற்கத் தொடங்கினார் என்பது வரலாற்றினுடைய மிக முக்கியமான கட்டம்.
– பக்.16, 17 / மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும் / கி.வீரமணி
3. வைக்கம் போராட்டத்திற்கு பொறுப்பேற்று நடத்தியவர் தந்தை பெரியார். அந்தப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றவர் அவர். அய்யா மட்டுமல்ல, அவரது முதல் மனைவியார் நாகம்மையாரும் அய்யாவின் தங்கை கண்ணம்மாள் அம்மையாரும் கலந்து கொண்ட போராட்டம் அது. காந்தியடிகளின் கட்டளையை மீறி நடத்தப்பட்ட போராட்டம் அது.
– சின்னக் குத்தூசி / நக்கீரன் / ஏப்ரல் 30, 1999
இதைத் தவிர வர்ணாஸ்ரமி என்று சொல்லியும் காந்திஜியைத் தாக்குகிறார்கள். ஆனால் இந்த மூவரும் பேசுவதற்கு முன்னரே, வைக்கம் போராட்டத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே தீண்டாமை, பிராமணர் பிராமணரல்லாதார் வேற்றுமை, ஆரிய திராவிட கற்பனை பற்றியெல்லாம் தனது கருத்தை காந்திஜி தெளிவாகச் சொல்லிவிட்டார்.
சென்னைக் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் (ஏப்ரல் 19, 1921) காந்திஜி பேசினார். அப்போது இந்து முஸ்லீம் சண்டை என்ற ஆதரவு இந்த அரசிற்குக் கிடைக்கவில்லை. ஆகையால் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையே உள்ள பிளவைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது” என்று அவர் சொன்னபோது கூட்டத்தில் ஒரே சிரிப்பொலியும் கரவொலியும் எழுந்தன.
தொடர்ந்து அவர் “பிராமணர்களின் பெரிய மரபுதான் இந்து சமுதாயத்தின் இன்றைய பெருமைக்குக் காரணமென்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை…
சென்னையில் உள்ள பிராமணரல்லாதார் பிராமணர்கள் மீது சில குறைபாடுகளைக் கூறுகின்றனர். அதற்கு ஒரளவு காரணமிருக்கிறது என்பதையும் நான் அறிவேன்…
பிராமணரல்லாதார் உண்மையிலேயே இதயப்பூர்வமாக இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள முடியாவிட்டால், அரசாங்கத்தின் சதியில் சேர்ந்து கொண்டு இந்த இயக்கத்தில் குறுக்கீடு செய்யாமலாவது இருப்பார்களாக…
நான் ஒரு சனாதன இந்து என்று பெருமையோடு கூறிக் கொள்கிறேன். எந்த மனிதரையும் தீண்டத்தகாதவராய்க் கருத நமது சாத்திரங்களில் எதுவமே கூறப்பெறவில்லை என்று பேசினார்.
இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த சி. கந்தசாமி என்பவர் பிராமணரலாதார் சார்பாகக் காந்திஜிக்குக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் ‘யங் இந்தியா’ ஏப்ரல் 27, 1921 இதழில் வெளிவந்தது. காந்திஜி அளித்த மறுமொழியில் “திராவிடத் தெற்கு, ஆரிய வடக்கு என்று பிரித்துப் பேச வேண்டாம் என மேற்கண்ட கடிதம் எழுதியவரை எச்சரிக்கிறேன்” என்றார்.
– பக்.338, 342 / மகாத்மா காந்தி நூல்கள் (18)
சனாதன இந்து என்பதில் பெருமைப்படுவது, தீண்டாமையை நிராகரிப்பது, பிராமணர்களின் பங்கை அங்கீகரிப்பது, பிராமணரல்லலதார் சார்பில் கூறப்படும் குறைபாடுகளும் சில நியாயமானவை என்று உணர்வது ஆகியவை காந்தியச் சிந்தனையின் அடித்தளமாக இருந்தன. அவருடைய நிறைவான வாழ்வில் இது தொடர்பாகக் கொள்கை மாற்றம் எதுவும் புலப்படவில்லை.
இருந்தாலும் தார்மீக உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த மூவரும் காந்திஜியைக் குறை சொல்கிறார்கள்.
இவர்களை மறுப்பதற்காக ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; மூவருக்கு எதிராக ஒருவர். அவர் ம. வெங்கடேசன்.
வைக்கம் போராட்டத்தில் காந்திஜி மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலில் ஒரு கட்டுரை உள்ளது. நூலின் ஆசிரியர் ம.வெங்கடேசன். (பக்.159, 160, 161):
“வைக்கம் போராட்டத்திலே 19 பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு, சிறையிலிருந்த படியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வேராவுக்கு உடனே வரவும் என கடிதம் எழுதினார்கள்” என்று சாமி.சிதம்பரனார் ஈ.வே. ராமசாமி அவர்களிடமே காட்டி அவர் சொன்ன திருத்தங்களை ஏற்றுப் பின்னர் புத்தகமான வெளியிடப்பட்ட ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்…
“எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்” என்று ‘வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த பெரியார்’ என்ற புத்தகத்தில் ஈ.வேரா கூறுகிறார்….
யார் கடிதம் அனுப்பியது என்பதிலே கூட குழப்பம் போல் தெரிகிறது…
காந்தியடிகள் டி.கே. மாதவனுக்கு ஒரு தந்தி மூலம் ஈழவர்களும் மற்றைய கீழ்ச்சாதியினரும் கோவில்களில் நுழைய எல்லாவிதமான உரிமையும் உண்டு என்று செய்தியனுப்பினார். இச்செய்தி கேரள மக்களின் கவனத்தை ஈர்த்தது. முற்போக்கு எண்ணம் கொண்ட வைதீகர்கள் கூட இதனை ஆதரித்தனர்.
டி.கே. மாதவன், கே.எம். பணிக்கரின் உதவியுடன் 1923ஆம் ஆண்டில் கூடிய காக்கிநாடா காங்கிரசு மகாசபைக்கு இப்பிரச்சினையை எடுத்துச் சொன்னார்… இந்திய தேசிய காங்கிரசு மகாசபை, கேரள காங்கிரசு மகாசபைக்கு இதில் ஈடுபடும்படி அனுமதியளித்தது. 1924ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 24ஆம் நாள் எர்ணாகுளத்தில் கூடிய கேரள காங்கிரசு, தீண்டாமைக் குழு ஒன்றை ஏற்படுத்தியது…
இக்குழு வைக்கம் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்து போராட்டத்தை அறிவித்தது.
காந்தியடிகள் போராட்டத்தை அமைதியாக நடத்தும்படி செய்தி அனுப்பினார். காந்தியடிகளின் முடிவை மதன்மோகன் மாளவியா, சுவாமி சகஜானந்தா போன்ற அகில இந்தியத் தலைவர்களும் ஆதரித்துச் செய்திகள் அனுப்பினர்.
பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ‘பெரியாரியம்’ என்ற நூலில் முனைவர் அ.கா. காளிமுத்து எழுதியுள்ள கட்டுரையில் இந்த விவரங்கள் உள்ளன.
மொத்ததில் வைக்கம் போராட்டத்தை காந்திஜி ஆதரித்தார், காங்கிரஸ் ஆதரித்தது, முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் ஆதரித்தனர் என்பது தெளிவாகிறது.
நமக்கே தெரிகிற இந்த விஷயங்கள் சமூகப் பொறுப்புடைய இந்த மூவருக்கும் தெரியாதா? நிச்சயமாக ‘போணி’ ஆகாது என்று தெரிந்தாலும் இவர்கள் கடைபோட்டதின் காரணம் என்ன? வெற்றி இல்லை என்று தெரிந்தும் விளையாடுவதின் பின்னணி என்ன என்பதை ஆராய்வதற்காக ஒரு கதை சொல்ல வேண்டும்.
பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு அந்த இளைஞர். வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமான நிலையத்தில் வந்து இறங்கினார் அவர். அவரை வரவேற்க வேலையாள் ஒருவர் வந்திருந்தார்.
“வேறு யாரும் வரலையா?” என்று கேட்டார் இளைஞர்.
“தம்பி ஒரு அசம்பாவிதம் நடந்திடுச்சி, அதான் யாரும் வரல…” என்று இழுத்தார் வேலையாள்.
“என்ன அசம்பாவிதம்?” என்றார் இளைஞர்.
“நம்ப நாய்க்குட்டி செத்துப் போயிருச்சிங்க.” என்றார் வேலையாள்.
“நாய்க்குட்டி எப்படி செத்தது?”
“வீடுபத்தி எரியும் போது நாய்க்குட்டி உள்ளே மாட்டிகிச்சு, காப்பாத்த முடியலீங்க.”
“என்னய்யா இது, வீடு எரிஞ்சு போச்சா?”
“ஆமாங்க, பெரிய ஐயாவை கண்ட்ரோல் பண்ணவே முடியலீங்க. அவருதாங்க வீட்ட கொளுத்திட்டாரு”
“நிதானத்திலதான் இருக்கியா, ஐயா வீட்டக் கொளுத்திட்டாரா?”
“அவருக்கு புத்தி பெசகி ஒரு மாசமாச்சிங்க. கட்டிப் போட்டுத்தான் வெச்சிருந்தாங்க. எப்படியோ அவுத்துகிட்டு வீட்டக் கொளுத்திட்டாருங்க.”
“இன்னும் என்னய்யா, சொல்லப்போற!” என்ற இளைஞர் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
“வேற ஒண்ணுமில்லீங்க. தங்கச்சி டிரைவர் பையனோட ஓடிப் போனதிலதான் ஐயாவுக்குக் கோளாறு ஏற்பட்டது” என்றார் வேலையாள்.
இளைஞர் முகத்தை மூடிக் கொண்டு அழுதார்.
“அழாதீங்க தம்பி, வேற நாய்க்குட்டி வாங்கிக்கலாம்” என்று அவரைத் தேற்றினார் வேலையாள்.
வேலையாளின் வர்ணனைக்கும் திராவிட இயக்கத்தாரின் கொள்கைப் பயணத்திற்கும் பொதுவான அம்சங்கள் உண்டு. வேலை வாய்ப்பில் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கீடு என்று தொடங்கியது திராவிட இயக்கம். அது பிராமண எதிர்ப்பாக கைமாறியது; பிறகு இந்துமதத்திற்கு எதிர்ப்பாக உருமாறியது; பிறகு கடவுளர்க்கு எதிர்ப்பாகக் குரல் கொடுத்தது; அடுத்து இந்திய தேசியத்திற்கு எதிர்ப்பாக நடைபோட்டது; வழி தெரியாமல் தடுமாறி மீண்டும் பிராமணர்களுக்கு எதிர்ப்பு என்ற ஊன்றுகோலை எடுத்திருக்கிறது.
நாய்க்குட்டியைப் பற்றிப் பேசிய வேலையாளை ஒதுக்கிவிடலாம். ஆனால் நாட்டைப் பற்றிப் பேசும் இவர்களை ஒதுக்க முடியாது.
தமிழ்ச் சமுதாயத்தில் அங்கங்கே இவர்களால் ஏற்றப்பட்ட விஷம் வீரியத்தோடு இருக்கிறது. அதை இறக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. எனவே அடுத்த பகுதியிலும் வைக்கம் தொடரும்.
மேற்கோள் மேடை:
நம்முடைய நாட்டு மக்களின் மாபெரும் ஸ்தாபனம் தேசபக்தியின் உருவெடுத்த ஸ்தாபனம் தேசீய காங்கிரஸ். அதன் தலைவர் காந்திஜி; பொதுமக்களின் அளவிலாத அன்பிற்குப் பாத்திரமாயிருக்கும் தலைவர் காந்திஜி.
– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான பீப்பிள்ஸ் வார் தலையங்கம் / மே 14, 1944.
திரு. வையாபுரி அவர்களுக்கு
இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அரசுப்பணியில் இருப்பதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்தான் காரணம். ஈவேரா அல்ல.
அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இருந்த்தைக்கூட ஈவேரா ஒருவித இறுக்கத்துடனே பார்த்தார். அதுமட்டுமல்ல அம்பேத்கர் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமைகள் ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துவிட்டதே பிற்டுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று அம்பேத்கரையே நமைச்சலுடன் பேசிவந்தவர்.இதுபற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமானால் ஈவேரா சிந்தனைகளைப் படியுங்கள்.
ஈவேரா பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக , சூத்திரமக்களுக்காக உழைத்தவர். அதை அவரே பல தடவை உரக்க கூறியிருக்கிறார்.
தமிழர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று மறைமலை அடிகளார் கேட்டபோது ஈவேரா சூத்திரமக்களே தமிழர்கள் என்று கூறினார்.தமிழர்களில் ஆதிதிராவிடரை அவர் சேர்க்கவில்லை.
முதுகொளத்தூர் கலவரம், கீழ்வெண்மணி கலவரம் இதைப்பற்றியெல்லாம் ஈவேராவின் எதிர்வினை என்ன? இதற்காக அவர் ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா?
தமிழ்நாட்டில் தலித் அரசியல் எழுச்சி அழுந்திப்போனதற்கு இரு இயக்கங்களை குறிப்பிடலாம். ஒன்று காங்கிரஸ் மற்றொன்று திராவிடர் கழகம்.
ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள் எல்லாம் ஆதிதிராவிடர்களாலேயே பெறப்பட்டது என்பதை வரலாற்றைப் படித்துப்பார்த்தால் தெரியும்.
சேரன்மாகுருகுலத்தில் தனியாக பிராமணரல்லாதவர்களுக்கு (சூத்திர ர்களுக்கு) உணவு கொடுத்த்தாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஈவேராவுக்கு எழுந்த பிராமணரல்லாத பற்று அதேகாலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலையில், பிராமணரல்லாத பற்று எழாத து ஏன்?
ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிறைய செய்திருக்கிறார் என்று யாராவது சொன்னால் அவர்கள் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கலாமே!