முத்துக்குமாரின் கடிதம்
சோமசுந்தரம் பிள்ளை சாதாரண சோதிடர் அல்ல… அக்காலத்திலேயே அதிக வருமானமுள்ள பெரிய ‘நாடி சோதிடர்’. எங்கிருந்தோ எப்படியோ அடையப் பெற்ற சில அபூர்வமான ஓலைச்சுவடிகள் அவரிடமிருந்தன… அந்த ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது ‘கிரந்த லிபி’ எனப்படும் ஒருவகைத் தமிழ் எழுத்தாகும். அதனைப் படிப்பதற்கு முறையான பயிற்சி வேண்டும்… அவர் தனது கம்பீரமான குரலில் அந்தக் கவிதைகளை கணீர் என்று பாடுவார். அவர் பாடப்பாட ஏகாம்பரம் பிள்ளை என்ற உதவியாளர் அதனை எழுதுவார். சில நாட்களில் நானும் எழுதக் கற்றுக் கொண்டேன்.
ஒரு நாள் ஏகாம்பரம் பிள்ளை வராததால் நான் எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி வந்து பிள்ளையிடம் நோட்டுப் புத்தகமொன்றைக் கொடுத்து, “இதைப் பாத்து வைங்க அப்புறமா வரேன்” என்று சொல்லிப் போய்விட்டார்…
“இது நான் ஏற்கனவே பாத்த ஜாதகம்தான்” என்ற பிள்ளை, “இது அவங்க தம்பியோட ஜாதகம். இப்போ அந்தத் தம்பிக்கு குரு தசையில ராகு புத்தி நடக்குது. இதுதான் கடைசிப் புத்தி. இன்னும் ஒரு வருஷம் எட்டு மாசம் ஐம்பது நாள். அதுக்கப்புறம் புதன் புத்தி வருது. அதுலேர்ந்து இன்னும் நல்லாருக்கும். அந்தத் தம்பிக்கு ஏற்கனவே வாக்கு ஸ்தானத்துல ஞானகாரகன் (புதன்) இருக்கான். அதனால்தான் நல்லாப் பேசுது. சனிதிசை மொத்தம் 19 வருஷம். அது முடியிறதுக்குள்ளே அந்தத் தம்பி ஒரு உன்னதமான இடத்தைப் பிடிச்சிடும்” என்று சொன்னார்.
நாடி சோதிடர் என்னிடம் சொல்லியபடியே உன்னதமான ஓர் இடத்தைப் பிடித்த அந்த ஜாதகக்காரர் யார் தெரியுமா?
நான்கு முறை கோட்டையில் முதலமைச்சராகக் கோலோச்சிய கலைஞர் மு.கருணாநிதி.
– – பக்கம் 79, 80 / ஒரு கதை வசனகர்த்தாவின் கதை / ஆரூர்தாஸ் / மணிவாசகர் பதிப்பகம்
நம்மைப் பொறுத்தவரை கட்டங்களிலும் கணக்குகளிலும் அதிக ஈடுபாடு இல்லை. தெய்வ நம்பிக்கை உடையவர்களுக்கு சோதிடம் அவசியமில்லை என்பதே அடியேனுடைய கருதுகோள்.
ஆனால் நம்முடைய சகா ஒருவர் இதைப் படித்துவிட்டு ‘துல்லியமான கணிப்பு’ என்று பாராட்டினார்.
உங்கள் வசதிக்காக, தமிழக முதல்வர் பிறந்தது 03.06.1924-ல்; ஆரூர்தாஸ் குறிப்பிடும் நிகழ்ச்சி நடந்தது 1950ல் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். மற்றபடி உங்கள் செளகரியப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம்.
நம்முடைய உடன்பாடோ, ஜாதகக்காரரின் எதிர்நிலையோ இதில் முக்கியமில்லை. பெரும்பான்மையான மக்களுக்கு இத்தகைய விஷயங்களில் பற்று இருக்கிறது; அதை வலுப்படுத்தும் காரணங்களும் அங்கங்கே இருக்கின்றன என்பதைச் சுட்டவே ஆரூர்தாசின் அனுபவம் சொல்லப்பட்டது. சோதிடம் மற்றும் வானவியல் பற்றிச் சில விஷயங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்…
மேலை நாடுகளில் ‘பூமி சூரியனைச் சுற்றுகிறது’ என்று சொன்னவர்களைக் கட்டி வைத்து எரித்துவிட்டார்கள். 16ஆம் நூற்றாண்டுவரை இது பாதிரிமார்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று.
ஆரிய பட்டர், வராஹமிஹிரர் போன்ற நம்மவர்கள் அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ‘பூமி சூரியனைச் சுற்றுகிறது’ என்று எழுதிவிட்டனர்.
‘சூரியன் உதிப்பதில்லை; மறைவதுமில்லை’ என்கிறது ரிக்வேதம்.
இந்து மதத்தில் நான்கு மறைகளுக்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆறு அங்கங்களில் சோதிடமும் ஒன்று.
இந்து மதத்தைச் சீரமைப்புச் செய்த ஆதிசங்கரர், ‘சங்கராச்சார்யம்’ என்ற சோதிட நூலை எழுதியிருக்கிறார்.
இனி வைக்கத்துக்கு வருவோம். வைக்கத்தில் (1924) ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக சகுனம் முதல் சனாதனம் வரை எல்லாம் ஆடிப் போய்விட்டது என்று வலுவான பிரசாரம் இங்கே நடக்கிறது. அது சரியல்ல என்று தெரிவிப்பதுவே இந்தத் தொடரின் நோக்கங்களில் ஒன்று. சரியல்ல என்றால் நியாயமானதல்ல என்று ஒருமுறையும் பொய்கலந்தது என்று ஒருமுறையும் சொல்லிக் கொள்ளவும்.
வைக்கத்தைப் பற்றி அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன? இரா. நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு / முதல் தொகுதி / பக்கம் 369 / 372:
கேரளத்தில் வைக்கம் என்ற ஊர், தீண்டாமைக் கொடுமைகளுக்கெல்லாம் தலைமை வகுத்து வந்தது. வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்த மாதவன் என்னும் ஈழ வகுப்பைச் சேர்ந்தவர் எக்காரணம் கொண்டும் வைக்கம் நான்கு மாடத்தீவுகளில் நடக்கக்கூடாது என்று அங்கிருந்த உயர்சாதியினர் தடுத்து வந்தனர்…
அந்தத் தெருக்கள் வழியே தீண்டத்தகாதவர்களை அழைத்துச் செல்லும் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் திரு. ஜார்ஜ் ஜோசப், திரு. கேசவமேனன், திரு. டி.கே. மாதவன், திரு. நீலகண்ட நம்பூதிரி போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். போராட்டம் துவங்கியவுடன் திரு. ஜார்ஜ் ஜோசப் உள்பட 19 தலைவர்கள், வரிசையாக அடுத்தடுத்து திருவாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தைப் போற்றிப் பாராட்டி அண்ணல் காந்தியடிகள் வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி வைத்தார்…
கேரளச் சிறையிலிருத்தபடியே திரு. ஜார்ஜ் ஜோசப், திரு. நீலகண்ட நம்பூதிரி ஆகிய இருவரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாருக்கு இரகசிய கடிதம் ஒன்றினை எழுதினார்கள். “தாங்கள் உடனே வைக்கம் வந்து அறப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தினதால்தான், கேரளத்துடைய மானமும், எங்களுடைய மானமும் காப்பாற்றப்படும்… உடனே புறப்பட்டு வரக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அழைப்பு விடுத்திருந்தனர்…
பெரியார் மறுநாளே வைக்கத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்… பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட ஈழவ மக்களை அழைத்துக் கொண்டு சமூகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் வைக்கத்தின் தெருவில் துணிந்து நடந்து செல்ல ஆரம்பித்தார். உடனே அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு, ஒரு திங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறை ஏகினர். பெரியார் சிறை சென்றவுடன் திரு. எஸ். ராமநாதன், கோவை. சி. அய்யாமுத்து, திருமதி. நாகம்மையார், திருமதி. கண்ணம்மாள் போன்றோர் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டுக் கைது செய்யப்பட்டுச் சிறைபடுத்தப்பட்டனர்.
ஒரு திங்கள் கழித்துப் பெரியார் அவர்கள் விடுவிக்கப்பட்டார்… பெரியார் அவர்கள் மீண்டும் வைக்கம் பகுதியில் நுழைந்தார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, ஆறு திங்களுக்குச் சிறை தண்டனையை ஏற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்…
1925 மார்ச் திங்களில் அண்ணல் காந்தியடிகள், அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்த வைக்கம் நகருக்கு வருகை தந்து பார்வையிட்டதோடு திருவாங்கூர் அரசியாரையும் கண்டு பேசினார். காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்றுத் திருவாங்கூர் அரசியார் ‘வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சாதிமத வேறுபாடு கருதாமல் எவரும் நடக்கலாம்’ என்ற ஆணையைப் பிறப்பித்தார்.
‘தீண்டாமை ஆன்மிக விரோதம்’ என்பது இந்த மண்ணில் எத்தனையோ மகான்களால் நிறுவப்பட்டுள்ள கொள்கை. பாரதியாரும் மகாத்மா காந்தியும் இதைச் சென்ற நூற்றாண்டில் செய்தனர். வைக்கம் போராட்டக்காரரின் வாரிசுகள் பாரதிக்குக் கொடுத்த இடத்தைப் பார்ப்போமா?
வைக்கம் சத்தியாகிரகம் நடந்து 60 வருடங்களுக்குப் பிறகு (1985) தமிழக அரசின் முயற்சியால் வைக்கத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அப்போது ‘துக்ளக்’ இதழில் ‘வைக்கம் சத்தியாகிரகம் சில உண்மைகள்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரைக்கு மறுப்பாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியால் எழுதப்பட்ட புத்தகம், காங்கிரஸ் வரலாறு, மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும். இந்தப் புத்தகத்தில் வீரமணி சொல்கிறார்
/ பக்கம் 15
பெரியாருடைய தொண்டர்கள் ஆதாரமில்லாமல் எதையும் பேசமாட்டார்கள். ஏதோ ‘வரலாற்று உண்மைகள்’ என்று மனம்போன போக்கிலே பேசமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது…
காங்கிரஸ் வரலாற்றிலிருந்து சுதந்திரப் போராட்டம் பற்றிய பல்வேறு நூல்களிலிருந்து பல செய்திகளை ஆதாரமாக இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இப்படிப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிற பகுத்தறிவுக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா?
வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட கோவை.சி. அய்யாமுத்து எனது நினைவுகள் என்ற நூலில் எழுதுகிறார்:
வைக்கத்துப் போர்க் காலத்தில் நாயக்கரும் நானும் மோட்டாரிலும் படகுகளிலும் திருவாங்கூர் முழுவதும் பிரயாணம் செய்தோம்… நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க் கொண்டே வந்தே மாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவைகளை அவர் உரக்கப் பாடுவார்.
ஈ.வே.ரா. பாடியதைப் பற்றி அய்யாமுத்து சொல்வது மட்டுமல்ல, தொண்டர்கள் அனைவரும் பாரதி பாடல்களைப் பாடிய செய்தி ‘தி இந்து’ நாளிதழின் தொகுப்பிலும் வந்திருக்கிறது. The Hundred Years of the Hindu / பக்கம் 334.
ஆனால், பெரிய எழுத்தில் ஒரு ஆனால் போட்டுக் கொள்ளவும்.
நெடுஞ்செழியன் புத்தகத்தில் பாரதி பாடல்களப் பற்றிய இந்தச் செய்தி இல்லை.
வீரமணியின் புத்தகத்தில் பாரதி பாடல்களைப் பற்றிய இந்தச் செய்தி இல்லை.
சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் புத்தகத்திலும் இந்தச் செய்தி இல்லை.
கவிஞர் கருணானந்தம் எழுதிய தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற நூலிலும் இந்த செய்தி இல்லை.
சின்னக் குத்தூசி எழுதிய காந்தியடிகள் கட்டளைப்படி நடந்ததா வைக்கம் போராட்டம் என்ற நக்கீரன் கட்டுரையிலும் இந்தச் செய்தி இல்லை.
சுப.வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை.
பாரதி அன்பராக அறியப்படும் ஞாநி, ஜூனியர்விகடன் இதழில் எழுதிய ‘அவர்தாம் பெரியார்’ என்ற கட்டுரையிலும் இந்தச் செய்தி இல்லை.
மங்கள முருகேசன் என்ற ஆய்வாளர் மட்டும் இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.
பாரதிக்குப் பாதகமில்லை. வரலாறு, ஆதாரம் என்று நீட்டி முழக்குகிறவர்களுக்குத்தான் ஒரு முக்காடு தேவைப்படுகிறது.
பாரதியாரை இவ்வளவுபேர் மறந்து விட்டார்களே என்று கலங்க வேண்டாம். இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த இளைஞர் கொலுவை நல்லூர் கு. முத்துக்குமார் எழுதிய கடிதம் வெளிவந்திருக்கிறது. அந்தக் கடிதத்திற்கு அவர் வைத்த தலைப்பு
‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய்
என் தமிழ் சாதியை….’
இது பாரதியார் எழுதிய ‘தமிழச்சாதி’ என்ற கவிதையின் பாதிப்பு.
வைக்கம் விஷயம் பற்றி அடுத்த வாரம் மேலும் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
சேவை செய்யாமல், பரம ஏழையுடன் தன்னை இனங்காணாமல் இருப்பவருக்குத் தன்னையுணர்தல் சாத்தியமில்லை என்பது என் கருத்து.
– மகாத்மா காந்தி / யங் இந்தியா / 21.10.1926