New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 4 கண்ணாடிக் குடுவைக்குள் காதல்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
4 கண்ணாடிக் குடுவைக்குள் காதல்
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 4

December 30, 2008
சுப்பு rss_icon16.jpg

 

கண்ணாடிக் குடுவைக்குள் காதல்

sadhuகங்கைக் கரையில் ரிஷிகேசம். அற்புதமான இடம். எத்தனையோ ஆச்ரமங்கள், மஹான்களின் உறைவிடம். அங்கே ஒரு யோகி. திடீரென்று பாலத்தில் நின்று கொண்டு, “ஐயோ! என் இடுப்பு தாங்க முடியாமல் வலிக்கிறதே! யாராவது வந்து ஓங்கி என்னிடுப்பில் உதையுங்களேன்! என் வலி தீர வேறு வழியேயில்லை” என்று கூவுகிறார். அவர் வேதனை எல்லோரையும் கலக்கியது. ஆனால் தினமும் தாங்கள் வணங்கும் அவரை, யார் உதைப்பார்கள்? அவரோ புரண்டு துடிக்கிறார். இவர்களோ செய்வதறியாது திகைக்கிறார்கள்.

எங்கிருந்தோ வந்தார் ஒருவர். ராணுவத்திலோ, காவல் துறையிலோ பணியாற்றுபவர் போலிருக்கிறது. அவர் இந்த யோகி படும் துயரத்தைக் கண்டார். அவரது ஓலத்தையும் கேட்டார். எந்தவித தயக்கமுமின்றி, தனது முரட்டு பூட்ஸ் காலால் ஓங்கி அந்த யோகியின் இடுப்பில் விட்டார் ஓர் உதை. அவ்வளவுதான்! அந்த யோகி வலி தீர்ந்து எழுந்து, ஒன்றுமே நடவாதது போல் விரைந்து சென்றுவிட்டார்.

உதைவிட்ட ஆள் என்னானார்? அந்தக் கணமே திடீரென்று யோகியாகி விட்டார். ஆம், அவர்தான் காரைச் சித்தர் என்ற பெயர் கொண்டு கனக வைப்பு என்ற நூலை எழுதியவர்.

எல்லோர்க்கும் தந்தை இறைவன்/ரமணன்/ஆக்கம் வெளியீடு

அக்கம் பக்கத்தில் நடப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. தவத்திரு காளிதாஸ் சுவாமிகளின் பேட்டியையும் அதற்கான எதிர்வினைகளையும் இங்கே வாசிக்கலாம். கோவில் தீண்டாமை பற்றி சில எதிர்க்குரல்களும் ஆங்கு எழுந்துள்ளன.

தீண்டாமை கூடாது என்பதுதான் என்னுடைய கட்சி. ஆனால் தீண்டாமை குறித்து இங்கே நிலவும் சில மயக்கங்களைத் தெளிவு செய்ய விரும்புகிறேன்.

தொடுவது என்பது தீட்சை முறைகளில் ஒன்று. கங்கைக் கரையில் இருந்த யோகி அதைத் தொடப்படுவது என்று மாற்றிக் கொண்டார். ஆன்மிக வழி முறைகளில் இடம்பெறும் தொடுதலுக்கும் வாழ்க்கையில் அன்றாடம் உணரப்படும் தொடுதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதைப் பற்றி இந்த முறை பார்க்கலாம்.

யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்ற பழக்கத்தை சாதி அடிப்படையில் வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை. அதை எல்லாத் தளஙகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியதுதான். அதற்கான சாம, தான, பேத, தண்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

ஆனால் வழிபாட்டுத் தலங்களில் நடப்பது தீண்டாமை அல்ல. பூஜை செய்வோர் பக்தர்களிடமிருந்து விலகியிருப்பது ஆசாரத்தின் அடிப்படையில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் ஆண்களையெல்லாம் ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு பெண்கள் மட்டும் பகவதிக்குப் பொங்கல் வைக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஒரு வித்தியாசமான மரபு என்று கொள்ள வேண்டும். இது தீண்டாமை அல்ல.

விக்கிரகங்கள் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வழிபாட்டுக்குரியதாக ஆகின்றன. அந்த விக்கிரகங்கள் மூலமாக தெய்வம் செயல்படுகிறது என்பது மத நம்பிக்கை. விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்பவர் அந்த நேரத்தில் விலகி இருக்கிறார். இதற்கும் தீண்டாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூஜை செய்பவர் இன்ன சாதியாரைத் தொடுவேன் இன்ன சாதியரைத் தொடமாட்டேன் என்று வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை.

மற்றபடி தொடுவதால் வேதியல் மாற்றம் ஏற்படுமா, என்பது தளங்களில் ஏற்படும் தடுமாற்றம். அனுபவங்கள் எல்லாவற்றையும் அறிவியல் சாதனங்களால் அளக்க முடியாது. கண்ணாடிக் குடுவைக்குள் காதலை அடக்க முடியுமா? தாய்ப்பாசத்திற்குத் தரக் கட்டுப்பாடு உண்டா? கவிதைக்குத் தேவையான கலோரி எவ்வளவு?

எங்கே யார், எதை நுழைக்கிறார்கள் என்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் சிதம்பரம் நடராசர் சந்நிதியில் தேவாரம் பாட வேண்டுமென்று போராடிய வழக்கறிஞரைப் போல ஆகிவிடும். அந்த வழக்கறிஞர் ஒரு முஸ்லீம். தாழ்த்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்படுவது என்பது இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்று சிலர் பிரசாரம் செய்கிறார்கள். இது தவறு என்பதை பெரியோர்கள் விளக்கியுள்ளனர். இருந்தாலும் இந்தப் பொய்ப் பிரசாரம் ஓயவில்லை.

இந்து மதத்திற்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி உண்டு. அதற்கான உதாரணங்கள் இதோ:

திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோரின் தலைவராக இருந்த எம்.சி. ராஜா இதை எதிர்த்திருக்கிறார்.

பெரியார் திடலில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய திருமதி. சத்தியவாணிமுத்து ஈ.வெ.ராவிடம் “உங்கள் பேச்சு உங்கள் முன் வீற்றிருக்கும் ஒரு சில சமுதாய சீர்திருத்த கருஞ்சட்டை வீரர்களுக்குத்தான் உயர்வை அளித்துள்ளது. பார்ப்பனர்கள் எந்தத் தொல்லையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தருவது இல்லை. பார்ப்பனர் அல்லாதவர்களால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

– எனது போராட்டம்/டாக்டர். சத்தியவாணிமுத்து

சுயமரிதை இயக்கத்தின் முன்னணித் தலைவரைப் பற்றி நாளிதழ் ஒன்றில் கி.ஆ.பெ. விசுவநாதம் கட்டுரை எழுதினார். அந்தத் தலைவருக்கு ஏற்பட்ட கோபத்தில் வேலையாளை எட்டி உதைத்ததாகவும், அதில் வேலையாளின் பற்கள் இரண்டு உடைந்து விழுந்ததாகவும் எழுதினார். ஏழையின் பல்லை உடைக்கும் பகுத்தறிவு, பகுத்தறிவைப் பாராட்டி நிற்கும் தமிழ்ப் புலமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புத் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் ஜனார்த்தனன். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் (18.03.2008) இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சுரேஷ்ராஜன் பயனீட்டாளர்கள் பட்டியலில் சிலரைச் சேர்க்க வேண்டுமென்றார்; துணை ஆட்சியர் உடன்படவில்லை. கோபடைந்த அமைச்சர் துணை ஆட்சியரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சருடைய உதவியாளர் ஷேக் தாவூத் துணை ஆட்சியரைத் தாக்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.

மேற்கோள் மேடை:

கிறிஸ்தவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை. கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப் போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறிஸ்தவ சமயம் பரவுவதற்கு இடையூறாக இருப்பது இப்போதனையே.
(டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரி 1609ல் எழுதிய கடிதம்.)

– கிறித்தவமும் சாதியும்/ஆ. சிவசுப்பிரமணியன்/ காலச்சுவடு பதிப்பகம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard