New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு


Guru

Status: Offline
Posts: 24762
Date:
ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு
Permalink  
 


ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1

 

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

குறிப்புரங்க்ஸிப்பைச் சந்திக்க ஆக்ரா சென்றுபின்னர் அவரால் வமானப்படுத்தப்பட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட சத்ரபதிபதியும் அவரது மகன் சாபாஜியும் அங்கிருந்து தப்பிய வரலாற்றுப்பின்னனித் தகவல்களைராவ் சாகிப் தேஷ்பாண்டே அவர்கள் ஆராய்ந்து The Deliverance or the Escape of Shivaji the Great from Agra என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்அதிலிருந்து சில பகுதிகள் இங்குமொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆக்ராவில் சிவாஜி மகராஜாவுக்கு நிகழ்ந்த அவமானங்கள் என்னவென்பதனைப் பற்றி ஆளாளுக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் (இந்தியர்கள், ஐரோப்பியகர்கள் இருநாட்டவரும்). சிறிது சலிப்பும், குழப்பமும் ஊட்டக்கூடிய அந்தக் குறிப்புகளிலிருந்து உண்மையில் நடந்தவற்றை ராவ் சாகிப் நமக்குப் படிக்க அளிக்கிறார். வரலாற்று ஆர்வலர்களுக்கு இது நிச்சயம் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

***

ஒரு அரசாங்கம் நன்றாகச் செயல்படவேண்டுமானால், அந்த அரசை ஆளுகிறவன் தனது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் எல்லாச் சிறிய, பெரிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்தவனாக, அதன்படி எதிர் நடவடிக்கை எடுக்கிறவனாக இருக்கவேண்டும். அதில் நிகழும் ஒரே ஒரு சிறிய சுணக்கம்கூட அந்த அரசாங்கத்திற்கு வருடக்கணக்கில் அவமானத்தை வரவழைப்பதாக இருக்கும். உதாரணமாக என்னுடைய சிறிய கவனமின்மை காரணமாகத் தப்பியோடிய மராட்டிய ஈனன் சிவாவுடன் போர்புரிய என் வாழ்நாளின் கடைசி நாள்களைச் செலவிடவேண்டியதாயிற்று.” எனக் கசப்புடன் தன்னுடைய உயிலில் எழுதினார், இந்தியாவின் இறுதிப் பேரரசனான ஔரங்கஸிப். தன்னிடமிருந்த ஏராளமான படையணிகளைக்கொண்டும், பணத்தைக்கொண்டும் சிவாஜியைக் கொன்று, தக்காணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர இயலாமல்போன இயலாமையும், வருத்தமும் அந்த வார்த்தைகளில் தெறிப்பதனை நாம் காணவியலும்.

1683-ஆம் வருடம் துவங்கி 1707-ஆம் வருடம் வரைக்குமான ஏறக்குறைய 24 நீண்ட வருடங்களில் ‘சபிக்கப்பட்ட’ மராத்தாக்களைத் தோற்கடிக்க இயலாமல் மனமுடைந்து இறந்தார் ஔரங்கஸிப். தொடர்ந்த போர்களினால் அவரது படையணிகள் நிலைகுலைந்து, களைத்துப்போயிருந்தார்கள். முக்கியமான படைத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதனையும்விட முகலாய கஜானா காலியாகியிருந்தது.

இது அத்தனையும், “கேடுகெட்ட” சிவாஜியைத் தான் தப்பவிட்ட ஒரு சிறிய தவறால் மட்டுமே நிகழ்ந்தது என்கிற உண்மை, ஔரங்கஸிப்பை அரித்துத் தின்றது. மராட்டாக்களை அழிக்கவந்த அசைக்கமுடியாத வலிமையுடைய முகலாய சாம்ராஜ்யம் இறுதியில் மராட்டாக்களை அழிக்க இயலாமல் தன்னுடைய சாம்ராஜ்யம் சிதறிப் போய்க்கொண்டிருப்பதனையும் கண்ணால் பார்த்துவிட்டே மறைந்தார் ஔரங்கஸிப்.

இரவு நேரங்களில் சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் முகலாயப்படைகளைத் திடீரெனத் தாக்கியழிப்பதிலிருந்து, முக்கியமான மலைப்பாதைகளில் ஒளிந்திருந்து தாக்கி, ஏராளமான படைவீரர்களையும், விலங்குகளையும் கொன்றும், காயப்படுத்தியும், கொள்ளையடித்தும் செல்லும் சபிக்கப்பட்ட குள்ளர்களான மராத்தாக்கள் ஔரங்கஸிப்பின் மனதில் பெரும் துயரத்தை விதைத்தார்கள். சந்தேகமில்லாமல் ஔரங்கஸிப் தைமூர் குடும்பத்து Chagtai பரம்பரையில் வந்த இந்தியாவின் பேரரசன். அவர் இந்தியாவை அவரது முன்னோர்களிடமிருந்து ஸ்வீகரித்தார். சிவாஜியோ, அவரது மூதாதையர்கள் இழந்ததைப் பெறப் போர்புரிந்தார். இந்திய ஹிந்துக்களை “நாய்கள்” எனக் கேவலமாகப் பேசிய, நடத்திய ஔரங்கஸிப்பினை வெறுத்த பூர்வகுடிகளான ஹிந்துக்கள், சிவாஜியை தங்களை விடுதலைசெய்ய வந்தவராக நோக்கினார்கள். ஔரங்கஸிப்பிற்கு எதிரான போரில் வெற்றிபெற ஒவ்வொரு இந்துஸ்தானத்து ஹிந்துவும் மனப்பூர்வமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.

இந்தச் சூழ்நிலையில், ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை (ஆகஸ்ட்17, 1666). ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எனவே, முதலில் சிவாஜி ஆக்ராவுக்குச் செல்ல வேண்டிய சூழல் எப்படி உருவாகியது, அதற்குமுன்னர் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.

Related imageதனது தந்தை ஷாஜஹானைப் பதவியிலிருந்து இறக்கி, ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக முடிசூட்டிக்கொள்ளும் வரைக்கும் (ஜுலை 23, 1658) ஔரங்கஸிப் சிவாஜியைக் குறித்து கவலை எதுவும்கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஒருவருடம் கழித்து (நவம்பர் 10, 1659), சிவாஜி பிஜப்பூரைச் சேர்ந்த தளபதி அப்துல்லாகான் என்கிற அஃப்சல்கானை தற்காப்பிற்காகக் கொன்றுவிட்ட செய்தி ஔரங்கஸிப்பை எட்டுகிறது. பிஜப்பூரையும், கோல்கொண்டாவையும் அழிக்க நினைத்து மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்த ஔரங்கஸிப்பிற்கு அந்தச் செய்தி தேனாக இனிக்கிறது. அஃப்சல்கானைக் கொன்ற சிவாஜி பிஜப்பூர் படைகளைத் தாக்கி அவர்களைத் தோல்வியுறச் செய்து விரட்டியடிக்கிறார்.

ஆப்பிரிக்க சித்திக்களின் (Siddis) எளிதில் தப்பமுடியாத முற்றுகையை பன்ஹலா கோட்டையிலிருந்து வீரத்துடன் முறியடிக்கும் சிவாஜி, அங்கிருந்து தப்பிச் செல்கிறார் (1660). சிவாஜியால் கொல்லப்பட்ட அஃப்சல்கானின் மகனான ஃபசல்கான், சித்திக்களுடன் கூட்டணி அமைத்துச் செய்த முற்றுகை அது. சிவாஜியின் வீரம்செறிந்த வாழ்வின் ஒரு பெரும் மைல்கல்லாகக் கருதப்பட்ட ஒன்று.

இதனைக் கேள்விப்படும் ஔரங்கஸிப் இதற்குமேலும் சிவாஜியை விட்டுவைப்பது ஆபத்து என்கிற முடிவுக்குவந்து, அவரது தாய்மாமனான சைஸ்டாகானின் (அமிர்-உல்-உம்ரோ சைஸ்டாகான்) தலைமையில் ஒரு பெரும்படையை தக்காணத்தைநோக்கி அனுப்பிவைக்கிறார். சைஸ்டாகான் பல போர்களின் அனுபவமும், பெரும் வீரர் எனவும் பெயரெடுத்தவர். அவருடன் ஜஸ்வத்சிங்கின் படைகளும் வருகின்றன. ஜஸ்வந்த்சிங், ஷாஜஹான் காலத்திலிருந்தே அவருக்கு விசுவாசமாகப் பணிபுரிந்தவர். அவரும் வீரத்தில் குறைந்தவரில்லை.

இருவரும் ஜனவரி 1660-ஆம் வருடம் தங்கள் படைகளுடன் ஔரங்காபாத்தில் முகாமிட்டு, சிவாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவக்குகின்றனர். ஆனால், சிவாஜியின் படைகள் சைஸ்டாகானுக்கு எண்ணவே இயலாத அளவிற்குத் தொல்லைகள் தருகின்றன. இரவுநேரத்தில் திடீரென குதிரைகளில்வரும் மராட்டாக்கள், சைஸ்டாகானின் முகாமைத் தாக்கி கைக்குக் கிடைத்ததையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.  குதிரைகள், மனிதர்கள் என எதுகிடைத்தாலும் விடுவதில்லை. எனவே வேற வழியில்லாமல் சைஸ்டாகான் கூடாரத்தைக் காலிசெய்துகொண்டு பூனாவுக்குச் செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து சங்க்ராம் துர்க்கிற்குச் சென்று, அங்கிருக்கும் கோட்டையை முற்றுகையிடுகிறார். இரண்டுமாதகால முற்றுகைக்குப் பிறகு, சங்க்ராம் துர்க் வீழ்கிறது. தீரத்துடன் போரிட்ட சிவாஜியின் படைத்தலைவரான பிரங்கோஜி நார்சலே பிடிபடுகிறார். அவரது வீரத்தை முகலாயர்கள் அறிவார்களாதாலால், சிவாஜியை நிராகரித்துத் தங்களுடன் சேர்ந்துகொள்ளக் கோருகிறார் சைஸ்டாகான். பிரங்கோஜி அதனை மறுத்து, தான் சிவாஜியின்கீழ் மட்டுமே பணிபுரிய விருப்பமுடையவனாக இருப்பதனைத் தெரிவிக்கிறார். பிரங்கோஜி என்னவானார் என்கிற விபரம் தெரியவில்லை.

பின்னர் சைஸ்டாகான் பூனாவுக்குத் திரும்புகிறார். 1663-ஆம் வருடம் வரைக்கும் மராட்டாக்களுக்கு எதிராக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. ராஜா ஜஸ்வந்த்சிங்கின் படைகளும் அவரருகே முகாமிட்டிருக்கின்றன. மராட்டாக்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்த சைஸ்டாகான், தன்னுடைய, மற்றும் தன்னுடைய படைகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறார். இருப்பினும், தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மராட்டாக்கள் சிலருடன் திடீரென ஒருநாள் நடுஇரவில் (ஏப்ரல் 5, 1663), சைஸ்டாகானின் முகாமுக்குள் நுழையும் சிவாஜி, பெரும் கலவரத்தை மூட்டுகிறார். அன்றைக்கு நிகழ்ந்த பயங்கரங்களை சைஸ்டாகான் அவர் வாழ்நாளின் இறுதிவரை மறக்கவில்லை.

முகலாயப் பேரரசரின் தாய்மாமனும், பெரும்போர்களில் வெற்றிகண்டவருமான சைஸ்டாகான் அசந்து உறக்கத்தில் இருக்கையில், அவரது இருப்பிடத்திற்குள் நுழையும் சிவாஜியால் சைஸ்டாகானின் மகனும், வேறு சிலரும் கொல்லப்படுகிறார்கள். இறுதிநேரத்தில் தப்பியோடும் சைஸ்டாகான், ஜன்னல் வழியே குதிக்கும் நேரத்தில் சிவாஜியின் வாள்வீச்சில் விரல்களை இழந்து தப்பியோடுகிறார். சைஸ்டாகான் தப்பிவிட்ட செய்தி எக்காளத்தின் (trumpet) வழியே தொலைவில் நின்றுகொண்டிருந்த மராத்தாக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மாடுகளின் கொம்புகளில் பொருத்தப்பட்ட தீப்பந்தங்களுடன் மலைச் சரிவுகளில்  நின்றுகொண்டிருக்கும் சிவாஜியின் ஆட்கள், அந்தத் தீப்பந்தங்களைக் கொளுத்தி மாடுகளை மலைகளைநோக்கி விரட்டுகிறார்கள். சிவாஜி மலையின்மீது தப்பிச்செல்வதாக எண்ணும் சைஸ்டாகானின் ஆட்கள் அந்தத்  தீப்பந்தங்களைத் துரத்திக்கொண்டு வேகமாகச் செல்ல, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிவாஜியும், அவரது ஆட்களும் வேறொரு பாதை வழியாக தப்பிச்சென்றுவிடுகிறார்கள்.

நடந்ததை அறிந்த ஔரங்கஸிப் அவமானத்தால் துடித்தார். மொகலாயப்படைகளுக்கு இதுபோன்றதொரு அவமானம், சபிக்கப்பட்ட ஹிந்து சிவாஜியால் நிகழ்த்தப்பட்டதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் உடனடியாக சைஸ்டாகானை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குகிறார். பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று சைஸ்டாகான் கெஞ்சியும், ஔரங்கஸிப் அசைந்துகொடுக்கவில்லை.

சிவாஜியின் தாக்குதல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. மராட்டாக்கள் அவர் தலைமையில் முகலாயப்பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். அன்றைக்குப் பெரும் வணிக நகரமாக, முகலாயப் பேரரசிற்கு ஏராளமான வருமானம் அள்ளித்தந்த சூரத் நகரம் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்து அகமத்நகர் சூறையாடப்பட்டது. அவுரங்காபாதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாயின. திடீரென கொங்கன் பகுதிக்கு வந்த சிவாஜியின் படைகள், அங்கிருந்த பீஜப்பூர் படைகளை துவம்சம் செய்தன.

ஔரங்கஸிப் கோபத்துடன் தன் மகன் முகமது முவ்வாஸத்தை சிவாஜிக்கு எதிராகப் போரிடப் பெரும்படையுடன் அனுப்பிவைத்தார். அனுபவமற்ற முவ்வாஸத்தின் படைகள் மராட்டாக்களால் அலைக்கழிக்கப்பட்டு பட்டினியாலும், குடிக்க நீரில்லாமலும் செத்து வீழ்ந்தார்கள். ஏறக்குறைய இறக்கும் தருவாயில் முவ்வாஸம் மீட்கப்பட்டார். ஔரங்கஸிப், ஜெய்ப்பூர் அரசர் ராஜா ஜெய்சிங் தலைமையில் இன்னொரு பெரும்படையை சிவாஜிக்கு எதிராக அனுப்பிவைத்தார்.

ராஜா ஜெய்சிங் சாதாரணமானவரில்லை. சைஸ்டாகானைப் போலவே மிகப் பெரும் வீரர். அவருடன் இன்னொரு பெரும் திறமைசாலியெனப் பெயர்பெற்ற தில்தார்கானையும் ராஜா ஜெய்சிங்குடன் அனுப்பி வைத்தார், ஔரங்கஸிப். ஜெய்சிங் போர்வீரர் மட்டுமல்லாமல் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்தவர் என்கிற காரணமும் அவரை தக்காணத்திற்கு அனுப்பி வைக்க முக்கிய காரணம். அதையும்விட அவரரொரு ஹிந்து. இன்னொரு ஹிந்துவான சிவாஜியின் மனோபாவம் அவர் நன்றாக அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஜெய்சிங் மெல்லமெல்ல சிவாஜியின் மராட்டாக்களை வெல்ல ஆரம்பித்தார். அவருக்குப் பணிய மறுத்தவர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள். கோட்டைகள் ஒவ்வொன்றாக ஜெய்சிங்வசம் செல்ல ஆரம்பித்தன. மராட்டாக்கள் பேரதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளானார்கள். அதையும்விட, சிவாஜியின் மனைவியும், பிள்ளைகளும் ஜெய்சிங்கின் பிடியில் சிக்கினார்கள். புரந்தர் கோட்டைக்கு எதிரான போரில் தான் தோற்பது உறுதி என்கிற நிலையில், அதற்கு மேலும் தனது படையினர்கள் உயிர் இழப்பதனைச் சகிக்க முடியாத சிவாஜி, ஜெய்சிங்குடன் சமாதானம் பேச கடிதம் எழுதினார்.

ஜெய்சிங் பிஜப்பூரின் மீது படையெடுத்தால் அதற்கு உதவத் தான் தயாராக இருப்பதாகவும், அப்படி ஒருவேளை ஜெய்சிங் தன்னுடன் சமாதானமாகப் போக மறுத்தால் தானும், தன்னுடைய மராட்டாக்களும், அடில்ஷாவுடன் சேர்ந்துகொண்டு முகலாயப்படைகளுக்கு எதிராகப் போராடுவோம் எனவும் சிவாஜி எழுதிய கடிதத்தைப் படிக்கும் ராஜா ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் பேச சம்மதம் தெரிவித்தார். ஆனால் தில்தார்கான் அதனை எதிர்த்துக் கூறினாலும், ஜெய்சிங் அதனைப் பொருட்படுத்தாமல் ஔரங்கஸிப்பிற்குத் தகவல் தெரிவித்தார்.

சமாதானத்தின் ஒரு பகுதியாகத் தான் வென்றெடுத்த அத்தனை பகுதிகளையும் தன்னிடமே விட்டுக் கொடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தக்காணத்தின் முழுப் பொறுப்பையும் தன்னிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறினார், சிவாஜி. ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்துவிட்டதாகவும், சிவாஜியை ஆக்ராவுக்குச் சென்று ஔரங்கஸிப்பிடம் நேரடி அறிமுகம்செய்துகொள்ளவும் வேண்டினார்.

தனது குடும்பம், மற்றும் படைவீரர்களது மரியாதையைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்திலிருந்த சிவாஜி, சிறிது தயக்கத்திற்குப் பிறகு அதற்கு ஒப்புக் கொண்டார்.

அதேசமயம், இந்தியாவைநோக்கிப் படையெடுத்துவரும் பாரசீக இரண்டாம் ஷா-அப்பாஸை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஔரங்கஸிப்பிற்கு ஏற்பட்டது. தக்காணத்திலும், காபூலிலும் இரண்டு போர்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தால், சிவாஜியைச் சந்திக்க சம்மதித்தார் ஔரங்கஸிப்.

Image result for raja jaisingh and sivaji

ராஜா ஜெய்சிங்கும், சிவாஜியும்

ஜுன் 12, 1665-ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார். அதன்படி, பன்னிரண்டு கோட்டைகளை சிவாஜி வைத்துக் கொள்வதாகவும், தக்காணத்தின் ஆட்சிப்பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுவதாகவும், முகலாய அரசவையில் சிவாஜியின் மகனான சாம்பாஜி (8 வயது) மராட்டாக்களின் பிரதிநிதியாக இருப்பார் எனவும், அவருக்கு ஐயாயிரம் குதிரைப்படைகளின் தலைமை அளிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டு, அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆக்ராவிற்குப் புறப்படுவதற்குமுன்னர், சிவாஜி தனது முக்கியஸ்தர்களுடன் ராய்காட்டில் ஆலோசனை நடத்தி, பொறுப்புகளைப் பிரித்து ஒப்படைத்தார். தான் திரும்பி வருவதற்கான உறுதி எதுவும் இல்லாத காரணத்தால், நடப்பதனை விதியின் கையில் விட்டுவிட்டு, தன்னுடைய தாயான ஜீஜாபாயிடம் உத்தரவுபெற்று, ஆக்ராவுக்குப் பயணமாகிறார்.

அதன்படி, மார்ச் 5, 1666 அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்குகிறார் சிவாஜி.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
RE: ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு
Permalink  
 


ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2

 

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

மார்ச் 5, 1666-ஆம் வருடம் ராய்காட்டிலிருந்து புறப்பட்டு ஔரங்காபாத்தை வந்தடையும் சிவாஜிக்கு, ஐந்நூறு முகலாய குதிரைப்படையினரும், அதே அளவிலான காலாட்படையினரும் அணிவகுத்து மரியாதை செய்கிறார்கள். சிவாஜியின் படையணியில் அவரது மிகச் சிறந்த மந்திரிகளும், படைத்தலைவர்களும் இருந்தார்கள். ஔரங்காபாத் நகரம் முழுவதும் திரண்டுவந்து ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சிவாஜியை மிகச் சிறிய ஜமீந்தாராக எண்ணிக்கொண்ட ஔரங்காபாத் கவர்னர் சஃபி ஷிகான் கான், சிவாஜியை நேரடியாக வரவேற்க வரவில்லை. தன்னைவந்து சிவாஜி பார்க்கவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த சஃபி ஷிகானை உதாசீனப்படுத்திய சிவாஜி நேராக ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்குப்போய்த் தங்குகிறார்.

கவர்னர் சஃபி ஷிகான் கானும் அவரது பிரதானிகளும் சிவாஜியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டவுடன் கோபமடைந்த சிவாஜி, “யாரிந்த சஃபி ஷிகான் கான்? என்ன மாதிரியான பதவியிலிருக்கிறார், அந்த ஆள்? என்னை எதற்காக வந்துபார்த்து மரியாதைசெய்யவில்லை?” எனச் சீறுகிறார். அதேநாள் மாலையில் சஃபி ஷிகானும், அவரது பிரதானிகளும் சிவாஜியின் தங்குமிடத்திற்கு வந்து அவருக்கு மரியாதைசெய்கின்றனர். சிவாஜி மறுநாள் கவர்னரின் இருப்பிடத்திற்குச் சென்று அந்த மரியாதையைத் திரும்பச் செலுத்துகிறார்.

சிவாஜியின் ஆக்ரா பயணத்திற்காக முகலாய அரசு கொடுக்கவேண்டிய ஒரு இலட்சம் ரூபாய்கள் வந்துசேரும்வரை ஔரங்காபாத்தில் தங்கியிருக்கும் சிவாஜி, அது கைக்கு வந்துசேர்ந்ததும், ஆக்ரா நோக்கிப் பயணத்தைத் தொடர்கிறார். ஔரங்காபாதிலிருந்து ஆக்ராவரைக்கும் சிவாஜியும் அவரது படையணிகளும் மிக மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். அவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது ஔரங்கஸிப்பின் உத்தரவு. அரசகுலத்தில் பிறந்த ஒருவருக்குத் தரப்படவேண்டிய அத்தனை மரியாதைகளும் சிவாஜிக்கு அளிக்கப்பட்டன.

மே மாதம், ஒன்பதாம் தேதி, 1666-ஆம் வருடம் ஆக்ராவை வந்தடைகிறார், சிவாஜி.

அதே வருடம் ஜனவரி 22-ஆம் தேதி ஷாஜஹான் ஆக்ராவில் காலமானார். முகலாய அரசின் முழு அதிகாரமும் ஔரங்கஸிப்பின் கைக்கு வந்து சேருகிறது. அரியணைக்குப் போட்டியிட யாரும் இல்லாத நிலைமையில் மிக மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்த ஔரங்கஸிப் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். சபிக்கப்பட்ட‘  மராட்டாக்களின் தலைவரன மலை எலி‘  சிவாஜிக்கு ராஜ்ஜியத்தின் செல்வச் சிறப்பையும், வலிமையையும் காட்டுவதற்காக ஆக்ரா அரண்மனை மிக அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

சிவாஜி தனது படைகளுக்கெதிராகச் செய்த அட்டூழியங்களைச் சொல்லி, இனியும் அதுபோலச் செய்துதால், தான் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என அவருக்கு உறுதியாக எடுத்துச் சொல்ல ஔரங்கஸிப் எண்ணிக்கொண்டிருக்கிறார். முடிந்த அளவிற்கு சிவாஜியைக் குறைவாக நம்பி, அவர்மீதான தனது பிடியை இறுக்குவது — தனக்கு அடிபணிய மறுத்தால் கடுமையாக தண்டிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ஔரங்கஸிப்.

ஆக்ராவை மே 9, 1666 அன்று வந்தடையும் சிவாஜியை ராஜா ஜெய்சிங்கின் மகனான ராம்சிங் வரவேற்கிறார். முகலாய அரசின் சார்பாக யாரோ ஒரு சாதாரண அதிகாரி தன்னை வரவேற்க வந்திருப்பதனை அறிந்த சிவாஜி கோபம் கொள்கிறார். ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்கும் தாஜ்மஹாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிவாஜி குடியமர்த்தப்படுகிறார். அந்தப் பகுதிக்கு ஷிவ்புராஎனத் தற்காலிகமாகப் பெயரிடுகிறார்கள். சிவாஜியைக் குஷிப்படுத்துவதற்காக.

பின்னர் அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நாளும் வந்தடைகிறது. மே 12, 1666ம் நாளன்று சிவாஜி ஔரங்கஸிப்பைச் சந்திக்கப் புறப்படுகிறார். இந்தியாவில் அன்றைய தினம் வாழ்ந்த இரு மாபெரும் மனிதர்கள் — ஒருவருக்கெதிராக ஒருவர் வெறுப்புடன் கடும் போர்புரிந்தவர்களான அவர்களிருவரும் உலகின் மூலை, முடுக்குகளில் அறியப்பட்ட முகலாய ராஜதர்பாரான திவான்-இ-ஆமில் சந்திக்கவிருந்தார்கள். திவான்-இ-ஆம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முகலாய அரசப்பிரதானிகள், ராணுவத்தினர் அவரவரின் தகுதிக்கேற்ப தர்பாரின் உள்ளே அமைந்த தங்க வளையத்தடுப்புகளுக்கும், வெள்ளி வளையத்தடுப்புகளுக்கும் உள்ளேயோ அல்லது வெளியேயோ அமர்ந்திருக்கிறார்கள். முகலாய அரசு அதன் உச்சத்தில் இருந்த காலம் அது. விலைமதிப்பில்லாத மயிலாசனத்தில் ஔரங்கஸிப் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் நின்றிருக்கிறார்கள்.

சிவாஜி ஒரு மந்திரவாதி என ஔரங்கஸிப்பின் மாமனான சைஸ்டாகான் எச்சரித்திருந்ததால், ஔரங்கஸிப் அதற்கு எதிராக எடுக்கவேண்டிய அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் சைஸ்டாகான் அன்றைக்கு அரசவைக்கு வரவில்லை. அவரது மனைவி, ஔரங்கஸிப்பின் மனைவி, மகள்கள் ஆகியோர், அரண்மனைப் பெண்களுடன் திரைக்குப்பின் அமர்ந்து, அரசவை நடவடிக்கைககளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜியால் கொல்லப்பட்ட அவளது மகனின் நினவுடன், சைஸ்டாகானின் மனைவி சிவாஜியை எதிர்நோக்கிக் கோபத்துடன் காத்திருக்கிறாள்.

நிராயுதபாணியான சிவாஜியுடன், அவரது சொந்த அலுவலர்கள் பத்துபேர்கள் மட்டுமே அழைத்துவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங் சிவாஜியையும், அவரது மகனான சாம்பாஜியையும் (9 வயது) அரசவைக்கு அழைத்து வந்திருக்கிறார். ராம்சிங்கால் அறிமுகப்படுத்தப்படும் சிவாஜியை “ஆயியே சிவாஜி…(வாருங்கள் சிவாஜி)” என்கிறார் ஔரங்கஸிப்.

ஔரங்கஸிப்பின் முன்னர் நிறுத்தப்பட்ட சிவாஜி அவருக்கு மூன்றுமுறை பணிந்து சலாமிடுகிறார். அவ்வாறு சலாம் செய்ய மறுத்து ராம்சிங்குடன் வாதிட்டு இறுதியில் அரசவை விதிகளை மீறாமல் இருக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. முதலாவது சலாம் மகாதேவுக்கு (சிவன்); இரண்டாவது சலாம் பவானிக்கு; மூன்றாவது சலாம் அவருடைய தந்தைக்கு என்பது சலாம்களுக்கு சிவாஜியின் கொடுத்த அர்த்தம். மூன்றாவது சலாமிற்குப் பிறகு ஔரங்கஸிப்பினுடன் பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார் சிவாஜி. அரசவை விதிகளின்படி யாரும் பாதுஷாவை ஏறிட்டு நோக்கக்கூடாது. பாதுஷாவே அழைத்தாலன்றி வரக்கூடாது அல்லது பதிலளிக்கக்கூடாது என்பது விதி. சிவாஜியை இரண்டாம்தர அரசவைப்பிரதானிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லும்படி ராம்சிங்கிடம் கூறுகிறார் ஔரங்கஸிப்.

மரியாதை நீரூற்று இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்னர் பெண்கள் பகுதியிலிருந்து சைஸ்டாகானின் மனைவி தன் மகனைக் கொன்ற சிவாஜியை உடனே கொல்ல வேண்டும் எனக் கூச்சலிடுகிறாள். ஔரங்கஸிப்பால் அவளை உடனடியாக அடக்க இயலவில்லை. ஒருவேளை அது சிவாஜியை அவமானப்படுத்த ஔரங்கஸிப்பே செய்ததாக இருக்கலாம் என்றாலும், உறுதியாகத் தெரியவில்லை.

இதனால் சிறிது எரிச்சலடையும் சிவாஜி, தான் நின்றிருக்கும் பகுதியில் தனக்கு முன்னால் நின்றிருப்பது யார் என ராம்சிங்கிடம் கேட்கிறார். அவர் ராஜா ஜஸ்வந்த்சிங் எனப் பதில்கூறுகிறார் ராம்சிங். ஜஸ்வந்த்சிங் சிவாஜியை போர்களில் தோற்கடித்தவர் என்றாலும் அவரை உடனடியாக சிவாஜிக்கு அடையாளம் தெரியவில்லை. மேலும் அவரைத் தனக்கு இணையாக நினைக்கவில்லை. தன்னை இப்படி இரண்டாம் நிலை ஆசாமிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துவந்து ஔரங்கஸிப் அவமானப்படுத்தி விட்டதாக சிவாஜி பல்லைக் கடித்துக் கொண்டிருக்கையில், சிவாஜிக்கு வழங்கப்படவிருக்கும் பதவி, பட்டம் குறித்து வாசிக்கப்படுகிறது. அதன்படி சிவாஜிக்கு வருடம் 30,000 ரூபாய்கள்  நஸ்ர் (பரிசு) வழங்கப்படுவதுடன், ஐயாயிரம் (பாஞ்ச் ஹஸாரி) குதிரைகள் அடங்கிய படையின் தலைமையாளராக ஆக்கப்படுவார். அதே பாஞ்ச் ஹஸாரித் தலைமை பதவி அவரது மகனான ஒன்பது வயது சாம்பாஜிக்கும் வழங்கப்படுவதாக வாசிக்கப்படுவதனைக் கேட்ட சிவாஜி அறிவிப்பைக்கேட்டுக் கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறார்.

ஆக்ராவிற்கு வருவதற்குமுன்னர் ராஜா ஜெய்சிங்குடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சிவாஜி பிற அரசர்களுக்கு இணையாக நடத்தப்படுவதுடன், தக்காணப்பகுதி அவருடைய பொறுப்பில் விடப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராஜா ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிடம் எடுத்துச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஔரங்கஸிப் இந்த சந்திப்பிற்கே தடைவிதித்திருக்கலாம். அல்லது ஜெய்சிங் சொன்னதை ஔரங்கஸிப் ஏற்றுக்கொள்ள மறுத்து, வேண்டுமென்றே அவரை அவமானம் செய்வதற்காக அவருக்கும் அவரது மகனுக்கும் ஒரே பதவியைத் தருவதற்கு நினைத்திருக்கலாம். இதனைக் கொண்டு சிவாஜியை எளிதாகக் கட்டுப்படுத்தவும் அவர் நினைத்திருக்கக் கூடும். ஔரங்கஸிப் அவ்வாறு செய்யக்கூடிய இயல்புடையவர்தான். ஆனால் இந்தச் சந்திப்பிற்கு இருவருமே தயாராக இல்லை என்பதுதான் அடிப்படை  உண்மை.

சிவாஜி இதுபோன்ற சிறுமைகளைத் தாங்கிக்கொள்கிற ஆளில்லை. கோபத்துடன் ராம்சிங்கிடம் தனது உடைவாளைத் தரும்படி கர்ஜிக்கிறார். எனக்கும் என் மகனுக்கும் ஒரே பதவியா? இந்த அவமானம் எனது மக்களைச் சென்றடையுமுன் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனக் கோபத்துடன் கூறி ஔரங்கஸிப்பை நோக்கிச் செல்லமுயன்றவரின் தோள்களில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சிவாஜி மயங்கிவிழுகிறார்.

ஔரங்கஸிப் அரசாங்க நடவடிக்கைகளில் மிக உறுதியாக இருக்கும் ஒரு மனிதர். அரசவை சடங்குகளை மீற அவர் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சிவாஜி இருக்கும் பகுதியில் நிகழும் குழப்ப நிலையைக் குறித்து அவருக்குச் சொல்லப்படுகிறது.  சிவாஜியை மறைத்துநிற்கும் ராம்சிங்கிடம் காரணத்தைக் கேட்கிறார் ஔரங்கஸிப்.

“காட்டில் கட்டற்று வாழ்ந்த புலிக்கு தர்பாரின் அடைபட்ட சூழ்நிலை பிடிக்கவில்லை” எனப் பதிலளிக்கிறார் ராம்சிங்.

படுக்கையில் படுத்துக் கிடக்கும் சிவாஜியை நோக்கிக் கைகாட்டும் ஔரங்கஸிப் “இந்த ஆளை எப்படிச் சிக்க வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார், கோபத்துடன்.

ஜெபுன்னிஸ்ஸா பேகம்

பெண்கள் பகுதியிலிருந்து நடப்பதனைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஔரங்கஸிப்பின் பிரியத்திற்குரிய மகள் ஜெபுன்னிஸா பேகம், உடனடியாக சிவாஜிக்கு முதலுதவி செய்யவேண்டும் என ஔரங்கஸிப்பை நோக்கிச் சைகை செய்கிறாள். அதனை ஏற்கும் ஔரங்கஸிப், உடனடியாக சிவாஜிக்கு மயக்கம் தெளிவித்து, அவருடைய இருப்பிடத்தில் கொண்டு விட்டுவிடும்படி ராம்சிங்கிற்கு உத்தரவிடுகிறார். ஆக்ராவின் கொத்வாலை (புலந்த்கான், தலைமை போலிஸ் அதிகாரி) அழைக்கும் ஔரங்கஸிப், சிவாஜியின் வசிப்பிடத்தைச் சுற்றிக் கடுமையான கண்காணிப்புசெய்ய ஆணையிடுகிறார். அத்துடன் சிவாஜி அரண்மனைக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கிறார்.

சிவாஜி சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய வாழ்வும், சாவும் ஔரங்கஸிப்பின் கைக்குச் சென்றுவிட்டது. அதனைக் குறித்து ஔரங்கஸிப் மிகவும் மகிழ்ந்திருப்பார் என்றாலும் சிறிது காலத்திலேயே அவ்வாறு செய்ததற்காக பெரிதும் வருந்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும். ஔரங்கஸிப் தனது குறுகிய பார்வையால் அதனை இழந்தார்.

[தொடரும்]



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3

 

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

Related image

அவமானப்படுத்தப்பட்ட சினத்துடன் தனது அரசவையிலிருந்து வெளியேறிய சிவாஜியை மீண்டும் ஔரங்கஸிப் பார்க்க விரும்பினாரா இல்லையா என்பதை வரலாறு எங்கும் பதிவுசெய்து வைத்திருக்கவில்லை. ஆனால், பறவை எங்கும் தப்பமுடியாத வகையில் தன்னுடைய வலையில் சிக்கியிருப்பதனை அவர் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

புலந்த்கானின் சிப்பாய்கள் இரவும், பகலும் சிவாஜியின் இருப்பிடத்தைச் சுற்றிக் கண்காணிப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஔரங்கஸிப்பின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த நிகாலோ மானூச்சியின் குறிப்பின்படி சிவாஜி ஒரு கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனையே பெர்னியர்போன்ற பிறரும் உறுதிசெய்கிறார்கள். சிவாஜி தங்குவதற்குத் தகுதியான வீடொன்றைக் கட்டும்படி ஔரங்கஸிப் ஃபிதா-இ-கான் என்பவருக்கு உத்தரவிடுகிறார். வீடு கட்டிமுடிக்கப்பட்டதும் சிவாஜி கூடாரத்திலிருந்து அங்கு மாறிவிடுவதாக ஏற்பாடு.

ஒன்றுமட்டும் உறுதி. சிவாஜி அந்த வீட்டிற்குக் குடியேறியதும் வெளியுலகம் தெரியாதபடி மறைந்துபோவார். ஔரங்கஸிப்பின் பிடியில் சிக்கிய எவரும் — அது அவருடைய தகப்பனாகவோ, அல்லது சகோதரர்களாகவோ, அல்லது வேறெந்த எதிரிகளாகவோ இருந்தாலும் — அவரால் கோட்டைகளிலும், பாதாளச் சிறைகளிலும் அடைக்கப்பட்ட பின்னர் வெளியே வந்ததாகச் சரித்திரமே இல்லை. சிவாஜியை அந்த வீட்டிற்குக் குடியேற்றியவுடன் அவரைக் கொன்றுபுதைக்கும் திட்டத்துடன் ஔரங்கஸிப் இருந்திருக்கலாமெனக் கூறுகிறார் மானூச்சி.

சிவாஜி மிகத் துணிச்சல்காரர் என்றாலும், நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்து கொள்கிறார். இதுபோன்ற இக்கட்டுகளிலிருந்து பலமுறை தப்பிய அனுபவம் அவருக்கு இருப்பதால் இந்தச் சூழ்நிலையையும் துணிவுடனே எதிர்க்க முடிவுசெய்கிறார்.

Image result for sivaji's petition to Aurangazebஎது நடக்கக் கூடாததோ அது நடந்துவிட்டது; நடந்ததை இனிமாற்றுவது கடினம். தனக்கு இருக்கும் காலமும் மிகக் குறைவானது, எனவே தானும், தன்னுடன் வந்தவர்களும் ஆக்ராவிலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு தப்புவது என அவரது முக்கியஸ்தர்களுடன் ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். ஏராளமான திட்டங்கள் தீட்டப்பட்டுப் பின்னர் கைவிடப்பறன. உடனடியாக ஔரங்கஸிப் சிவாஜியின்மீது கொண்டுள்ள கோபத்தினைக் குறைக்கும்வண்ணம் மீண்டுமொருமுறை ஔரங்கஸிப்பைத் தான் சந்திக்க விரும்புவதாக சிவாஜியின் வக்கீலான ராகோ பலால் கோர்டே மூலமாக வேண்டுகோள்விடுக்கிறார். அத்துடன், தானும், தன்னுடன் வந்தவர்களும் தக்காணம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

பாதுஷாவை நேரில் சந்தித்து நடந்தவற்றைக் குறித்து விளக்கமளிக்கத் தான் விரும்புவதாகவும், அதற்கான அனுமதியைப் பெறும்படியும் கோர்டேயிடம் சொல்கிறார் சிவாஜி. அதன்படி ஒரு மனுவை ஔரங்கஸிப்பிடம் அளிக்கிறார் கோர்டே. ஆனால் ஔரங்கஸிப் அதற்குச் சரியான பதிலைச் சொல்லாமல், “நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன். பொறுமையாக இருக்கவும்.” என்கிற பதிலை அதே மனுவின் பின்புறம் அவருடைய கைப்பட எழுதி அனுப்புகிறார். சிவாஜியை என்னசெய்வது என்கிற இறுதி முடிவிற்கு ஔரங்கஸிப் இன்னும் வந்திருக்கவில்லை. இருவரின் சந்திப்பிற்கும் உதவிய ராஜா ஜெய்சிங், சிவாஜி ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என சத்தியம்செய்திருந்தார். இன்னொருபுறம் சைஸ்டாகானின் மனைவி சிவாஜியைக் கொல்லவேண்டும் என மீண்டும் மீண்டும் வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.

இந்தச் சூழ்நிலையில் ஔரங்கஸிப் தக்காணத்திலிருந்த ஜெய்சிங்குடன் தொடர்ந்து கடிதத் தொடர்புகொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார். தக்காணத்தை சிவாஜியிடம் ஒப்படைத்தால் பீஜப்பூர் படையெடுப்பு என்ன மாதிரியாக முடியும், சிவாஜிக்கு வேறேன்ன பதவிகள் தருவதாக ஜெய்சிங் உறுதியளித்தார் போன்ற தகவல்களைப்பெற ஔரங்கஸிப் முனைந்துகொண்டிருந்தார். சிவாஜியை விடுவித்தால் தக்காணத்தில் முகலாய அரசுக்கு நன்மைகள் எதுவும் உண்டா — அல்லது சிவாஜியைக் கொன்றால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்பதுபோன்ற கவலைகள் ஔரங்கஸிப்பை வறுத்துக்கொண்டிருந்தன.

அரசவையில் சிவாஜி நடந்துகொண்ட விதம் ஔரங்கஸிப்பைப் பெறும் சினம்கொள்ளச் செய்திருந்தது. தனக்கு அடிபணிய மறுப்பவர்களை ஔரங்கஸிப் விரும்பியதாகச் சரித்திரமில்லை. இருந்தாலும் அவரை உடனடியாகக் கொல்வதனை ஔரங்கஸிப் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, பாரசீகத்திலிருந்து படையெடுத்துவரும் இரண்டாம் ஷா-அப்பாஸுக்கு எதிராகச் சிவாஜியை காபூலுக்கு அனுப்பி வைக்கலாமா என்கிற யோசனையும் அவருக்கு இருந்தது. அவ்வாறு செய்தால் நாட்டின் தென்பகுதியில் தனக்கு இருக்கும் ஒரு பிரச்சினை குறையும் என்பது முக்கிய காரணம்.

சிவாஜி தக்காணத்தை விட்டுச் சென்றதிலிருந்து நிலமை வேறுவிதமாக மாறிவிட்டதால் சிவாஜியை ஆக்ராவிலிருந்து உடனடியாக விடுதலைசெய்ய வேண்டாம், அவரை அங்கேயே வைத்திருக்கச் சொல்லி ஜெய்சிங்கிடமிருந்து பதில்வருகிறது.  தக்காணத்தில் உடனடியாகக் கோல்கொண்டா, பீஜப்பூர் ராஜ்ஜியங்களுக்கு எதிரான போர் முடிவுக்குவருவது சாத்தியமில்லை என்பதால் சிவாஜியினால் ஒரு பயனும் இல்லை என்பது ஜெய்சிங்கின் எண்ணம். எனவே சிவாஜியைக் குறித்தான நடவடிக்கைகளை சிறிது ஒத்திப்போட முடிவுசெய்கிறார் ஔரங்கஸிப்.

ஔரங்கஸிப்பிடமிருந்து தனது மனுவிற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் ஔரங்கஸிப்பின் முதல் அமைச்சரான ஜஃபார்கானின் உதவியை நாடத் தீர்மானிக்கிறார் சிவாஜி. பாதுஷாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்கிற  கோரிக்கையுடன் ராகோ பலால் கோர்டே, ஜஃபார்கானிடம் அனுப்பிவைக்கப்படுகிறார்.

கோர்டேயும் ஜஃபார்கானைச் சந்தித்துக் கோரிக்கையை விளக்குகிறார். ஆனால்  ஜஃபார்கானின் மனைவியும் சைஸ்டாகானின் மனைவியும் (சைஸ்டாகான் ஔரங்கஸிப்பின் தாய்மாமன். அவரது மகனான அப்துல் ஃபதேகானை சிவாஜி கொன்றுவிட்டார்) சகோதரிகளாதாலால், ஜஃபார்கானின் மனைவி சிவாஜி பாதுஷாவைச் சந்திக்க உதவக்கூடாது எனத் தன் கணவனிடம் தடைபோடுகிறாள். எனவே ஜஃபார்கான் ஔரங்கஸிப்பிடம், சிவாஜியுடன் நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். சிவாஜி ஆபத்தானவர், அவரை ஒருபோதும் நம்பக்கூடாது என ஜஃபார்கான் சொல்வதனை ஏற்கிறார் ஔரங்கஸிப்.

வேறுவழியின்றி, ஜஃபார்கானைத் தானே நேரில் சென்று சந்திக்கும் சிவாஜியை வரவேற்று உபசரிக்கும் ஜஃபார்கான், பாதுஷாவுடன் சந்திப்புநிகழ உதவுவதாக வெறும் வாய்வார்த்தைகளைச் சொல்லி அனுப்பிவைக்கிறார். பின்னர் சிவாஜி முகலாய அரசின் ஒவ்வொரு முக்கியஸ்தரையும் நேரில் சந்தித்து பாதுஷா தன்னை மீண்டும் தக்காணத்திற்கு அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கைவைக்கிறார். ஆனால் பாதுஷா தன்னைச் சந்திப்பதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார் என்றறியும் சிவாஜி, அதனை விடுத்து வேறு விதமான உபாயங்களை எடுக்க முடிவுசெய்கிறார்.

அதன்படி, தன்னுடன் வந்த ஏராளமான அலுவலகர்கள், பணியாளர்கள் காரணமாக முகலாய அரசிற்கு அனாவசியச் செலவுகள் ஏற்படுவதாகவும், ஆகவே அவர்களை உடனடியாக தக்காணத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என ஒரு மனுவை ஔரங்கஸிப்பிற்கு அனுப்பிவைக்கிறார் சிவாஜி. பாதுஷா விரும்பும்வரைக்கும் அவரது “மரியாதைக்குரிய விருந்தினராக” தான் ஆக்ராவில் இருக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடுகிறார். அதையும்விட தக்காணத்திலிருக்கும் தனது குடும்பத்தாரையும் ஆக்ராவுக்கு அழைத்துவந்து அவர்களை நிரந்தரமாக ஆக்ராவிலேயே குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் கூறும் சிவாஜியின் மனுவைப் படிக்கும் ஔரங்கஸிப் மனம்மகிழ்கிறார். சிவாஜி முழுமையாகத் தன்னிடம் சரணடைந்துவிட்டதாக நம்பும் ஔரங்கஸிப், சிவாஜியின் அலுவலர்களைத் திருப்பி அனுப்பினால் தனக்குச் செலவும் மிச்சமாகும், சிவாஜியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சிவாஜியின் விண்ணப்பத்திற்குச் சம்மதமளிக்கிறார்.

அதன்படி சிவாஜியுடன் வந்த அவரது பெரும்பாலானா அலுவலர்கள், பணியாளர்கள், படைகள் மீண்டும் தக்காணத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.

சிவாஜி உடனடியாக ஆக்ராவிலிருந்து தப்புவதற்கான வேறு உபாயங்களைத் தேட ஆரம்பித்தார். அதன் ஒரு பகுதியாக, தான் முகலாய அரசின் உயர்பதவி வகிக்கும் அலுவலகர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து, அவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அரசவையில் அது தனக்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர்களுடன் உரையாடத் தனக்கு அனுமதி வழங்குமாறு ஔரங்கஸிப்பிடம் கோரிக்கை வைக்கிறார்.

அப்படிச் செய்வதில் தவறொன்றும் இல்லை என்பதால் ஔரங்கஸிப் அதற்கு அனுமதியளிக்கிறார்.

எனவே சிவாஜி முகலாய அரசின் முக்கியஸ்தர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசுகிறார். அவர்கள் மத்தியில் பெரும் நல்லெண்ணத்தை விதைக்கிறார். சந்தித்த ஒவ்வொருவரிடமும் பாதுஷாவுக்கு அடிபணிந்து அவருக்குச் சேவைசெய்ய தான் முடிவு செய்திருப்பதாகச் சொல்லுகிறார். அது உடனடியாக புலந்த்கான்போன்ற உளவாளிகள்மூலம் ஔரங்கஸிப்பிற்குச் தெரிவிக்கப்படுகிறது. சிவாஜி தன் மனதை மாற்றிக கொண்டு சரியான திசையில் அடியெடுத்துவைக்க ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

சிவாஜி, ஒருசிலர் தவிர தன்னுடன் மீதமிருந்த தனது அனைத்து முக்கியஸ்தர்களையும் ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்கு அனுப்பிவைத்து, வட இந்தியத் தட்பவெப்பம் தனது முக்கியஸ்தர்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்தார். ஔரங்கஸிப் அதற்கு ஆட்சேபனைகள் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் பிரதாப்ராவ் குஜ்ஜார் போன்றவர்கள் சிவாஜியை எதிரி நாட்டில் அனாதரவாக விட்டுச்செல்ல மறுத்து, அவருடனேயே ஆக்ராவில் தங்கியிருக்கிறார்கள். சிவாஜி அவர்களுடன் ரகசிய சந்திப்புகள் நடத்தித் தனது திட்டத்தை அவர்களிடம் விளக்குகிறார். அதனைத் தொடர்ந்து முக்கிஸ்தர்கள் ஆக்ராவைவிட்டுக் கிளம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தக்காணத்திற்குச் செல்வதுபோல போக்குக் காட்டிவிட்டு மாறுவேடங்களில் ஆக்ராவெங்கும் சுற்றித் திரிகிறார்கள். சிவாஜிக்கு ஏதேனும் ஆபத்து நிகழுமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை முன்னேற்பாடுகளுடனும் அவர்கள் இருக்கிறார்கள்.

சிவாஜி ஆக்ராவைச் சேர்ந்தவர்களைத் தன்னுடைய வேலைகளுக்குப் பணியமர்த்திக் கொள்கிறார். அவருடன் மிகமிக நெருக்கமான மராட்டாக்களும், சாம்பாஜியும் மட்டுமே உடனிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு சிவாஜி தனது தலையெழுத்தை ஏற்று ஔரங்கஸிப்பிற்குப் பணி செய்ய மனதைத் தேற்றிக்கொண்டதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

சிவாஜி ஒவ்வொரு வியாழக் கிழமையையும் ஒரு திருவிழாவாக நடத்தி, மதக் கொண்டாட்டங்களைக் கொண்டாட ஆரம்பித்தார். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங்கும், மராட்டாவான பாலாஜி ஆவோஜி சிட்னிஸ் போன்றவர்களும் இந்தக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். கூடை, கூடையாகப் பழங்களும், பலகாரங்களும் ஆக்ராவின் முஸ்லிம் ஹக்கீம்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்களின் கவனிப்பில் தன்னுடைய உடல்நிலை சிறப்பாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கிறார் சிவாஜி.

சில வாரங்கள் கழித்து, தனது கடவுளர்களும், ஆக்ரா மருத்துவர்களும் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காலத்தில் தன்னை வியாதியிலிருந்து குணப்படுத்திவிட்டார்கள் என்றுகூறி, முன்பைவிடவும் இரண்டுமடங்கு பழங்களும், பலகாரங்களும் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இது இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், தான் வாழ்வதெற்கென ஃபிதா-இ-கான் கட்டிக் கொண்டிருக்கும் வீடு கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒண்றிரண்டு நாட்களில் தன்னை அங்கு அனுப்பிவைக்கப் போவதாகவும் உலவும் வதந்திகளைக் கேள்விப்படுகிறார் சிவாஜி.

அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். சிவாஜியுடன் மிகவும் நட்பு பாராட்டும் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங், முகலாய அரசு முக்கிஸ்தர்களுக்கு ஏராளமான லஞ்சம் கொடுத்து சிவாஜிக்கெதிரான ஔரங்கஸிப்பின் மனோபாவத்தை அறிய முயல்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன. எனவே அதனை மறைமுகமாக சிவாஜிக்குத் தெரியப்படுத்துகிறார் ராம்சிங்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4

 

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

எந்த நேரத்திலும் தான் ஔரங்கஸிப்பினால் கொல்லப்படலாம் என்கிற அசாதரண சூழ்நிலை உருவாகியிருப்பதனை ராம்சிங்கின் மூலம் அறியும் சிவாஜி, இனியும் தாமதிக்கக்கூடாது முடியாது என்கிற முடிவுக்கு வருகிறார். தன்னுடனிருக்கும் தனது முக்கிய அலுவலர்களை உடனடியாக வெளி வேலகளுக்குச் செல்வதுபோன்ற பாவனையுடன் வெளியேற்றுகிறார். சிவாஜியைப்போலவே தோற்றமளிக்கும் அவரது சகோதரரான ஹிரோஜி ஃபர்ஜானந்த் மட்டுமே உடனிருக்கிறார்.

ஆகஸ்ட் 17, 1666யன்று சிவாஜியும் அவரது மகனான சாம்பாஜியும் பழக்கூடைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். மாலைமயங்கியதும், அந்தக் கூடைகள் சிவாஜியைக் காவல்காத்துக்கொண்டிருந்த படையணிகளின் வழியாக வெளியே கொண்டுசெல்லப்படுகின்றன. சிவாஜியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்த படைவீரர்களில் ஒருவர்கூட அந்தக் கூடைகளில் சிவாஜியும், சாம்பாஜியும் இருப்பதனைப் பற்றிய சந்தேகம்கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட இடம்வரை கொண்டுசெல்லப்பட்ட பழக்கூடைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டவுடன், அதனைச் சுமந்துவந்தவர்கள் திரும்ப அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

அந்தக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிவாஜியின் மிக நம்பகமான அலுவலர்களான மற்றும் தானாஜி மலுஸ்ரே ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கூடையிலிருந்து வெளியேவரும் சிவாஜியையும், சாம்பாஜியையும் குதிரைகளில் ஏற்றி, வடக்கே மதுராவை நோக்கி (தெற்கிலிருக்கும் தக்காணத்திற்கு பதிலாக) தப்பிச் செல்லவைக்கிறார்கள்.

இதே நேரத்தில் சிவாஜியின் கூடாரத்தில் இருக்கும் சிவாஜியின் சகோதரர் ஹிரோஜி ஃபர்ஜானந்த் அங்கிருக்கும் காவலர்களிடம் சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள். சிவாஜி ஆக்ராவைவிட்டுத் தொலைதூரம் செல்லும்வகயில் நேரத்தைக் கடத்துவதே அதன் முக்கிய நோக்கம்.

சிவாஜியின் படுக்கையில் நிலைகுலைந்த நிலையில் படுத்திருக்கிறார் ஹிரோஜி. அவரது ஒரு கை மட்டும் போர்வையிலிருந்து வெளியே தெரிகின்றது. அந்தக் கையின் ஒரு விரலில் சிவாஜியின் முத்திரை-மோதிரம் இருக்கிறது. சிவாஜியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் முகலாய சிப்பாய்கள் அவ்வப்போது கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்து, சிவாஜி படுத்துக்கிடக்கிறார் என்று உறுதி செய்துகொள்கிறார்கள். சிவாஜிபோலப் படுத்திருக்கும் ஹிரோஜியின் காலடியில், சாம்பாஜியின் வயதையொத்த ஒரு சிறுவன் அமர்ந்து, அவரது கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியாக இரவு கழிந்து, பகலும் வருகிறது. ஆனால் யாருக்கும் எந்த சமாச்சாரமும் தெரியவில்லை என்றாலும் சிவாஜியைக் காக்கும் காவலர்களிடையே அமைதியின்மை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

இதற்கிடையே கூடாரத்திலிருந்து வெளியே வந்த ஹிரோஜியும், சிறுவனும் தாங்கள் மருந்து வாங்குவதற்காக மருத்துவரிடம் போவதாகச் சொல்லுகிறார்கள். சிவாஜியின் நிலைமை மிகமோசமாகிவிட்டதாகவும் காவலர்களிடம் சொல்கிறார்கள். எனவே மாலை மூன்று மணியளவில் இருவரும் சிவாஜியின் கூடாரத்தைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் சிவாஜியின் கூடாரத்தை எட்டிப்பார்த்த காவலனொருவன் அங்கு எவரும் இல்லாததைக் கண்டு கூச்சலிடுகிறான். உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவலர்கள் சிவாஜியையும் அவரது மகனையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சிவாஜி தப்பிவிட்ட செய்திகேட்டு புலந்த்கான் அந்த இடத்திற்கு விரைந்து வருகிறான். சிவாஜி உண்மையிலேயே தப்பிவிட்டதை உணர்ந்த புலந்த்கானின் தலையில் இடிவிழுந்தது போலாகிறது. சிவாஜியின் படுக்கையில் யாரோ படுத்திருப்பதனை உணர்ந்த புலந்த்கான் அவனை எழுப்புகிறான்.

“என்னைப் படுக்கையில் படுக்கச் செய்த சிவாஜி எங்கேயோ போய்விட்டார். எனக்கு அதற்குமேல் ஒன்றும் தெரியாது,” எனச் சொல்லும் அந்த ஆசாமியையும், வேறு சில வேலைக்காரர்களையும் கட்டி இழுத்துச் செல்லும் புலந்த்கான், சிவாஜி தப்பிய செய்தியை ஔரங்கஸிப்பிற்குத் தெரிவிக்கிறான். தக்காணத்து சிவாஜி தப்பிய செய்தியைக் கேட்ட  ஆக்ராவாசிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்கள்.

Image result for angry Aurangzebஔரங்கஸிப் கோபத்துடன் அந்தப் பகுதியைச் சுற்றிக் கடுமையாகத் தேடச் சொல்கிறார். முகலாய அரசின் கவர்னர்கள் அனைவருக்கும் தப்பிச் சென்ற ‘சிவா’வைப் பிடிக்க உத்தரவுகளை அனுப்பிவைக்கிறார். சிவாஜி தப்பிய பதினைந்து மணி நேரம் கழித்து, சிவாஜியின் அலுவலர்களிடையே ஔரங்கஸிப்பினால் அமர்த்தப்பட்ட உளவாளி ஒருவன் சிவாஜி தப்பிவிட்டதாகவும், தக்காணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறான்.

அதாகப்பட்டது, சிவாஜியின் கூடாரங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்த காவலர்களுக்குத் தெரிவதற்குமுன்பே ஔரங்கஸிப்பிற்கு விஷயம் தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் அதனை நம்பாமல் ஒரு கொத்வாலை (போலிஸ்காரன்) அனுப்பி, சோதித்துவரச் சொல்லுகிறார். அதன்படி சிவாஜியின் கூடாரத்திற்குள் எட்டிப் பார்க்கும் கொத்வால், சிவாஜியின் கையில் இருக்கும் முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டு உளவாளி சொல்லும் செய்தி பொய்யென்று ஔரங்கஸிப்பிடம் சொல்கிறான். மூன்றாவது முறையாக அதையே சொல்லும் உளவாளி, “இன்னேரம் சிவாஜி முப்பது மைல்களைக் கடந்திருக்காவிட்டால் என்னை வெட்டிக் கொல்லுங்கள்” என்கிறான்.

அதனைத் தொடர்ந்தே சிவாஜியின் கூடாரத்தை முழுமையாகச் சோதிக்கச் சொல்கிறார், ஔரங்கஸிப். அப்பொழுதுதான் கூடாரத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலர்கள் உண்மையை அறிந்து அதிர்ச்சிகொள்கிறார்கள். ஔரங்கஸிப் ஜெய்சிங்கின் மகனான ராம்சிங்மீது சந்தேகம்கொள்கிறார். ராம்சிங் முகலாய அரசவைக்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது.

ஆக்ராவின் உளவாளிகளும், புலந்த்கான் போன்றவர்களும் ஔரங்கஸிப்பினால் வறுத்தெடுக்கப்படுகிறார்கள். பலரின் பதவி பறிக்கப்படுகிறது. தனது மாமனான சைஸ்டாகான், நரக ஹிந்து நாய் சிவாஜியின் மந்திரவித்தைகளைக் குறித்துத் தனக்கு ஏற்கனவே அறிவித்திருந்தும், தான் கவனமாக இல்லாமல் போய்விட்டதை எண்ணி மனம்குமைகிறார் ஔரங்கஸிப்.

ஔரங்கஸிப்பிடம் சிவாஜியின் மனுக்களைக் கொண்டுவந்த அவரது வலதுகரமான ரகுநாத் பல்லால் கோர்டே கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்படுகிறார். சிவாஜியைப் போல நடித்துப் படுக்கையில் படுத்திருந்த அவரது சொந்த சகோதரரான ஹிரோஜியும், அவருடனிருந்த சிறுவனும் பிடிக்கப்பட்டு ஔரங்கஸிப்பின் முன்னர் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். ஔரங்கஸிப் ஹிரோஜியை வாய்க்கு வந்தபடி ஏசி, சிவாஜியைக் குறித்த விபரங்களைத் தருவதற்கு நிர்பந்திக்கிறார் ஔரங்கஸிப். ஹிரோஜி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், முந்தியநாள் மாலை தன்னுடைய படுக்கையில் படுத்துக்கொள்ளச் சொன்ன சிவாஜி, எங்கே போனாரென்று தனக்குத் தெரியாதென்றும் மீண்டும் மீண்டும் சாதிக்கிறார். ஹிரோஜியுடன் இருந்த சிறுவனும் அதனையே திரும்பத் திரும்பச் சொல்கிறான்.

அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம். அவனது பெயர் மதாரி மெஹ்தார் — கூடாரங்களில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்களை சுத்தம் செய்பவன். ஔரங்கஸிப், “முஸல்மானான நீ எனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என மிரட்டுகிறார். மதாரி மீண்டும் அதே கதையைச் சொல்கிறான். ஔரங்கஸிப்பிற்குக் கோபம் உண்டானாலும் அவர்களின் விஸ்வாசத்தை மெச்சிக்கொள்கிறார். பின்னர் அவர்கள் இருவரையும் விடுதலைசெய்கிறார்.

ஹிராஜியும், மதாரி மெஹ்தாரும் பின்னர் பாதுகாப்பாகத் தக்காணத்தை வந்தடைகிறார்கள். சிவாஜி, ஹிரோஜிக்கு ராய்காட் கோட்டையின் ஹவில்தார் பதவியைக் கொடுத்து கவுரவிக்கிறார். மதாரி மெஹ்தாருக்கும், அவனது குடும்பத்திற்கும் சிறப்புச் சலுகை ஒன்று வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மராட்டா அரசரும் முடிசூடும் சமயத்தில் வழங்கப்படும் பெரும் பரிசுகளின் அளவு பரிசுகள் மதாரி மெஹ்தாரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. மதாரி ஔரங்கஸிப்பிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் ஏராளமான பதவியும், பரிசுகளும் அவனுக்குக் கிடைத்திருக்கும். இருந்தாலும் சிவாஜியின் மீது கொண்ட விசுவாசம் காரணமாக அவன் அதனைச் செய்யவில்லை. மதாரியின் சந்ததியினர் இன்றைக்கும் சதாராவில் வாழ்ந்து வருகிறார்கள்).

ஔரங்கஸிப் தனது நெற்றியில் கைவைத்து தனது தலைவிதியை நொந்துகொள்கிறார். சிவாஜி தப்பியது முற்றிலும் தனது கவனக்குறைவாலே வந்தது; சிவாஜி சந்தேகப்படும்வகையில் அவரது கூடாரத்தைச் சுற்றி ஏராளமான படைகளைத் தான் நியமித்திருக்கக் கூடாது எனக் கூறிக்கொள்கிறார். முகலாய அரசின் அத்தனை பகுதிகளுக்கும் சிப்பாய்களையும், உளவாளிகளையும் அனுப்பி வைக்கும் ஔரங்கஸிப், சிவாஜி மாறுவேடமிடுவதில் விற்பன்னர் என்பதால் சிப்பாய்களும், உளவாளிகளும் தங்களின் கண்முன் தெரியும் அத்தனை சன்னியாசிகளையும் (Jangam, Jogi, Joshi, Sanyasi, Bairagee, Nanak Panthi, Gorakh Panthi, Kangal….), பிச்சைக்காரர்களையும், பைத்தியக்காரர்களையும் நன்கு விசாரணை செய்யவேண்டும் என உத்தரவிடுகிறார்.

தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறார், ஔரங்கஸிப். இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5

 

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

ஔரங்கஸிப்பின் இரும்புப் பிடியிலிருந்து மராட்டிய சிவாஜி தப்பிய செய்தி மொத்த ஹிந்துஸ்தானத்தையும் சென்றடைகிறது. ஒவ்வொரு ஹிந்துவும் இது கடவுளின் அருட்செயல்தான் என்று எண்ணியதுடன், சிவாஜி பாதுகாப்பாக தக்காணம் சென்று சேரவேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டான். சிவாஜியை விரும்பியவர் மட்டுமன்றி, அவரது எதிரிகளும் இந்தத் தீரச் செயலை மெச்சிக் கொண்டனர்.

சிவாஜியும், சாம்பாஜியும் ஆறு மணி நேரம் பயணித்துப் பின்னிரவில் மதுராவை அடைகிறார்கள். ஆக்ராவில் அன்றைய தினம் பெருமழை பெய்துகொண்டிருந்ததால் யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிவாஜி ஒரு படகோட்டியின் துணையோடு அக்கரைக்குச் செல்கிறார். ஔரங்கஸிப்பிடம் உடனடியாக இதனைக் குறித்துச் சொல்லவேண்டும் எனப் படகோட்டியிடம் சொல்கிறார், சிவாஜி. சிறிது தூரம் பயணிக்கும் சிவாஜியும், சாம்பாஜியும் வேறொரு படகில் ஏறி மீண்டும் இக்கரைக்குத் திரும்புகிறார்கள். பின்னர் சிவாஜி, சாம்பாஜி பின்தொடர குதிரையில் மதுராவை வேகமாக வந்தடைகிறார்.

சிவாஜியைத் தேடிவந்த மொகலாயப் படைவீரர்களிடம் நடந்ததைச் சொல்கிறான், படகோட்டி. மொகலாயப் படைவீரர்கள் சிவாஜி தெற்குநோக்கித் தப்பிச்செல்வதாக முடிவுக்குவருகிறார்கள். இதனை எதிர்பார்த்திருந்த சிவாஜி, அவர்கள் எதிர்பார்த்ததுபோல தென்திசையில் செல்லாமல், வடதிசையில் சென்றுகொண்டிருகிறார். மதுராவை அடையும் சிவாஜி தன்னை முற்றிலும் உருமாற்றிக்கொண்டிருகிறார். தனது அரச உடைகள் முழுவதனையும் துறந்து, புனித யாத்திரை செல்லும் ஒரு சாமியாரைப் (Gossain) போல உடைகளை அணிந்து கொள்கிறார். தாடியிலும், கன்னத்திலும் இருந்த மயிரைச் சுத்தமாக மழித்துவிட்டு, உடல் முழுவதும் சாம்பலைத் தடவிக்கொள்கிறார்.

அவர் மதுராவை அடைவதற்குமுன்னர் அங்கு சென்ற சிவாஜியின் அலுவலகர்களான நிராஜி ராவ்ஜியும், பாலாஜி ஆவோஜி சிட்னிசும், மதுராவெங்கும் தேடி பேஷ்வா மோராபாண்ட் பிங்கலேயின் மூன்று பிராமணர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். கிருஷ்ணாஜி, காஷிராவ், மற்றும் விசாஜி என்கிற மூன்று பிராமண சகோதரர்களும் அந்த நேரத்தில் மதுராவில் இருந்திருக்க நியாயமில்லை. அனேகமாக சிவாஜி ராய்காட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்களை மதுராவிற்கு வரச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது மதுராவிலிருந்த சிவாஜியின் குருவான ராம்தாஸி ஆஸ்ரமத்திற்கு பயணமாக அவர்கள் வந்திருக்கலாம்.

அந்த மூன்று பிராமணர்களும் சிவாஜியின் முன் அழைத்துவரப்படுகிறார்கள். சிவாஜி ஏராளமான பணத்தை அவர்களிடம் கொடுத்து, சாம்பாஜியையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார். சாம்பாஜியைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும், சிறிது காலத்திற்குப் பிறகு, ராய்காட்டிலிருந்து தன்னுடைய சொந்தக் கையெழுத்தில் (சிவாஜியின்) கடிதம் வந்தபிறகு சாம்பாஜியை தக்காணத்திற்கு ரகசியமாக அழைத்துவரவேண்டும் எனக் கூறுகிறார். ஒருவேளை தான் நிச்சயமாக இறந்துவிட்டதாகத் தெரியவந்தால், அவர்களுக்குத் தெரிந்த பாதுகாப்பான முறையில் சாம்பாஜியை ராய்காட்டில் சேர்த்துவிடவேண்டும் எனவும் ஆணையிடுகிறார். அந்த மூவரும் சிவாஜிக்கு நிச்சயம் நம்பிக்கைக்குப் பாத்தியமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

பிற கோஸாயிகளைப் போல ஊதாநிற உடை தரித்த சிவாஜி, கோஸாயிகளுடன் சேர்ந்து பொழுதைக்கழிக்க ஆரம்பிக்கிறார். யமுனையில் ஒரு நாள் குளிக்கச் செல்லும் சிவாஜி, யமுனைப் படித்துறையின் அலங்கோலத்தைப் பார்த்து, “இதனை ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள்? நானாக இருந்தால் அத்தனை உடைபாடுகளையும் சரி செய்திருப்பேன்!” என்று பொதுவாகச் சொல்கிறார்.

அதனைக் கேட்கிற கோஸாயிப் பூசாரி சிவாஜியின் மீது சந்தேகம்கொள்கிறார். நிராஜி அந்தப் பூசாரியை அணுகி எச்சரிக்கவே,  அவரும் மன்னிப்புக் கோருகிறார். அவர் அமைதியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன.

பின்னர், அலஹாபாத்தை நோக்கிச் செல்லும் கோஸாயிகளுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார், சிவாஜி.  தக்காணத்திற்குச் செல்லும் வழிகளறிந்த கிருஷ்ணாஜியும் அந்தக் கூட்டத்தில் கலந்து சிவாஜியுடன் பயணிக்கிறார். மேலும் சில முக்கியஸ்தர்களும் கோஸாயிவேடத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Image result for Sivaji's in Benaras sketchஅவர்களிடம் செலவுக்குத் தேவையான ஏராளமான நகைகளும், தங்கக் காசுகளும் இருக்கின்றன. மூங்கில்கோல்களிலும், துந்துபிகளிலும் வைரக்கற்கள் ஒளித்துவைத்து, அவைகளைச் சிவாஜியின் ஆட்கள் சுமந்து வந்துகொண்டிருகிறார்கள். பனாரஸ் [காசி] நகரை வந்தடையும் சிவாஜியின் கூட்டம் தேவையான மதச்சடங்குகளைச் செய்துமுடிக்குமுன் ஆக்ராவிலிருந்து சிவாஜி தப்பிவிட்ட செய்தி பனாரஸை வந்தடைகிறது. அவரசரகதியில் மதச்சடங்குகளை கங்கைக் கரையில் செய்துகொண்டிருக்கையில் சிவாஜி கங்கைக் கரையில் இருப்பதாகத் தகவலறிந்த மொகலாயப்படையினர், ஈட்டிகளுடன் அங்கு வந்துசேருகிறார்கள். இருள் விலகாத காலைநேரமாதலால், சிவாஜியும் அவரது ஆட்களும் அங்கிருந்து தப்பிச்செல்கிறார்கள்.

பனாரஸில் இருக்கையில் சிவாஜி காகபட்டரைச் சந்திக்கத் தவறவில்லை. காகபட்டர் சிவாஜி பாதுகாப்பாக தக்காணத்தை வந்தடைய எல்லா உதவிகளையும் செய்தார் எனத் தெரியவருகிறது. பிற்காலத்தில் சிவாஜி ராய்காட்டில் சத்ரபதியாகப் பதவியேற்ற காலத்தில் காகபட்டரே தலைமைக் குருவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பனாரஸிலிருந்து சிவாஜியின் குழு பாட்னா வழியாக்க கயாவை அடைகிறது. கயாவில் சிவாஜியின் முக்கியஸ்தர்கள் பலர் அவருக்காகக் காத்துக்கொண்டிருகிறார்கள். அவர்களுடன் புறப்பட்டு ஒரிஸ்ஸாவின் கரையிலிருக்கும் ஜகன்னாத்திற்கு வந்து சேர்கிறார்.  வேகமாகச் செல்லும் வழக்கமுடைய சிவாஜிக்கு இந்தப் பயணம் களைப்பைத் தரவில்லை. மேலும் அவருக்கு அன்றைக்கு 39 வயது மட்டும்தான்.

கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.

Image result for Shivaji and JIjabai sketch

சிவாஜி ஒரிஸ்ஸா பகுதியில் நடமாடுவதாக தெரியவே, படைத்தலைவர் அலி குலிகான் சந்தேகத்தின்பேரில் சிவாஜியை மடக்குகிறார். சிவாஜி நேரடியாக அவரிடம் பேரம்பேசி பல இலட்சம் மதிப்புள்ள வைரக்கற்களை அவருக்கு லஞ்சமாகக் கொடுத்து அங்கிருந்து தப்புகிறார். அவருடனிருந்த கோஸாயிகளும் விடுவிக்கப்படுகிறார்கள்.

பின்னர் அங்கிருந்து காட்டுவழியாக கோண்டாவன், சந்தா, தியோகட் மற்றும் கோதாவரி மாவட்டம் வழியாக ஹைதராபாத்தை வந்தடைகிறார். அங்கிருந்து இந்தூர் நகரப்பகுதி வழியாகk கோடோல் என்னுமிடத்தை அடைகிறார்.  இப்படியாக மயிரிழையில் பல இடங்களில் தப்பும் சிவாஜி, பிஜப்பூர் பகுதியில் கோர்கான மகாபலேஷ்வர் போன்ற பகுதிகளைக் கடந்து, நவம்பர் 20, 1666 அன்று, ஏறக்குறைய 1500 மைல்கள் பயணம் செய்து, ராய்காட்டை வந்தடைகிறார்.  தன்முன் கோஸாயி வேடத்தில் நிற்கும் சிவாஜியை ஜீஜாபாய்க்கு அடையாளம் தெரியவில்லை.

நிராஜி ராவ்ஜி “அம்மா, இது உங்களின் மகன் சிவாஜி,” எனச் சொல்லவும், ஜீஜாபாய் மிகவும் மகிழ்கிறார்.

சிவாஜி மஹாராஷ்டிராவை வந்தடைந்த செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவுகிறது. மஹாராஷ்ட்ரா விழாக்கோலம் பூணுகிறது.

[முற்றும்]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard