அன்புள்ள ஜெயமோகன்,
‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.”
சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று அடையாளப் படுத்துகிறீர்கள். உங்கள் பதிவு வலையேற்றம் செய்யப்ப்டுவதற்கு சற்று முன் நான் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பில் இருந்து:
“ஒரு சொல் காலப்போக்கில் வெவ்வேறு அர்த்தங்களையும் குறியீடுகளையும் அடையும். தொன்று தொட்டு இலக்கியத்திலும் பொது வழக்கிலும் ‘பார்ப்பான்’ என்பது ‘பார்ப்பனர்’ என்பதும் வழக்கத்தில் இருந்தவையே. பாரதியே ‘பார்ப்பான்’ என்று தான் எழுயிருக்கிறான் என்பார்கள். ஆமாம். ஆனால் அதே பாரதி ‘செட்டி’, ‘பறையன்’ என்றும் எழுதியிருக்கிறான். இன்று தலித் சமூகத்தினரை பழங்கால வார்த்தையைக் கொண்டழைப்பது ஆபாசம், வக்கிரம், சட்ட விரோதம். அந்தச் சொல் தங்களை அவமதிப்பதாக அவர்கள் எண்ணுவதால் இன்றுத் தங்களை குறிப்பதற்கென்று வேறு சொல்லையே பயன் படுத்த அவர்களும் சட்டமும் கூறுகிறது.
ஈவெராவின் வெறுப்பரசியலால் இன்று பிராமணர்கள் ‘பார்ப்பான்’, ‘பார்ப்பனர்’ ஆகியவை வசைச் சொற்கள் என்று கருதுகிறார்கள். ஒருச்சமூகம் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் தான் இன்று தலித் சமூகத்திடையேக் கூட காந்தி உபயோகித்த ‘ஹரிஜன்’ எனும் பெயர் மறுக்கப்படுகிறது.”
அரவிந்தன் கண்ணையன்
***
அன்புள்ள அரவிந்தன்,
ஓர் எளிய விவாதத்தில் இருந்து தொடங்குகிறேன். 1926-ல் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் தமிழ்ப்பேரகராதி ஒன்றை தயாரிக்கும்பணியை அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசு தொடங்கியது. 1936லும் 1939லும் அதன் முதல்வடிவம் வெளியாகியது. 1954ல் தான் முழுமையான வடிவம் வெளியாகியது.
ஒரு மொழியின் முதல் பேரகராதி உருவாக்கம் என்பது எளிய பணி அல்ல. சொற்களைத் திரட்டுவதற்கும் தொகுப்பதற்கும் இன்றைய நவீன வசதிகள் இல்லை. தமிழ் மக்களிடையே புழங்கும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச்சொற்களே என்பது அவ்வகராதியின் முதல்கொள்கை. அச்சொல் தமிழிலக்கியத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்து அளித்தார்கள்.
இன்றும் பிரமிப்பூட்டும் பணியாக அது உள்ளது. ஆலயம் தொழுவதுபோல் ஒவ்வொருநாளும் இந்த பேரகராதியின் அட்டையை பிரித்துக்கொண்டிருக்கிறேன். மிக அரிய, வழக்கொழிந்துபோன வட்டாரச்சொற்களைக்கூட அதில் காணமுடிகிறது. நானும் நாஞ்சில்நாடனும் சமீபத்தில் மலேசியாவில் இப்பணியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
ஆனால் எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்றைய பலதரப்பினராலும் மிகமிகக் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டார். அவருடைய தாயின் கற்பே பெரும்பாலும் வசைக்குரியதாக இருந்தது. திராவிட இயக்கத்தவர் தேவநேயப் பாவாணர் தலைமையில் அதற்கு எதிரான பெரிய வெறுப்பியக்கத்தையே ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்குவந்தால் வையாபுரிப்பிள்ளையின் அகராதி கடலில் தூக்கிப்போடப்படும் என்றும், புதிய ‘சரியான’ அகராதி தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இன்றுவரை அப்படி ஒரு பேரகராதி முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான முயற்சிகள் பாதிக்கிணறு தாண்டின. பல முயற்சிகள் வையாபுரிப்பிள்ளை அகராதியின் எளிய நகல்கள். வையாபுரிப்பிள்ளை அகராதியே இன்றும் தமிழ்ப்பேரகராதியாக நீடிக்கிறது. அதற்கு மறு அச்சுதான் வந்திருக்கிறதே ஒழிய மறுபதிப்பு கொண்டுவர இன்று ஆளில்லை.
அந்த எதிர்ப்புகள் குவிமுனை கொண்ட இடம் என்ன தெரியுமா? அவ்வகராதியில் வையாபுரிப்பிள்ளை ‘முதலி’ ‘செட்டி’ என்று சொற்பொருள் கொடுத்திருந்தார். அது தங்கள் சாதியினரை இழிவுசெய்வது என்றும் முறையே முதலியார் என்றும் செட்டியார் என்றும்தான் இருக்கவேண்டும் என்றும் அச்சாதியினர் பொங்கி எழுந்தனர். அவர்களை ஆதரித்து களமிறங்கினர் திராவிட இயக்கத்தவர்.
வையாபுரிப்பிள்ளை செட்டி என்றும் முதலி என்றும்தான் நூல்களில் இருக்கிறது என்றும், அச்சாதியினர் தங்கள் பெயரை தாங்களே எழுதும்போது செட்டி என்றும் முதலி என்றும்தான் எழுதுகிறார்கள் என்றும், ஆர் விகுதி மதிப்புக்குரியவர்களைச் சுட்டும்போது பிறரால் சொல்லப்படுவது என்றும், தன் பெயரை தானே பிள்ளைவாள் என்று போட்டுக்கொள்வதில்லை என்றும் சொல்லிப்பார்த்தார். கண் உடையும் வசை. இன்றுகேட்டாலும் கூசும் சொற்கள்.
அவர்கள்தான் இன்று பார்ப்பனர் என்று சொல்லலாம் அது வசை அல்ல என்று சொல்கிறார்கள். வையாபுரிப்பிள்ளை பார்ப்பனன் என்னும் சொல்லை அகராதியில் சேர்த்திருக்கிறார். அது வசை அல்ல. ஆவணப்படுத்தல்.
தங்கள் தலைவர்களை பெயர் சுட்டிச் சொல்வதே அவமதிப்பு என எண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலைகொண்ட கும்பல் இதைச் சொல்கிறது. பட்டப்பெயரால் தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்பவர்கள் உலகநாகரீகம் பற்றிப் பேசுகிறார்கள்.
அத்தனைக்கும் மேலாக சில சொற்கள் சொல்பவரால் வசை என பொருள் அளிக்கப்படும். கேரளத்தின் கீழோர் தமிழர்களை பாண்டிகள் என்பார்கள். நேர்ப்பொருள் பாண்டியநாட்டைச்சேர்ந்தவன் என்பதே. அவர்கள் அளிக்கும்பொருள் இழிந்தவன் என்பது. ஆகவே அது ஒரு வசைச்சொல்லே. சென்னையில் தெலுங்கர்களை கொல்ட்டிகள் என்கிறார்கள். வேடிக்கைச்சொல் அது. ஆனால் வசையாக அது பயன்படுத்தப்படும் என்றால் வசையே
ஒரு சாதி அல்லது குழு தங்களை ஒரு சொல் வசை எனக் கருதுகிறது என்றால் அதை சொல்வது வசையேதான். தமிழ்மரபில் முடவன் என்றும் நொண்டி என்றும் பெட்டை என்றும் பேடி என்றும் மூளி என்றும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அவை இன்று வசைகளாக ஆகிவிட்டன .அதைத் தவிர்ப்பதே நாகரீகம்.
ஆனால் அரசியல்நாகரீகத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் என்ன தொடர்பு? திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்கள் கடந்துசென்ற எல்லைகள் எல்லாம் மிகமிக அரியவை.
தங்களைத் தாங்களே வசைபாடிக்கொள்ளும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதன் தடயங்களை பாரதிதாசன் அண்ணாத்துரைபற்றிச் சொன்னபோதும் வை.கோபாலசாமி மு.கருணாநிதி பற்றி சொன்னபோதும் கண்டோம்.
ஜெ