நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்?
“சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் காவற்படையாகச் செயல்படுகிறவர்கள் சூத்திரர்களே… சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தாழ்த்தப்பட்டோர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து விடுவதை விரும்பவில்லை – இந்தியாவின் ஆட்சி பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் (ஆதிக்க சாதி) இந்துக்களால் நடத்தப்பட்டது. நகரம் முதல் கிராமம் வரை (ஆதிக்க சாதி) இந்துக்களின் பிடியில் உள்ளது.”
பேரறிஞர் அம்பேத்கர்
அம்பேத்கர் நூல்தொகுப்பு – 9, பக். 174 – 158.
நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே அது தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு – முன்னேற்றத்திற்குத் தொடங்கப்பட்டது அல்ல என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது அரசியல் ஆட்சியை அந்தக் காலத்தில் விஸ்தரித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி. தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நபர்களைப் பொறுக்கி எடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்த விவசாயிகளிடமிருந்து நிலவரியை வசூலிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பனி அளித்தது. இந்த நபர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் பிரிட்டிஷ் சர்க்கார் நிர்ணயித்தது. அதை ஆண்டுதோறும் அவர்கள் செலுத்திவந்தால் போதும். இந்தத் தொகைக்குப் பெயர் ‘‘பேஷ்குஷ்’’.
இங்கனம் நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு இஷ்டமான அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம். மேலும், விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்காமல், ஒரு பெரும்பகுதி நிலத்தைச் சொந்த சாகுபடி என்ற பெயரால் வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு அனுமதி உண்டு. இவர்களுக்குப் பெயர் ‘ ஜமீன்தார்’, ‘மிட்டாதார்’, ‘தாலுக்தார்’ என்பவையாகும்.
இந்த உரிமைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மேலும் மேலும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினர். ‘பேகார் வெட்டி’ என்ற பெயரால் விவசாயிகள் இந்த ஜமீன்தார் இட்ட வேலையைக் கூலி ஒன்றும் இல்லாமல் செய்தாக வேண்டும். இவ்வித கொடுமைகள் பல உருவங்களை எடுத்தன.
விவசாயிகள் வீட்டிலிருந்த மாடு முதன் முதலில் போடும் கன்றை ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜமீன்தார் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலிய சடங்குகளுக்கு விவசாயிகள் பால் முதலியவற்றை இனாமாக வழங்க வேண்டும். காலப்போக்கில் விவசாயி திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் ஜமீன்தாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைந்தது.
இப்படிப்பட்ட வசூல்களுக்கு ஜமீன்தார்கள் குண்டர் படைகளை வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சர்க்காரின் சார்பாக விவசாயிகளிடத்தில் வரி வசூலிக்கும் காண்ட்ராக்டர்களாக நியமிக்கப்பட்ட இந்த ஜமீன்தார்கள் காலப்போக்கில் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகவே கருதப்பட்டார்கள். குடியானவர்களை எந்த சமயத்திலும் அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றும் அதிகாரமும் அவர்களிடம் இருந்தது.
ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் சர்க்காரின் போலீசும், நிர்வாக இயந்திரமும் உதவி செய்து வந்தன. இந்த ஜமீன்தார்களும் அவர்களுடைய ஆதரவில் வாழ்ந்தார்கள். தங்களை ஆதரிக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசிகளாகவும், இந்த சர்க்கார் வாழையடி வாழையாக இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இவர்கள் விசுவாசமாக இருந்ததற்காக இவர்களில் பலருக்கு ‘மகாராஜா’, ‘ராஜா’, ‘நவாப்’ போன்ற பட்டங்கள் பிரிட்டிஷ் சர்க்காரால் வழங்கப்பட்டன.
இந்த ஜமீன்தார் முறையைத் தவிர ‘ரயத்துவாரி – நிலவரி அமைப்பு’ என்ற முறையும் இருந்து வந்தது. 1803 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் கவர்னராக இருந்த லார்டு மன்றோ இந்த முறையை ஏற்படுத்தினார். நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நேரடியாக சர்க்காருக்கு நிலவரி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை இது.
ஆனால் நிலம் யாருக்குச் சொந்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு நிலம் சொந்தம் என்பதற்கு சர்க்காரிடம் கணக்கு ஒன்றும் கிடையாது. இதை நிர்ணயிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தாசில்தார்கள் தங்களுக்குப் பணம் (லஞ்சம்) கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்திற்கேற்ப நில அளவை நிர்ணயித்தார்கள். அதைப் போலவே, கிராமங்களில் இருந்த பல முரடர்களுக்கும், சண்டியர்களுக்கும் பயந்து அவர்கள் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறும் இடங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கிவிட்டார்கள்.
உதாரணமாக, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு சண்டியர், அந்த ஊர் தாசில்தாரை ஒருநாள் முழுவதும் குதிரை மீது சவாரி செய்யச் சொன்னாராம். அந்தக் குதிரை போகும் வழி பூராவும் கற்கள் நாட்டப்பட்டு அதற்குட்பட்ட பிரதேசம் பூராவும் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டதாம்.
இந்த ரயத்துவாரி முறை அமுலாக்கப்பட்ட போது ஆந்திராவில் பெருவாரியாக ஜமீன்தாரிமுறை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் – ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, மற்றும் சேத்தூர், சாப்டூர் – போன்ற பல இடங்களிலும் ஜமீன்தார்கள்தான் இருந்து வந்தனர். இங்கனம் ஜமீன்தாரி முறை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெரும்பகுதி ‘ரயத்துவாரி’ முறைக்கே உட்பட்டிருந்தது. இந்த ‘ரயத்துவாரி’ முறைக்கு உட்பட நிலச்சொந்தக்காரர்களுக்கு ‘மிராசுதார்கள்’ என்று பெயர்.
கொஞ்ச நிலம் வைத்துக்கோண்டிருக்கக் கூடிய குடும்பங்கள் மட்டுமே நிலத்தை உழுது சாகுபடி செய்யும். அதிக நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டு குத்தகைக்கோ அல்லது வார குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது. நிலச்சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.
இப்படிப்பட்ட நிலைமையின் காரணமாக நிலத்தைத் தவிர பிழைப்பதற்கு வேறு தொழில் இல்லாத நிலையில், பாடுபடும் விவசாயிகளிடையே குத்தகைக்கு நிலம் எடுத்துக்கொள்வதற்காக போட்டி வளர்ந்தது இயல்பு. இதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஒரு வேலையும் செய்யாத நிலச் சொந்தக்கார மிராசுதாரர்களுக்கு நிலத்தில் விளைந்ததில் 80.85 விழுக்காடு குத்தகை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
இதைத் தவிர கொஞ்ச நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்து நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலங்களைக் கடன் கொடுத்தவர்களே வாங்கிக் கொண்டார்கள். இவ்விதம் இந்த ரயத்துவாரி முறையில் நிலங்கள் சில நபர்கள் கையில் குவியத் தொடங்கின.
இந்த மிராசுதாரர்களில் பலர் நிலத்தை விவயாயிகளிடம் குத்தகைக்கு விடாமல், கூலிகளை அமர்த்தி சொந்த சாகுபடி என்ற பெயரால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்தப் பண்ணைகளில் வேலை செய்யும் கூலிகளின் நிலைமையோ படுமோசமானது.
இவ்வாறு அநியாயக் குத்தகை மூலமாக விவசாயிகளையும், அநியாயக் கூலியின் மூலமாக பண்ணைக்கூலிகளையும் கொள்ளையடித்து வந்த அந்தப் பெரு மிராசுதார்கள் பிரிட்டிஷ் சர்க்காரை நீடூழி வாழ வேண்டும் என்று விரும்பியது இயற்கையே.
இவர்களைத் தவிர பிரிட்டிஷ் கம்பெனிகளுக்காக இங்கே விளைந்த பருத்தி, கடலை போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டில் வாங்கி ஏற்றுமதிக்காக விற்ற தரகு வியாபாரிகளும் உண்டு. அதே போன்று பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்த நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்த துணி போன்ற பொருட்களை வினியோகம் செய்யும் தரகு வியாபாரிகளும் இருந்தனர். பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கவேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புவார்கள் ?
இப்படி ஆங்கிலேயர்களுடைய பேராசைக்காகவும், தங்களுடைய பேராசைக்காகவும் மற்றவர்களைக் கொடுமைப்படுத்திய ஜமீன்தார்கள், மிட்டாமிராசுதாரர்கள், பண்ணையார்கள், ராஜாக்கள் தான் நீதிக்கட்சியில் இருந்தனர்.
இந்தக் கட்சியின் தலைவர்களின் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும்.
அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்த அநேகமாக எல்லா ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். (தற்சமயம் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற) கஞ்சாம், கோரக்பூர் மாவட்டங்களில் இருந்த
கல்லிக்கோட் ராஜா,
பர்ஐம்பூர் ராஜா,
பர்லாக்கிமிடி ராஜா,
சின்னக்கிமிடி ராஜா,
ஆந்திரா பகுதியில் இருந்த
பொப்பிராஜா,
பிட்டாபுரம் ராஜா,
செல்லப்பள்ளி ராஜா,
பொப்பிலி ராஜா,
தேபுரேல் ராஜா,
வெங்கிடகிரி ராஜா
போன்ற ஜமீன்தார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பிரமுகர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக விஜயநகர மகாராஜாவும் நூஜ்வீட் ஜமீன்தாரும் இருந்தனர்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர், சாப்டூர் முதலிய பல ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். சில ஜமீன்தார்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்த ஜமீன்தார்களைத் தவிர தமிழ்நாட்டில் இருந்த பல பெரிய மிராசுதார்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர். உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில் இருந்த நெடும்பலம் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையம் பி.டி. ராஜன், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி. சௌந்திர பாண்டிய நாடார், திருநெல்வேலி மாவட்டத்தில் மேடைதளவாய் முதலியார் போன்றோர்.
இவர்களைத் தவிர சென்னை பி.தியாகராயசெட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி நாடார் போன்ற தரகு வியாபார பிரமுகர்களும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர்.
எனவே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியிலும் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்தவர்களால் ஆனது. தங்களுடைய சுரண்டலுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் பாதுகாவலனாகக் கொண்டிருந்த நிலபிரபுக்களையும், ஆங்கிலக் கம்பெனிகள் இந்தியாவில் அடித்த கொள்ளையில் பங்கு கொண்ட தரகு வியாபாரிகளையும் கொண்டதாகவே இந்தத் தலைமை திகழ்ந்தது.
இவர்கள் மட்டுமின்றி சிலோன், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோ – சைனா (இன்று வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்டது) போன்ற காலனி நாடுகளில் வட்டிக் கடைகள் வைத்து அநியாய வட்டி வாங்கி கொள்ளையடித்தவர்களும் இந்தக் கட்சியில் இருந்தனர்.
இவர்களைத் தவிர டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், சர். ராமசாமி முதலியார் போன்ற பிரிட்டிஷ் சர்க்காரின் செல்லப்பிள்ளைகளும் இந்தக் கட்சியில் இருந்தனர். இவர்களுக்கு ‘சர், திவான், பகதூர், ராவ்பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் சர்க்கார் அளித்திருந்தது. (ஆதார நூல் : ஆரியமாயையா திராவிட மாயையா? விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் பக்-14)
இப்படி மக்களை சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?
நீதிக்கட்சியைச் சேர்ந்த யாரும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடவில்லை. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
கொங்கு நாட்டு ஆர். வீரையன் (1886-1938)
இவர் 1886ல் கோயம்புத்தூர் குக்கிராமமொன்றில் பிறந்தார். இளமைக் கல்வியை சிக்கலின்றி முடித்தார். புறநகரங்களிலே பொதுப்பணத்தாலும் அரசாங்கச் சலுகைகளாலும் நடத்தப்படுகிற பள்ளிகள் பழங்குடி மாணவர்களைச் சேர்க்க மறுப்பதையும், தவறிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனி இடங்களில் அமர்த்தப்படுவதையும் மிக வன்மையாக கண்டித்தார். இந்த அவலக் கேட்டிலிருந்து விடுபட தெருத்திண்ணைகளிலும், மரத்தடிகளிலும் சிறு பள்ளிகளை தொடங்கி வைத்து, வன்கொடுமைகளை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனேயே தீர்வு காணுவதில் முனைப்பாகப் பணியாற்றினார்.
பழங்குடி மக்கள் அஞ்சலகத்திற்குள் செல்லக்கூடாது, பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்ற கட்டுத்திட்டங்களை மீறிப் பலரை அழைத்துக் கொண்டு சென்று பலமுறை விதியோடு விளையாடினார்.
வீதியோரங்களில் வீடமைத்து வாடும் ஏழை எளியோருக்கு உரியவிடத்தில் நிலந்தந்து ஆதரிப்பது ஆளுவோருடைய கடமை என்பதை அன்றைய அரசாங்கத்திற்கு ஓயாமல் உணரச்செய்தவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அச்சுறுத்தியும் அடித்தும் கூலி தராமல் வேலை வாங்கும் கொடிய பழக்கத்தை ஆட்சியாளர் கவனிக்காமலிருக்கும் போக்கினை வன்மையாக கண்டித்து அவற்றிற்குப் பரிகாரம் தேடியவர்.
இவர் 1924ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். தீண்டாமையால் விளையும் கொடுமைகளை நீக்க சட்டமன்றத்தில் சிறப்பாகவும், குறிப்பாகவும் பாடுபட்டார். தேர்தல் நேரங்களில் ஊர்ச்சாவடிகளுக்குள் பழங்குடி மக்கள் போக முடியாமை, உயர்த்தப்பட்டோர் பழங்குடி மக்களின் குடிசைகளை எரிப்பது, கால்நடைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை அவ்வப்போது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து தீர்வு காணுவார்.
ராவ் பகதூர் வி.ஐ. முனுசாமிப்பிள்ளை (1899-1955)
தாவர உற்பத்தி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். காலச்சூழ்நிலையால் சமுதாய அரசியல் போன்ற துறைகளில் இறங்கும் கட்டாயத்திற்குள்ளானார்.
1926லிருந்து 1937வரை அவர் தொடர்ந்து சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது நேர்மையான உழைப்பும் உண்மையான தியாகமும் இவரைப் பல்வேறு அமைப்புகளில் பங்குபெறச் செய்தன. உதகை மாவட்ட ஆட்சியின் தலைவராகவும் மாவட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். கோவை, நீலகிரி மாவட்டங்களின் கல்வித்துறைகளின் தலைவராகவும், விவசாய மன்றங்களின் செயலாளராகவும், கூட்டுறவு நிலையங்களில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
1933ல் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பாகக் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார். பழங்குடி மக்கள் உரிமைக்காக, குறிப்பாக அரசியலில் தனி உரிமை பெறுவதிலே இவர் பேரார்வம் காட்டினார். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும், பொதுவாக நாட்டின் நலனிற்கும் மிகச் சீரிய வகையில் திட்டங்களை தந்துள்ளார்.
முதுபெரும் தலைவரான ஆர். சீனிவாசன் போன்றோர்களோடு இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று மாநாடுகளில் கலந்துகொண்ட, பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் அறிமுகமான தமிழகத் தலைவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவராவார்.
1938ல் சென்னை மாநில அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். 1950லிருந்து 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை எய்தினார்.
ராவ் சாகேப் எம்.சி. மதுரைப்பிள்ளை (1880 – 1935)
எளிய குடும்பத்தில் பிறந்து உண்மை உழைப்பாலும் நல்ல பண்பாலும் செல்வந்தரானார். ஏழை எளிய பட்டியல் வகுப்பு மக்களின் நலனிலே அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றினார். சென்னையில் பொதுவாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1921ல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டது. முதலாளி-தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை சாதிச்சண்டையாக உருவெடுத்தது. இதனை புளியந்தோப்புக் கலவரம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேலை நிறுத்தத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான திராவிடர்-ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாக பாவித்து உணவும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார்.
1925ல் இவர் சட்டமன்ற உறுப்பினாராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் தனித்து நின்றே பணியாற்றினார். ஒரு சில சமயங்களில் முதுபெரும் தலைவர் சீனிவாசனாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் அரசியல் அதிகாரமானது பழங்குடி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தனித்தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி முறையே சிறந்தது என இவர் ஆரம்பத்தில் கருதினார்.
சமுதாய நன்மைக்காக, திராவிடர், ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேடையில் பலமுறை கூட்டியிருக்கிறார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பணம், உடை, இருக்க இடம் போன்றவைகளைத் தந்து உற்சாகப்படுத்தினார். இவர் நகர மன்ற உறுப்பினராகவும் சில காலம் தொண்டாற்றியுள்ளார்.
பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் (1890-1962)
இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியில் ஆதாரங்களோடு வாதிட்ட உண்மையான பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றைய காலத்து தூயதமிழ் இணைந்தோடும். கருத்தில் தரம் தெரியும். திறன் பேசும். அறன் ஒளிரும். சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உறக்கத்தை உதறி செயலிலே வீரத்தை காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.
இவர் 1890ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலேயே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங்கொண்டிருந்தார் என்பார்கள்.
1907ல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் கிறுத்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21 வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அரிய கூட்டங்களை நடத்தினார்.
1912லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார்.
1917ல் மாண்டேகு-செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது, 1924ல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது ஆகியவை இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. 1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினைப் படைத்துள்ளார். 1930லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.
“எங்களுக்கெல்லாம் முன்னரே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மக்களைத் திருத்தியவர் இவர்” என்று அன்னாரது நீத்தார் நினைவு நாளில் ஈ.வே.ரா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சுவாமி சகஜானந்தர் (1891 -1958)
1891ல் வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். சமத்துவக் கொள்கையிலும் தன்னலமற்ற பணியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவராய் வாழ்ந்தார். தமிழ் மொழியில் புலமையும், வேதம், வேதாந்தம் மற்றும் பல கலைகளிலும் ஆழ்ந்த பயிற்சியும் பெற்ற பின்னரே அவர் சமுதாய தொண்டினை மேற்கொண்டார்.
வேதங்களில் கோயில் வழிபாடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பழங்குடியினர் கோயிலினுள் நுழைவதால் மூர்த்தா அல்லது மூர்த்தியின் புனிதம் சீரழிந்துவிடும் என்னும் நம்பிக்கையை இகழ்ந்தார். இந்த மூட நம்பிக்கைக்கு வேதங்களில் ஆதாரமில்லை என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் தன் இன மக்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோயிலை கட்டினார். சிதம்பரத்தில் நந்தனார் மடத்தை நிறுவி மற்றவர்களைப்போல தாமும் ஒரு மடத்தை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.
கல்விப்பணி: ஆன்மிகத்தெளிவு பெறவும் ஆத்மா உயர்வு அடையவும் கல்வி இன்றியமையாதது என்பது அவரது கருத்து. வேதம், வேதாந்தம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியவும் ஆய்வு செய்யவும் கல்வி ஒன்றே துணை செய்யும் என்பதை உணர்த்தினார். அறிவையும் பாதுகாப்பையும் எல்லா மக்களுக்கும் கல்வியே பயக்கும் என்பதை எடுத்துக்காட்டினார். குறிப்பாக பழங்குடியினர் முழுமையான கல்வி பெற வேண்டும் என விரும்பினார். இக்குறிக்கோளோடு 1910ல் அவர் நந்தனார் பள்ளியை நிறுவினார். இன்றும் இப்பள்ளியை திறமையாக செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
1925ல் சுவாமி அவர்கள் சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே கருத்து ஒருமித்த பழங்குடிச்சமுதாய மக்களின் மற்ற தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அவர் பணியாற்றினார். உணர்ச்சிபொங்கும் அவரது சொற்பொழிவுகள் மற்ற இன மக்களின் உள்ளத்தைக் கூடத் தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. பழங்குடி மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகவும் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.
பி.எம். வேலாயுதபாணி (1896-1962)
பூஞ்சோலை முத்துவீரர் நாவலர் ஈன்றெடுத்த செல்வர் நமது தலைவர் பி.எம்.வேலாயுதபாணி அவர்கள். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டாற்றும் பேறினை பெற்றார். தன் வட்டத்து மக்கள் பிற பகுதி மக்கள் என்ற பாகுபாடில்லாமல் பொதுவாக மக்கள் சுகாதாரத்தை கண்காணிப்பதோடு, ஆங்காங்கே பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும், சத்திரங்களையும் முதியோர் கல்விக் கூடங்களையும் துவக்கினார்; பிறர் துவக்குவதற்குக் காரணமாகவும் இருந்தார். சமுதாய நலனிற்காகப் பல மன்றங்களைத் தோற்றுவித்ததோடு அவற்றில் உறுப்பினராக இருந்து செயல்களிலும் ஈடுபட்டார். கௌரவ நீதிபதியாகவும் சிலகாலம் இருந்தார்.
சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக ராணிப்பேட்டை தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தமது மூத்த தலைவர்களோடு பங்குகொண்டு தொண்டாற்றினார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்பிலிருந்து வழுவாமலும், சமுதாய முன்னேற்றத்தையே குறிக்கோளாகவும் எண்ணி செயல்பட்டார். திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதைக் காணுவதைவிட தீட்டிய திட்டங்கள் செயலுக்கும் பயனுக்கும் உகந்ததா என்பதைக் கண்காணிப்பதுதான் இவரது கொள்கையாயிருந்தது. மாநில உணவுக் குழு, மதுவிலக்குக் குழு, மருத்துவமனை திட்ட ஆலோசனைக் குழு போன்றவைகளில் இவர் மிகவும் பங்கேற்று பல அரிய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.
பி. பரமேஸ்வரன் (1909-1957)
பி.ஏ. பட்டதாரியான இவர் முதுபெரும் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேரனாவார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் செயலாளராக 1935லிருந்து பத்தாண்டு காலத்திற்கு பணிபுரிந்திருக்கிறார். இந்த இளமைப் பருவ சமுதாய, அரசியல் துறைகளில் ஏற்பட்ட அனுபவங்களோடு இவரை நாடு தெரிந்து கொள்ளுமளவுக்கு இவரது துணிவும் முயற்சியும் பெருந்துணையாய் நின்றன எனலாம்.
தலைவர் என்.சிவராஜ் அவர்களின் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழி நின்று தொண்டாற்ற 1942லிருந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டது இவருக்குள்ள மற்றொரு சிறப்பு. அனைத்து இந்திய செட்யூல் வகுப்பினர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளராகத் திறம்படப் பணியாற்றியுள்ளார். பின்னாளில் அகில இந்திய டிப்ரஸ்ட் கிலாஸஸ் லீகிற்கு துணைத்தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். 1948ல் சென்னை மாநில பதிவுபெறாத ஷெட்யூல் வகுப்பினர் அரசாங்க ஊழியர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தினார்.
செங்கற்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராகவும் பதவி வகித்தார். பதவிக் காலம் முடியுமுன்பு இடையில் சென்னை மாநில அமைச்சரவையில் இவரை சேர்த்துக் கொள்ளத் தவிர்க்க முடியாத நிலையேற்பட்ட போது மேயர் பதவியிலிருந்து விலகி அமைச்சரானார். இங்கு பல குழுக்களில் பங்கேற்று பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கு உகந்த திட்டங்களை அரசாங்கத்திற்கு தந்தார்.
1964ல் இவர் தனது தலைமையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, விவசாயம், வீட்டுமனை போன்ற பல்வேறு துறைகளில் தனது கருத்தினை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்தார்.