திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:
முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தலித் தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக திரட்டித் தந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையில், இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில், க.அயோத்திதாசர் பற்றிய தகவல்கள் மற்றும் பின்னிணைப்புகளைத் தவிர மற்றவை அனைத்தும் அறிஞர் அன்புபொன்னோவியம் எழுதியவை. அவற்றை அப்படியே திருடி க.திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். அவர் எங்கிருந்து திருடினார் ?
1969ல் பதிவுசெய்யப்பட்ட செட்யூல்டு வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம், சென்னை என்ற சங்கம் 1971ம் ஆண்டுக்கான ஒரு நாள்காட்டியை வெளியிட்டது. அந்த நாள்காட்டியில்தான் அறிஞர் அன்புபொன்னோவியம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். இந்த நாள்காட்டியில் உள்ள தகவல்களை மீண்டும் அகில இந்திய பட்டியலினத்தோர், மலைவாசியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் பணியாளர் நல சங்கத்தின் சார்பாக செட்யூல் வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம் 1974ல் வெளியிட்டது. இந்த நாள்காட்டியில் உள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைகளைத்தான் க.திருநாவுக்கரசு அவர்கள் அப்படியே “களத்தில் நின்ற காவலர்கள்” என்ற தன் நூலில் ‘பயன்படுத்தியிருக்கிறார்’.
இவர் இதைப் பயன்படுத்தியது தவறே இல்லை. ஆனால் அத்தகவல்களை எங்கிருந்து எடுத்தார், அதை மூல நூலில் யார் எழுதினார்கள் என்பவற்றை மறைத்ததுதான் தவறு. தன்மகன் உட்பட பலருக்கு முன்னுரையில் நன்றி தெரிவித்த க.திருநாவுக்கரசு, அறிஞர் அன்புபொன்னோவியத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி நன்றி தெரிவித்திருந்தால் அது தன் எழுத்து அல்ல என்று தெரிந்துவிடுமே என்ற காரணத்தால்தான் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் எழுதியதைத் தாம் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற நெருடலும்கூட அறிஞர் அன்பு பொன்னோவியத்தின் பெயரை வெளியே சொல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
“களத்தில் நின்ற காவலர்கள்” என்ற இந்த நூல் உண்மையின் களத்தில் எதை நிரூபிக்கிறது ?
ஒரு தலித் எழுத்தாளரை, திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த நூல் நிறுவுகிறது. அது மட்டுமா ?
இந்நூலின் 92ஆம் பக்கத்திலும் 154ம் பக்கத்திலும் பி. எம். மதுரைப்பிள்ளை பற்றிய தகவல்கள் வருகின்றன. ‘புரவலர் பெருமகன் பி. எம். மதுரைப்பிள்ளை’ என்ற தலைப்பில் 92ம் பக்கத்தில் பி. எம். மதுரைப்பிள்ளையைப் பற்றிப் பேசிவிட்டு, அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை மீண்டும் தருவதாக நினைத்து 154ம் பக்கத்திலும் மதுரைப்பிள்ளையைப் பற்றித் தகவல்கள் தருகிறார். அவை “பி. எம். மதுரைப்பிள்ளை” என்ற தலைப்பில் திரு.வி.க வெளியிட்ட தகவல்கள் என்று குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, திருவிக தனது கட்டுரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆதிதிராவிடர்க்கு உதவி புரிந்தவர் என்று மதுரைப்பிள்ளையைக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 92ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும், 154ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும் ஒருவரே என்ற முடிவில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், உண்மை என்ன?
92ம் பக்கத்தில் உள்ள பி. எம் மதுரைப்பிள்ளை 1858ல் பிறந்து 1913ஆம் ஆண்டு இறந்துபோனவர். திருவிக குறிப்பிடும் எம்.சி. மதுரைப்பிள்ளை 1880ல் பிறந்து 1935ல் இறந்தவர்.
திருவிக குறிப்பிடுவது எம். சி. மதுரைப்பிள்ளையை. திருநாவுக்கரசு குறிப்பிட நினைப்பதோ பி. எம் மதுரைப்பிள்ளையை.
(படங்கள் உதவி: அன்பு. பொ. ஆதிமன்னன்)
திருநாவுக்கரசு உண்மையிலேயே தேடி அலைந்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தால் இந்த உண்மைகள் அவருக்குப் புரிந்திருக்கும்! இது திருட்டுப் புத்தகம்தானே ! அதுவும் ஒரு ஆதிதிராவிட எழுத்தாளரின் புத்தகத்தைத்தானே திருடியிருக்கிறோம் என்ற நினைப்பில் எதையுமே ஆராயாமல் வெளியிட்டுவிட்டார் போலும். ஆனால் அறிஞர் அன்புபொன்னோவியம் தான் எழுதிய “மக்களுக்கு உழைத்த பெருமக்கள்” என்ற நூலில் தெளிவாக இருவரையும் பிரித்தே எழுதியிருக்கிறார். அது மட்டுமா ?
திருநாவுக்கரசுவின் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளரும், ஆய்வாளருமான (!) எஸ்.வி.ராஜதுரை. எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை.
இந்நூலின் அணிந்துரையில் “தலித் தலைவர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர் என்று அவரே பல நேரங்களில் கூறியுள்ளார்” என்று எழுதியிருக்கிறார். ஆனால், “டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர்” என்று எம்.சி.ராஜா எங்கே, எப்போது கூறினார் என்ற விபரத்தை மட்டும் தரவில்லை !! போகிற போக்கில் எழுதிச் சென்றுள்ளார்.
எம்.சி.ராஜா தன் அரசியல் வாழ்வை ஆதிதிராவிட மகாஜனசபையிலிருந்தே துவங்கினார். தனது 25வது வயதில் 1908ல் இருந்து பொதுத்தொண்டில் ஈடுபட ஆரம்பித்தார். 1916ல் சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவைச் சீரமைப்பதில் பெரும்பங்காற்றினார். அந்த சபாவின் கௌரவச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 36வது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். 1927ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இதுதான் உண்மை. எம். சி. ராஜாவை அரசியலில் கொண்டு வந்தது ஆதிதிராவிட மகாஜனசபை. ஆனால், அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பெருமையை நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் நாயருக்குத் தானம் செய்து விட்டார் எஸ். வி. ராஜதுரை. அது மட்டுமா ?
இந்த நூலில் “சில சாதனைகளும் தகவல்களும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன உரிமைகள் பெறப்பட்டன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்.
வரலாற்றை தம் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி எழுதுவதிலும், அதை நம்ப வைக்க, எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் மிக திறமைசாலிகள்தான். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால்தான் உண்மை என்று அது நம்பப்படும் என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். இல்லையென்றால், சமீபத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய நூல்கள்வரை இப்படிப்பட்ட பொய்களைத் தொடர்ந்து எழுதுவார்களா? பொய்களைத் தருவது மட்டுமல்ல. உண்மைகளையும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, திராவிட இயக்கத்தார் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை, இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம். இதோ.
நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறுகள் பல உண்டு. அப்படிப் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பண்டித க. அயோத்திதாசர் (1845 – 1914):
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும், உயர்வு தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க தூண்டும் வகையில் பல நூல்களை எழுதினார். 1886லிருந்து பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்த பெருமைக்குரியவர். கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், இடுகாடு-சுடுகாடு போன்றவைகளும் கிடைக்க வழிசெய்தவர். மருத்துவத்திலும் இவர் சிறந்து விளங்கினார்.1889ல் கர்னல் ஆல்காட், மேரி பால்மெர், ஆனி பெசன்ட் உதவியுடன் நகரில் பல பள்ளிகளை அமைத்தார். 1902ல் தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். சமயம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மக்களுக்கு இடைவிடாமல் பணியாற்றினார். 1907ல் தமிழன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். இது இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற கடல்கடந்த நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் பவனி வந்தது. அவர் படைத்த நூல்களில் ‘புத்தரது ஆதிவேதம்’ அவரது ஆராய்ச்சித் திறனுக்கு ஓர் சான்றாகும்.
இரட்டைமலை சீனிவாசனார் (1860 – 1945)
இவர் நீலகிரியில் வணிகத்துறை கணக்காயராக பணியாற்றினார். சென்னையில் குடியேறிய பின் 1882லிருந்து 1885வரை பல அரசாங்க குறிப்பேடுகளையும், வரலாற்று நூல்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்றாட வாழ்ககை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். 1884ல் தியோசஃபிகல் சொசைட்டியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், அவ்வமைப்பு பழங்குடி மக்களுக்குப் பயன்படாது என்று உணர்ந்து அப்பேரவையிலிருந்து விலகினார். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் தோறும் சென்றார். உலக அறிவு தடுக்கப்பட்ட அவர்களிடம் அவர் கல்வி கற்றல், சுகாதாரத்துடன் இருத்தல், சுத்தமான ஆடைகளை அணிதல், ஒழுங்காகப் பேசுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தினார். 1891ல் ஆதிதிராவிட மகாஜன சபையில் திறம்பட பணியாற்றினார். 1892ல் ‘பறையன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மக்கள் விழிப்படையும் வகையில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.1893ல் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் பழங்குடி மக்களின் மாநாட்டைக் கூட்டினார். இதுவே பழங்குடி மக்களுக்காக இந்தியாவில் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். 1900 வரை எண்ணற்ற மாநாடுகளைக் கூட்டி மக்கள் நலன் அடையவும், பாதுகாப்புப் பெறவும் ஆங்கில அரசிடம் ஓயாமல் போராடினார். பிறகு, இங்கிலாந்து செல்ல புறப்பட்டு, இடையில் தென்னாப்பிரிக்கா சென்று அரசாங்கப் பணியை மேற்கொண்டார். அங்கும்கூட இந்தியப் பழங்குடி மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே இந்திய மக்களின் நல்வாழ்விற்காகச் சிந்தித்தார், செயல்பட்டார். 1921ல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, சமுதாய பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1922ல் சென்னை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1925ல் தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார். 1930ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்திய பழங்குடி மக்களின் சார்பில் கலந்துகொண்டார்.
1932ல் பூனா ஒப்பந்தத்தில் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து தொண்டாற்றினார்.