‘விடுதலை வேளிவியில் தமிழகம்’ என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பத்தம் தெரியுமா?
1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்.
காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.
மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ!
”சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ”
(அறிவு -1936 மே இதழ்)
ஈ.வே. ராமசாமிநாயக்கர் உயிருடன் இருந்தபோதுதான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.
மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.
கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்:-
பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.
இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.
பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.
பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.
……….. இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், ”இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது” என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.
அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். ”என்னய்யா யோக்கிதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்ததுபோல, திராவிடஸ்தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும்’ என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று அவரே பேசியிருக்கிறார்.
(நூல்: நான் பார்த்த அரசியல்)
ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.
‘துக்ளக்’ ஆசிரியர் சோ கூறுகிறார்:-
…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. ”இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)
உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்:-
வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப்போராட்டம் நடத்தப்பட்டபோது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.
சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும்.
(குமுதம்-03-02-2000)
இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?
‘துக்ளக்’ ஆசிரியர் சோ சொல்வதுதான் உண்மை.
ஆதாரம் இதோ!
27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)
இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா! மேலும் ஓர் ஆதாரம்
தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறார்.
ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்:-
”நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. ”
(தமிழர் தலைவர் பக். 14)
தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறபோது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா!
ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?
இல்லை!
இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்?
தமிழ் ஓவியா,
இந்த பதிவை எழுதிய ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திர போராட்டத்துக்கு எதிரானவர் என்று எழுதி இருக்கிறார். நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கோள் பெரியார் ஏன் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிரான நிலை எடுத்தார் என்று விளக்குகிறது. பெரியாரின் நிலை சரியா தவறா என்பது அடுத்த கேள்வி; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்ப்பு நிலை எடுத்தார் என்பதில் ம. வெங்கடேசனுக்கும், எனக்கும், உங்களுக்கும், பெரியாருக்கும் எந்த வேறுபாடும் இல்லையே!
நீங்கள் பெரியாரின் காரணங்கள் பற்றி பேச விரும்பினால் தாரளமாக பேசுங்கள்.
ம. வெங்கடேசனுடன் எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடு மிக சிம்பிள். வெங்கடேசன் பெரியார் எப்போதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை என்று எழுதி இருப்பது தகவல் பிழை; ஜெயிலுக்கு போவது மட்டுமே விடுதலை போராட்ட வீரருக்கான தகுதி இல்லை. பெரியார் மட்டுமல்ல, பின்னாளில் காங்கிரசை விட்டு விலகிய, காங்க்ரசுக்கு எதிராக போராடிய, ஜின்னா, வரதராஜுலு நாயுடு போன்றவர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான்.
கணக்கில் ஒரு மாணவன் ஃபெயில், தமிழில் பாஸ் என்றால் அவன் எல்லாவற்றிலும் ஃபெயில் என்ற பிம்பத்தை இந்த பதிவு உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் கருத்தோ அவன் எல்லாவற்றிலும் பாஸ் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இது எனக்கு இசைவான விஷயம் இல்லை. எனக்கு தெரிந்த வரைக்கும் பெரியார் தன்னை உத்தமன் என்று நினைத்ததில்லை, இப்படி ஒளி வட்டம் உருவாக்கும் முயற்சியைக் கண்டால் அவர் போங்கடா வெங்காயம் என்றுதான் சொல்வார் என்று தோன்றுகிறது.
ம. வேங்கடேசனைப் பற்றி இந்த ஒரு பதிவை வைத்து நான் எந்த முடிவுக்கும் வருவதிர்கில்லை. இந்த பதிவு மிகைப்படுத்துகிறது என்றுதான் சொல்ல முடியும்.
//உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.//
ஆர்.வி.
பெரியார் என்றால் பெரியார் மட்டுமே.
அவருக்கு எந்த ஒளிவட்டமும் தேவையில்லை.
அவர் ஓரு சாதாரண மனிதன்
பெரியாரைப் பற்றி அவதூறாக,தவறாக விமர்சிப்பவர்களுக்கு பெரியாரின் கருத்தைக் கொண்டே பதில் அளிக்கிறேனேயல்லாது நீங்கள் நினைப்பது போல் எந்த வட்டத்தையும் உருவாக்க அல்ல
ஆர்.வி.
தமிழ் ஓவியா,
பெரியார் சாதாரண மனிதன் என்கிறீர்கள். சரி. அவரது கருத்துகளை ஊர்ந்து கவனித்திருக்கிறீர்கள். இந்த சாதாரண மனிதனின் கருத்துகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தவறு என்று படுகிறதா? இந்த கேள்வியை பார்த்தவுடன் யோசிக்காமல் உங்களால் அடுத்த ஒரு நொடியில் பெரியாரின் இந்த கருத்து தவறானது என்று சொல்ல முடியுமா?
சாதாரண மனிதனின் எல்லா கருத்துகளும் – 100% கருத்துகளும் – உங்களுக்கு சரி என்று படப்போவதில்லை. அப்படி தோன்றினால் அவர் சாதாரண மனிதன் இல்லை. உண்மையில் அசாதாரண மனிதர்கள், மாபெரும் தலைவர்கள் என்று கருதுபவர்கள் மீதும் கூட நமக்கு விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரியார் உங்களை பொறுத்த வரையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது.
உங்களுக்கு பெரியார் மேல் ஒரு மகத்தான பிம்பம் இருக்கிறது. அவரை விமர்சிக்கும் எந்த கருத்தும் – எந்த கருத்தும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் – உங்களுக்கு இசைவானது இல்லை. இது அதிசயமான விஷயம் இல்லை. ஆனால் இதைத்தான் நீங்கள் அவர் தலைக்கு பின் ஒழி வட்டம் எழுப்ப முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறேன். நீங்கள் பெரியாரை உணர்வுபூர்வமாக – “எங்களை” உயர்த்த வந்த உத்தமர் – அணுகுபவர். ஏறக்குறைய அவருடைய பக்தர். உங்களுடன் பெரியாரைப் பற்றி எப்படி அறிவுபூர்வமாக விவாதிக்க முடியும்?
பாருங்கள் இங்கே ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தவர் என்று வாதிடுகிறார். பெரியாரின் பேச்சுகளிலிருந்து இதற்கு மேற்கோள் தருகிறார். நீங்கள் இதை மறுக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் இது வரை தந்த இரண்டு மேற்கோளும் ம. வெங்கடேசனின் நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ம. வெங்கடேசனின் நிலையை மறுக்க வேண்டும் என்றால் அவர் எப்போதும் சுதந்திரப் போராட்டத்தை எதிர்க்கவில்லை என்று காட்ட வேண்டும். அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபொது பேசிய எதையாவது மேற்கோள் காட்ட வேண்டும். அதற்கான ஆவணங்கள் இன்று கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. பெரியார் பக்தரான உங்களுக்கு தெரியலாம். இல்லை கோவை அய்யாமுத்து போன்றவர்களின் நினைவுகளில் கிடைக்கலாம்.
இல்லை என்றால் ஆமாம் பெரியார் எதிர்நிலை எடுத்தார் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும். பிறகு அவர் அப்படி செய்தது சரிதான், இந்த இந்த காரணங்கள் இருக்கின்றன, பெரியார் தன நிலையை இப்படி இப்படி விளக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவர் தனி ஆளாக இருந்தாலும், தன கருத்து அனேகமாக ஒத்துக்கொள்ளப்படாது என்று தெரிந்தாலும், தன கருத்தை எடுத்து சொல்ல அவர் தயங்கியதே இல்லை. ஆமாம் ஒரு ஐந்தாறு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், கடைசி இருபது சொச்சம் வருஷம் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி இருப்பார். அதுதானே உண்மை!