ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.
மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?
வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்ட ஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டுபோய்விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்.
(திராவிட நாடு – 21-08-1949)
வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை!
அதுமட்டுமல்ல 1940-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார் :-
”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.
வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!
பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.
இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.
ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.
அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.
ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!
பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.
ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.
ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.
கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.
பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.
அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!
மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.
இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.
கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.
இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.
கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.
இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.
பாராட்டுகிறோம்.
பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.
ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!
ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.
துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.
இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.
பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.
இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.
சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)
இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.
இது மட்டுமல்ல; இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-
”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
(நூல்:- நினைவுகள்)
திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?
கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.
கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.
(திராவிட நாடு 21-08-1949)
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.
அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!
கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!
(திராவிட நாடு 21-08-1949)