பெரியார் திடல் வரலாறு!
”இந்த பெரியார் திடல் மன்றத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு தடவை தந்தை பெரியார் அவர்கள் செயிண்ட் மெமோரியல் ஹாலில் மாநாடு கூட்ட வேண்டுமென்று கேட்டபோது அய்யாவின் கொள்கையை கேட்டுவிட்டு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படியானால் இங்கேயே ஒரு பொது மண்டபம் அமைப்போம் என்று இந்த மண்டபத்தை அமைத்தார்கள். அப்போது அங்கே இருக்கிற எல்லோரையும் அழைத்து தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:-
நாங்கள் கேட்டோம், மறுத்துவிட்டார்கள்-உடனே எனக்கு என்ன தோன்றிற்று? பொதுமண்டபம் ஒன்று சென்னையிலே இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் பயன்படவேண்டும். எனக்கு மாறுபட்ட கருத்து உடையவர்கள் கேட்டாலும் கொடுக்கவேண்டும், தைரியமாக.இன்னாருக்கத்தான் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை. ”பொது மண்டபம்” என்ற முறையிலே-நமக்கு அவர்கள் மறுத்ததற்கு நேர் எதிரிடையாக நீங்கள் நடக்க வேண்டும்…என்று சொன்ன காரணத்தினால்தான் இன்றைக்கு அய்யா அவர்கள் வகுத்த அந்த நெறிப்படி இங்கே அனைவருக்கும் பொதுவுக்குப் பயன்படும்படி இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது’’ என்று வீரமணி அவர்கள் ‘சங்கராச்சாரி யார்’ என்ற நூலிலே கூறுகிறார்.
மேலும் 31-03-1994 அன்று சன் டி.வி.யில் ரவி பெர்னாட் அவர்கள், ‘‘பெரியார்திடலில் தீ மிதி நடத்த வேண்டும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு வீரமணி அவர்கள், ”தாராளமாக ஒத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்துவோம்” என்றும்
அதைத் தொடர்ந்த கேள்விக்கு ”பெரியார் திடல் எங்களுடைய கட்சியினுடைய மன்றம் அல்ல” என்றும் பதில் கூறியுள்ளார்.
…வீரமணி சொல்கின்ற இந்த பெரியார் திடல் வரலாற்றை ஆராய்ந்தால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.
மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!
உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.
ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று வீரமணி சொல்வாரா?
இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
14.08.98 அன்று கோலாலம்பூரில் வீரமணி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடம் கொடுக்காததைப் பற்றி பேசும் போது ”நண்பர்களே கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம் தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்தச் சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூடக் கருதவேண்டிய அவசியமில்லை. ஆகா! இந்த இடத்தில் தான் பண்ணவேண்டும். அந்த இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்” என்று கூறுகிறார்.
ஆனால் இப்படி பேசியிருக்கின்ற வீரமணி என்ன செய்திருக்க வேண்டும்? ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழிப்படி, கொள்கைப்படி, கோலாலம்பூரில் ஒரு பொதுமன்றத்தைக் கட்டி எல்லோருக்கும் பொதுவாக வாடகைக்கு விட்டிருக்கவேண்டுமா? இல்லையா? அதையும் விட்டுவிட்டு ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழியையும் விட்டுவிட்டு, இன்ன இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கூறுகிறாரே, அப்படியென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுவாதி இல்லையா? ஒருவர் இடம் கொடுக்கவில்லை என்றால் மற்றொரு இடத்தில் நடத்திடவேண்டும். அவர்தான் பகுத்தறிவுவாதி என்று வீரமணியே சொல்கின்றபோது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்தது பகுத்தறிவின் செயல் அல்ல என்பது தெளிவாகின்றதே! வீரமணிக்கு இருந்த பகுத்தறிவு கூட ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு இல்லையே!
இது ஒருபுறம் இருக்க,
பொதுமன்றம் ஆரம்பித்ததன் மூலம் இவர்களே இவர்கள் கொள்கைக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள். எப்படியென்றால் பெரியார் திடலில் அடிக்கடி அற்புத சுகமளிக்கும் தெய்வீக கூட்டங்கள் நடைபெறுகின்றன. காது கேட்காதவர்களுக்கு காத கேட்கவைப்பது, குருடர்களை பார்வையடையச் செய்வத போன்ற நிகழ்ச்சிகள் பக்தியின் பெயரால் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருகின்றார்கள். நிகழ்ச்சி நடக்கும்போது மேலும் அங்கே பக்தி ஊட்டப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் போய் விடுகிறார்கள். ஆனால் அடுத்த நாள் வீரமணி சொல்கின்றது போல, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினால் அற்புத சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அல்லது பக்தர்கள் மறுநாள் நடக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா?
பெரியார் திடலில் தீமிதி விழா நடந்தால் சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருவார்கள். ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடந்தால் முதல் நாள் தீமிதி விழாவில் வந்தவர்கள் இதற்கு வருவார்களா? கண்டிப்பாக வரமாட்டார்கள். ஆகவே பெரியார் திடலை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் இவர்களே பக்தியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்! இதுதானா மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றும் முறை?
பெரியார் திடலில் அடிக்கடி இயேசு ஜீவிக்கிறார் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? இல்லவே இல்லை! ஆதாரத்தோடு பகுத்தறிவுவாதிகள் இதை நிரூபிக்கமுடியுமா? அப்படி ஒருவேளை நடத்தப்பட்டிருந்தால் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எத்தனைபேர் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்?
எலியை வயலில் அனுமதித்துவிட்டு, வயல் பாழாகிறதே என்று அலறிவிட்டு பின்பு எலியை விரட்டுகிறேன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…
பாம்புக்கு பால் வைத்துவிட்டு ‘பாம்பு ஒழிப்பு’ நிகழ்ச்சி நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…
திரைப்படம் எடுப்பதற்கு பணம் தந்துவிட்டு ”திரைப்படம் ஒழிப்பு” போராட்டம் நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ… ஏமாற்றுத்தனமோ.. அதேபோல்தான் பெரியார் திடலில் பக்தியை பரப்பும் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் போன பின்பு..(கவனிக்கவும்) அவர்கள் போன பின்பு-அய்யோ! மக்களுக்கு பக்தி பரவுகிறதே, மூடநம்பிக்கை பரவுகிறதே! என்று அலறிவிட்டு, பக்தியை ஒழிக்கிறேன் என்னும் பேரால் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவதும் முட்டாள்தனமான செயலாகும்.
பகுத்தறிவுவாதிகளே! ஆங்காங்கே கூட்டம்போட்டு மக்கள் பக்தி போதையில் அறிவை இழக்கிறார்கள் என்று உரக்க கத்துகிறீர்களே அந்த பக்தி போதை வளர நீங்கள் வாடகைக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒரு காரணியாக இருக்கின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?
தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றால் அதற்கு மறுநாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று வீரமணி சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தீமிதி நிகழ்ச்சி நடந்தால் மூடநம்பிக்கை வளர்கிறது. அதனால்தான் நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றுதானே அர்த்தம்! பிறகு ஏன் மூடநம்பிக்கை வளர பெரியார் திடலில் முதலில் அனுமதி தரவேண்டும்? தாங்களே அதை வளர்த்துவிட்டு அதை நாங்கள் ஒழிக்கிறோம் பாருங்கள் என்று சொல்வதுதான் பகுத்தறிவா?
எல்லோருக்கும் இடம் கொடுப்பதன்மூலம் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு தெரிகிறதாம்! மெமோரியால் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் அவர் கொள்கையில் வழுவாமல் நிற்கிறார் என்றுதானே பொருள், ஈ. வே. ராமசாமி நாயக்கர் இடம் கொடுக்கிறார் என்றால் அங்கே பண்பாடு எங்கே தெரிகிறது? கொள்கை நழுவல்தானே தெரிகிறது. பண்பாட்டிற்காக என்றால் இலவசமாக கொடுத்திருக்கலாமே! மாற்றுக் கொள்கை உடையவர்களுக்கு கூட தங்களுடைய இடத்தை இலவசமாக தருகிறார்களே என்று மக்கள் இவர்களை புகழ்ந்திருப்பார்களே! ஆனால் உண்மையில் இது பண்பாட்டிற்காக அல்ல.
பெரியார் திடல் பணத்திற்காகவே!
பணத்திற்காக! பணத்திற்காக மட்டுமே!!
தங்களுடைய இயக்கத்திற்கு பணம் சம்பாதிக்கவே ஈ. வே. ராமசாமி நாயக்கர், பெரியார் திடலை கட்டினார் என்பதுதான் உண்மை. இல்லையென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய சொந்தப் பணத்தில் இதைக்கட்டியிருக்கலாமே. இதை விட்டுவிட்டு மக்களிடம் பணம் வசூலித்துதானே இந்த மன்றத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்டினார். மக்கள் பணம் தரவில்லை என்றால் இதை கட்டியிருப்பாரா ஈ. வே. ராமசாமி நாயக்கர்? தன்னுடைய சொந்தப் பணத்தில் இதைக் கட்டியிருந்தால் பண்பாட்டிற்காக என்று சொல்லலாம். ஆனால் மக்களிடம் வசூலித்த பணத்தில் கட்டிவிட்டு பண்பாட்டிற்காக கட்டினார் என்று சொன்னால் அதை நம்புவன் முட்டாளாகத்தான் இருப்பான். அதனால்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கரும் தன்னுடைய இயக்கத்திற்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்றார். அந்த அழைப்புக்கிணங்கித்தான் வீரமணியும் இயக்கத்தில் சேர்ந்தது. தற்போது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்த முட்டாள்தனமான காரியம் என்றும் தெரிந்தும் அதை பண்பாட்டிற்காக என்று வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்!
பெரியார் திடலின் நோக்கம் பண்பாடு அல்ல. பணம் என்பதை இவர்கள் வாடகை அதிகமாக வாங்குவதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதில் இன்னொரு விஷயம்.
பெரியார் திடல் தங்களுடைய கட்சியினுடையது அல்ல என்று வீரமணி கூறுகிறார். அப்படியென்றால் அது யாருடையது? அது யார் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது? அதனுடைய தலைவர், செயலாளர் என்பவர்கள் யார்? அந்த வாடகைப் பணம் யார் வசூலிக்கிறார்கள்? இது போன்ற விஷயங்களை வீரமணி சொல்லியிருக்க வேண்டாமா?
இது எங்கள் கட்சியினுடையது அல்ல என்று வீரமணிதான் சொல்கிறாரே தவிர, அதன் உரிமையாளர் அல்லது பெரியார் திடலை நிர்வாகிப்பவர் இது தி.க. வினுடையது அல்ல என்று இதுவரை ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லையே ஏன்? பெரியார் திடலை விமர்சிக்கும்போது அதை எதிர்த்து வீரமணி மட்டுமே குரல் கொடுக்கிறாரே தவிர அதனை நிர்வாகிப்பவர் அல்லது அதனுடைய தலைவர் குரல் கொடுத்ததில்லையே ஏன்? பெரியார் திடல் எந்த அமைப்பின்கீழ், யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது என்று இனிமேலாவது வீரமணியோ அல்லது அதனை நிர்வாகிப்போரோ சொல்வார்களா?
வீரமணி பெரியார் திடல் எங்கள் கட்சியினுடையது அல்ல என்று கூறுகிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
திருச்சி வே. ஆனைமுத்து கூறுகிறார்:-
இயக்க நிதி என்பது ”சுயமரியாதை ஸ்தாபன-திராவிடர் கழக நிதியே ஆகும் என்பதையும் அய்யாவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
”சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியவற்றிற்குக்கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன்; கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள்; அல்லது பொது மக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள்; அவ்வளவுதான்”(விடுதலை, தலையங்கம் 26-08-1972) அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சென்னை பெரியார் திடல் மனை வாங்கவும், கட்டடங்கள் கட்டவும், ”திராவிடர் கழகக் கட்டட நிதி” என்ற பேரால் தான் கழகத் தோழர்கள் வசூலித்ததும், பொதுமக்களே முன்வந்தும் அய்யாவிடம் ரூபாய் இரண்டரை லட்சம் அளிக்கப்பட்டது.
(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்)
வே. ஆனைமுத்து சொல்வதன் மூலம் நமக்கு தெரிவதென்ன?
திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திடல் இரண்டும் ஒன்றுதான் என்பதுதானே!
திராவிடர் கழகம் வேறு, பெரியார் திடல் வேறு என்று வீரமணி சொல்வது பொய்தானே!
மேலும் ஒரு கேள்வி.
இந்து முன்னணியோ, ஆர். எஸ். எஸ். அல்லது விஸ்வ ஹிந்து பரிஷத்தோ நிகழ்ச்சி நடத்த பெரியார் திடலை வாடகைக்குத் தருவார்களா?