சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு அய்யா (ஈ.வே. ராமசாமி நாயக்கர்) அவர்கள் போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அது உண்மையில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு பல தடவை போயிருக்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்:-
முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்.
(திராவிடன் 05-08-1929)
இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:-
தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
(குடியரசு 20-10-1935)
அம்பேத்கருக்கு அறிவுரை கூறிய ஈ.வே. ரா!
தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம்-அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’ என்று கூறுகிறார்.
(குடியரசு 20-12-1935)
மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார்.
(குடியரசு 31-05-1936)
ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வளவு உறுதியாக, சபதம் ஏற்றிருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தனது கடைசி காலத்தில் மதம் மாறாமல் இந்துவாகவே இறந்தார்?
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியமா?
அம்பேத்கருக்கு அறிவுரை கூறியதுதான்.
அதாவது அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதுதான். ஆனால் அம்பேத்கர் தான் இந்துவாக இறக்கப்போவதில்லை என்று சொன்னவாறே பெளத்தத்தை தழுவி, தான் சொன்ன சொல்லை செயலில் காட்டினார். ஆனால் அம்பேத்கருக்கு அறிவுரை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார். உண்மையிலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத்தான் அம்பேத்கர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். இவர், தான் சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்குப் போகாதவராம்!
இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா?
அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்!
சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்று நாம் சொன்னால்-உடனே ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துமதத்தை எதிர்த்தவர். நாத்திகர்களுக்கு மதம் இல்லை. அவர் மதம் மாறவில்லையென்றாலும் அவரை இந்து என்று சொல்லிவிடமுடியாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாத்திகவாதியாதலால் அவர் இறக்கும்போது நாத்திகவாதிதான். இந்து அல்ல என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லிவிடுவார்கள்.
அறிவுரையை மறந்த ஈ.வே. ரா!
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்பதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்திருக்கிறார்.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.
(விடுதலை 09-02-1950)
ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?
— தொடரும்