இஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:
ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்வதில் எவ்வளவு வல்லவர்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்லாமில் ஜாதியைப் பற்றிய இவர்களுடையப் பிரச்சாரங்கள்.
இஸ்லாமில் சாதி இல்லையாம், ஈ.வே. ராவின் பிதற்றல்!
இந்துமதத்தில் பல ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமே உயர்வு-தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன-என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ!
* இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன.
(குடியரசு 03.11.1929)* தீண்டாமையை ஒழித்து மகமதிய மதமே! இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு-தாழ்வு இல்லை.
* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
(குடியரசு 02.08.1931)* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
(குடியரசு 23.08.1931)* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
(குடியரசு 17.11.1935)* இப்போது வரவர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும், சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.
* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.
(குடியரசு. 19.01.1936)* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.
(குடியரசு 31.05.1936)* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றன.
* இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.
(நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)
அதாவது இஸ்லாமில் ஜாதி இல்லை. இஸ்லாமில் உயர்வு-தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் சமம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து. இதுபோலவே வீரமணியும் ‘சங்கராச்சாரியார்’ என்ற நூலில் ‘சாதி என்று வரும்போது அது இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலே உண்டு?’ என்று கேட்கிறார். ஆக இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் ஜாதி இல்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் கூறுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள்.
இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்களே – இதுவாவது உண்மையா என்று பார்க்கலாம்.
இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!
‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-
முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.
1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்
உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-
1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.
2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.
3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.
இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-
1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)
கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.
2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.
3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)
4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)
5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)
6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)
7. பஹாவீ
8. ஸனூஸி
9. கைதியானி
10. அஹ்மதியா
11. ஸீபிகள்
இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.
இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:
1. ஆந்திரா – மஹாதர்
2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.
3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.
4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்
5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்
6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்
7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)
8. பஞ்சாப் – பகிர், மேகாதி
9. ராஜஸ்தான் – ஜூலாஹா
10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா
11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்
மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?
இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.
இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!
ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-
”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.
அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.
மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.
சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:
1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்
II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.
1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.
2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்
3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி
4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா
III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”
மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-
”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”
இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.
ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”
குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?
ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.
இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.
மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.
இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)
தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)
இதிலிருந்து தெரிவதென்ன?
கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!