“ஆத்மனிலிருந்தே ஆதியில் வான்வெளி வந்தது. வான்வெளியினுன்றும் காற்று வந்தது. காற்றினின்றும் தீ. தீயினின்றும் நீர். நீரினின்றும் இத்திடமான மண்ணுலகம்“.
இந்த தைத்ரீய உபநிடதத்தின் கருத்து மிகமிகத் தொன்மையான புறநானூற்றுச் செய்யுளில் காணப்படுகிறது.
“உலகமாவது நிலம் தீ நீர் விசும்பொடு வளி ஐந்தும் கலந்த மயக்கம்“.
(தொல். பொரு. மரபியல் சூ 1582)
நிலம் நீர் தீ காற்று வான் என்ற ஐந்திற்கும் அப்பாலாய் அவற்றை ஆக்கிப் படைத்து வைக்கும் முதற் பொருளே இறை. அதுவே உலகையும் உலகிலுள்ள பொருள்களையும் உள் நின்று இயக்குகிறது. உலகிற்கும் உயிருக்கும் வேறாகவும் அவற்றின் ஊடேயுமிருந்து கொண்டு செயலாற்றுகிறது.
இறைப்பற்று, ஊழில் நம்பிக்கை, செயல் அல்லது வினை, மறு பிறப்பு, வீடுபேறு ஆகிய இவ்வைந்தும் இந்து சமய நெறியின் அடித்தளம். அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப் பொருள்கள் நான்கும் இச்சமயத்தின் தூண்கள். மிகப் பழமைக்கும் பழமையான புதுமைக்கும் புதுமையான இச்சமயக் கருத்துக்கள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை ஆராய்வோம்.
உயிரும் மெய்யும் வெவ்வேறு பொருள்கள். தொல்காப்பியமே இதற்குச் சான்று. எழுத்துக்கள் உயிர் என்றும் மெய்யென்றும் சொற்கள் பெயர்வினை என்றும் பிரிக்கப் பட்டிருக்கின்றன.
மனிதனுடைய உயிர் ஆன்மா. உடல் மெய். உயிர் பெற்ற உடலே உயிர்மெய்யாகத் திகழ்கிறது. உடலான மெய் இயங்க உயிரான ஆன்மா உடலினுள் பொருந்தியிருக்க வேண்டும். உயிரற்ற உடல் இயங்காது. உயிரும் மெய்யும் சேர்ந்த சொல்லே பொருளைத் தரும். உயிர் இருக்க உடல் (மெய்) தேவை. உடல் இயங்க உயிர் தேவை.
“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்“
(தொல். எழு. சூ. 46)
“உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ
உயிர்த் திறம் இயக்கம் இன்மையான“
(தொல். பொரு. சூ. 256)
உயிர்க் கலவாத பொருள்கள் அசைய மாட்டா என்ற உண்மையை இச்சூத்திரம் உணர்த்துகிறது. உயிரோ உடம்பின் சார்பாகத்தான் விளக்கம் பெறும். உடலிற்கு வேறாக உயிர் காணப் படாது.
“மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” (தொல். எழு. சூ. –)
“மெய்யொடு இயையினும் உயிரியல் திரியர்“(தொல். எழு. சூ. 10)
உடல் சடப்பொருள். நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற ஐந்தின் தொகுப்பு. அது அறிவற்றது. இயக்கப் படுவது. நிலையில்லாதது. உயிரானது அறிவு விழைவு செயல்கள் உடையதாய் பிறவற்றை இயக்கும் நிலையில் உள்ளது. உடலோடு சேர்ந்து உடல்மயமாக ஆகிப் பொருள்களை அறியினும் தன் இயல்பினை உயிர் இழக்காது.
முழு முதற் பொருளான இறைவன் அகரம் என்ற உயிர் எழுத்தாகி எல்லா மெய்களிலும் (உடல்களிலும்) உட்புகுந்து அந்த உடல்களுக்குத்தான் உடையவனாக ஆகி அவைகள் எல்லாவற்றையும் செலுத்துகிறான். உடலோடு சேர்ந்து உடல் மயமாக ஆகி அவைகளை இயக்கினாலும் தன் இயல்புகளை இழக்கான். விசேஷமான உடலோடு கூடிய விசிஷ்டமான ஆத்மா ஒன்றுதான். திருமாலே நமக்கெல்லாம் உயிர். நாம் அனைவரும் அவனது உடல். “உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளான்” (நம்மாழ்வார்). இந்த விசிஷ்டாத்வைத தத்துவத்தை மொழியின் இலக்கணத்திலேயே நிலைநாட்டி விட்டான் தொல்காப்பியன்.
இறைவன் உடலில் உயிர் போல் எங்கும் கரந்திருக்கிறான் என்று சைவ நூல் கூறுகிறது. “உடல் உயிர் கண்ணறுக்கன் அறிவொளிபோற் பிரிய வரும் அத்துவிதமாகும்” (சிவப் பிரகாசம்). இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் தனது முப்பாலில் முதற் கடவுள் வணக்கப் பாடலாக
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்று அமைத்தார்.
எழுத்துக்களெல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் இறைவனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
“See what a light bursts when we name ‘உயிர்‘ ‘மெய்‘ (உடல்). The word உயிர் means both a vowel and soul and ‘மெய்‘ both body and consonant. Dr. Bain observes that the sense of similarity is the sense of invention and true discovery. The greatest discoveries in science have been made by catching such resemblances at rare intervals. And the very first Tamil man called his vowels and consonants ‘உயிர் மெய்‘. Was he not a born philosopher and had he not comprehended the true nature of the union between soul and body and vowels and consonants?” (சைவக் குடியரசு – பக்கம் 38, தருமபுர ஆதீனம்). இந்தத் தென்னகத்திலிருந்துதான் பிறவித் தத்துவாசிரியர்களான சங்கரரும், இராமானுஜரும் மத்வரும் தோன்றினர்.
உடல்களுக்குத்தான் உருவமும் நிறமும். உயிர்களுக்கு உருவமும் நிறமுமில்லை.உயிர்கள் உடல்களில் புகுந்து அவைகளை இயங்கச் செய்கின்றன. இவ்வுயிர்கள் உடல்களில் ஏன் புக வேண்டும்? இதற்கு என்ன காரணம்? அதுதான் வினைப் பயன்.
“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங்காலை காலமொடு தோன்றும்“
(தொல். சொல். வினையியல். சூ. 198).
இறந்தகால வினை (செயல்கள்) உயிர்கட்கு நிகழ் காலத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்கால வினை எதிர்காலத்தை உருவாக்குகிறது. செய்யும் வினைக்கேற்ப ஊதியமும் உறைவிடமும் அமைவது போல வினைக் கேற்பவே உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன.
உடலுடன் பொருந்திய உயிருக்கு வினைகள் தோன்றுகின்றன. வினையில்லா உயிரே உலகிலில்லை. வினைக்கு உறுதியாகப் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை. துன்பம் பயப்பது தீவினை. வினைக்கு உயிரோ உணர்வோ இல்லை. அது தானேச் சென்று வினை செய்தவனுக்குரிய பலனைத் தருவதில்லை. வினை செய்தவனுக்கு வினைப் பயன் அவனையே அடைவதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அரசன் இட்ட பணியை ஏவலர்கள் செய்வது போல இறைவனிட்ட பணியை அந்த தெய்வங்கள் செய்கின்றன. அவைகளே “பால் வரை தெய்வம்” என்கிறார் தொல்காப்பியர்.
“காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீரைந்தோடு பிறவுமன்ன
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
பால் பிரிந்திசையா வுயர்திணை மேன.”
(தொல். சொல். சூ. 57)
காலம் என்பது காலக் கடவுள். உலகம் என்பது உலக மக்கள். தொல்காப்பியர் ஊழின் இயல்பினை எடுத்துரைத்தலால் அவ்வூழிற்குக் காரணமாகிய மறுபிறப்பு உண்டென்பதும் தெரிய வருகிறது. மொழி இலக்கணத்திலேயே இந்த பேருண்மைகளை எத்துனைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றனர்! மொழிக்கு இலக்கணம் வகுத்த வரலாற்றுக்கெட்டா அப்பழங் காலத்திலேயே இச்சீரிய கருத்துக்கள் அமைந்திருக்குமானால் அக்கருத்துக்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில், இதயத்தில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்!
அதனால் தான் உலக உயிர்களுள் மக்களை மட்டும் உயர்திணை என்றும் மற்றவை அஃறிணை என்றும் பாகு படுத்தியிருக்கின்றார் தொல்காப்பியர்.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே”
(தொல். சொல். சூ. 1)
மக்களினத்திலும் அடங்காமல் இறைவனாகிய முதற் பொருளுமாகாமல் இரண்டிற்கு மிடைப்பட்ட நிலையில்தான் தெய்வங்கள் காணப்படுகின்றன. இவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்கள் உயிரின் மேனிலையில் உள்ளன.
“தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி – மக்கள் இனத்தன அல்லவாகலின் இவ்வென அறியும் அந்தம் நமக்கில – உயர்திணை மருங்கின் பால் பிரிந்திசைக்கும்.” (தொல். சொல். சூ. 4) என்றும் தொல்காப்பியர் வகுத்துரைக் கின்றார்.
சொல்லுலகை உயர்திணை அஃறிணை என்று பகுத்தது போலவே பொருளுலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்தனர். இவற்றுடன் சமய ஒழுக்கத்தைக் கூட்டி ஒவ்வொன்றிற்கும் தனித் தனித் தெய்வத்தை வகுத்தனர். குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு மாயோன், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை.
சங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்-2 விரியூர் திரு கே. வேங்கடராமன்
இரண்டு
அவ்வவ் நிலத்திலுள்ளவர்கள் வாழ்க்கைப் பயன்களை விரும்பி அந்தந்த தெய்வங்களை வழிபட்டனர். இந்த தெய்வ வழிபாட்டிலிருந்தே ஒரு முழுமுதற்கடவுளே “உலகியற்றியான்”, “உலகு படைத்தோன்” (நற்றிணை 240) எனக் குறிக்கப் பட்டிருக்கின்றது.
இவ்வுலகியற்றியானின் இலக்கணத்தை செவ்விதாக விளக்குகிறார் திருவள்ளுவர் தனது ஒப்பற்ற திருக்குறளில். “இறைவன் இயற்கையாக எல்லாமறிபவன். வாலறிவன். முற்றறிவுடையவன். இயல்பாகவே குற்றமற்றவன். தனக்கென ஒன்றும் விரும்புவதில்லை. வெறுப்பதுமில்லை. அவனே நம்மை பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவிக்க வல்லவன். தனக்கு ஒப்புமை இல்லாதவன். எண்குணத்தான். அன்பரின் அகமாகிற மலரில் வீற்றிருப்பவன்.”
இப்படிப் பட்ட இறைவனின் அருளால்தான் முதல் நூல் தோன்றும். அந்த முதல் நூலே திருக்குறள். இதில் தோன்றுகின்ற ‘தூய் மெய் உணர்வுதான் இறைவனது திருமேனி.
வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவன் கண்டது முதல் நூலாகும். (தொல். பொருள். மரபியல். சூ. 94)
தொல்காப்பியரால் வகுக்கப் பட்ட நாநிலத்தில் குறிஞ்சி சிறந்ததாகக் கருதப் படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் முதலிலே தோன்றியதால் அதற்குச் சிறப்புத் தரப்பட்டுள்ளது. அதன் தெய்வம் சேயோன். சிவந்த நிறத்தனான முரகனே சேயோன்.
தொல்காப்பியர் காலத்திலும் முருக வழிபாடு மக்கள் வாழ்க்கையோடு கலந்திருந்தது.
செவ்வேளின் சீரிய தோற்றத்தை கீரனார் எவ்வளவு அழகாக ஓவியம் தீட்டுகிறார்!
திருமுருகாற்றுப்படையில்
“உலகம் உவப்ப வலனேர்புதிர்தரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு ஓவற இமைக்கும் சேண் விளங் கவிரொளி உறு நர்த்தாங்கிய மதன் உடை நோன்தான் செறு நரத்தேய்த்த செல் உறழ் தடக்கை மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்.”
கடற்கரையில் வைகறை காட்சி. இளஞாயிறு கீழ்த்திசையில் இளம் செம்மையுடையதாய் தனது செங்கதிர்களைப் பரப்புகின்றது. அதன் கீழ்த் தோன்றும் கடல், நீலமும் பசுமையும் கலந்த நிறமாகக் காட்சி அளிக்கிறது. அது இறைவன் எழிலுடைய நீலத் தோகை மயிலின்மீது தோன்றிய காட்சியை ஒப்பதாக இருக்கின்றது. அந்த விடியற்காலை வேளையில் சிவந்து காணப்படும் இளஞாயிறே சேயோன். அந்த செஞ்ஞாயிறுக்குக் கீழ் தோன்றும் நீல நிறக்கடலே அவன் ஊர்ந்து வரும் நீல மயில். காலைக் கதிரவனின் ஒளி மயில்மேல் இருக்கும் சேயொனை ஒத்திருக்கிறது.
ஆசிரியர் நல்லழிசியார் செவ்வேளை வேண்டுகிறார். மயிலையும் கோழிக் கொடியையும் பிணிமுகமூர்ந்து செய்யும் வெல்போரையும் உடைய இறைவனே! மக்களைப் பணிந்து வாழ்த்தும் புன்செயலை விடுத்து யாமும் என் சுற்றத்தாரும் நின் புகழை ஏத்தி நின் திருப்பரங்குன்றத்தை எம் பிறவித் துன்பம் நீங்கி இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுக என்று வேண்டிப் பாடித் தொழுகின்றோம்.
“மணி நிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊரிந்த வெல்போர் இறைவ பணியொரீஇ நின் புகழ் ஏத்தி அணி நெடுங்குன்றம் பாடுதுந்தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெருக யாம் எனவே. (பரிபாடல் 17. வரிகள் 47-53)
மற்றும் கடுவனிள வெயினனார் கூறுகிறார்: “உருவிணர் கடம்பின் ஒலி தாரோயே!” உயிர்களை வருத்தும் கொடிய நெஞ்சினை உடையோரும் அறத்தின்கட் சேராத புகழில்லாரும், கூடாவொழுக்கமுடைய பொய்த்தவ வேடமுடையவரும் மறுபிறப்பு, துறக்கம், நரகம், வீடு முதலியன இல்லை என்றும் அறிவில்லாதவர்களும் ஆகிய இப்படிப் பட்டவர்கள் நினது திருவடி நிழலை அடையார். இனி இவரல்லாத அறவோரும் மாதவரால் வணங்கப்படும் மாண்புடையோரும் நின்தாள் நிழலை எய்துவர். ஆதலால் யாம் நின்னை இரந்து வேண்டுவன பொன்னும் பொருளும் போகமுமல்ல, அருளும் அன்பும் அறமுமாகிய இம்மூன்றுமேயாம். இவற்றை அருளுக.
இக் கடுவன் இளவெயிநனார் திருமால் மேல் 3,4 ஆம் பாடலையும் செவ்வேள்மேல் 5 ஆம் பாடலையும் பாடியதிலிருந்து அக்காலத்தில் சைவ வைணவ சமயப் பூசல் சிறிதும் இல்லாத சமரச நிலை இருந்து வந்தது என்பது தெரிய வருகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ சமய நூல்களுக்கெல்லாம் முதலாக நிற்றலையும் காணலாம்.
முல்லை நிலத்து தெய்வம் மாயோன். அவனே கண்ணன். கண்ணன் முல்லை நிலத்து ஆயர்களிடையே யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு இப்படிச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
…………………. வடாஅது
வண்புனல் தொழுநை வார் மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போலப்…
(அகம் 59. வரிகள் 3-6)
ஆயர் பெண்கள் யமுனையில் நீராடுகின்றனர். அவர்கள் கரையில் வைத்த துகில்களை எல்லாம் கண்ணன் எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி விட்டான். அது பொழுது மூத்த நம்பி அவ்வழியாக வர பெண்கள் மறைந்து கொள்ள வேறு வழியின்மையால் கண்ணன் குருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்திக் கொடுத்தான். அதற்குள்ளே அடங்கி மறைந்து கொள்ள!
பரிபாடலில் திருமாலிருஞ் சோலை மலையை நினைமின் மாந்தீர்! தெய்வம் பேணித் திசை தொழுதளிர் சென்மின் என்கிறார் இளம் பெருவழுதியார். இதையே நம்மாழ்வாரும்“திருமாலிருஞ்சோலை என்றேன். என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். தென்னன் திருமாலிருஞ் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனே கொலோ, என்கொல் அம்மான் திருவருளே!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பலவாகப் பார்க்கப்படும் இவ்வுலகப் பொருள்கள் அனைத்திற்கும் மூலமாக நின்ற பொருள் ஒன்றே. ஐம் பெரும் பூதங்களாகவும் பிறவுமாகவும் நம்மாற் காணப்படும் இப்பேருலகம் நுண்ணியதோர் அறிவு வெளியினின்றும் தோன்றியதேயாகும். ஒரே பொருள் பலவாகப் பல்கியது. பல்கியவாறே மீண்டும் ஒடுங்குமியல்புடையதாகியது. இந்தப் பேருண்மையை ஆசிரியர் நன்னாகனார் பரிபாடலில் கூறும் அழகைப் பாருங்கள்.
“தொன்முறை இயற்கையின் மதியொ…………….
………………… …………………………………………..மரபிற்கும்
பசும் பொன்னுலகமு மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்
கருவளர் வானத் திசையில் தோன்றி
உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீ சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இரு நிலத் தூழியும்
நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளம் நுதலிய
செய்குறியீட்டங் கழிப்பிய வழிமுறை
(பரிபாடல் 2. 1-15 வரிகள்)
கண்ணால் காணமுடியாத ஒரு பர வெளியிலிருந்து காட்சிப் பொருள்கள் அனைத்தும் தோன்றியிருக்கின்றன. இதையே தாயுமானவர்“வடிவனைத்துந் தந்த வடிவில்லா சுத்தவான் பொருள்” என்றார். இளவெயினனார் காட்சிப் பொருள் அனைத்திளும் இறைத் தன்மையை உணர்கிறார்.
அதை கடுவநிள வெயினனார் கூறுகிறார்:- திருமாலே நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண் காணப் படுகின்றன. நின் தண்மையும் மென்மையும் திங்களிடத்தே உள்ளன. நின் சுரத்தலும் வண்மையும் முகிலிடத்துள்ளன. நின் காவலும் பொறுமையும் நிலத்தின்கண் உள்ளன. நின் மணமும் ஒளியும் காயம் பூவிடத்தே காணப் படுகின்றன. நின் தோற்றமும் அகலமும் கடலிடத்தே காணப் படுகின்றன. நின் உருவமும் ஒலியும் விசும்பின்கண் உள்ளன.
நின் வரவும் ஒடுக்கமும் காற்றின்கண் உள்ளன. இவையும் இன்னோரன்ன பிறவும் நின்னினின்ரறும் பிரிந்து நின்னையே தழுவி நின் காவற்கண் அமைந்துள்ளன.
“நின் வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள
நின் தண்மையுஞ் சாயலுந் திங்களுள
நின் சுரத்தலும் வண்மையுமாரியுள
நின் புரத்தலு நோன்மையு ஞாலத்துள
நின் நாற்றமு மொண்மையும் பூவையுள
நின் தோற்றமும் அகலமு நீரினுள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்துள
நின் வழுதலும் ஒடுக்கமும் மருத்தினுள
அதனால் இவ்வு முவ்வு மவ்வும் பிறவும்
ஏமமார்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன வெல்லாம்.”
(பரிபாடல் 4. 25-34 வரிகள்)
திருமாலின் வியூகமான வாசுதேவன், பலராமன், பிரத்யும்னன், அநிருத்தன் இந்த நால்வரையும் கடுவனிளவெயினார் பரிபாடலில் கூறுகிறார்.
“செங்கட்காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்
இடவல குடவல கோவல காவல்
காணா மரப நீயா நினைவ.:
(பரிபாடல் 3. 81-84 வரிகள்)
திருப்பாற்கடலிலே அறிதுயில் கொண்டவனும் பகைவர் மார்பை உழும் கலப்பைப் படேயேந்தியவனும் நிலத்தை நீரினின்று எடுத்த ஆதிவராகமும் பிரமனும் உருத்திரனும் திருமாலுமாகிய முன்று கடவுளராகப் பிரிந்தவனும் ஆகிய ஒருவன் நீ என்று திருமால் வராகாவதாரம் எடுத்து நிலத்தை நீரினின்று எடுத்ததையும்மும்மூர்த்திகளின் தோற்றத்தையும் நல்லெழுதியார் பரிபாடலில் கூறுகிறார். (பரிபாடல் 13. வரிகள் 24-37).
குறிஞ்சி, முல்லைக்குப் பின் மருதத்திற்குரிய தெய்வம் இந்திரனாகிறான். அவனே வேந்தன் எனப் படுவான்.
இவ்விந்திரன் முருகன் முதலிய தெய்வங்கட்கு படையுதவிய பண்பும் அகலிகை பொருட்டு மேனி முழுவதும் கண் பெற்ற கதையும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இச்செய்திகளை விழாக் காலங்களில் மக்கட்கு காவியங்களில் கூறியும் ஓவியம் காட்டியும் உரைப்போர் இருந்திருக்கின்றனர்.
“இந்திரன் பூசை இவள் அகலிகை யிவன்
சென்ற கவுதமன் இன்னுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரை செய்வோரும்,”
(பரிபாடல் 19. வரிகள் 50-53)
பாலைக்குரிய தெய்வமான கொற்றவையை முருகனுக்குத் தாய் என்றும் அவளே எல்லாத் தெய்வங்களுக்கும் பழையவள் என்றும் காடுகிழாள் என்றும் கூறப் படுகிறது. கொற்றம் என்றால் வெற்றி. வெற்றி பெற்ற திரிபுர சுந்தரி, முப்புரம் எரி செய்த அம்மை.
இனி சங்க கால நூல்களில் இந்து சமயக் கருத்துக்களும், சமயச் சடங்குகளும் எவ்வாறு கூறப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்போம்.
இனி சங்க கால நூல்களில் இந்து சமயக் கருத்துக்களும், சமயச் சடங்குகளும் எவ்வாறு கூறப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்போம்.
சங்க கால சமய வாழ்வில் மார்கழித்தை நீராடலும் ஆதிரை விழாவும் நடைபெற்றன. முன்பனியுடைய மார்கழித் திங்களில் விரிநூல் அந்தணர் திருவாதிரை நாளுக்குரிய சிவபெருமானுக்கு விழா செய்யத் தொடங்கினர். வேறு சில அந்தணர் பொற்கலம் ஏந்தினர். அம்பா ஆடலைச் செய்யும் மகளிர் விடியற் காலத்தே நீராடினர்.அம்மகளிர் குளிர் வாடை வீசுதலாலே அந்தணர் வளர்த்த வேள்வித் தீயின் அருகிற் சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர்.
“கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலமேற்ப
வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்
ஊதையூர் தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த் தர
வையை நினக்கு மடைவாய்த்தன்று.”
(பரிபாடல் 11 வரிகள் 74-87)
பின்னும் கார்த்திகையன்று திருவிளக்கேற்றுதலும் நடைபெற்றது.
“மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலைத் தூக்கிய
பழவிரல் மூதூர்ப் பலருடன் வன்றிய
விழவுடன் அயர் வருகதில் அம்ம.”
(அகம் – 141 – நக்கீரர்)
புதுமண மகளிர் புது நெல் கொண்டு அவலிடித்து பாற்பொங்கலி்ட்டு மகிழ்கின்றனர்.
“புதுமண மகடூஉ வயநிய கடிநகங்
பலகோட்டடுப்பிற் பால் உலைஇரீ இக்
கூழைக்கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்கால் உலக்கை“
(அகம் – 141 – நக்கீரர்)
சங்க காலத்தில் முத்தீ வேள்வி வேட்டி இறைவனை வழிபட்ட வரலாறு காணப்படுகிறது. நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்த்து “நீ செய்த யாகங்களில் நட்ட யாகத் தூண்கள் பலவா அல்லது போர்க்களத்தில் வெற்றி கொண்டு அதன் சின்னமாக நட்ட வெற்றித் தூண்கள் பலவா?இவற்றுள் யாபல?” என்கிறார்.
மேலும் நான்மறை விதிப்படி தலைமை பூண்டு பெரிய பெரிய வேள்விகள் பலவும் வேட்பித்தனை என்கிறார் பாண்டியனை நோக்கி.
அரசர் குலத்தில் பிறந்து நோய்வாய்ப் பட்டு இறப்பின் அவர் உடலை தருப்பைப் புல்லில் கிடத்தி சில மந்திரங்களைக் கூறி அவர் முகத்திலும் மார்பிலும் கீறி இறுதிச் சடங்கு செய்வர். இதை வாழ் போழ்ந்து அடக்கல் என்பர். “வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ.” (புறம்).
தொல்காப்பியத்திற்கு உரை வகுத்த உச்சி மேற் புலவர் நச்சினார்க் கினியார் தம் உரையில் பாரதக் கருத்துக்களையும் இராமாயணக் கருத்துக்களையும்தான் உதாரணம் காட்டுகிறார். எடுத்துக் காட்டாக “கட்டில் நீத்தப் பால்” (தொல். பொருள். புற. 21) என வரும் தொல்காப்பியத் தொடருக்கு விளக்கம் கூறவந்த நச்சினாற்கினியர் பரதனும் பார்த்தனும் போல் அரசு துறந்த பாங்கு இதில் அடங்கும் என்கிறார். கொள்ளார் தேயம் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்” (தொல். பொருள். புறத்திணை. 12)என வரும் தொல்காப்பியத் தொடருக்கு எடுத்துக் காட்டு கூறுங்கால் இராமன் இலங்கை கொள்வதமுன் வீடணனுக்கு கொடுத்த துறை இது என்கிறார்.
மற்றும் கண்ணனைப் பற்றி “அசுரர் மறைத்த ஞாயிற்றை மீட்டு வந்து கண்ணன் உலக இருளை நீக்கினான். அதுபோல சோழ நாட்டை நீ காப்பாற்றினாய்” என்று மலையமான் சோழிய ஏனாதி திருக் கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடினார். (புறம் 174).
“அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீரக் கருந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு“
மற்றொரு புலவர் சொல்கிறார், “நின் குடை தாழ்வது முக்கண்ணன் கோயிலை வலம் வருங்கால் மட்டும். தலை தாழ்வது மறையாளர் வாழ்த்தும் போது மட்டுமே.”
ஞாயிறு, திங்கள், சுடர் இம்மூன்றும் சேர்ந்த தீ பிழம்பாக இருக்கின்றான். தீயின் பிழம்பை உற்று நோக்கின் அதில் பொன் நிறமும் அதன் ஊடேயே சிறிது நீல நிறமும் காணப்படும். செவ்வண்ணமாக இருக்கிற தீச்சுடரே சிவபெருமான். அதன் ஊடே காணப்படும் நீல நிறமே உமா பிராட்டி. அம்மை, அப்பன் இரண்டுமே பிரிக்க முடியாதது.விளக்குத் திரியில் தீயுமிருக்கிறது, சூடுமிருக்கிறது. தீயிலிருந்து சூட்டினையோ,சூட்டிலிருந்து தீயினையோ பிரிக்க முடியாதபடி அவை ஒன்று சேர்ந்திருக்கின்றன. அது போல ஆண்டவனிடமிருந்து சக்தியையோ சக்தியிடமிருந்து ஆண்டவனையோ பிரிக்க முடியாது. சொல்லும் பொருளும், கடலும் அலையும் போல தனித்தனியாகக் காணப்பட்டாலும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத தத்துவமே சிவ பார்வதீ தத்துவம்.
இறைவன் ஆணாயும் பெண்ணாயும் அம்மையும் அப்பனாகவுமே இருக்கிறான் என்பதே சங்க காலத் தமிழரின் முடிந்த முடிபு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இயற்றப் பட்டத் தனிச் செந்தமிழ் நூலான ஐங்குறுநூறின் கடவுள் வாழ்த்தில்
“நீல மேனி வாலிழைப் பாகத்
தொருவனது இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே“,
என்கிறார். அவனருளாலே தோன்றிய உயிர்கள் அவனது தாளை வணங்க வேண்டியது கடமையாகும்.
கதிரவனின் ஒளியில் தோன்றும் ஏழு நிறங்களில் (VIBGYOR) முதலிலுள்ளது சிவப்பும் இறுதியிலுள்ளது நீலமுமாகும். பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறம். அது ஞாயிறு. வெப்பமுடையது. வெப்பம் அச்சத்தை விளைவிக்கும் தன்மையுள்ளது. அது தந்தைக்குரியது. நீல நிறம் பெண்பகுதி. அது தண்ணென் திங்களாகும் தன்மையுடையது, குளிர்ச்சியுடையது, அது தாய். கருணை உள்ளம் அருள் உள்ளம் வாய்ந்தது. வண்றன்மையும் சிவந்த நிறமுமுடையவன் சிவபெருமான். மென்றன்மையும் நீல நீறமுமுடையவள் உமா பிராட்டி. இச் செய்யுளின் சொல்லும் பொருளும் சுவை மிகுந்து எத்துனை இன்பத்தை அளிக்கின்றன.
ஐங்குறுநூறு அகத்திணையைச் சார்ந்த நூல். காதலன் காதலியோடு கலந்து இன்பம் துய்த்து வரும் இந்த அகத்திணை நூலுக்கு காப்பாகச் சக்தியும் சிவமும் ஒன்றாகக் கலந்து உயிர்கட்கு இன்பமளிக்கும் ஓர் உருவத்தைக் கூறியது எவ்வளவு பொருத்தம். இன்பத்தை வாரி வழங்குவது நீல நிறக் காட்சி. கடலும் அதன் நீல வண்ணமும் பார்க்கப் பார்க்க இன்ப வாரிதியை பெருக்கிக் கொண்டேயிருக்கும். அதனால்தான் தாயை நீலமேனி என்று முதலில் கூறி பின் சிவ பெருமானைக் கூறுகிறார். அன்னை தூய இயற்கையணிகலன்களை உடையவள் என்று பொருள்படுமாறு “வாலிழை” என்று சுட்டினார். பாகத் தொருவன் மண்ணுயிர்களனைத்தும் ஈருடல் ஓருயிராய்க் கலந்து இன்பம் துய்த்தற்குக் காரணமானவன் என்பதை முதலில் தெளிவுற விளக்கவே இதை கடவுள் வாழ்த்தாகவே அமைத்து விட்டார்.
கடுங் கோடை, கொடிய வெப்பம், மிகச் சோர்வு. அதுபொழுது ஆல மரத்தின் குளிர்ந்த நிழல் வெம்மையைப் போக்கி, சோர்வை நீக்கி, இன்பத்தைத் தருகிறது. அது போலப் பிறவித் துன்பத்தில் உழன்று வருந்தியவர்க்கு இறைவனது திருவடி வெம்மையைப் போக்கி குளிர்ச்சி பொருந்திய பேரின்பத்தைத் தருகிறது. அதனால்தான் அவனது தாளை நிழல் என்றார். மூன்று உலகமும் அவற்றிலுள்ள பலவகை உயிர்களும் அவ்விறைவன் ஆணையாற்றோன்றின. இதை எடுத்துக் காட்ட “நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” என்றார்.
இறைவன் ஒருபாற் பெண்ணுருவம் உடையவனாகத் திகழ்வதை மற்றொரு புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும் சொல்லப் பட்டிருக்கிறது.
ஆண் பெண் என்றும் வேற்றுமையில்லாத அறிவுப் பிழம்பான இறைவன் மாந்தர் இவ்வுலகிலேயே காதற் பேரின்பம் எய்தற் பொருட்டு தன்னுள்ளே ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் தானே ஏற்றுக் கொண்டு அம்மை அப்பனாய் இருவேறு உருவில் ஒருவனாய்த் திகழ்கின்றான். பின்னர் மாணிக்கவாசகர் முதலானோர் இறைவனைத் தலைவனாகவும் உயிரைத் தலைவியாகவும் கொண்டு அகப் பொருள் நூல் முறைகளை அமைத்துப் பாடுதல் வழக்கமாயிற்று.
காதலன் காதலியாக இருவர் கருத்தொருமித்து கூடுவது ஒரு பிறப்பிற் கணவனும் மனைவியுமாக இருந்தவர் பல பிறப்புகளிலும் தொடர்ந்து பிறத்தலும் உண்டு.தொல்காப்பியர் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையையும் பகுப்பது ஊழ் என்பதனை “பால் வரை தெய்வம்” என்று கூறியிருக்கிறார் என்பதனை முன்னால் சொல்லியிருக்கிறோம். தலைவனும் தலைவியும் ஒன்று சேர்வது ஊழின் ஆணையே என்பதனை
ஒன்றே வேறே யென்றிரு பால் வயின்
ஒன்றியுயர்ந்த பாலதானையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.
(தொல். பொரு. களவு. 2. சூ. 93)
வள்ளுவரோ ஊழிற்குத் தனி அதிகாரமே வகுத்துவிட்டார். “ஊழிற் பெருவழி யாதுள” என்று அடித்துக் கேட்கிறார்.
சங்க காலச் சான்றோர் அனைவரும் பலகால் ஆய்ந்து கண்ட ஊழின் முடிந்த முடிபை அது கண்மூடித்தனமென்றோ, மூடப்பழக்கமென்றோ ஒதுக்கிவிட முடியாது.
தமிழ் குல மகளிர் பிறர் அறியாமல் களவு மணம் புணர்ந்து ஒழுகினராயினும்,தம்மாற் காதலிக்கப் பட்டோர் ஒருவரையன்றி எக்காரணத்தாலும் மற்றொருவரை மணந்தார் என்ற செய்தி சங்க இலக்கியங்களில் யாண்டும் காணப்படவில்லை.கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே எதிர்பட்டுக் கூடும் வண்ணம் கூட்டி வைத்த ஊழ் அக்காதலன் அல்லாத அயலான் ஒருவனை மணந்து கொள்ளச் செய்யாது என்ற உறுதியான எண்ணம் உடையவளாய் இருந்தாள் தலைவி.
பிறன் ஒருவன் வரைவு கருதி வந்தால் தன் மறையை வெளிப் படுத்தத் தொடங்கி விடுவாள். “துறைவனை என்றும் யாம்” எனத் தோற்றுவாய் செய்தால் அத் துறைவன் யாவன் அவன் உங்கட்குத் தலைவனாதல் எப்படி? என்று தாய் வினவுவாள். அப்பால் அவன் மனங்கொள்ளுமாறு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறலாம் என்பது தோழியின் எண்ணம். இங்ஙனம் மறை வெளிப் படுதலை அறத்தொடு நிற்றல் என்பர்.
ஆதலால் காதலிற் சிறந்த ஓர் ஆண் மகனையும் ஒரு பெண் மகளையும் ஒருங்குதலை பெய்வித்தற்கு ஒரு துணைக் கருவியாயிருந்து உதவுவது ஊழ்வினையே.மேற் சொன்ன பிறவிகளிற் காதலன் பாராட்டி வந்த ஆண் பெண் பாலரே கீழ் கீழ்ப் பிறவிகளிலும் காதலராய் ஒருவர் மீது ஒருவர் அயரா அன்பு செலுத்தி வந்தனர் என்பது சங்ககாலத் தமிழரது தளரா நம்பிக்கையாகும்.
திருமணச் சடங்கு வகுக்கப் பட்டதையும் தொல்காப்பியத்தில் காண்கிறோம்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற
காம கூட்டம் காணும் காலை
மறையோர் தே எத்து மன்றல் எட்டுனுள்
துறையமை நல்லியாழைத் துணைமையோரியல்பே“.
(தொல்.பொ.களவு-1-சூ.92).
முதலிற் காதலிற் பிணைந்தார் இருவரையும் மணங்கூட்டுவோர், அவர்தம் பெற்றோரும் சுற்றத்தாருமையாவர்.
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற் குரிமரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.”
(தொல். பொ. கற்பு. 1. சூ 142).
காதலர் இருவரும் பெற்றோர் உற்றோர் அறியாமே வேற்று நாட்டிற்குச் சென்று தாமே மணஞ் செய்து கொள்ளுதலும் அக்கால வழக்கமாயிருந்தது.
அகநானூறு 86வது செய்யுளில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணமுறை செவ்வியதாக விளக்கப் பட்டிருக்கிறது.
“இருள் நீங்கிய அழகிய விடியற் காலையிலே தீய கோள்கள் நின்ற இடம் நீங்கி வெண் மதிச்சகடு என்னும் ரோகிணி விண்மீனையிணைந்த கெடுதல் இல்லாத சிறந்த நாள் தோன்றி நின்றது. அந்த நேரத்தில் தலையில் உச்சியிலே சுமந்த நீர் குடத்தினரும் புதிய அகன்ற வாயினையுடைய மண்டையென்னும் மட்பாண்டத்தை விளக்கேற்றி ஏந்தினருமாய் ஒருங் கொத்த ஆரவார ஓசையினை விளைக்கும் முதிர்ந்த செவ்வி வாய்ந்த பெண் பாலர் முன் கொடுக்க வேண்டியவைகளையும் பின் கொடுக்க வேண்டியவைகளையும் முறை முறையே கொடுத்துகு கொண்டிருக்க ஆண் மகவு பெற்று அழகு தேமல் படர்ந்த வயிற்றினையும் ஒள்ளிய அணிகலன்கள் பூண்ட கோலத்தினையும் உடைய மாதர்கள் நான்குபேர் ஒன்று சேர்ந்து கற்பொழுக்கத்தினின்றும் வழுவாத திட்பம் வாய்ந்தனையாய், அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் விருந்தெதிர் கோடலுமாகிய நல்ல பல கடமைகளைச் செய்து கொண்டு நின்னை மனைவியாகப் பெற்றவனை பேணும் மங்கையாகக் கடவாயாக என வாழ்த்துரை வழங்கினர்.
அந்நாட்களில் பொய் தலைகாட்டவில்லை. பின்னர் நாட்செல்லச் செல்ல சொன்ன சொற் பொய்த்தொழுகலும் களவொழுக்கமும் காதலொழுக்கத்திடையேத் தோன்றி வாழ்க்கையை சீர்குலைக்கலாயின. அம்மாறுதலைக் கண்ட பிறகே தமிழ்ச் சான்றோர் சடங்குகளை ஏற்படுத்தினர்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
(தொல்.பொரு.கற்பியல் 4. சூ 145).
தமிழ் மக்கள் தம் மகளிரின் கற்பொழுக்கத்தை தம் உயிரினும் சிறந்ததாகப் பாராட்டினர்.
“உயிரினஞ் சிறந்தன்று நாணே, நாணினுஞ்
செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு“.
(தொல்.பொரு.கள.22.சூ.113)
அக்கால மகளிர் தான் காதலித்த கணவனையன்றித் தெய்வத்தையும் தொழார் என திருவள்ளுவரும்
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”
என அருளிச் செய்தார்.
இல்லிலிருந்து இம்மையின்பம் துய்த்து வருகையிலேயே தவவொழுக்கத்தை மேற்கொண்டு நிலையில்லா இவ்வுலக இன்பங்களை கைவிட்டு நிலையான மறுமையின்பத்தை நுகர ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். தொல்காப்பியனார்,
“காமஞ் சான்ற கடைக் கோட்காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியுங்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.”
(தொல். பொரு. கற்பியல். 51. சூ192).
கற்பியலின் ஐம்பது சூத்திரங்கள்வரை கற்பொழுக்கத்தின் வகைகளை நன்கு கூறி அவ்வாறெல்லாம் நடைபெற்ற காதற் கற்பொழுக்க மனையறத்தின் பயன்,மறுமையின்பத்தை நோக்கித் தவத்தின் கண் அமர்தலேயாகும் என்று அறிவறுத்தலே தொல்காப்பியத்தின் கருத்தாகும். மறுமை நோக்கிய தவ வாழ்க்கையே சாலச் சிறந்தது என்பதை வற்புறுத்த
“காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்
நில்லாவுலகம் புல்லி.ய நெறித்தே.”
(தொல்.பொ.புறத்தினை. 22.23)
எனப் புறத்திணையியலில் யாக்கையும் இளமையும் செல்வம் முதலியனவும் நிலையாமையின் வீடுபேறு நோக்கி தவம் புரிதலை வற்புறுத்துங் காஞ்சித் திணையின் இலக்கணத்தை எடுத்து ஓதுகிறார் தொல்காப்பியர்.
காதலொழுக்கம் முகிழ்ந்தலர்ந்த களவொழுக்கம் கூறி அதன்கட் காய்த்த கற்பொழுக்கம் அதன்பின் கூறி அக் கற்பொழுக்கத்திற் கனிந்த தவவொழுக்கம் இறுதி நிலையாய் கூறுதலே ஆசிரியரின் உள்ளக் கிடக்கை.
சங்க நூல்களின் ஆராய்ச்சியிலிருந்து சங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள் எவ்வளவு ஆழமாகப் பொதிந்திருக்கின்றன என்பதை காண்கிறோம்.தொல்காப்பியப்படி அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் மற்றும் தச்சர், கொல்லர், கருமார்,வாணியர், சேணியர் என்ற தொழிலுக்கேற்ற பிரிவும் செயலும் இருந்து கொண்டிருந்தன என்பது வெள்ளிடமலை. தொழில் வேற்றுமையின் அடியாக அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு சிறிதும் இல்லை. எல்லோருக்கும் சமமான பெருமை உண்டு. எல்லோருமே ஒருவரை ஒருவர் சார்ந்தவராகவும் ஒருவருக்கு மற்றொருவர் நிறைவும் துணையும் தருபவர்களாகவும் இருந்தனர்.
வாழ்வின் எல்லாத் துறைகளிலும் பரவி தொல் பெருங்காலத்திலிருந்து வழிவழியாக வந்து இறைவனையே சிறப்பாகக் கொண்டு அறத்தின் சார்போடு நன்கு பண்பட்டச் சிந்தனையும் ஒழுக்க முறையுமே சங்க கால சமயப் பண்பாடு. அதுவே இந்து சமயப் பண்பாடு. இத் தெள்ளிய நீரோட்டம் தொல்காப்பிய காலத்திற்கு முன் மிகமிகப் பழங்காலத்திலிருந்தே இடைவிடாமல் பெருகி ஓடிவந்து கொண்டிருக்கிறது. இதே காரணத்தால் தமிழ்ப் பண்பாடு பாரதப் பண்பாடாக ஆகி ஏனைய பண்பாட்டைக் காட்டிலும் பழமையும் அநாதியுமாக மாற்ற இயலாததாகவுமிருக்கிறது. இந்த பண்பாட்டில் மானுட வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் வீடுபேறு. அதாவது இறைவனை அடைவது. இக் குறிக்கோளை நினைவிலிருத்திக் கொண்டே அறம், பொருள், இன்பம், வீடு என்றும் உறுதிப் பொருட்களில் கடைசியாக வீட்டிற்கு இடமளித்திருக்கிறார்கள்.
அறமற்ற பொருளும் அறமற்ற இன்பமும் பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி மனிதனை அழித்து விடும். வெறும் பொருளும் இன்பமும் சேர்ந்த வாழ்வு விலங்கின் வாழ்வு. வள்ளுவர் வகுத்த முப்பால் பொருளையும் இன்பத்தையும் விட்டு விடவில்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகில்லை” என்ற படி பொருள் தேட வேண்டும். பொருளைக் காப்பாற்ற வேண்டும். இன்பம் பெற வேண்டும்.ஆனால் எல்லாம் அறத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். அதன் காரணத்தினாலேதான் வள்ளுவர் முப்பாலில் அறத்தை முன் வைத்து பொருளையும் இன்பத்தையும் அதன்பின் வைத்தார். அறத்துடன் பொருளையும் இன்பத்தையும் நுகர்ந்தால் வீடுபேறு தானே கிட்டும்.
ஒப்பற்ற தமிழ் சமுதாயத்தின் சங்க கால மக்களின் வாழ்க்கை முறையில் இந்து சமயக் கருத்துக்கள் பற்றி சில முதன்மையான கோட்பாடுகளை மட்டும் தொல்காப்பியம்,அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப் பாட்டு, கலித்தொகை, பரிபாடல், பதினென்கீழ் கணக்கு நூல்கள் முதலான சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது.ஆன்மீக வளர்ச்சியை தலையாயக் கொண்டதே சங்க கால இந்து சமயப் பண்பாடு.
நடைமுறையில் சமுதாயத்தின் எல்லா மக்களின் நன்மையையும் முற்றிலும் நினைவில் கொண்டு வாய்மையும் மெய்மையும் உண்மையும் நீதியும் நேர்மையும் நிரம்பிய வழியில் எதிலும் பற்றற்று இவ்வுலகில் முன்னேறுவதும் அதிலும்கூட வாழ்வின் இறுதி நோக்கமான இறைவனை என்றும் மறவாமல் தொடர்ந்து அவனை நோக்கிச் செல்வதுமே இந்த சங்க கால இந்து சமயப் பண்பாட்டின் முதன்மையான இயல்பு தூய தமிழ் நாட்டிலே மிகச் சீரிய இச்சமயப் பண்பாடு தோன்றியது. பாரதம் முழுமையும் தன்னுள் அடக்கிக் கொண்டுவிட்டது. இதனாலே பாரத நாடு பெறற்கரிய பேறு பெற்று பெருநாடாகத் திகழ்கிறது. இனியும் திகழும்.
போரிடுங்கால் வலிமையற்றாரைப் பாதுகாவலான இடஞ் சேருமாறு முதற்கண் எச்சரிப்பான். பயன் தரும் ஆவினம், அவ்வியல்பை உடைய பார்ப்பன மக்கள், பெண்டிர்,பிணி உடையவர், புதல்வர் பெருதோர் ஆகியவர்களைப் பாதுகாவலான இடத்தில் சேர்த்தப் பின்னரே போர் நடைபெறும்.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நருக்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெருஅதீரும். (புறம் 9)”
பிறவிடையான பெண்கள் கலம் தொடக்கூடாது என்ற கருத்தும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. நெய்யிட்ட உணவை உண்ட மன்னர் குதிரைகள் எல்லாம் முருகன் கோயிலிற் புகுந்த தூய்மையற்ற பெண்கள் கலந்தொட அஞ்சி ஒதுங்கி நிற்றலைப் போல ஒதுங்கி நிற்றலைப் போல ஒதுங்கி நின்றனர் என்கிறார்.
எரிமீன் வீழ்ந்தால் அரசன் மடிவான் (புறம் 229) என்ற கொள்கையும் சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும் தூமகேது போக்குறினும் வெள்ளி போக்குறினும் (புறம்117) மழை பெய்யாது என்ற சோதிட ஆராய்ச்சிக் கருத்துகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
கைம்மை நோண்பை மேற்கொள்வோர் நிலை, அவர் உண்ணும் உணவு முதலியவனவைப் பற்றிய இந்து சமயக் கருத்துக்களும் காணப்படுகின்றன.
“அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போல நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்தை வலிசி ஆகப்
பரல் பெய்பள்ளிப் பாயின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ.”
(புறம் 246, பூதபாண்டியன் தேவியார்)
வெள்ளரிவிதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத் துவையல், புளிகூட்டிச் சமைத்த வேளையிலை ஆகியவற்றை உண்டும் பாயின்றி பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நூற்கும் பெண்டிர் அல்லேம் யாம், உடன்கட்டையேறுவோம், என்கிறார் பூதபாண்டியன் தேவி.
மற்றோர் புலவர் யாக்கை நிலையாமையையும் மறுபிறவியையும் புகழையும் வற்புறுத்துகிறார். “எவ்வகையிலும் நல்வினைகள் செய்தலே நன்று. சுவர்க்கம் உண்டென்றால் அவருக்கு அது உறுதியாகக் கிடைக்கும். அது இல்லை என்றால் மாறி மாறி பிறக்கும் பிறப்பாவது இல்லாது போகும். பல பிறவிகள் இல்லை என்று சொல்வாராயின் இவ்வுலகில் இமயம் போன்று உயர்ந்த புகழாவது என்றும் நிலை நிற்கும்.
யானை வேட்டைக்குப் போகும் உள்ள உரமுடையவன் யானையை வெகு எளிதாக வென்று விடுவான். குறும்பூழ் வேட்டைக்குப் போக எண்ணியவனோ அஃது எளிதேயாயினும் கிடைக்கப் பெறாமல் வறிதே திரும்பவும் கூடும். அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் உயர்ந்தோராக விளங்குக.
“………………………………………………………………………………
………………………………………………………………………………..
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குரும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோரக்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவாராயினும் இமயத்துக்
கோடுயர்ந்தன்ன தம்மிசை நாட்டு
தீதில் யாக்கையொடு மாய் தறவத்தலையே.”
(புறம் 214)
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழலல்லால
பொன்றாது நிற்பதொன்றில்.”
புகழ் அல்லாமல் உலகில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலை நிற்கவல்லது வேறொன்றுமில்லை என்பது புலவர்களால் வற்புறுத்தப் படுகிறது.
இதுவரைச் சொல்லப்பட்ட தெய்வங்கட்கெல்லாம் மேலாய், உலகு உயிர்களின் வேறாய்,ஒன்றாய், உடனாய், நிலவும் இறை நிலையில் சிவபெருமானைப் பரம்பொருளாக வைத்து,அவன் வடிவத்தை முக்கண்ணனாக வழிபட்டனர்.
காரிக்கிழாரது புறப்பாட்டில், “பணியியரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே” என்றும், பழைய நல்லிசைப் புலவர் பாடிய பாலைக் கவியின் முதற்பாட்டில், “முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கல் முகம்போல ஒண்கதிர்தெறுதலின்” என்றும் வருகின்றது. முக்கண்ணான் என்றும் பெயரேயன்றிச் “சடையன்” என்ற பெயரும் சிவபெருமானுக்குரியனவாக சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
“இமயவில் வாங்கிய ஈர்ஞ் சடையந்தணன்” என்று குறிஞ்சிக் கலியாலும்“மணிமிடற்றண்ணற்கு மதியராய் பிறந்தோய் நீ” என்றும் பரிபாடல் ஒன்பதாம் பாடலின் அடியாலும் தெரிய வருகிறது. ஞாயிறு, திங்கள், தீ இம்மூன்றும் சிவ பெருமானின் முக்கண்களாகக் கருதப் பட்டது.
ஞாயிறு மண்டிலம் எல்லா கோள்களுக்கும் நடுவிலிருந்து தனது ஈர்ப்புச் சக்தியால் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்து நிற்கின்றது. இது கொடிநிலை. இரவில் பயிர்களுக்கு உயிர் தரும் திங்கள் மண்டிலம் அமிருதத்தை வாரி வழங்குவதால் வள்ளி என்ற பெயர் பெற்றது. பற்றினவை எல்லாம் அழிக்கின்ற நெருப்பு கந்தழி எனப் பட்டது.