சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வநாயகம் என்பவர், திருவள்ளுவர் கிறித்தவரா?, ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார், எழு பிறப்பு: சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி, திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார்.
இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.
திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார்.
இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக, இந்தக் கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., பணியாற்றினார்.
புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள்.
இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்றத் திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுப்வத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் தினமணி', 'முரசொலி நாளேடுகளில் வந்ததால்தான்.
ஐந்தவித்தான் யார்?
திருக்குறள் பீடம் அழகரடிகள் அணித்தலைவர் : டாக்டர் ச. பால சுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பண்ணாராய்ச்சி வித்தகர். பேராசிரியர் பி. சுந்தரேசனார், சமண மதத் தலைவர், ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம், எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி, எம்.ஏ., ஆகியோர் ஐந்தவித்தான் யார்? அணி உறுப்பினர் அறிஞர்களாவர்.
வான் எது?
அணித் தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், எம்.ஏ., எல்.டி., விசாரத் (இந்தி), அணி உறுப்பினர்கள் : டாக்டர் என். சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம், எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன், எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு, நீத்தார் யார்?
அணித் தலைவர் : டாக்டர் வ.சுப. மாணிக்கம், எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் மு. கோவிந்தசாமி, எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி., புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் பொன்.ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., எம்.ஓ.எல்., பேராசிரியை சரஸ்வதி இராமநாதன், எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி., எழு பிறப்பு!
அணித் தவைர் : தவத்திரு. குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் இரா. சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., வித்வான் வை. இரத்தின சபாபதி, பி.ஓ.எல்.எம்.ஏ., மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வித்வான் வி.பி. நடராசன்.
சான்றோர் யார்?
அணித் தலைவர் : இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை, அணி உறுப்பினர்கள் : பேராசிரியர் டாக்டர் புலவர் மா. நன்னன், எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா, எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை சு.மி. டயஸ், ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., (சமனர்), பேராசிரியை சாரதா நம்பியாரூரான், எம்.ஏ., சோம. இளவரசு.
திருவள்ளுவர் கிறித்துவரா?
அணித் தவைர் : டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : க.த. திருநாவுக்கரசு, எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., (வரலாறு), எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., பி.எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன், எம்.ஏ.
இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வி. முனுசாமி, பி.ஏ., பி.எல். சிறப்புரை ஆற்றினார்.
இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர், அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான, நேர்மையான, கடமையான நீதியை, தீர்ப்பை வழங்கினார். என்ன அந்தத் தீர்ப்பு?
திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையை சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கர் மூலமாகவும், கிறித்துவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர்.
நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதர் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது. மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரை யில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளேன். உலகத்தை உய்விக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறிமுறைகள், ஒவ்வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கூறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ, இவரிடமிருந்து அவர் பெற்றார் என்றோ நினைப்பது இயல்பு. அதற்காக, அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டார்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள்.
எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில் நடைபெற்ற மதக்கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று என்று தேவநேயப் பாவாணர் தனது முடிவுரைத் தீர்ப்பைக் கூறி முடித்தார்.
இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., அவர்கள், மாநாட்டுக்கு வருகை தந்திருந்த புலவரேறு களை எல்லாம் வரவேற்றுத் தனது வரவேற்புரையில் பேசும்போது :
'திருக்குறளை யாத்த திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை.
வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஓர் அகராதி திருக்குறள்:
குறள் பிறந்த நாள் முதல் இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றாதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை.