வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ்
வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய ஒன்று. சிலர் விக்ரஹ வழிபாட்டை பற்றி மிகவும் இழிவாகவும் கேலி செய்தும் குறை கூறியும் பேசுவதைக் கண்டும் கேட்டும், விக்ரஹ வழிபாடு தவறோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு அவ்வப்போது வருவதுண்டு. ஆயினும், ஆன்மீக அறிவில் மிகவுயர்ந்த நிலையிலிருந்த ஆச்சாரியர்கள், மகான்கள், ஞானிகள், ரிஷிகள் நமக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கொடையே இந்த விக்ரஹ வழிபாட்டு முறையாகும்.
விக்ரஹம் என்றால் என்ன?
நம்மீது கருணை கொண்டுள்ள பகவான் நமது பார்வைக்கு உகந்த ரூபத்தில் அவதரிக்கும்போது, அவரை அர்ச்சா விக்ரஹம் என்று அழைக்கின்றோம். இந்த அர்ச்சா விக்ரஹம் பகவானிடமிருந்து வேறுபட்டது அல்ல. மக்கள் தங்களது பாவங்களை எளிதில் போக்கிக் கொள்ள வசதி அளிப்பதற்காகவும், உலகில் சமய கொள்கைகளை ஸ்தாபிதம் செய்வதற்காகவும், தனது பக்தர்களை பரவசப்படுத்துவதற்காகவும், மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும், பகவான் கருணையுடன் விக்ரஹங்களாக விரிவடைகிறார். விக்ரஹங்கள் கல், உலோகம், மரம், இரத்தினங்கள், மண், மணல், வரைபடம், மனம் போன்ற ரூபங்களில் அவதரிக்கின்றனர். (ஸ்ரீமத் பாகவதம் 11.27.12)
விக்ரஹ வழிபாட்டின் அவசியம்
விக்ரஹத்தின் மூலமாக சாதாரண மனிதனும் கடவுளை சுலபமாக அறிய இயலும். நம்முடைய பௌதிகப் புலன்களால் பகவானை அறிய முடியாது; கண்களால் அவரைப் பார்க்கவோ காதுகளால் அவரைக் கேட்கவோ முடியாது. எந்த அளவிற்கு நாம் பகவத் தொண்டில் ஈடுபட்டிருக்கிறோமோ பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறோமோ, அதற்கேற்ப பகவானை நம்மால் அறிய இயலும். இருப்பினும், கருணாமூர்த்தியான பகவான், கோயிலிலுள்ள அர்சா மூர்த்தியின் வடிவில் அவரை நாம் காண்பதற்கான வசதிகளை அளித்துள்ளார். பகவான் சர்வ சக்தியுடையவர் என்பதால், நம்முடைய சேவைகளை அவர் விக்ரஹ உருவில் ஏற்றுக் கொள்கிறார். விக்ரஹத்தை வெறும் கற்சிலை என்று முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பகவானை புலன்களைக் கொண்டு வழிபடுவதே பக்தி; அதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது விக்ரஹ வழிபாடு. எனவே, விக்ரஹ வழிபாடு என்பது அனைவருக்கும் மிக அவசியமானதாக அமைகிறது. இது பக்தித் தொண்டின் ஒன்பது அங்கங்களுள் ஒன்றாகும். (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23)
விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான உயர் தரத்தினை இன்றைய உலகிலுள்ள பெரும்பாலான பக்தர்களால் நிறைவேற்ற முடியாது என்பதால், பகவானை அவரது திருவுருவப் படங்களைக் கொண்டு வழிபடுதல் பெரும்பாலான மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்விதமாக வழிபாடு எளிமையாக அமைவது மட்டுமின்றி, விக்ரஹ வழிபாட்டின் முறையான தரத்தை தக்க வைப்பதில் அடையும் தோல்வியினால் வரும் அபராதங்களின் அபாயமும் குறைவாக அமையும். சற்று உயர்ந்த விக்ரஹ பூஜையானது ஒரு வைஷ்ணவ குருவின் வழிநடத்துதலில் செய்யப்பட வேண்டும்.
மிகவும் சிக்கலான வழிபாட்டு முறைகளை ஏற்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது அல்ல, அவ்வாறு செய்தல் விரும்பத்தக்கதும் அல்ல. பூஜையை எளிமையாக வைத்துக் கொண்டு, யுக தர்மமான பகவானின் திருநாம உச்சாடனத்தில் கவனம் செலுத்துதல் சிறந்தது. பூஜை செய்வதற்கான ஆர்வம் நிச்சயம் பாராட்டத்தக்கது என்றாலும், இந்த யுகத்தில் கடவுளை உணர்வதற்கான முக்கியமான வழி, அவரது திருநாமங்களைச் சொல்வதே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, முறையான பலனைப் பெற பூஜையானது கீர்த்தனத்துடன் இணைந்து செய்யப்பட வேண்டும்.
விக்ரஹ வழிபாடு என்பது விக்ரஹத்தை வைத்து நேரடியாக பூஜை செய்வதை மட்டும் குறிப்பதல்ல. கோயிலுக்குச் சென்று அவர் முன்பு நமஸ்கரித்தல், பாடுதல், பிரார்த்தனை செய்தல், பிரதக்ஷணம் செய்தல் போன்றவையும் விக்ரஹ வழிபாட்டில் அடங்கும்.
விக்ரஹமும் சிலையும்
பகவானின் விக்ரஹங்களை நாஸ்திகர்கள் வெறும் சிலைகள் என்று கருதலாம். சிலைகளுக்கும் விக்ரஹங்களுக்கும் நடுவில் உள்ள பெருத்த வேறுபாட்டினை நாஸ்திகர்களால் அறிய முடியாது என்பது உண்மையே. இருப்பினும், பகவானின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதனை அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
விக்ரஹங்கள், சாஸ்திரங்களில் பகவானின் ரூபம் குறித்து கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து முறையாக வடிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவினால் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். தூய பக்தர் இறைவனை அழைக்கும்போது கருணை உள்ளம் கொண்ட அவர், விக்ரஹ உருவில் சாதாரண மக்களுக்கும் அருள்பாலிக்கின்றார். அத்தகு விக்ரஹங்கள் பக்தியுடன் வழிபடப்படுகின்றனர்.
மேலே கூறப்பட்ட முறையைப் பின்பற்றாமல் செய்யப்படும் வழிபாடு, சிலை வழிபாடாகும். அதாவது, சாஸ்திரங்களின்படி வடிக்கப்படாத உருவங்களும் தூய பக்தரால் பிரதிஷ்டை செய்யப்படாத உருவங்களும் சிலைகளாக கருதப்படுகின்றன. சிலைகளை வழிபடுவோர் விக்ரஹ வழிபாட்டின் பலனை அடைய முடியாது. நவீன காலத்திலுள்ள பல்வேறு நபர்கள் விக்ரஹ வழிபாடு என்ற பெயரில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வருந்தத்தக்க உண்மை. தங்களின் மனம் எத்தகைய வடிவத்தை வழிபடச் சொல்கின்றதோ, அத்தகைய வடிவத்தை வடித்து அதனை வழிபடுவது தற்போது ஃபேஷனாகி வருகிறது. ஏதாவது இரண்டு மூன்று தெய்வங்களை தேர்ந்தெடுத்து ஒரே கல்லில் செதுக்கி, அவர்களுக்கு ஒரு புதுப் பெயரைக் கொடுத்து செய்யப்படும் வழிபாடுகள் எதற்கும் பயனற்றவை. “வேறு எங்கும் காணவியலாத விக்ரஹம்" என்று விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமானால் பயன்படலாம், மக்களுக்கு உண்மையான பலனைத் தராது. இதுபோன்ற விளம்பர சிலை வழிபாடுகள் தற்போது அதிகமாக பரவி வருகின்றன. விதவிதமான லிங்கங்கள், விதவிதமான பிள்ளையார்கள், விதவிதமான பொம்மைகள் என பல சிலைகள் இந்த பிரிவில் அடங்கும்.
தன்னையே கடவுள் என்று கூறி ஊரை ஏமாற்றியவர்கள், அல்லது மரணத்திற்குப் பின்பு கடவுளாக உயர்வு பெற்றவர்கள் என்று பலருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவையாவும் சிலை வழிபாடுதான், இவற்றால் எந்த பயனும் இல்லை.
சிலையை வழிபடுவோர் விக்ரஹத்தை வழிபடுவோரை நிந்திக்கலாமா?
போலியான வடிவங்களை வடித்து சிலை வழிபாடு செய்வோர் ஒருபுறம் இருக்க, வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத நாஸ்திகர்கள் பலரும்கூட சிலை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், நாஸ்திகத் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், கவிஞர்கள் என பலருக்கும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. அத்தகு சிலைகளை வைப்பதால், நேரமும் பணமும் இடமும் விரயமாகிறதே தவிர வேறெந்த நன்மையும் யாருக்கும் நடந்துவிடுவதில்லை. சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வோர், பகவானுக்கு செய்யப்படும் பாலபிஷேகத்தைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்.
தலைவர்களின் சிலையை வழிபடும் நாஸ்திகர்கள் அவருக்கு பெயரளவு மரியாதை செய்கிறார்களே தவிர உண்மையான மதிப்பு ஏதும் அங்கு இருப்பதில்லை. தங்களின் தலைவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் உண்மையாக இருந்தால், தலைவருக்காக நடுரோட்டில் சிலை வைப்பார்களா? நம்மில் யாரேனும் எல்லா நேரமும் நடுரோட்டில் நிற்க விரும்புவோமா? நடுரோட்டில் வைக்கப்படும் அந்த சிலைக்கு இவர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாலை அணிவித்து (போலி) மரியாதை செலுத்துவதோடு சரி; மற்ற நேரங்களில் அந்த சிலையை கண்டு கொள்ள மாட்டார்கள்--காக்கை எச்சமிடும், நாய் சிறுநீர் கழிக்கும், ரோட்டிலுள்ள புழுதி முழுவதும் சிலையில் அண்டிக் கிடக்கும். கேட்பாரற்று கிடக்கும் சிலைக்கு மரியாதை செலுத்தி வழிபடும் இவர்கள், தினமும் மதிப்பு மரியாதையுடன் விக்ரஹங்களை வழிபடும் பக்தர்களை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறதே தவிர, பகுத்தறிவைக் காட்டுவதில்லை.
“சிலையை ஏன் வழிபடுகின்றீர்?" என்று கேள்வி கேட்போர் தங்களின் முகத்தைக் கண்ணாடியில் காண்பது சிறந்தது. எத்தனை சிலையை அவர்கள் வழிபடுகிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போது தெரியும். அவர்கள் சிலையை வழிபடவில்லை என்றால், அந்த சிலை சிதிலமடையும்போதும் உடையும்போதும் அவர்கள் கோபப்படுவது ஏன்? போராட்டம் நடத்துவது ஏன்? சிந்துத்துப் பார்த்தல் பகுத்தறிவாக அமையும்.
தபால் பெட்டிகள்
விக்ரஹங்கள் முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படும்போது, அவை பூரண சக்தியுடன் திகழ்கின்றன. பிரதிஷ்டை செய்யப்படாத வடிவங்கள் வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல, அவற்றை விக்ரஹங்கள் என்று அழைக்க முடியாது. அத்தகு வடிவங்கள் தபால் நிலையத்தினால் வைக்கப்படாத தபால் பெட்டியைப் போன்றவை.
தபால் நிலையத்தினால் நகரம் முழுவதிலும் பரவலாக வைக்கப்பட்டுள்ள சிறிய தபால் பெட்டிகளுக்கு தபால் இலாகாவின் அதே ஆற்றல் உண்டு. கடிதங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதே தபால் நிலையத்தின் கடமையாகும். பொது தபால் நிலையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தபால் பெட்டிகளில் போடப்படும் கடிதங்கள் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோல, பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்களை வழிபடுவதற்கும் பகவானை நேரடியாக வழிபடுவதற்கும் வேறுபாடு இல்லை என்பதில் சந்தேகமில்லை.
மாறாக, பிரதிஷ்டை செய்யப்படாத விக்ரஹங்கள் தபால் நிலையத்தினால் வைக்கப்படாத தபால் பெட்டிகளைப் போன்றவை. அப்பெட்டிகள் சிகப்பு நிறத்தில் இருக்கலாம், அதே வடிவத்தில் இருக்கலாம், நேரம் எழுதப்பட்டிருக்கலாம், பார்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பெட்டியைப் போலவே தோன்றலாம். ஆனால் அவற்றில் போடப்படும் தபால்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நிச்சயம் செல்லாது. அதுபோலவே, முறையான ஆன்மீக குருவினால் அங்கீகரிக்கப்படாத விக்ரஹ வழிபாடு சாஸ்திரங்களில் ஏற்கப்படுவதில்லை. ஏதோ கடை வீதிக்குச் சென்றோம், கடலை மிட்டாய் வாங்கினோம், சேலை வாங்கினோம், சட்டை வாங்கினோம், வளையல் வாங்கினோம், இது வாங்கினோம், அது வாங்கினோம் என்று சொல்வதைப் போன்று, விக்ரஹம் வாங்கினோம் என்று சொல்லி கடையிலிருந்து வாங்கி வழிபடுவது முறையான வழிபாடு அல்ல. அஃது ஏதோ பொம்மையை வழிபடுவதைப் போன்றதாகும். விக்ரஹ வழிபாடு குருவின் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டுமே தவிர, மனதிற்கு தோன்றியபடி செய்யப்படக் கூடாது.
மக்களின் வழிபாட்டினால் விக்ரஹங்களுக்குசக்தி வருகிறதா?
இது மற்றுமொரு முட்டாள்தனம். அதிகமாக வழிபடப்படும் விக்ரஹங்கள் அதிக சக்தியுடையவை என்று நினைப்பது முற்றிலும் தவறு. விக்ரஹங்கள் பகவானின் அவதாரங்கள், மனிதர்களால் பகவானை உருவாக்க முடியாது; அதுபோல, மனிதர்களால் விக்ரஹங்களுக்கு சக்தியையும் கொடுக்க முடியாது. இத்தகு எண்ணங்கள் முட்டாள்தனத்தின் உச்சகட்டம், எங்கிருந்து முளைத்தது என்று தெரியவில்லை. விக்ரஹங்கள் மக்களுக்கு நன்மை பயக்குபவை, மக்கள் விக்ரஹங்களுக்கு நன்மை பயக்க முடியுமா?
விக்ரஹ வழிபாடு பணத்திற்காகவா?
முன்னரே கூறியபடி, நவீன காலத்தில் பலரும் விக்ரஹ வழிபாட்டினை ஒரு ஃபேஷனாக எடுத்துக் கொள்கின்றனர். வருமானம் ஏதுமில்லாத நபர்கள், தெருவோரத்தில் ஒரு மரத்தடியில் ஏதேனும் ஒரு சிலையை வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வருமானத்தைப் பெருக்கி, காலப்போக்கில் அங்கு கோயிலையும் எழுப்பி அந்த கோயிலை வைத்து சொகுசான வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களிடம் உண்மையான பக்தி இல்லை, பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள். ஒரு விக்ரஹம் இருந்தால் கூட்டம் வராது என்பதற்காக, இருக்கக்கூடிய குறுகிய இடத்தில் எத்தனை சாமிகளை வைக்க முடியுமோ, அத்தனை சாமிகளை வைத்து கூட்டத்தை சேர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தனை சாமிகளுக்கும் ஒரே பூஜாரி; அவரோ வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சாமிகளுக்கு அபிஷேகம் செய்து துணிகளை மாற்றுகிறார். சில இடங்களில் “பெரிய சிலை" என்று கூறி மக்களைக் கவருகின்றனர்; இருபது அடி, முப்பது அடி அளவு கொண்ட பெருமாளும், ஓர் அடி அளவு கொண்ட பெருமாளும் ஒருவரே என்பதை மக்களில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை.
கோயில்களின் முக்கியத்துவம்
மக்களை இறை உணர்வின் தளத்திற்கு படிப்படியாக உயர்த்துவதற்காக பல்வேறு அரசர்களும் பக்தர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவிற்கு எண்ணற்ற கோயில்களை நிறுவியுள்ளனர். அவற்றின் கோபுரங்களை மிகவும் உயரமாக அமைத்து, உச்சியில் கலசங்கள் அல்லது சுதர்சன சக்கரத்தை பிரதிஷ்டை செய்தனர், மிக தூரத்திலிருந்து இச்சின்னத்தை காண்பவரும் உடனடியாக பகவானை நினைவு கூற இயலும். கோயில்கள் பாரத பண்பாட்டின் முக்கிய அங்கம், பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் இருந்துள்ளன. கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை எனும் நாஸ்திகர்களின் பிரச்சாரம் சிறிதும் உண்மையற்ற முட்டாள்தனமான வாதமாகும். கோயில்களுக்குச் செல்பவர்கள் அங்குள்ள விஷ்ணுவின் விக்ரஹத்தை வழிபடுவதன் மூலமாக உயர்ந்த ஆன்மீக தளத்தையும் பக்குவத்தையும் படிப்படியாக அடைய முடியும். மனதை ஒருநிலைப்படுத்தி இதயத்திலுள்ள பரமாத்மாவை தரிசிப்பது தற்காலத்தில் மிகவும் கடினமான காரியமாகும். கலி யுகத்திற்கான யுக தர்மம் ஹரி நாம ஸங்கீர்த்தனம் என்றபோதிலும், ஆரம்ப நிலையிலுள்ள பக்தர்கள் படிப்படியாக வளர்ச்சி பெறுவதற்கு விக்ரஹ வழிபாடும் முக்கிய உதவியாக அமைகிறது.
பக்தித் தொண்டில் இவ்வாறு படிப்படியாக முன்னேற்றம் பெறுவோர், அதன் மிகவுயர்ந்த வெற்றியாக பகவானை நேரில் காணும் வாய்ப்பையும், பகவானின் ஆன்மீக உலகத்திற்கு சென்று அவருடன் நிரந்தரமாக வசிக்கும் பெரும் பாக்கியத்தையும் பெற முடியும்.
கடவுள் அருவமானவர் அல்ல
உருவ வழிபாட்டில் ஈடுபடும் சிலர், இறுதியில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று கூறுவதையும் நாம் காண்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை, தியானிப்பதற்கு உதவும் ஒரு பொருளாக விக்ரஹத்தை நினைக்கின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். இவ்வாறு நினைப்பவர்கள் காலப்போக்கில் நாஸ்திகவாதிகளாக மாறி, குறைமதி கொண்ட கலி யுக மக்களை திசை திருப்பி, இறுதியில் நரக லோகங்களுக்கு சென்று கோடிக்கணக்கான ஆண்டுகள் மிகவும் கடினமான தண்டனைகளை அடைவர். அருவவாதிகள், மாயாவாதிகள், சூன்யவாதிகள் போன்றவர்களை அசுர குணம் கொண்ட நாஸ்திகர்கள் என்று ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றார். நுண்ணுயிர்கள், புழு பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள் என அனைவருக்கும் கடவுள் உருவத்தைத் தந்துள்ளார்; அவருக்கே உருவமில்லை என்று கூறுவது சிறிதும் அடிப்படையற்ற வாதமாகும்.
வேதங்களின் சில இடங்களில் “கடவுள் உருவமற்றவர்" என்றும், சில இடங்களில் “உருவமுடையவர்" என்றும் கூறப்பட்டுள்ளது உண்மையே. இதை எவ்வாறு புரிந்துகொள்வது? கடவுள் நம்மைப் போல பௌதிக உருவம் கொண்டவர் அல்ல என்பதே இதன் பொருள். அவர் முழுவதும் ஆன்மீகமயமான உருவத்தில் வீற்றுள்ளார் என்று ஆச்சாரியர்கள் விளக்கமளித்துள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பௌதிக உலகில் அவதரித்தபோது, கைக்குழந்தையாக இருந்த காலத்திலேயே பூதனா போன்ற பல்வேறு அசுர சக்திகளை வதம் செய்தார். சிறுவனாக இருந்தபோது கோவர்தன மலையை தன் இடது கை சுண்டு விரலில் ஏழு நாள்கள் தூக்கி நின்றார். குருக்ஷேத்திர போரின்போது அவருக்கு பேரன்களும் பேத்திகளும் இருந்தனர் என்றபோதிலும், அவர் வயதானவராக தோற்றமளிக்காமல் பதினாறு வயதுடைய இளைஞனைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவையெல்லாம் அவரது உடல் பௌதிக உடல் அல்ல, முற்றிலும் ஆன்மீகமான உடல் என்பதைக் குறிக்கின்றன. எனவே, கடவுள் உருவமற்றவர் என்றோ, விக்ரஹ வழிபாடு உருவமற்ற கடவுளை தியானிப்பதற்கான ஒரு படிக்கல் என்றோ தவறாக எண்ணிவிடக் கூடாது.
விக்ரஹ வழிபாடு தூய்மையடைய உதவுகிறது
ஸ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதும் பயணம் செய்து, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர், ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ ஸ்ரீ ஜகந்நாத பலதேவ சுபத்ரா ஆகியோர்களின் விக்ரஹங்களை உலகெங்கும் பிரதிஷ்டை செய்து, அவர்களை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை பூஜையின் வழிமுறைகளை துளியும் அறியாத மேலை நாட்டினருக்கும் கற்பித்தார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை குறிப்பிட்ட சுற்றுகள் தினசரி ஜெபம் செய்வதாலும், விக்ரஹ வழிபாட்டில் ஈடுபடுவதாலும், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் போன்ற நூல்களைப் படிப்பதாலும் மேலை நாட்டினரும் ஆன்மீகத்தில் உயர்ந்த தளத்தினை எட்டியுள்ளனர்.
எனவே, நமது ஆச்சாரியர்கள் நமக்களித்த மிகச்சிறந்த உருவ வழிபாட்டு முறையைப் பற்றி இனிமேல் எந்த விதமான சந்தேகமும் தயக்கமும் கொள்ள வேண்டாம். பக்தியுடனும் சிரத்தையுடனும் இதனைப் பின்பற்றி படிப்படியாக பக்குவமடைந்து ஆன்மீகத்தில் உயர்ந்த தளத்தினை அடைவோமாக. பகவானை நேரில் காணும் பாக்கியத்தையும் அவருடன் நிரந்தரமாக வசிக்கும் பேற்றினையும் அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோமாக.
திரு. ரகு தாஸ் அவர்கள், வேலூர் இஸ்கானில் முழு நேர பக்தராக சேவை செய்து வருகிறார். திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள் பகவத் தரிசனத்தின் தொகுப்பாசிரியராக சேவை செய்து வருகிறார்.