இரண்டாண்டுகளுக்கு முன்பு கலைக்கோவனின் “வலஞ்சுழி வாணர்” படித்ததில் இருந்தே இராஜராஜன் அகழ்வைப்பகம் செல்லும் ஆவல் அதிகம். அது இப்போதுதான் நிறைவேறியது. ஆவலுக்கு காரணம் அங்கிருக்கும் இராஜராஜனின் காவல் தெய்வத்தை ஒருமுறை கண்ணால் கண்டு இன்புறத்தான்.
என்னைப் போன்ற அற்ப பதர்களெல்லம் தன் பக்கத்தில் தைரியமாக நிற்கும் சூழ்நிலையை நொந்தபடியே ஆறடி உயரம் ஆஜானுபாவத் தோற்றம் கொண்டுள்ள இவர்தான், இராஜராஜனுக்கும் இராஜேந்திரனுக்கும் எதிரிகளை வெல்ல துணை நின்று அவர்களை காத்தருளிய தமிழகத்தின் முதல் “ஊர்காவலன்”.
“ஷேத்திரபாலர்” – இந்த பெயருக்கு இப்படித்தான் அர்த்தம் சொல்கிறார்கள் அறிஞர்கள். பார்ப்பதற்கு பைரவரைப் போலவே இருந்தாலும் இருவரும் வேறு வேறானவர்கள். முக்கியமாக, க்ஷேத்ரபாலருக்கு நாயின் துணை தேவையில்லை என்கின்றன ஸ்ரீதத்துவநிதி, சில்பரத்தினம் போன்ற நூல்கள்.
“தாமிருக்கும் இடத்தை காப்பவர்” – இவ்வாறு ஸ்ரீதத்துவநிதி எனும் நூலால் அறிமுகப்படுத்தப்படும் நம் ஊர்காவலன் தமிழகத்தில் முதன்முதலில் உதயமனது கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி ஷேத்திரத்தில். “மோதிரக்கையால் குட்டு” என்பது போல் இவரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் “செழியரை தேசுகொள் கோவிராஜராஜகேசரியின் பட்டத்தரசியாம் தந்தி சக்தி விடங்கியாரான நம்பிராட்டியார் ஒலோகமாதேவியார்” ஆவார். அதுவும் தன் கணவர் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே உத்தமசோழனின் ஆட்சிக்காலத்திலேயே திருவலஞ்சுழி ஆலயத்தின் உள்ளடக்கத் திருமேனியராய் எடுப்பித்தருளியுள்ளார்.
அரசியார் என்ன கேட்டாரோ இவர் என்ன கொடுத்தாரோ தெரியவில்லை விரைவில் சோழ அரசகுலத்தின் உள்ளத்திற்கு உகந்த பாலராய் மாறிவிட்டார் நம் ஊர்காவலர். விளைவு, இராஜராஜன் ஆட்சிக்கட்டிலில் ஏறி சாலை களமறுத்தருளி செழியரை தேசுகொண்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டபின், அவரது ஆறாவது ஆட்சியாண்டில் தனி நிவந்தம் பெற்றும் பதினோராம் ஆட்சி ஆண்டில் தனி கற்றளி பெற்றும் வலஞ்சுழியில் தனியாட்சி நடத்துமளவிற்கு வளர்ந்துவிட்டார்.
சோழசாம்ராஜ்யத்தில் இவர் செல்வாக்கு எத்தகையது என்றால், வலஞ்சுழி ஷேத்ரபாலருக்கு இராஜராஜர், இராஜேந்திரர் மற்றும் அவர் குடும்பத்தார் அளித்தக் கொடைகள் பற்றி 16 கல்வெட்டுகள் பேசுகின்றன. தமிழக வரலாற்றில் எந்த ஒரு சுற்றாலை தெய்வத்திற்கும் இத்தனை பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், செம்பும், நிவந்தங்களும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! எந்த அளவிற்கு என்றால் ஷேத்ரபாலருக்கு அளிக்கப்பட்ட பொன்நகைகளை கணக்கிலிட்டு பாதுகாக்கவே தனி பண்டாரமும், பொன் பண்டாரியும் தேவைபட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது மட்டுமா, தஞ்சை இராஜராஜீஸ்வரம், கங்கை கொண்ட சோழபுரம் என்று தலைமுறை தாண்டி சோழவம்சத்தின் பல ஷேத்திரங்களின் காவலனாய் தன் உரிமையை பிற்காலங்களில் விஸ்தரித்துக் கொண்டார்.
இப்படி இராஜராஜனின் பட்டத்தரசி அறிமுகப்படுத்திய வலஞ்சுழி காவலனை, இராஜராஜனுக்கும் இராஜேந்திரனுக்கும் சோழசாராஜ்யத்தின் அத்தனை இடர்பாடுகளிலும் காவலாய் இருந்து அவர்களால் சீராட்டப்பட்ட இந்த ஷேத்ரபாலரை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இராஜராஜனுக்கு ஊழியமாய் அவன் மணிமண்டபத்தில் வீற்றிருந்து அதனை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்திருக்கும் காலம்தான் எத்தனை விந்தையான நாடக ஆசிரியன்!!!