காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறு பேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனையுடன் கூடிய பாடல். இப்பாடலில் பூரணை புஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இதே போலவே,
’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’
”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்” என்று தர்மசாஸ்திரா ஸ்தோத்திரம் சொல்கிறது.
ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?
ஐயனார் வழிபாடு என்பது மிகப்பழைய காலம் தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாக திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடாற்றி வந்திருக்கிறார்கள்.
சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடாற்றியிருக்கிறார்கள். இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்து மஹோத்ஸவாதிகள் செய்து வழிபாடாற்றியும் வந்திருக்கிறார்கள்.
இவ்வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக் கொள்ளப்பெறும் ஐயப்பன் வழிபாடு கேரளதேசத்திலிருந்து அண்மைக்காலத்தில் மிகப்பிரபலம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான அடியவர்கள் மிகப்பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்க செல்வதையும் காண்கிறோம்.
ஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஐயனார் வழிபாடும் தற்போது பிரபலம் பெற்றுள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின் அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில் வழிபாடாற்றும் போது இடையில் சில ஸம்ப்ரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.
ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும்
கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதும் சிறப்புப் பொருந்தியதுமான கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள் ஊறித் திளைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
சாவா மூவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்து அமிர்தத்தைப் பெற்ற போது, தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்க திருமாலோன் மோஹினி வடிவம் என்ற அழகிய பெண் வடிவு கொண்டு, அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார். இது நிற்க, சைவசித்தாந்த மரபானது
சாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,
கோபங்கொள்கையில் காளீ,
போரிடுகையில் துர்க்கா,
புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில் விஷ்ணு
என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறும்.
இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார். ‘அரியல்லால் தேவியில்லை’ என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இதில் விஷ்ணுவை சக்தி என்கிற வகையில் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று கொள்வதிலும் பார்க்க விஷ்ணு உயிர் என்றால், சிவன் உடல் அல்லது சிவன் உடல் என்றால் விஷ்ணு உயிர் என்று கொண்டார்கள் என்று கருதுவதே சிறப்பு. சிவபெருமானின் ஹிருதயத்தில் விஷ்ணுவும், விஷ்ணுவின் ஹிருதயத்தில் சிவனாரும் வாஸம் செய்வதாக ஒரு பிரபல சம்ஸ்கிருத வாக்கியமும் இருக்கிறது.
ஆக, சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம் செய்து பெண்ணுருக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவுடன் ஆணுருக் கொண்டு காட்சி தந்த பரமேஸ்வரன் இணைய இந்த திருவிளையாடலில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் சிலர் கூறுவது போல ஒரு பாற்புணர்ச்சி என்று இதனைக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது இங்கு பொருத்தமானதுமல்ல. இங்கே இருவரும் ஒருவர். அவ்விருவரில் தோன்றிய மூன்றாமவரும் ஒருவரே.
நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான்
என்று கூறும்.
மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.
ஸ்காந்தத்தின் அடிப்படையில் கந்தபுராணம் இவ்வாறு ஐயப்பனின் அவதாரத்தைக் காட்ட பத்மபுராணம் பஸ்மாசுரனை அழிக்க சிவபெருமான் எழுந்தருளிய போது பஸ்மாசுரனை மயக்கி அழிக்க திருமால் மோஹினி வடிவம் கொள்ள, அப்பொழுது பிறந்தவரே ஐயனார் என்று காட்டுகிறது. இதே போலவே தாருகா வனத்து முனிவர்களின் கடவுள் நிந்தனையையும் செருக்கையும் அழிக்க பிட்சாடனராக சிவபெருமான் வந்த போது மோஹினி வடிவம் கொண்ட திருமாலும் இணைந்து பிறந்தவரே ஐயனார் என்பதும் வரலாறு.
‘ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ ஆகிய இறைவன் அடியவர்களின் நலன் கருதி திருவிளையாடல்கள் புரிகிறான். ஆதில் சில உண்மைகளை நிலை நிறுத்திக் காட்ட புராணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் இறைவனையே அளக்கவோ, அவனின் பிறப்பை அறியவோ முற்படுவது விநோதமானது , உண்மையில் அது எவராலும் இயலாதது என்பதையே இக்கதைகள் புலப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
தமிழ் இலக்கியங்களினூடு நயந்து பேசப்படும் ஐயனார்
சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.
இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!
இந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.
பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம்.
ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தில் இக்கதையை,
சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி
என்று கூறுவதைக் காணலாம்.
மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?
பொ.பி* 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார். (* பொ.பி – பொதுயுகத்திற்குப் பின், CE – Common Era).
அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பதேவனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப்புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,
அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்
இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய
பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட
மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?
என்று பாட சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால் திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?
இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. எல்லோரும் அப்பைய தீட்சிதரின் திறனையும் அறிவையும் பாராட்டினார்களாம் என்று ‘தீட்சிதேந்திரம்’ என்ற நூல் சொல்கிறது. இந்தக் கதை நம்மூர்களில் மிகப்பிரபலமாக உள்ளது. இது போல ஐயனார் பற்றிய பல கதைகளும் இருக்கலாம். சாஸ்தா என்பதற்கு மக்களின் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள் சொல்வதுண்டல்லவா?
ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம்
சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் த்யானரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது.
இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.
இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.
பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டுகோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.
எது எப்படியோ இருமையின்பத்தையும் அருளவல்ல பெருமான் இருதேவியருடன் காட்சி தருவது ஏற்கத்தக்க விடயமாக தெரிகிறது. இதனை தத்துவார்த்த நோக்கில் அவதானித்து ஸத்தியத்தை அறிய வேண்டும்.
ஆகம வழிப்பட்ட வழிபாடுகளைப் பெறும் ஐயனாரைப் பற்றி நோக்கும் போது நம் ஊர்களின் ஆகம நெறிப்பட்ட வகையில் ஐயனாருக்கு பேராலயங்கள் சமைத்துக் குடமுழுக்காட்டி வழிபாடாற்றியும் வந்திருப்பதைக் காண்கிறோம். வடஇலங்கையில் அனலைதீவு என்ற தீவிலும் ஊர்காவற்துறையிலுள்ள சுருவில் கிராமத்திலும் மேற்சுன்னாகம் பகுதியிலும் காரைநகரின் வியாவிலிலும் அளவெட்டியிலும் ஐயனாருக்கு பலநூறாண்டுகள் பழைமையான சிவாகம வழியில் அமைந்த சிவாகம வழியில் பூஜிக்கப்படும் ஆலயங்கள் உள்ளன.
வியாவில் ஐயனார் கோயில் பற்றி ‘ஆறுமுகநாவலர் / ஈழத்துச் சிதம்பர தலபுராணம்’ என்ற இத்தளத்தில் வெளியான முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையிலும் பல செய்திகளைக் காணலாம். அனலை தீவில் இன்றும் தான்தோன்றியான ஒரே கல்லில் அமைந்ததும் கடலில் மிதந்து வந்ததுமான பூரணை புஷ்கலை உடனாய ஐயப்பன் திருவுருவம் உள்ளது. பாரம்பரியமாக இக்கோயிலில் கொடியேறி சிவாகமப்படி மஹோத்ஸவம் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. சுருவில் என்பது ஐயனாரின் கரவில் அல்லது கருவில் ஊன்றிய இடம் என்று சொல்கிறார்கள். .இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் பாவில் ஒரு பாடல்
நந்தவன வாவிமலி நாடுங் காடும் நல்லவனாய் பூவுலகைக் காக்க வேணிச்
சங்கரனார் மோகினியாம் அரியோடாட சாந்திமிக அவதரித்த காந்தமூர்த்தி..
என்று ஐயனின் அவதாரத்தைப் பேசுவதைக் காண முடிகின்றது.