இந்து மதத்தில் வர்ணம் இருக்கிறது, சாதி இருக்கிறது என்பது ராணுவ ரகசியம் அல்ல. பல இந்துமதத் தலைவர்கள் வர்ணத்தையும் சாதியையும் ஆதரித்தார்கள் என்பதும் ரகசியம் அல்ல. பலர் சாதி பிறப்பால் வரவில்லை என்றார்கள். சிலர் பிறப்பால்தான் வருகிறது என்றார்கள்.
சாதிகளும் ஏன் இருக்கின்றன? பெரும்பாலான இந்துக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டிருப்பதால் இருக்கின்றன. இதுதான் உண்மை. பெரும்பாலான இந்துக்கள் சாதியை ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அது அவர்களுக்கு பல வசதிகளைத் தருகின்றது. அடையாளத்தைத் தருகிறது. பிறப்பிலிருந்து நமக்குத் தெரிந்த சில பழக்க வழக்கங்களை, வழிபாட்டு முறைகளை, கலாச்சார முறைகளை மாற்றிக் கொள்வது என்பது பலரால் எளிதாக முடியாது. இதனால்தான் சாதி நம்மை விட்டுச் செல்லவில்லை. வர்ணம் என்பது இன்று அனேகமாக அழிந்து விட்டது.
சாதி ஒழியவேண்டும் என்று கூச்சல் போடுகிறவர்களிடம் எப்படி ஒழிய வேண்டும் என்று கேட்டால் இந்து மதம் ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்களின் பதில்கள் இதுவாக இருக்கும். 1. மதநம்பிக்கையை விட்டு விடுங்கள். 2. மற்றைய மதங்களுக்கு மாறுங்கள்.
ஆனால் இந்துமதம் ஒழிய வேண்டும் என்று இந்துக்களில் மிகப்பலர் நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் மதம் சீர்திருந்த வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அது தடாலடியாக நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. படிப்படியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். படிப்படியாக நடக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.
நான் பிராமணகுலத்தில் பிறந்தவன். எனக்கு அடுத்த தலைமுறையில் என் குடும்பத்தில் பிராமண குலத்தில் திருமணம் செய்தவர்கள் 50 சதவீதம் இருப்பார்கள். அடுத்த தலைமுறையில் இன்னும் குறையும். ஆனால் பிராமணர் அல்லாத குடும்பத்தில் திருமணம் செய்த யாரும் தாங்கள் இந்து என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. கிறித்துவர்களையும், புத்தமதத்தைச் சார்ந்தவர்களை யும் திருமணம் செய்தவர்கள் கூட இந்து அடையாளத்தை, சாதித் திருமணச் சடங்குகளை விட்டு கொடுக்கவில்லை. அதை அவர்கள் சாதி அடையாளம் என்பதை விடக் கலாச்சார அடையாளமாகக் கருதுகிறார்கள்.
இதுபோன்று பல தலைமுறைகள், பல குடும்பங்களில் நடக்கும். அவ்வாறு நடக்கும்போது சாதி அடையாளம் தேய்ந்து போகலாம். ஆனால் இந்துமதம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.